பாலித் தெழில்தங்கு பார்முகம்
உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித்
தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை அன்னம்
நடப்ப அணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர்
காவலன் சம்பந்தனே. 1
கொங்குதங் குங்குஞ்சி கூடாப்
பருவத்துக் குன்றவில்லி
பங்குதங்கும் மங்கை தன்னருள்
பெற்றவன் பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த்த
புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 2
குவளைக் கருங்கண் கொடியிடை
துன்பம் தவிரஅன்று
துவளத் தொடுவிடம் தீர்த்த
தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச்
சூளிகைச் சென்னியின்வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர்
காவலன் சம்பந்தனே. 3
கள்ளம் பொழில்நனி பள்ளித்
தடங்கடம் ஆக்கிஅஃதே
வெள்ளம் பணிநெய்தல் ஆக்கிய
வித்தகன் வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ
டாலக் கயல்உகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 4
ஆறதே றுஞ்சடை யான்அருள்
மேவ அவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி
கண்டவன் மென்கிளிமாந்
தேறல்கோ தித்தூறு சண்பகம்
தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 5
அந்தமுந் தும்பிற வித்துயர்
தீர அரனடிக்கே
பந்தமுந் தும்தமிழ் செய்த
பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங்
கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 6
புண்டலைக் குஞ்சரப் போர்வையர்
கோயிற் புகஅடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா
சனிஉம்பர் பம்பிமின்னும்
கொண்டலைக் கண்டுவண் டாடப்
பெடையொடும் கொக்குறங்கும்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 7
எண்டலைக் குந்தலை வன்கழல்
சூடிஎன் உள்ளம்வெள்ளம்
கண்டலைப் பத்தன் கழல்தந்த
வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியில் ஓடும்
விரவி மிளர்பவளம்
தண்டலைக் கும்கடற் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 8
ஆறுமண் டப்பண்டு செஞ்சொல்
நடாத்தி அமண்முழுதும்
பாறுமண் டக்கண்ட சைவ
சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல்
தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 9
விடந்திளைக் கும்அர வல்குல்மென்
கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைக் குங்கொங்கை புல்கிய
மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி
ஒல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 10
பாலித்த கொங்கு குவளைகள்
ளம்பொழில் கீழ்ப்பரந்து
ஆலிப்ப ஆறதே றுங்கழ னிச்
சண்பை அந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத்
தெண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக்
கும்அர வல்குலையே. 11
திருச்சிற்றம்பலம்