கட்டளைக் கலித்துறை யாப்பு
விநாயகர் வணக்கம்
எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளுங் கற்பகமே! - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு.
நூற் சிறப்பு
ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே.
களவியல் (1 முதல் 18 அதிகாரங்கள்)
முதல் அதிகாரம்
1. இயற்கைப் புணர்ச்சி
1. காட்சி
திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்
உருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே. 1
கொளு
மதிவாணுதல் வளர் வஞ்சியைக்
கதிர்வேலவன் கண்ணுற்றது.
2. ஐயம்
போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே. 2
கொளு
தெரியவரியதோர் தெய்வமென்ன
அருவரைநாடன் ஐயுற்றது.
3. தெளிதல்
பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி
ஆயும் மனனே யணங்கல்ல ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. 3
கொளு
அணங்கல்லள்என் றயில் வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது.
4. நயப்பு
அகல்கின்ற வல்குற் றடமது கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ னம்மன்ன பல்வளைக்கே. 4
கொளு
வண்டமர்புரிகுழ லொண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது.
5. உட்கோள்
அணியு மமிழ்துமென் னாவியு மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே. 5
கொளு
இறைதிருக் கரத்து மறிமா னோக்கி
யுள்ளக்கருத்து வள்ள லறிந்தது.
6. தெய்வத்தை மகிழ்தல்
வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நயவேன்தெய்வ மிக்கனவே. 6
கொளு
அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.
7. புணர்ச்சி துணிதல்
ஏழுடை யான்பொழி லெட்டுடை யான்புய மென்னை முன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காண்ணங் காய்வந் தகப்பட்டதே. 7
கொளு
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.
8. கலவியுரைத்தல்
சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே. 8
கொளு
கொலை வேலவன் கொடியிடையோடு
கலவியின்பங் கட்டுரைத்தது
9. இருவயினொத்தல்
உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே. 9
கொளு
ஆராவின்பத் தன்புமீதூர
வாரார் முலையை மகிழ்ந்துரைத்தது.
10. கிளவிவேட்டல்
அளவியை யார்க்கு மறிவரி யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங் கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமைதோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே. 10
கொளு
அன்னமன்னவ ளவயவங்கண்டு
மென்மொழிகேட்க விருப்புற்றது.
11. நலம்புனைந்துரைத்தல்
கூம்பலங் கைதலத் தன்பரென் பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள் தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே. 11
கொளு
பொங்கிழையைப் புனைநலம்புகழ்ந்
தங்கதிர்வேலோன் அயர்வுநீங்கியது.
12. பிரிவுணர்த்தல்
சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே. 12
கொளு
பணிவளரல்குலைப் பயிர்ப்புறுத்திப்
பிணிமலர்த்தாரோன் பிரிவுணர்த்தியது.
13. பருவரலறிதல்
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ நெடிதிங்க னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ அறியே னயர்கின்றதே. 13
கொளு
பிரிவுணர்ந்த பெண்கொடிதன்
பருவரலின் பரிசு நினைந்தது.
14. அருட்குணமுரைத்தல்
தேவரிற் பெற்றநஞ் செல்வக் கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப் பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம் பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென் வாடிப் புலம்புவதே. 14
கொளு
கூட்டிய தெய்வத் தின்ன ருட்குணம்
வாட்ட மின்மை வள்ள லுரைத்தது.
15. இடமணித்துக் கூறி வற்புறுத்தல்
வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகைநுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்குங் கனங்குழையே. 15
கொளு
மடவரலை வற்புறுத்தி
இடமணித்தென் றவனியம்பியது.
16. ஆடிடத்துய்த்தல்
தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. 16
கொளு
வன்புறையின் வற்புறுத்தி
அன்புறு மொழியையரு ககன்றது.
17. அருமையறிதல்
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிசூழ லேழைதன் னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. 17
கொளு
கற்றமு மிடனுஞ் சூழலுந் நோக்கி
மற்றவ ளருமை மன்ன னறிந்தது.
18. பாங்கியையறிதல்
உயிரொன் றுளமுமொன் றொன்றே சிறப்பிவட் கென்னோடென்னப்
பயில்கின்ற சென்று செவியுறநீள்படைக் கண்கள் விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ்செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென லாகும் பணிமொழிக்கே. 18
கொளு
கடல்புரை யாயத்துக் காதற்றோழியை
மடவரல் காட்ட மன்னனறிந்தது.
இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று
இரண்டாம் அதிகாரம்
2. பாற்கற் கூட்டம்
1. பாங்கனை நினைதல்
பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண்டாடும் பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே. 19
கொளு
எய்துதற் கருமை யேழையிற் றோன்றப்
பையு ளுற்றவன் பாங்கனை நினைந்தது.
2. பாங்கன் வினாதல்
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே. 20
கொளு
கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.
3. உற்றதுரைத்தல்
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே. 21
கொளு
மற்றவன் வினவ, உற்ற துரைத்தது.
4. கழறியுரைத்தல்
உளமாம் வகைநம்மை யுய்யவந் தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம் மண்ண லிரங்கியதே. 22
கொளு
வெற்பனைத்தன் மெய்ப்பதங்கன்
கற்பனையிற் கழறியது.
5. கழற்றெதிர் மறுத்தல்
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியையோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே. 23
கொளு
ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்ப னுளந்தளர்ந் துரைத்தது.
6 கவன்றுரைத்தல்
விலங்கலைக் கால்விண்டு மேன்மே லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங் காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத் தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள லுள்ளந் துயர்கின்றதே. 24
கொளு
கொலைகளிற் றண்ணல் குறைநயந் துரைப்பக்
கலக்கஞ் செய்பாங்கன் கவன்று ரைத்தது.
