பொருத்திய குரம்பை தன்னைப்
பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சுள்
இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்
கொருத்தியைச் சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத்
தொண்டனேன் கண்ட வாறே. 1
சவைதனைச் செய்து வாழ்வான்
சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல
இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும்
அடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே. 2
உன்னியெப் போதும் நெஞ்சுள்
ஒருவனை ஏத்து மின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக்
கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள்
பூம்புனல் பொலிந்து தோன்றுந்
துன்னிய துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே. 3
ஊன்றலை வலிய னாகி
உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
தான்றலைப் பட்டு நின்று
சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி
வானவர்க் கிறைவா வென்னுந்
தோன்றலைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே. 4
உடல்தனைக் கழிக்க லுற்ற
உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிக்க வேண்டில்
இறைவனை ஏத்து மின்னோ
கடல்தனில் நஞ்ச முண்டு
காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே. 5
பாதியில் உமையாள் தன்னைப்
பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி
விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ்
சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே. 7