பிறந்து மொழி பயின்ற
பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே
சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து
வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர். 1
இடர்களையா ரேனும்
எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா
ரேனும் -சுடர்உருவில்
என்பறாக் கோலத்
தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு. 2
அவர்க்கே எழுபிறப்பும்
ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ
தல்லாற் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும்
அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். 3
ஆளானோம் அல்லல்
அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ
கேளாமை - நீளாகம்
செம்மையா னாகித்
திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை. 4
இறைவனே எவ்வுயிரும்
தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம்
செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும்
எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான். 5
வானத்தான் என்பாரும்
என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும்
தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட
மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான். 6
யானே தவமுடையேன்
என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான்
எண்ணினேன் - யானேயக்
கைம்மா உரிபோர்த்த
கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். 7
ஆயினேன் ஆள்வானுக்
கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே
யாமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர்
பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள். 8
அருளே உலகெலாம்
ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப
தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும்
விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு. 9
எனக்கினிய எம்மானை
ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக
வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக்
கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே யெனக்கரிய தொன்று. 10
ஒன்றே நினைந்திருந்தேன்
ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தின்
உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட்
கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது. 11
அதுவே பிரானாமா
றாட்கொள்ளு மாறும்
அதுவே இனியறிந்தோ
மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியா
ரொண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு. 12
தகவுடையார் தாமுளரேல்
தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது
கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம்
ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லேபாவந் தான். 13
தானே தனிநெஞ்சந்
தன்னையுயக் கொள்வான்
தானே பெருஞ்சேமஞ்
செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து
பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து. 14
நினைந்திருந்து வானவர்கள்
நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த
மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய்
வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி. 15
இனியோ நாம்உய்ந்தோம்
இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம்
நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும்
மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண். 16
காண்பார்க்குங் காணலாந்
தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங்
காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே
தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன். 17
அரனென்கோ நான்முகன்
என்கோ அரிய
பரனென்கோ பண்புணர
மாட்டேன் - முரணழியத்
தானவனைப் பாதத்
தனிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று. 18
இன்று நமக்கெளிதே
மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன்
ஆனானை - என்றுமோர்
மூவா மதியானை
மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு. 19
அறிவானுந் தானே
அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான்
தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே
விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன். 20
அவனே இருசுடர்தீ
ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்காற்
றாவான் - அவனே
இயமானனாய் அட்ட
மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து. 21
வந்திதனைக் கொள்வதே
யொக்கும்இவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து
காண்மினோ- வந்தோர்
இராநீர் இருண்டனைய
கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை. 22
பிறையும் புனலும்
அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா
ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம்
என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது. 23
இதுவன்றே ஈசன்
திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக்கோர்
சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய்
மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. 24
இங்கிருந்து சொல்லுவதென்
எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும்
எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும்
என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று. 25
ஞான்ற குழற்சடைகள்
பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான்
பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற
விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு. 26
அரவமொன் றாகத்து
நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம்
பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும்
ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண். 27
பூணாக வொன்று
புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர
நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது
மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக இவர். 28
இவரைப் பொருளுணர
மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே
கண்டீர் -இவர் தமது
பூக்கோல மேனிப்
பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர். 29
பிறரறிய லாகாப்
பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந்
தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில்
தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து. 30
மகிழ்தி மடநெஞ்சே
மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ்
சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும்
அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு. 31
பெருகொளிய செஞ்சடைமேற்
பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற்
றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள்
அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல். 32
நூலறிவு பேசி
நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான்
நீர்மையே - மேலுவந்த
தெக்கோலத் தெவ்வுருவா
யெத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம். 33
ஆமா றறியாவே
வல்வினைகள் அந்தரத்தே
நாமாளென் றேத்தார்
நகர்மூன்றும் - வேமாறு
ஒருகணையாற் செற்றானை
உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை அடும். 34
அடுங்கண்டாய் வெண்மதியென்
