திருக்கண் ணப்பன்
செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல்
உலகே, பிறந்தது
தேன்அழித்து ஊன்உண் கானவர்
குலத்தே, திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக்
காடே, வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம்
பலவே, பயில்வது (5)
வெந்திறற் சிலையொடு
வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம்
அவையே, உறைவது
குறைதசை பயின்று
குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலங்
கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை
பிரிந்த வெள்ளிடை (10)
வாலிய புலித்தோல்
மறைப்ப வெள்வார்
இரவும் பகலும்
இகழா முயற்றியொடு
மடைத்த தேனும்
வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும்
திண்சுரி கையிலும்
பலகிளை யவையொடும்
பதைப்பப் படுத்துத் (15)
தொல்லுயிர் கொல்லும்
தொழிலே, வடிவே
மறப்புலி கடித்த
வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த
திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த
இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம்
படுத்தெழு குறங்கு (20)
செடித்தெழு குஞ்சி
செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை
அவ்வாய்க் கருநிறத்து
அடுபடை பிரியாக் கொடுவிற
லதுவே,மனமே
மிகக்கொலை புரியும்
வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக்கு அகனமர்ந்
ததுவே, இதுஅக் (25)
கானத் தலைவன்
தன்மை, கண்ணுதல்
வானத் தலைவன்
மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை
இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப்
பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச்
சென்றுகண் டல்லது (30)
வாய்க்கிடும் உண்டி வழக்கறி
யானே, அதாஅன்று
கட்டழல் விரித்த
கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறும்
சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த
முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய
வேட்டையில் விரும்பி (35)
எழுப்பிய விருகத்
தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித்
திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும்
துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த
வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி
நல்லது சுவைகண்டு (40)
அண்ணற்கு அமிர்தென்று
அதுவேறு அமைத்துத்
தண்ணறுஞ் சுனைநீர்
தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை
செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும்
ஏந்திக் கனல்விழிக் (45)
கடுங்குரல் நாய்பின்
தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற
வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி
எய்திய சிவற்கு
வழிபடக் கடவ
மறையோன் முன்னம்
துகிலிடைச் சுற்றித்
தூநீர் ஆட்டி (50)
நல்லன விரைமலர்
நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசிற்
சுருங்கலன் பூவும்
பட்ட மாலையும்
தூக்கமும் அலங்கரித்து
அருச்சனை செய்தாங்கு
அவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை
சிறப்பொடுங் காட்டி (55)
மந்திரம் எண்ணி
வலமிடம் வந்து
விடைகொண்
டேகின பின்தொழில்
பூசனை தன்னைப்
புக்கொரு காலில்
தொடுசெருப் படியால்
நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில்
ஆட்டித் தன்தலைத் (60)
தங்கிய துவர்ப்பூ
ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம்
படைத்துப் பிரானைக்
கண்டுகண் டுள்ளங்
கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன்
ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக
இறைஞ்சி ஆரா (65)
அன்பொடு கானகம்
அடையும் அடைந்த
அற்றை அயலினிற்
கழித்தாங் கிரவியும்
உதித்த போழ்தத்
துள்நீர் மூழ்கி
ஆதரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத்
தான்முன் செய்வதோர் (70)
பொற்புடைப் பூசனை
காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண்
டொழியான் மறித்தும்
இவ்வாறு அருச்சனை செய்பவர்
யாவர்கொல் என்று
கரந்திருந் தவண்அக்
கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப்
பார்த்து நடுக்குற்று (75)
வந்தவன் செய்து
போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது
சேர்விடம் புக்கு
மற்றை நாளும்அவ்
வழிப்பட்டு இறைவ
உற்றது கேட்டருள்
உன்தனக்கு அழகா
நாடொறும் நான்செய்
பூசனை தன்னை (80)
ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து
மிதித்து உழக்கித்
தொடுசெருப் படியால்
நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில்
ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர்
இறைச்சியை (85)
நின்திருக் கோயிலில்
இட்டுப் போமது
என்றும் உன்தனக்
கினிதே எனைஉருக்
காணில் கொன்றிடும்
யாவ ராலும்
விலக்குறுங் குணத்தன்
அல்லன் என்நும்
திருக்குறிப்பு என்றவன்
சென்ற அல்லிடைக் (90)
கனவில்ஆ தரிக்கும்
அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா
ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு
பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக்
கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து
நிறைநீற் றாக (95)
ஒற்றை மால்விடை
உமையொடு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்
புரிவொடு பூசனை செய்யும்
குனிசிலை வேடன்
குணமவை ஆவன
உரிமையிற் சிறந்தநன்
மாதவன் என்றுணர் (100)
அவனுகந் தியங்கிய இடம்முனி
வனம்அதுவே, அவன்
செருப்படி யாவன
விருப்புறு துவலே
எழிலவன் வாயது
தூய பொற்குடமே
அதனில் தங்குநீர்
கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி
அவன்நிரைப் பல்லே (105)
அதற்கிடு தூமலர்
அவனது நாவே
உப்புனல் விடும்பொழு
துரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும்
நம்முடிக் கினிதே, அவன்தலை
தங்கிய சருகிலை
தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத்
தலரே அவனுகந்து (110)
இட்ட இறைச்சி
எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுவெனக்கு உனக்கவன்
கலந்ததோர் அன்பு
காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை
செய்தாங் கிருவென்று (115)
இறையவன் எழுந்த ருளினன்
அருளலும் மறையவன்
அறிவுற் றெழுந்து
மனமிகக் கூசி
வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை
புகழ்தரச் செய்து (120)
தோன்றா வண்ணம் இருந்தன
னாக இரவியும்
வான்தனி முகட்டில்
வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையில்
காதலித் தடித்த
உடும்பொடு சிலைகணை
உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு
தோன்றினன் தோன்றலும் (125)
செல்வன் திருக்கா ளத்தியுள்
அப்பன் திருமேனியின்
மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணிலும்
உதிரம் ஒழியா தொழுக
இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப்
பதைத்து மனஞ்சுழன்று
வாய்ப்புனல் சிந்தக்
கண்ணீர் அருவக் (130)
கையில் ஊனொடு
கணைசிலை சிந்த
நிலப்படப் புரண்டு
நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி
தெடுத்திது படுத்தவர்
அடுத்தஇவ் வனத்துளர்
எனத்திரிந் தாஅங்கு
இன்மை கண்டு நன்மையில் (135)
தக்கன மருந்துகள்
பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக்
கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக் கடுத்ததென்
அத்தனுக் கடுத்ததென் என்று
அன்பொடுங் கனற்றி
இத்தனை தரிக்கிலன்
இதுதனைக் கண்டஎன் (140)
கண்தனை இடந்து
கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன்
என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக்
கையில் வாங்கி
அணைதர அப்பினன்
அப்பலுங் குருதி
நிற்பதொத் துருப்பெறக்
கண்டுநெஞ் சுகந்து (145)
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை
மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லு
கண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல்
நில்லுகண் ணப்பஎன்று
இன்னுரை அதனொடும்
எழிற்சிவ லிங்கம்
தன்னிடைப் பிறந்த
தடமலர்க் கையால் (150)
அன்னவன் தன்கை அம்பொடும்
அகப்படப் பிடித்து
அருளினன் அருளலும்
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தனர்
வளையொலி படகம்
துந்துபி கறங்கின
தொல்சீர் முனிவரும் (155)
ஏத்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன்
திருக்கண் ணப்பனே. 1
பதிக வகை: வெண்பா
தத்தையாம் தாய்தந்தை
நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர்
வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர்
செய்தவத்தாற் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண். 2
திருச்சிற்றம்பலம்