7. வலியழிவுரைத்தல்
தலைப்படு சால்பினுக் குந்தள ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந் தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே. 25
கொளு
நிறைபொறை தேற்றம் நீதியொடு சால்பு
மறியுறு நோக்கிற்கு வாடினே னென்றது.
8. விதியொடு வெறுத்தல்
நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன் சொல்ல
வல்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர் துப்புறவே. 26
கொளு
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.
9. பாங்கனொந்துரைத்தல்
ஆலத்தி னாலமிர்தாக்கிய கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள்பொருட் டாகவமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும்நினையா தொழிவதென் தீவினையே. 27
கொளு
இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச்சுட்டி
நின்னது நன்மை நினைந்திலை யென்றது.
10. இயலிடங்கேட்டல்
நின்னுடை நீர்மையும் நீயுமிவ் வாறுநினைத் தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே. 28
கொளு
கழும லெய்திய காதற் றோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.
11. இயலிடங்கூறல்
விழியாற் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே. 29
கொளு
அழுங்க லெய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.
12. வற்புறுத்தல்
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட் செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான்போய் வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பனிக்கறையே. 34
கொளு
பெயர்ந்துரைத்த பெருவரைநாடனை
வயங்கெழுபுகழோன் வற்புறுத்தியது.
13. குறிவழிச் சேறல்
கொடுங்கால் குலவரையேழேழ் பொழிலெழில் குன்றுமன்று
நடுங்காதவனை நடுங்க நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ லாந்தில்லை ஈசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலந் தண்புனத்தே. 35
கொளு
அறைகழ லண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.
14. குறிவழிக்காண்டல்
வடிக்கணிவை வஞ்சி யஞ்சும் இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண் ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ ளேஅப் பணிமொழியே. 32
கொளு
குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
தளிர்புரை மெல்லடித் தையலைக் கண்டது.
15. தலைவனை வியந்துரைத்தல்
குவளைக் களத்தம் பலவன் குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின் றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்து ணையும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே. 33
கொளு
நயந்தவுருவும் நலனுங்கண்டு
வியந்தவனையே மிகுத்துரைத்தது.
16 கண்டமை கூறல்
பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பிமடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேல்கண் டேனொன்று நின்றதுவே. 34
கொளு
பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிற லண்ணற் கறிய வுரைத்தது.
17. செவ்வி செப்பல்
கயலுள வேகம லத்தலர் மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற் பாநின தீர்ங்கொடிமேல்
புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே. 35
கொளு
அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்
கவ்வுருக் கண்டவன் செவ்வி செப்பியது.
18. அவ்விடத்தேகல்
எயிற்குல மூன்றிருந் தீயெய்த வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது வென்னுடை மன்னுயிரே. 36
கொளு
அரிவையது நிலைமை யறிந்தவனுரைப்ப
எரிகதிர்வேலோ னேகியது.
19. மின்னிடைமெலிதல்
ஆவியன் னாய்கவ லேல்அக லேமென்றளித்தொளித்த
ஆவியன் னார்மிக் கவாவின ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ் சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி லாயத் தருவரையே. 37
கொளு
மன்னனை நினைந்து, மின்னிடை மெலிந்தது.
20. பொழில்கண்டு மகிழ்தல்
காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத லான்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே. 38
கொளு
மணங்கமழ்பொழிலின் வடிவுகண்
டணங்கெனநினைந் தயர்வுநீங்கியது.
21. உயிரென வியத்தல்
நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்துநெஞ்சம் நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங் காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே. 39
கொளு
வெறியுறுபொழிலின் வியன்பொதும்பரின்
நெறியுறுகுழலி நிலைமை கண்டது.
22. தளர்வகன்றுரைத்தல்
தாதிவர் போதுகொய் யார்தைய லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந்தடியார் சுனைப்புன லாடல் செய்யார்
போதிவர் கற்பகநாடுபுல் லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை யெய்துதற்கே. 40
கொளு
பனிமதிநுதலியைப் பைம்பொழிலிடைத்
தனிநிலைகண்டு தளர்வகன்றுரைத்தது.
23. மொழிபெறவருந்தல்
காவிநின் றேர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன் றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங் கேயின் றழிகின்றதே. 41
கொளு
கூடற்கரிதென வாடி யுரைத்தது.
24. நாணிக்கண்புதைத்தல்
அகலிடந்தாவிய வானோ னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடம் தாவிடை யீசற் றொழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர் நையா வகையொதுங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில் வாய்தரு பூங்கொடியே. 42
கொளு
ஆயிடைத் தனிநின் றாற்றா தழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.
25. கண்புதைக்க வருந்தல்
தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும் புதைநின்னை வாணுதலே. 43
கொளு
வேற்றருங் கண்ணினை மிளிர்வன வன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக்கென்றது.
26. நாண்விடவருந்தல்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த
அருநாணளிய வழல்சேர் மெழுகொத் தழிகின்றதே. 44
கொளு
ஆங்ங னம்கண்டாற்றா ளாகி
நீங்கின நாணொடு நேரிழை நின்றது.
27. மருங்கணைதல்
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகிலேஞ்சிவன் தில்லையன்னாள்
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே. 45
கொளு
ஒளிதிகழ்வார்குழல் அளிகுலம்விலக்கிக்
கருங்களிற்றண்ணல் மருங்கணைந்தது.
28. இன்றியமையாமை கூறல்
நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு மாட்கொண்ட கொங்கைகளே. 46
கொளு
வென்றிவேலவன் மெல்லியல்தனக்
கின்றியமையாமை யெடுத்துரைத்தது.
29. ஆயத்துய்த்தல்
சூளாமணியும்பர்க் காயவன் சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்த தென்னாருயிர் ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே பலசொல்லி யென்னைதுன்னும்
நாளார் மலர்பொழில் வாயெழி லாயம் நணுகுகவே. 47
கொளு
தேங்கமழ் சிலம்பன், பாங்கிற் கூட்டியது.
