பண்: காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
122.
நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! 1
123.
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! 2
124.
அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! 3
125.
மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 4
126
நீவாரா(து) ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 5
127.
முழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 6
128.
தன்சோதி எழுமேனித் தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 7
129.
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 8
130.
ஆறாத பேரன்பின் அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 9
131.
சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு) இரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 10
132.
ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 11
திருச்சிற்றம்பலம்
எமநல்லூர் என்ற இத்தேவார வைப்புத் தலம், முதல் ராஜராஜன் காலத்தில் திரைலோக்கியமாதேவி சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. அதுவே தற்போது திருலோக்கி எனப்படுகிறது. திருப்பனந்தாள் அருகில் உள்ளது.
சுவாமி: சுந்தரேச்வரர் அம்பிகை: அகிலாண்டேசுவரி