பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
மிகுகா விரிக்கரை மேய
ஐயா ! திருவா வடுதுறை அமுதே !
என்றுன்னை அழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்(கு)ஒன்(று)
அருளாது ஒழிவது மாதிமையே. 1
மாதி மணங்கம ழும்பொழில்
மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி அமரர் புராணனாம்
அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி அறிகிலள் பொன்நெடும்
திண்தோள் புணர நினைக்குமே. 2
நினைக்கும் நிரந்தர னே !என்னும்
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் !
மனக்கின்ப வெள்ள மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்துறைத்
தருணேந்து சேகரன் என்னுமே. 3
தருணேந்து சேகர னேஎனும்
தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருள்நேர்ந்த சிந்தை யவர்தொழப்
புகழ்செல்வம் மல்குபொற் கோயிலுள்
அருள்நேர்ந்(து) அமர்திரு வாவடு
துறையாண்ட ஆண்டகை அம்மானே
தெருள்நேர்ந்த சித்தம் வலியவா
திலக நுதலி திறத்திலே. 4
திலக நுதல்உமை நங்கைக்கும்
திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க்(கு) என்னையாட்
கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன்(று) அறிகின்றி லேம்எனும்
அணியும்வெண் ணீ(று)அஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற்(கு) என்செய்கேன்
வயலந்தண் சாந்தையர் வேந்தனே ! 5
வேந்தன் வளைத்தது மேருவில்
அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
பொடியாட வேதப் புரவித்தேர்
சாந்தை முதல் அயன் சாரதி
கதியருள் என்னும் இத் தையலை
ஆந்தண் திருவா வடுதுறையான்
செய்கை யாரறி கிற்பாரே 6
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்(கு)
எழுந்தோ டிக்கெட்ட அத்தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்என்
சொல்லிச் சொல்லும் இத் தூமொழி
கற்போல் மனம்கனி வித்தஎங்
கருணால யாவந்திடாய் என்றால்
பெற்போ பெருந்திரு வாவடு
துறையாளி பேசா(து) ஒழிவதே. 7
ஒழிவொன்றி லாவுண்மை வண்ணமும்
உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை எய்திநின்(று)
இறுமாக்கும் என்னிள மானனே. 8
மானேர் கலைவளையும் கவர்ந்துளம்
கொள்ளை கொள்ளவழக்(கு) உண்டே !
தேனே ! அமுதே !என் சித்தமே !
சிவலோக நாயகச் செல்வமே !
ஆனேஅ லம்புபுனற் பொன்னி
அணியா வடுதுறை அன்பர்தம்
கோனே !நின் மெய்யடி யார்மனக்
கருத்தை முடித்திடுங் குன்றமே ! 9
குன்றேந்தி கோகன கத்(து)அயன்
அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள்
இளவல்லி எல்லை கடந்தனள்
அன்றே அலம்பு புனற்பொன்னி
அணியா வடுதுறை ஆடினாள்
நன்றே இவள் நம் பரமல்லள்
நவலோக நாயகன் பாலளே. 10
பாலும் அமுதமும் தேனுமாய்
ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
புரகால காமபு ராந்தகன்
சேலும் கயலும் திளைக்குநீர்த்
திருவா வடுதுறை வேந்தனோ(டு)
ஆலும் அதற்கே முதலுமாம்
அறிந்தோம் அரிவைபொய் யாததே.
சுவாமி: கோமுக்தீச்வரர்;மாசிலாமணீச்வரர்; அம்பிகை: ஒப்பிலாமுலை நாயகி 11
திருச்சிற்றம்பலம்