30. நின்று வருந்தல்
பொய்யுடை யார்க்கரன் போலக லும்மகன் றாற்புணரின்
மைய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல் காக்கும்பைம் பூம்புனமே. 48
கொளு
பாங்கிற் கூட்டிப்பதிவயிற் பெயர்வோன்
நீங்கற் கருமைநின்று நினைந்தது.
பாற்கற் கூட்டம் முற்றிற்று
மூன்றாம் அதிகாரம்
3. இடந்தலைப்பாடு
நூற்பா
பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன
வழியடு கூட்டி வருந்திசி னோரே.
1. பொழிலிடைச் சேறல்
என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம்வருந்தல் நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக்கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே. 49
கொளு
ஐயரிக் கண்ணியை யாடிடத் தேசென்
றெய்துவ னெனநினைந் தேந்தல் சென்றது.
இடந்தலைப்பாடு முற்றிற்று
நான்காம் அதிகாரம்
4. மதியுடம்படுத்தல்
பேரின்பக் கிளவி
மதியுடம் படுத்தல் வரும்ஈ ரைந்தும்
குருவறி வித்த திருவரு ளதனைச்
சிவத்துடன் கலந்து தெரிசனம் புரிதல்.
1. பாங்கிடைச் சேறல்
எளிதன் றினிக்கனி வாய்வல்லி புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக்கூத்தப் பிரானையுன் னாரினென்கண்
தளிசென்ற வேற்கண் வருவித்த செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு வாழி யறிவிப்பனே. 50
கொளு
கரந்துறை கிளவியிற் காதற் றோழியை
இரந்துகுறை யுறுவலென் றேந்தல் சென்றது.
2. குறையுறத் துணிதல்
குவளைக் கருங்கட் கொடியே ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே. 51
கொளு
ஓரிடத்தவரை யொருங்குகண்டுதன்
பேரிடர்பெருந்தகை பேசத் துணிந்தது.
3. வேழம் வினாதல்
இருங்களி யாயின் றியானிறு மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாவன லாடவல் லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே. 52
கொளு
ஏழையரிருவரு மிருந்தசெவ்வியுள்
வேழம்வினா அய் வெற்பன்சென்றது.
4. கலைமான்வினாதல்
கருங்கண் ணனையறியாமைநின் றோன்றில்லைக்கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு புண்புண ரிப் புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே. 53
கொளு
சிலைமா னண்ணல், கலைமான் வினாயது.
5. வழிவினாதல்
சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங் கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநுஞ் சீறூர்க் குரைமின்கள் சென்னெறியே. 54
கொளு
கலைமான் வினாய கருத்து வேறறிய
மலைமானண்ணல் வழிவினாயது.
6. பதிவினாதல்
ஒருங்கட மூவெயி லொற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற் கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி யோவிங்கு வாழ்பவர்க்கு. 55
கொளு
பதியொடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலித்தது.
7. பெயர்வினாதல்
தாரென்ன வோங்குஞ் சடைமுடி மேற்றானித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற் றம்பல வன்கயிலை
ஊரென்ன வென்னவும் வாய்திற வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. 56
கொளு
பேரமைத் தோளியர், பேர்வி னாயது.
8. மொழிபெறாது கூறல்
இரத முடையநடமாட் டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே. 57
கொளு
தேமொழியவர் வாய்மொழிபெறாது
மட்டவிழ்தாரோன் கட்டுரைத்தது.
9. கருத்தறிவித்தல்
வின்னிற வாணுதல் வேனிறக் கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின் றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ மணிநிறப் பூந்தழையே. 58
கொளு
உரைத்த துரையாது, கருத்தறி வித்தது.
10. இடைவினாதல்
கலைக்கி ழகலல்குற் பாரம தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற் றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே. 59
கொளு
வழிபதி பிறவினாய், மொழிபல மொழிந்தது.
மதியுடம்படுத்தல் முற்றிற்று
ஐந்தாம் அதிகாரம்
5. இருவரு முள்வழி அவன் வரவுணர்தல்
நூற்பா
ஐயநாட லாங்கவை யிரண்டும்
மையறு தோழி யவன்வர வுணர்தல்.
பேரின்பக் கிளவி
இருவரு முள்வழி யவன்வர வுணர்தல்
துறையோ ரிரண்டுஞ் சிவமுயிர் விரவிய
தருளே வுணர்ந்திடற் றாகு மென்ப.
1. ஐயறுதல்
பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தோ டேனம் வினாயவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட வானிச் சுனைப்புனமே. 60
கொளு
அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி நோக்கித்
தையற் பாங்கிஐய முற்றது.
2. அறிவுநாடல்
ஆழமன் னோவுடைத் திவ்வையர் வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத் தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. 61
கொளு
வெற்பன் வினாய சொற்பத நோக்கி
நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது.
இருவரு முள்வழி அவன் வரவுணர்தல் முற்றிற்று
ஆறாம் அதிகாரம்
6. முன்னுறவுணர்தல்
நூற்பா
வாட்டம் வினாதீல் முன்னுற வுணர்தல்
கூட்டி உணரும் குறிப்புரை யாகும்.
பேரின்பக் கிளவி
முன்னுற உணர்தல் எனஇ•து ஒன்றும்
சிவம்உயிர் கூடல் அருள்வினா வியது.
1. வாட்டம் வினாதல்
நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. 62
கொளு
மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது.
முன்னுறவுணர்தல் முற்றிற்று
ஏழாம் அதிகாரம்
7. குறையுறவுணர்தல்
நூற்பா
குறையற்று நிற்ற லவன்குறிப் பறித லவள் குறிப்
பறிதலோ டவர்நினை வெண்ணல்
கூறிய நான்குங் குறையுற வுணர்வெனத்
தேறிய பொருளிற் றெளிந்திசி னோரே.
