உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 3
மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 4
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 5