புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே
பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும்
பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே. 1
புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து
புணர்பொருள் உணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
வெள்ளமாய் உள்ளமா யினையே. 2
கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்
கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்
முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்
முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே !
பாவியேன் ஆவியுள் புகுந்த(து)
என்னகா ரணம்நீ ஏழைநாய் அடியேற்கு
எளிமையோ பெருமையா வதுவே. 3
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்
கிடையனா ருடையஎன் நெஞ்சில்
பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்
பரமனே ! பன்னகா பரணா !
மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே ! 4
அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)
ஐவரோ(டு) என்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)
என்னைஆள் ஆண்டநாய கனே !
முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே. 5
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே !
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
விழுமிய விமானமா யினதே. 6
விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின்
வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்
கழுத்திலோர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
முகத்தலை அகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே. 7
என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)
என்பெலாம் உருகநீ எளிவந்(து)
உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
கனியுமாய் இனியை ஆயினையே. 8
அம்பரா அனலா; அனிலமே புவிநீ
அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே
எந்தையும் தாயுமா யினையே. 9
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை அகத்தமர்ந்(து) இனிய
பாலுமாய், அமுதாம் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி இணைமேல்
ஆலையம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதம் குறுகிநின் றாரே.
திருத்துறைப்பூண்டிக்கு அண்மையில் உள்ள இத்தலம்,பன்னத்தெரு எனப்படுகிறது. சுவாமி: பன்னகாபரணர் அம்பிகை: சாந்த நாயகி 10
திருச்சிற்றம்பலம்