பொய்விரா மேனி தன்னைப்
பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன்
வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப் பட்ட
ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மைத்
திருச்சோற்றுத் துறைய னாரே. 1
கட்டராய் நின்று நீங்கள்
காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி
எல்லிநின் றாடு வானை
அட்டமா மலர்கள் கொண்டே
ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார்
திருச்சோற்றுத் துறைய னாரே. 2
கறையராய்க் கண்ட நெற்றிக்
கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையராய் இனிய ராகித்
தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம்
பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தெ னுள்ளச்
சோர்வுகண் டருளி னாரே. 4
பொந்தையைப் பொருளா வெண்ணிப்
பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே ஏக மூர்த்தி
யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப்
பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந்
திருச்சோற்றுத் துறைய னாரே. 5
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக் கருள்கள் செய்த
பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த
அலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார்
திருச்சோற்றுத் துறைய னாரே. 6
கொந்தார்பூங் குழலி னாரைக்
கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற
இறைவனை ஏத்தா தந்தோ
முந்தரா அல்கு லாளை
யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த
திருச்சோற்றுத் துறைய னாரே. 7