கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 1
சந்தன களபம் துதைந்தநன் மேனித்
தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய
திருநுதலவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு)
எரிவதொத்(து) எழுநிலை மாடம்
அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 2
கரியரே இடந்தான் செய்யரே ஒருபால்
கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ்
முறைதெரிந்(து) ஓருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே மறைகளும் தேட
அரியரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 3
பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு)
அரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுந் தருளாப்
பிச்சரே நச்சரா மிளிரும்
குழையராய் வந்தெந் குடிமுழு தாளும்
குழகரே ஒழுகுநீர்க் கங்கை
அழகரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 4
பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம்(பு) அதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவம்
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால்
துடியிடை இடமருங்(கு) ஒருத்தி
அவளுமே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 5
நீலமே கண்டம் பவளமே திருவாய்
நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம்
பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று
குழைவரே கண்டவர் உண்டது
ஆலமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே ! 6
திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும்
திறத்தவர் புறத்திருந்(து) அலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே
புரியவும் வல்லரே எல்லே
அக்கடா ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 7
மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான
விளக்கரே எழுதுகோல் வளையாள்
மையரே வையம் பலிதிரிந்(து) உறையும்
மயானரே உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 8
குமுதமே திருவாய் குவளையே களமும்
குழையதே இருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
கனகமே திருவடி நிலைநீர்
அமலமே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 9
நீரணங்(கு) அசும்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவும் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர்
இருள்கிழித்(து) எழுந்தசிந் தையரே.
இத்தலம் தற்போது களப்பால் எனப்படுவது. திருத்துறைப்பூண்டிக்கு அண்மையில் உள்ளது. சுவாமி: ஆதித்தேச்வரர்; அழகிய நாதர் ; அம்பிகை: பிரபா நாயகி 10
திருச்சிற்றம்பலம்