பேரின்பக் கிளவி
குறையுற வுணர்தற் றுறையொரு நான்கும்
உயிர்சிவத் திடைசென் றொருப்படுந் தன்மை
பணியாற் கண்டு பரிவால் வினாயது.
1. குறையுற்றுநிற்றல்
மடுக்கோ கடலின் விடுதி மிலன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே. 63
கொளு
கறையுற்ற வேலவன், குறையுற்றது.
2. அவன் குறிப்பறிதல்
அளியமன் னும்மொன் றுடைத்தண்ண லெண்ணரன் தில்லையன்னாள்
கிளிமைமன் னுங்கடி யச்செல்ல நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றுறொன்று தோன்று மொளிமுகத்தே. 64
கொளு
பொற்றொடித்தோளிதன் சிற்றிடைப்பாங்கி
வெறிப்பூஞ்சிலம்பன் குறிப்பறிந்தது.
3. அவள்குறிப்பறிதல்
பிழைகொண் டொருவிக் கெடாதன்பு செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின் றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம் பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண் டொருவனென்னாமுன்ன முள்ளந் தழைத்திடுமே. 65
கொளு
ஆங்கவள் குறிப்புப், பாங்கி பகர்ந்தது.
4. இருவர் நினைவு மொருவழி யுணர்தல்
மெய்யே யிவற்கில்லை வேட்டையின் மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப திறைபுலி யூரனையாள்
எய்யே மெனினுங் குடைந்தின்பத் தேனுண் டெழிறருமே. 66
கொளு
அன்புறுநோக் காங்கறிந், தின்புறுதோழி யெண்ணியது.
குறையுறவுணர்தல் முற்றிற்று
எட்டாம் அதிகாரம்
8. நாணநாட்டம்
பேரின்பக் கிளவி
நாண நாட்டத் துறையோ ரைந்து
மருள சிவத்தை யதிசயத் துயிரின்
பக்குவந் தன்னைப் பலவு மியந்தது.
1. பிறைதொழுகென்றல்
மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. 67
கொளு
பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது.
2. வேறுபடுத்துக்கூறல்
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென் றாளங்க மவ்வையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங் காகு முனக்கவளே. 68
கொளு
வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்
டாய்வளைத்தோழி யணங்கென்றது.
3. சுனையாடல்கூறி நகைத்தல்
செந்நிற மேனிவெண்ணீறணி வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங் குடைவ னிருஞ்சுனையே. 69
கொளு
மாணநாட்டிய வார்குழற் பேதையை
நாணநாட்டி நகைசெய்தது.
4. புணர்ச்சியுரைத்தல்
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத் தோன்தடமால்வரை வாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்சுனையே. 70
கொளு
மணக்குறி நோக்கிப், புணர்ச்சி யுரைத்தது.
5. மதியுடம்படுதல்
காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71
கொளு
அயில்வேற் கண்ணியொ டாடவன்றனக் குயிரொன்றென
மயிலியற் றோழி மதியுடம் பட்டது.
நாணநாட்டம் முற்றிற்று
ஒன்பதாம் அதிகாரம்
9. நடுங்க நாட்டம்
ஆவா விருவரறியா அடிதில்லை யம்பலத்து
மூவாயிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொர ராண்டகையே. 72
கொளு
நுடங்கிடைப் பாங்கி, நடுங்க நாடியது.
நடுங்க நாட்டம் முற்றிற்று
பத்தாம் அதிகாரம்
10. மடற்றிறம்
பேரின்பக் கிளவி
மடற்றுறை யொன்பதுஞ் சிவத்தினுட் மோக
முற்ற வுயிரருள் பற்றி யுரைத்தது.
1. ஆற்றாதுரைத்தல்
பொருளா வெனைப்புகுந் தாண்டு புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா தழியுமென் னாருயிரே. 73
கொளு
மல்லற்றிரள் வரைத்தோளவன்
சொல்லாற்றாது சொல்லியது.
2. உலகின்மேல் வைத்துரைத்தல்
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. 74
3. தன்துணிபுரைத்தல்
விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம் பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றோர் பெண்கொடியே. 75
கொளு
மானவேலவன் மடன்மாமிசை
யானுமேறுவ னென்னவுரைத்தது.
4. மடலேறும் வகையரைத்தல்
கழிகின்ற வென்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. 76
கொளு
அடல்வேல னழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.
5. அருளாலரிதென விலக்கல்
நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை மல்லற்கண் ணார்ந்த பெண்ணை
உடனாம் பெடையொடாண் சேவலும் முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. 77
கொளு
அடல்வேலண்ண லருளுடைமையின்
மடலேற்றுனக் கரிதென்றது.
6. மொழிநடை யெழுதலரிதென விலக்கல்
அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன் னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே. 78
கொளு
அவயவ மரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்ட லியலா தென்றது.
7. அவயவமெழுத லரிதென விலக்கல்
யாழுமெழுதி யெழின்முத் தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந் தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. 79
கொளு
அவயவ மானவை, யிவையிவை என்றது.
8. உடம்படாது விலக்கல்
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்செய்க அறிந்தனவே. 80
கொளு
அடுபடையண்ண லழிதுயரொழிகென
மடநடைத்தோழி மடல்விலக்கியது.
9. உடம்பட்டு விலக்கல்
பைந்நா ணரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயா னழுந்தினு மென்னின்முன்னும்
இந்நாளிதுமது வார்குழ லாட்கென்க ணின்னருளே. 81
கொளு
அரவரு நுண்ணிடைக் குரவரு கூந்தலென்
னுள்ளக் கருத்து விள்ளாளென்றது.
