திருச்சிற்றம்பலம்
விரும்பி யூறு
விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண்
டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல
றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 1
பிறங்கு செஞ்சடைப்
பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத
கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட
வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 2
மருந்து வானவர்
தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப்
புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை
மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 3
நிறங்கொள் கண்டத்து
நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி
வாணுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள்
செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 4
நறும்பொன் நாண்மலர்க்
கொன்றையும் நாகமுந்
துறும்பு செஞ்சடைத்
தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப்
பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 5
கறும்பி யூர்வன
ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன
மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர்
கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன்
செய்த இயற்கையே. 6
மறந்து மற்றிது
பேரிடர் நாடொறுந்
திறம்பி நீநினை
யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக்
குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன்
செய்த இயற்கையே. 7
இன்ப மும்பிறப்
பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட
னேவைத்த சோதியான்
அன்ப னேயர
னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகும்
எறும்பியூ ரீசனே. 8
கண்ணி றைந்த
கனபவ ளத்திரள்
விண்ணி றைந்த
விரிசுடர்ச் சோதியான்
உண்ணி றைந்துரு
வாயுயி ராயவன்
எண்ணி றைந்த
எறும்பியூ ரீசனே. 9
நிறங்கொள் மால்வரை
ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட
வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக்
கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை
எம்மிறை காண்மினே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி : எறும்பீஸ்வரர்; அம்பாள் : நறுங்குழல்நாயகியம்மை. 10
திருச்சிற்றம்பலம்