கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்திலோர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்
முரிவதோர் முரிவுமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே. 1
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ(று)ம் அமுதம்ஒத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே. 2
திருச்சிற்றம்பலம்