மடற்றிறம் முற்றிற்று
பதினொன்றாம் அதிகாரம்
11. குறைநயப்புக் கூறல்
பேரின்பக் கிளவி
குறைநயப் புத்துறை யவையிரு நான்குஞ்
சிவந்தோ டுயிரைச் சேர்க்க வேண்டி
உயிர்ப்பரி வெடுத்தெடுத் துரைத்தறி வுறுத்தல்.
1. குறிப்பறிதல்
தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது வார்குழ லேந்தியே. 82
கொளு
நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்
குள்ளறி குற்ற வொள்ளிழை யுரைத்தது.
2. மென்மொழியாற் கூறல்
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ
எரிசேர் தளிரன்ன மேனியன் ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா னொருவனித் தேம்புனமே. 83
கொளு
ஒளிருறு வேலவன் றளர்வுறு கின்றமை
இனிமொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.
3. விரவிக்கூறல்
நீகண்ட னையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ ரலவன்தன் சீர்ப்பெடையின்
வாய்கண் டனையதொர் நாவற்கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன்றாகிநின் றானப் பெருந்தகையே. 84
கொளு
வன்மொழியன்மனம் மெலிவதஞ்சி
மென்மொழிவிரவி மிகுந்துரைத்தது.
4. அறியாள் போறல்
சங்கந் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. 85
கொளு
அறியாள் போன்று, குறியாள் கூறியது.
5. வஞ்சித்துரைத்தல்
புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென்றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே. 86
கொளு
நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித் திவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்குரைத்தது.
6. புலந்து கூறல்
உள்ளப்படுவன வுள்ளி யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப்படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே. 87
கொளு
திருந்தியசொல்லிற் செவ்விபெறாது
வருந்திய சொல்லின் வகுத்துரைத்தது.
7. வன்மொழியாற் கூறல்
மேவியந் தோலுடுக் குந்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின் னெழினென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட லேறக்கொல் பாவித்ததே. 88
கொளு
கடலுல கறியக் கமழலந் துறைவன்
மடலே றும்மென வன்மொழி மொழிந்தது.
8. மனத்தொடு நேர்தல்
பொன்னார் சடையோன் புலியூர் புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன் றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன் னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லுநீர்மை இனியவர்க்கே. 89
கொளு
அடல்வேலவனாற்றானெனக்
கடலமிழ்தன்னவன் காணலுற்றது.
குறைநயப்புக் கூறல் முற்றிற்று
பன்னிரண்டாம் அதிகாரம்
12. சேட்படை
பேரின்பக் கிளவி
சேட்படை இருபத் தாறு துறையுங்
கிடையா யின்பங் கிடைத்தலா லுயிரை
யருமை காட்டி யறியாள் போலப்
பலபல யருமை பற்றி யுரைத்த
யருளே சிவத்தோ டாக்க வருளல்.
1. தழைகொண்டுசேறல்
தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமப் போதுங்கொள் ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள் செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. 90
கொளு
கொய்ம்மலர்க்குழலி குறைநயந்தபின்
கையுறையோடு காளைசென்றது.
2. சந்தனத்தழை தகாதென்று மறுத்தல்
ஆரத் தழையராப் பூண்டம் பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின் றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா ரெனவரும் ஐயுறவே. 91
கொளு
பிறைநுதற் பேதையைக் குறைநயப்பித்த
வாட்படை யண்ணலைச் சேட்படுத்தது.
3. நிலத்தின்மை கூறிமறுத்தல்
முன்றகர்த் தெல்லா விமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத் தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண் ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து மூடுமென் றெள்குதுமே. 92
கொளு
கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக் கேலா தென்றது.
4. நினைவறிவுகூறி மறுத்தல்
யாழார் மொழிமங்கை பங்கத் திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுமொழி லாயிருந் தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ் சிலம்ப தருந்தழையே. 93
கொளு
மைதழைக் கண்ணி மனமறிந்தல்லது
கொய்தழை தந்தாற் கொள்ளே மென்றது.
5. படைத்து மொழியான் மறுத்தல்
எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத் தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையிப் பூந்தழையே. 94
கொளு
அருந்தழை மேன்மேற் பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியிற் றடுத்தவண் மொழிந்தது.
6. நாணுரைத்து மறுத்தல்
உறுங்கண்ணி வந்த கணையுர வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென் வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள் நாணுமிக் குன்றிடத்தே. 95
கொளு
வாணுதற் பேதையை, நாணுத லுரைத்தது.
7. இசையாமை கூறி மறுத்தல்
நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம் பலவன் நெடுவரையே. 96
கொளு
வசைதீர் குலத்திற் கிசையா தென்றது.
8. செவ்வியிலளென்று மறுத்தல்
சுற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில ளாகத் தொளிமிளுரும்
புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. 97
கொளு
நவ்வி நோக்கி, செவ்வியில ளென்றது.
9. காப்புடைத்தென்று மறுத்தல்
முனிதரு மன்னையு மென்னையர்சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம் பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே. 98
கொளு
காப்புடைத்தென்று, சேட்படுத்தது.
10. நீயே கூறென்று மறுத்தல்
அந்தியின் வாயெழி லம்பலத் தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னோடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ் சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. 99
கொளு
அஞ்சு தும்பெரும பஞ்சின் மெல்லடியைக்
கூறுவநீயே கூறுகென்றது.
11. குலமுறை கூறிமறுத்தல்
தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமியெந் தேமொழியே. 100
கொளு
தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தே மெனவுரைத்தது.
12. நகையாடி மறுத்தல்
சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர் எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்கையிற் கொடுஞ்சிலையே. 101
கொளு
வாட்டதழை யெதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி யின்னகை செய்தது.
13. இரக்கத்தோடு மறுத்தல்
மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர் போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன பாவம் பெரியவரே. 102
கொளு
கையுறை யெதிராது காதற் றோழி
யைய நீபெரி தயர்த்தனை யென்றது.
