திருச்சிற்றம்பலம்
பத்திமையும் அடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாட் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 1
ஐவணமாம் பகழியுடை
அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம்
விழிசெய்த சிவமூர்த்தி
மையணவு கண்டத்து
வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 2
சங்கலக்குந் தடங்கடல்வாய்
விடஞ்சுடவந் தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம்
உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த
அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 3
இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட
அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 4
செப்பரிய அயனொடுமால்
சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே
அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை
இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 5
வன்னாகம் நாண்வரைவில்
அங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப்
புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத
மூர்க்கனேன் ஆக்கைசுமந்
தென்னாகப் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 6
வன்சயமாய் அடியான்மேல்
வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால்
முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை
விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 7
முன்னெறிவா னவர்கூடித்
தொழுதேத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும்
நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தைமறந் திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 8
கற்றுளவான் கனியாய
கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப்
பெரிதடியேன் கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 9
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்தந்
தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 10
வங்கமலி கடல்நஞ்சை
வானவர்கள் தாமுய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி
நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த
தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே. 11
பேரூரும் மதகரியின்
உரியானைப் பெரியவர்தஞ்
சீரூருந் திருவாரூர்ச்
சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூரன் இவைவல்லார்
உலகவர்க்கு மேலாரே. 12
திருச்சிற்றம்பலம்