தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச்
சடைவிரித்(து) அலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித்
திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்
கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே. 1
துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
கழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே. 2
திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
திலகமும் உடையவன் சடைமேல்
புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப்
போய்வருந் தும்பிகாள் ! இங்கே
கிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்(டு)என்
மனத்தையும் கொண்டுபோ துமினே. 3
தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும்
செவியவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனே !என்னும்என் மனனே. 4
தோழி !யாம்செய்த தொழில்என் எம்பெருமான்
துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
நெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும்
கேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
மயங்கவும் மாலொழி யோமே. 5
என்செய்கோம் தோழி ! தோழிநீ துணையாய்
இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
அலமரு மாறுகண்(டு) அயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவஓ என்று
மயங்குவன் மாலையம் பொழுதே. 6
தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும்
சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியநீர்ப் பழனம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே. 7
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
தமருகம் திருவடி திருநீறு
இன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி
இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனத்துள்வைத் தனனே. 8
யாதுநீ நினைவ(து) எவரையாம் உடையது
எவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனம்புகுந் தானே. 9
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும்வெண் ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்;
செய்வதென் தெளிபுனல் அலங்கல்
கெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம்
கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனே அறியும்என் மனமே. 10
கித்திநின் றாடும் அரிவையர் தெருவில்
கெழுவுகம் பலைசெய்க்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க்(கு) அகலிரு விசும்பில்
முத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல்
முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே.
இத்தலம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள கோட்டூர் என்ற தேவாரத்தலத்திலுள்ள மற்றோர் சிவாலயம். சுவாமி: மணி அம்பலவன் அம்பிகை: அமுதாம்பிகை 11
திருச்சிற்றம்பலம்