14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி யாத வியல்பினவே. 103
கொளு
மாந்தளிரும் மலர்நீலமும்
ஏந்தலிம்மலை யில்லையென்றது.
15. இளமை கூறி மறுத்தல்
உருகு தலைச்சென்ற வுள்ளத்தும் அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென் னோவைய வோதுவதே. 104
கொளு
முளையெயிற் றரிவை, விளைவில ளென்றது.
16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
பண்டா லியலு மிலைவளர் பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ்சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந் துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை கொல்லோ கருதியதே. 105
கொளு
என்னை மறைத்தபின் எண்ணியதரிதென
நன்னுதல்தோழிநகை செய்தது.
17. நகை கண்டு மகிழ்தல்
மத்தகஞ் சேர்தனி நோக்கினன் வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னையுய்ய நின்றோன் தில்லையொத்திலங்கும்
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந் தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன் றோஎன்விழுத்துணையே. 106
கொளு
இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வே லண்ண லுரைத்தது.
18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
விண்ணிறந் தார்நிலம் விண்டவ ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத் தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. 107
கொளு
வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியே னென்றது.
19. அவயவங்கூறல்
குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங் கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற் சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர் கின்ற தொளிமுகமே. 108
கொளு
அவயவ மவளுக், கிவையிவை யென்றது.
20. கண்ணயந்துரைத்தல்
ஈசற் கியான்வைத்த வன்பி னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற்காரென் றவன்தில்லை யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெருநீளம் பெருங்கண்களே. 109
கொளு
கண்ணிணை பிறழ்வன, வண்ண முரைத்தது.
21. தழையெதிர்தல்
தோலாக் கரிவென்ற தற்குந் துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய நீதந்த கொய்தழையே. 110
கொளு
அகன்றவிடத் தாற்றாமைகண்டு
கவன்றதோழி கையுறையெதிர்ந்தது.
22. குறிப்பறிதல்
கழைகாண் டலுஞ்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப்பாகு மென்நோக்கி மன்நோக்கங் கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி யேன்சொல்லும் ஈடவற்கே. 111
கொளு
தழையெதிரா தொழிவதற்கோர்
சொல்லறியே னெனப் பல்வளைக்குரைத்தது.
23. குறிப்பறிந்து கூறல்
தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. 112
கொளு
ஏழைக் கிருந்தழை, தோழிகொண் டுரைத்தது.
24. வகுத்துரைத்தல்
ஏறும் பழிதழை யேன்பின்மற் றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய் மலைநம் மிரும்புனம்காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை யாஞ்செய்வ தேந்திழையே. 113
கொளு
கடித்தழை கொணர்ந்த காதற்றோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்துரைத்தது.
25. தழையேற்பித்தல்
தெவ்வரை மெய்யெரிகாய் சிலையாண்டென்னை யாண்டு கொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண் டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி திற்றந்த ஈர்ந்தழையே. 114
கொளு
கருங்குழன் மடந்தைக் கரும்பெறற் றோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.
26. தழைவிருப்புரைத்தல்
பாசத் தளையறுத் தாண்டு கொண்டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந் தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு மருங்குழல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா தனவில்லை பூந்தழையே. 115
கொளு
விருப்பவள் தோழி, பொருப்பற் குரைத்தது.
சேட்படை முற்றிற்று
பதின்மூன்றாம் அதிகாரம்
13. பகற்குறி
பேரின்பக் கிளவி
பகற்குறித் துறைமுப் பதினோ டிரண்
டியற்கைபோல் சிவத்தோ டியலுறுக் கூட்டிப்
பிரித்த அருளின் பெரும்பகற் குறியே.
1. குறியிடங்கூறல்
வானுழை வாளம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன்
கானுழை வாழ்வுபெற்றாங்கெழில் காட்டுமொர்கார்ப் பொழிலே. 116
கொளு
வாடிடத் தண்ணல் வண்தழை யெதிர்ந்தவள்
ஆடிடத் தின்னியல் பறிய வுரைத்தது.
2. ஆடிடம் படர்தல்
புயல்வள ரூசல்முன்ஆடிப் பொன்னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத் தான்வரைத் தண்புனத்தே. 117
கொளு
வண்தழை யெதிர்த்த வொண்டொடிப் பாங்கி
நீடமைத் தோளியொ டாடிடம் படர்ந்தது.
3. குறியிடத்துக் கொண்டு சேறல்
தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணியம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே. 118
கொளு
அணிவளராடி டத்தாயவெள்ள
மணிவளர்கொங்கையை மருங்ககன்றது.
4. இடத்துய்த்து நீங்கல்
நரல்வே யினநின தோட்குடைந் துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங் கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. 119
கொளு
மடத்தகை மாதரை இடத்தகத் துய்த்து
நீங்கலுற்ற பாங்கி பகர்ந்தது.
5. உவந்துரைத்தல்
படமா சுணப்பள்ளி யிக்குவடாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ் வார்பொழிற்கே. 120
கொளு
களிமயிற்சாயலை யொருசிறைக்கண்ட
ஒளிமலர்த்தாரோ னுவந்துரைத்தல்.
6. மருங்கணைதல்
தொத்தீன்மலர்ப்பொழில் தில்லைத் தொல்லோனரு ளன்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏரளப்பான்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலைகா ளென்னுக் கின்னும் பெருக்கின்றதே. 121
கொளு
வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.
7. பாங்கியறிவுரைத்தல்
அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபண்ணு கோலந் திருநுதலே. 122
கொளு
நெறிகுழற் பாங்கி, அறிவறி வித்தது.
8. உண்மகிழ்ந்துரைத்தல்
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை யளிகுலமே. 123
கொளு
தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந் துரைத்தது.
