மாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளும்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும் என் மெல்லியல் இவளே. 1
இவளைவா ரிளமென் கொங்கைபீர் பொங்க
எழில் கவர்ந் தான்இளங் காளை
கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவரும் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும்
குழகன்நல் அழகன்நங் கோவே. 2
கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்
பொன்னை மேகலை கவர்வானே
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயில் ஊரும்
சுப்பிர மண்ணியன் தானே. 3
தானவர் பொருது வானவர் சேனை
மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன் குலவிளங் களிறென்
கொடிக்கிடர் பயப்பதுங் குணமே ! 4
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளாத(து) அழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
உய்யமற்(று) அடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே. 5
கிளையிளங் சேயக் கிரிதனை கீண்ட
ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு)
அருளுங்கொல் முருகவேள் பரிந்தே. 6
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
சுந்தரத்(து) அரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண்(டு) ஐயறும் வகையே. 7
வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என்
துடியிடை மடல்தொடங் கினளே. 8
தொடங்கினள் மடலென்(று) அணிமுடித் தொங்கல்
புறஇதழ் ஆகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து)
அறுமுகத்(து) அமுதினை மருண்டே. 9
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே
விடலையே எவர்க்கும் மெய் அன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே. 10
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூய்மொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் இவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே. 11
திருச்சிற்றம்பலம்