மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 1
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 2
காயும் புலியின் அதளுடையர்
கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 3