றஞ்சி யிருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற
தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய்
அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு. 35
மறுவுடைய கண்டத்தீர்
வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும்
ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல்
தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி. 36
மதியா அடலவுணர்
மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி
னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா
தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. 37
ஈண்டொளிசேர் வானத்
தெழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே
போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான்
மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு. 38
கொம்பினைஓர் பாகத்துக்
கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி
அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும்
பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து. 39
மறித்து மடநெஞ்சே
வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர்
பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கள்
குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு. 40
ஒருபால் உலகளந்த
மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம்
என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக
நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து. 41
நேர்ந்தரவங் கொள்ளச்
சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய
வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர
மாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்கள் இது. 42
திங்க ளிதுசூடிச்
சில்பலிக்கென் றூர்திரியேல்
எங்கள் பெருமானே
என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல்
யாம்விலக்க வல்லமே
தானே அறிவான் தனக்கு. 43
தனக்கே அடியனாய்த்
தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவா
றென்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை
மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான். 44
பிரானவனை நோக்கும்
பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே
வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள்
என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது. 45
எளிய திதுவன்றே
ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர்
ஆஆ - ஒளிகொள்மிடற்
றெந்தைஅராப் பூண்டுழலும்
எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம். 46
திறத்தான் மடநெஞ்சே
சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ
பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக்
கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு. 47
திருமார்பில் ஏனச்
செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை
நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக
இன்றளவுந் தேரா
ததுமதியொன் றில்லா அரா. 48
அராவி வளைத்தனைய
அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரியஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப்
புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை. 49
சடைமேல்அக் கொன்றை
தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே
போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோல
மதிவைத்தான்தன் பங்கின்
குலப்பாவை நீலக் குழல். 50
குழலார் சிறுபுறத்துக்
கோல்வளையைப் பாகத்
தெழிலாக வைத்தேக
வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப்
பெருங்காட்டில் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு. 51
அங்கண் முழுமதியஞ்
செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால்
ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான்
செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர். 52
சீரார்ந்த கொன்றை
மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு
நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த
நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார். 53
காருருவக் கண்டத்தெங்
கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோ
டுழிதருவான் - நீருருவ
மேகத்தாற்செய்தனைய
மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு. 54
பண்டமரர் அஞ்சப்
படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவு
மன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற்
பால்மதியி னுள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு. 55
வடுவன் றெனக்கருதி
நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய்
சொல்லாய் - படுவெண்
புலாற்றலையின் உள்ளூண்
புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ. 56
நீயுலகம் எல்லாம்
இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச்
செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து
பலியிடார் அஞ்சி
விடஅரவம் மேலாட மிக்கு. 57
மிக்க முழங்கெரியும்
வீங்கிய பொங்கிருளும்
ஒக்க வுடனிருந்தால்
ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும்
ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு. 58
பண்புணர மாட்டேன்நான்
நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக்
கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ
ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவ மேல். 59
மேலாய மேகங்கள்
கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால்
ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக்
காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று. 60
அன்றுந் திருவுருவங்
காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங்
காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோன் உம்பிரான்
என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது. 61
ஏதொக்கும் ஏதொவ்வா
தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை
யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி
விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு. 62
வடிவுடைய செங்கதிர்க்கு
மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங்
கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத
சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா. 63
நிலாஇலங்கு வெண்மதியை
நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா
கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே
ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று. 64
காலையே போன்றிலங்கும்
மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும்
வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ்
சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு. 65
மிடற்றில் விடமுடையீர்
உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட
வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும்
வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. 66
பாம்பும் மதியும்
மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி
தூங்குதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர்
கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு. 67
சிலம்படியாள் ஊடலைத்
தான்தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ்
சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும்
இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி. 68
முடிமேற் கொடுமதியான்
முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோங்
கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை
கொண்டாடப் பெற்றோம்
இனிஅவலம் உண்டோ எமக்கு. 69
எமக்கிதுவோ பேராசை
யென்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ
எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன
புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். 70
இடப்பால வானத்
தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே
வைத்தால் - இடப் பாகங்
கொண்டாள் மலைப்பாவை
கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண். 71
கண்டெந்தை என்றிறைஞ்சிக்
கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும்
அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய்
மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து. 72
கருத்தினால் நீகருதிற்
றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கென
நான்சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீ ரேற்றான்
அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது. 73
ஓத நெடுங்கடல்கள்
எத்தனையும் உய்த்தட்ட
ஏது நிறைந்தில்லை
என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால்
என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம். 74
கலங்கு புனல்கங்கை
ஊடால லாலும்
இலங்கு மதிஇயங்க
லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீண்முடிமேற்
பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு. 75
விசும்பில் விதியுடைய
விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந்
தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி
யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி. 76
அடிபேரிற் பாதாளம்
பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு
பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரின்
வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு. 77
அரங்கமாய்ப் பேய்க்காட்டில்
ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும்
ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான்
எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. 78
பணிந்தும் படர்சடையான்
பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை
ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப்
பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு. 79
செருக்கினால் வெற்பெடுத்த
எத்தனையோ திண்டோள்
அரக்கனையும் முன்னின்
றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா
தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால். 80
காலனையும் வென்றோம்
கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும்
வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய
வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து. 81
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே
ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின்
பெற்றியதாம் - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ்
சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின். 82
மின்போலும் செஞ்சடையான்
மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட்
கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல
மணிக்குன்றும் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது. 83
நெடிதாய பொங்கெரியுந்
தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும்
போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும்
வெந்தீ யினில்அழியக்
கண்டாலும் முக்கணான் கண். 84
கண்ணாரக் கண்டும்என்
கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால்
எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும்
இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின். 85
பெறினும் பிறிதியாதும்
வேண்டேம் நமக்கீ
துறினும் உறாதொழியு
மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல்
வைத்தான்தன் பேயாய
நற்கணத்தி லொன்றாய நாம். 86
நாமாலை சூடியும்
நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு
புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால்
எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள். 87
இருளின் உருவென்கோ
மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம்
என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல்
நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி. 88
ஒளிவி லிவன்மதனை
ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற்
சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவா யஃதிருப்ப
உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு. 89
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை
மீதழித் திட்
டேற மிகப்பெருகின்
என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும்
வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை. 90
திரைமருவு செஞ்சடையான்
சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங்
கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும்
எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறம்உரைப்ப தென். 91
என்னை உடையானும்
ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத
தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய
தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன். 92
அவன்கண்டாய் வானோர்
பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள
வண்ணன் - அவன் கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான்
மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. 93
விருப்பினால் நீபிரிய
கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ
என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய்
நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள். 94
அவளோர் குலமங்கை
பாகத் தகலாள்
இவளோர் சலமகளும்
ஈதே - தவளநீ
றென்பணிவீர் என்றும்
பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமின்இங் கார். 95
ஆர்வல்லார் காண
அரனவனை அன்பென்னும்
போர்வை அதனாலே
போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந்
தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. 96
மறைத்துலகம் ஏழினிலும்
வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்
கொண்டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப
மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல். 97
அழலாட அங்கை
சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த
வாறோ - கழலாடப்
பேயோடு கானிற்
பிறங்க அனலேந்தித்
தீயாடு வாயிதனைக் செப்பு. 98
செப்பேந் திளமுலையாள்
காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங்
காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந்
தனலுமிழும் ஐவாய
நாகத்தா யாடுன் நடம். 99
நடக்கிற் படிநடுங்கும்
நோக்கிற் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும்
ஏங்கும் - அடுக்கற்
பொருமேறோ ஆனேறோ
பொன்னொப்பாய் நின்னே
றுருமேறோ ஒன்றா உரை. 100
உரையினால் இம்மாலை
அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற்
பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ
டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து. 101
திருச்சிற்றம்பலம்