சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே. 1
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே. 2
யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே. 3
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே. 4
ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்சக மார்க்கமே. 5
பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி யெறிவ னயிர்மன வாளாற்
கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்
வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே. 6
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. 7
திருச்சிற்றம்பலம்