தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 1
அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்
அடி ஆர்பவரே அடியவர் ஆமால்
அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே. 2
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடம்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்
படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 3
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 4
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 5
விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 6
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 7
காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி
நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 8
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு
ஏறும் சுழுனை இவைசிவ பூமியே. 9
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 10
திருச்சிற்றம்பலம்