துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த
உமைபங்கன் எங்கள் அரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த
கமலங்கள் தங்கு மதுவில்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு
திருமுல்லை வாயி லிதுவே. 1
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு
அரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி
யவையோத மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்
திருமுல்லை வாயி லிதுவே. 2
வாராத நாடன் வருவார்தம் வில்லின்
உருமெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன்
அருள்மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின்
அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு
திருமுல்லை வாயி லிதுவே. 3