கொன்று செய்த கொடுமை
யாற்பல சொல்லவே
நின்ற பாவம்* வினைகள்
தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின்
தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ்
தண்கழுக் குன்றமே.
( * பாவ வினைகள் என்றும் பாடம்) 1
இறங்கிச் சென்று தொழுமின்
இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன்
எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள்
நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித்
தண்கழுக் குன்றமே. 2
நீள நின்று தொழுமின்
நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள்
அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய
மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந்
தண்கழுக் குன்றமே. 3