9. ஆயத்துய்த்தல்
கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லமெழில் தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ் பொழி லாயத்துச் சேர்க் திருத்தகவே. 124
கொளு
களைகடலன்ன கார்மயிற்கணத்துப்
புனைமடமானைப் புகவிட்டது.
10. தோழிவந்து கூடல்
பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள்
இன்னனயான் கொணர்ந்தேன் மணந்தாழ்குழற் கேய்வனவே. 125
கொளு
நெறியுறு குழலியை நின்றிடத் துய்த்துப்
பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட் குரைத்தது.
11. ஆடிடம் புகுதல்
அறுகால் நிறைமல ரைம்பால் நிறையணிந் தேன்அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே. 126
கொளு
தனிவிளை யாடிய தாழ்குழற் றோழி
பனிமதி நுதலியோ டாடிடம் படர்ந்தது.
12. தனிகண்டுரைத்தல்
தழங்கு மருவியெஞ் சீறூர் பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண் டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடி தென்தில்லை மணிநகர்க்கே. 127
கொளு
வேயொத்த தோளியை ஆயத் துய்த்துக்
குனிசிலை யண்ணலைத் தனிகண்டுரைத்தது.
13. பருவங்கூறி வரவு விலக்கல்
தள்ளி மணிசந்த முந்தித் தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. 128
கொளு
மாந்தளிர்மேனியை வரைந்தெய்தா
தேந்தலிவ் வாறியங்க லென்றது.
14. வரைவுடம்படாது மிகுத்துக் கூறல்
மாடஞ்செய பொன்னக ரும்நிக ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை யுள்ளவரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென் றோநின்று கூறுவதே. 129
கொளு
வரைவு கடாய வாணுதற் றோழிக்கு
விரைமலர்த்தாரோன் மிகுத்துரைத்தது.
15. உண்மைகூறி வரைவுகடாதல்
வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ் சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங் காவலித் தாழ்வரையே. 130
கொளு
கல்வரை நாடன் இல்லதுரைப்ப
ஆங்கவளுண்மை பாங்கிபகர்ந்தது.
16. வருத்தங்கூறி வரைவுகடாதல்
மன்னுந் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடுதி ரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன் பரஞ் சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல னென்னப் புலம்புவனே. 131
கொளு
கனங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி
நிரைவளைத் தோளி வரைவு கடாயது.
17. தாயச்சங்கூறி வரைவுகடாதல்
பனித்துண்டஞ் சூடும் படர்சடை அம்பல வன்னுலகம்
தனித்துண் டவன்தொழுந் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற்
றினிக் கண் டிலம்பற்றுச் சிற்றிடைக் கென்றஞ்சு மெம்மனையே. 132
கொளு
மடத்தகை மாதர்க் கடுப்பன அறியா
வேற்கண் பாங்கி ஏற்க வுரைத்தது.
18. இற்செறி வறிவித்து வரைவுகடாதல்
ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை யாடிதிருமலைக்கே. 133
கொளு
விற்செறி நுதலியை, இற்செறி வுரைத்தது.
19. தமர் நினை வுரைத்து வரைவுகடாதல்
சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம் பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம் பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. 134
கொளு
விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்
றொளிவே லவற்கு வெளியே யுரைத்தது.
20. எதிர்கோள்கூறி வரைவுகடாதல்
வழியும் அதுவன்னை யென்னின் மகிழ்வும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றம்முன் னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற் றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல வென்னோ கிளக்கின்றதே. 135
கொளு
ஏந்திழைத் தோழி ஏந்தலைமுன்னிக்
கடியாமாறு நொடி கென்றது.
21. ஏறுகோள் கூறிவரைவு கடாதல்
படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது போலு முருவினதே. 136
கொளு
என்னையர்துணிவின்ன தென்றது.
22. அயலுரையுரைத்து வரைவு கடாதல்
உருப்பனை அன்னகைக் குன்றொன் றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன் னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென்னோவினை யேன்யான் புகல்வதுவே. 137
கொளு
கயல்புரை கண்ணியை அயலுரை யுரைத்தது.
23. தினைமுதிர்வுரைத்து வரைவுகடாதல்
மாதிடங் கொண்டம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே. 138
கொளு
ஏனல் விளையாட்டினியில் லையென
மானற் றோழி மடந்தைக் குரைத்தது.
24. பகல்வரல் விலக்கி வரைவுகடாதல்
வடிவார் வயற்றில்லை யோன்மல யத்துநின் றும் வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம் பெருமஇத் தண்புனமே. 139
கொளு
அகல்வரை நாடனைப், பகல்வரலென்றது.
25. தினையொடு வெறுத்து வரைவுகடாதல்
நினைவித்துத் தன்னையென் நெஞ்சத் திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. 140
கொளு
தண்புனத்தோடு தளர்வுற்றுப்
பண்புனைமொழிப் பாங்கிபகர்ந்தது.
26. வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல்
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே. 141
கொளு
நீங்குகவினி நெடுந்தகையென
வேங்கைமேல் வைத்து விளம்பியது.
27. இரக்கமுற்றுவரைவு கடாதல்
வழுவா இயலெம் மலையர் விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல் லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவதித் தொல்புனத்தே. 142
கொளு
செழுமலை நாடற்குக் கழுமலுற் றிரங்கியது.
28. கொய்தமை கூறி வரைவுகடாதல்
பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம் புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலவர்க்கு மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக் கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்பினமே. 143
கொளு
நீடிரும்புனத்தினி யாடேமென்று
வரைவுதோன்ற வுரை செய்தது.
29. பிரிவருமைகூறி வரைவுகடாதல்
பரிவுசெய் தாண்டம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தவனங் கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று காட்டு மிளங்கிளியே. 144
கொளு
மறைப்புறக் கிளவியிற் சிறைப்புறத் துரைத்தது.
