உயிர்நிலை யுடம்பே காலா
உள்ளமே தாழி யாகத்
துயரமே ஏற்ற மாகத்
துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப்
பாழ்க்குநீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க் காற்றேன்
ஆரூர்மூ லட்ட னீரே. 7
கற்றதேல் ஒன்று மில்லை
காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம்
பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினால் ஐவர் வந்து
முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநான் அலந்து போனேன்
ஆரூர்மூ லட்ட னீரே. 8
பத்தனாய் வாழ மாட்டேன்
பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய
செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல
மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே அமரர் கோவே
ஆரூர்மூ லட்ட னீரே. 9
தடக்கைநா லைந்துங் கொண்டு
தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி
இரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை பத்துந் தோளும்
முறிதர இறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே
ஆரூர்மூ லட்ட னீரே.
சுவாமி : புற்றிடங்கொண்டார்; அம்பாள் : அல்லியம்பூங்கோதை. 10