பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப்
புகலி பூமேல்
மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம் பூந்தராய்
வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை
காழி கொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலம்நாங்
கருது மூரே. 1
கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த் தோணிபுரம்
கனக மாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங்
கொச்சை காழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத்
தயனூர் தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல்
தங்கு மூரே. 2
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு
காழி கொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங்
கற்றோ ரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப் புறவம்அய
னூர்பூங் கற்பத்
தார்மருவும் இந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை
தரித்தோ னூரே. 3
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந்
தரியா ரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி
யிமையோர் கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு
மறைக ளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில்
விளங்கு மூரே. 4
விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுரம்
மேக மேய்க்கும்
இளங்கமுகம் பொழில்தோணி புரங்காழி யெழிற்புகலி
புறவம் ஏரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன்
னஞ்ச முண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங்
காய்ந்தோ னூரே. 5
காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத்
தோணிபுரஞ் சீர்
ஏய்ந்தவெங் குருபுகலி யிந்திரனூர் இருங்கமலத்
தயனூர் இன்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை
காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் பகைகெடுத்தோன்
திகழு மூரே. 6
திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர்
காழி தேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை
புறவம் விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர்
மகிடற் செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள் பணிந்துலகில்
நின்ற வூரே. 7
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும்
வேணு மன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி சண்பைவளர்
புறவ மோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி
தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள் தாங்காக்க
மிக்க வூரே. 8
மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை
காழி கொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய்
சிலம்பன் சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி வெங்குருவல்
அரக்கன் திண்டோ ள்
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ டழித்துகந்த
எம்மா னூரே. 9
எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற்
புகலி யென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற்
றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய்
சண்பை காரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியஎம்
இறைவ னூரே. 10
இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய னூர்இமையோர்க்
கதிபன் சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார்
பூந்தராய் நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு
மலந்தே சின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா
அம்மா னூரே. 11
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை
புறவ மஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந்
தேவர் கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர் வழிமுடக்கு மாவின்
பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன் தமிழ்கற்போர்
தக்கோர் தாமே.
சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. 12
திருச்சிற்றம்பலம்