கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 1
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே. 2
செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்
மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 3
பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே. 4
அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 5
சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 6
அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 7
விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 8
தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்
தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 9
விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 10
திருச்சிற்றம்பலம்