தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 7
நெய்யாடி நின்மலனே நீல கண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 8
துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னனையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
அக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 9
ஒருவனையு மல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மே லேவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 10