மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 1
இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 2
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 3
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 4