அஞ்சணை கணையி னானை
அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை
அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி
ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர்
ஆதரித் திடங்கொண் டாரே. 7
வணங்கிமுன் அமரர் ஏத்த
வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த
பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்
மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி
ஆரூரெம் அடிக ளாரே. 8
நகலிடம் பிறர்கட் காக
நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும்
புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங்
கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த
அடிகள்ஆ ரூர னாரே. 9
ஆயிரந் திங்கள் மொய்த்த
அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும்
அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித்
தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த
அடிகள்ஆ ரூர னாரே.
சுவாமி : புற்றிடங்கொண்டார்; அம்பாள் : அல்லியம்பூங்கோதை. 10