மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே. 1
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஓன்றுஞ் செய்த தில்லை
*கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே. 2
அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே. 3
துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
சோற்றுத் துறைஆள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால்
வாழ்ந்து போதீரே. 4
செந்தண் பவளந் திகழுஞ் சோலை
இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா(று)
உமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்
தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
வாழ்ந்து போதீரே. 5
ஆயம் பேடை அடையுஞ் சோலை
ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே. 7
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
இகழா தேத்துவோம்
பழிதான் ஆவ தறியீர் அடிகேள்
பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
வாழ்ந்து போதீரே. 8
பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதான் அன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே. 9