30. மயிலொடுகூறி வரைவுகடாதல்
கணியார் கருத்தின்று முற்றிற் றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண் டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலைமயில்காள் அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு நீர்மைகள் சொல்லுமினே. 145
கொளு
நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்
பாங்கி பகர்ந்து பருவர லுற்றது.
31. வறும்புனங்கண்டு வருந்தல்
பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன் புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றுருக்கின்ற வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற் றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த வாமற்றிவ் வான்புனமே. 146
கொளு
மென்புனம்விடுத்து மெல்லியல்செல்ல
மின்பொலிவேலோன் மெலிவுற்றது.
32. பதிநோக்கி வருந்தல்
ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே. 147
கொளு
மதிநுத லரிவை பதிபுக லரிதென
மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.
பகற்குறி முற்றிற்று
பதினென்காம் அதிகாரம்
14. இரவுக் குறி
பேரின்பக் கிளவி
இரவுக் குறித்துறை முப்பத்தி மூன்றும்
அருளே சிவத்தோ டாக்கிய லருமை
தெரியவற் புறுத்திச் சிவனது கருணையின்
இச்சை பலவுமெ டுத்தெடுத் தருளல்.
1. இரவுக்குறி வேண்டல்
மருந்துநம் மல்லற் பிறவிப் பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும் அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ ரதனுக்கு வெள்வளையே. 148
கொளு
நள்ளிருட் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென்முலைப் பாங்கிக்கு ரைத்தது.
2. வழியருமை கூறிமறுத்தல்
விசும்பினுக் கேணி நெறியன்ன சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந் தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற் கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடுமி லைந்தான் மலயத்தெம் வாழ்பதியே. 149
கொளு
இரவர லேந்தல் கருதி யுரைப்பப்
பருவரற் பாங்கி யருமை யுரைத்தது.
3. நின்று நெஞ்சுடைதல்
மாற்றே னெனவந்த காலனை யோலமிட அடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப் போலமெலியு நெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. 150
கொளு
பாங்கிவிலங்கப் பருவரை நாடன்
நீங்கிவிலங்காது நெஞ்சுடைந்தது.
4. இரவுக்குறி நேர்தல்
கூளி நிரைக்கநின் றம்பலத் தாடி குறைகழற்கீழ்த்
தூளி நிறைத்த சுடர்முடி யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள் தேரு மிரவில்வந்து
மீளி யுரைத்தி வினையே னுரைப்பதென் மெல்லியற்கே. 151
கொளு
தடவரைநாடன் தளர்வுதீர
மடநடைப்பாங்கி வகுத்துரைத்தது.
5. உட்கொள வினாதல்
வரையன் றொருகா லிருகால் வளைய நிமிர்ந்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின் றோன்தில்லை யன்னநினனூர்
விரையென்ன மென்னிழ லென்ன வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம் பாவி யொளிர்வனவே. 152
கொளு
நெறிவிலக் குற்றவ னுறுதுயர் நோக்கி
யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.
6. உட்கொண்டு வினாதல்
செம்மல ராயிரந் தூய்க்கரு மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத் தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந் தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி வாய்நும ராடுவதே. 153
கொளு
தன்னை வினவத் தானவள் குறிப்பறிந்
தென்னை நின்னாட் டியலணி யென்றது.
7. குறியிடங்கூறல்
பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற் பொதியின்மலைப் பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகைதுயில் பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின் றாடுஞ் செழும்பொழிலே. 154
கொளு
இரவுக் குறியிவ ணென்று பாங்கி
அரவக் கழலவற் கறிய வுரைத்தது.
8. இரவுக்குறி யேற்பித்தல்
மலவன் குரம்பையை மாற்றியம் மால்முதல் வானர்க் கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ
டலவன் பயில்வது கண்டஞர் கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன தாங்கொன்மன் சேர்துயிலே. 155
கொளு
அரவக் கழலவ னாற்றானென
இரவுக்குறி யேற்பித்தது.
9. இரவரவுரைத்தல்
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. 156
கொளு
குருவருகுழலிக் கிரவரவுரைத்தது.
10. ஏதங்கூறி மறுத்தல்
செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று மோவின்றெம் வள்ளலையே. 157
கொளு
இழுக்கம்பெரி திரவரினென
அழுக்கமெய்தி யரிவையுரைத்தது.
11. குறைநேர்தல்
ஓங்கு மொருவிட முண்டம் பலத்தும்ப ருய்யவன்று
தாங்கு மொருவன் தடவரை வாய்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன் றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே. 158
கொளு
அலைவேலண்ணல் நிலைமைகேட்டுக்
கொலைவேற்கண்ணி குறைநயந்தது.
12. குறைநேர்ந்தமை கூறல்
ஏனற் பசுங்கதி ரென்றூழ்க் கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லுஞ் செல்லல்களே. 159
கொளு
குறைநயந்தனள் நெறிகுழ லியென
எறிவேலண்ணற் கறியவுரைத்தது.
13. வரவுணர்ந்துரைத்தல்
முன்னு மொருவ ரிரும்பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந் தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. 160
கொளு
வளமயிலெடுப்ப இளமயிற்பாங்கி
செருவேலண்ணல் வரவு ரைத்தது.
14. தாய்துயிலறிதல்
கூடார் அரண்நெரி கூடக்கொடுஞ்சிலை கொண்ட அண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன் னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே. 161
கொளு
ஊசன்மிசைவைத் தொள்ளமளியில்
தாயதுதுயில் தானறிந்தது.
15. துயிலெடுத்துச்சேறல்
விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்க்கின் றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு வாழுங் கருங்குழலே. 162
கொளு
தாய்துயிலறிந் தாய்தருபவள்
மெல்லியற்குச் சொல்லியது.
14. இடத்துய்த்து நீங்கல்
நந்தீ வரமென்னு நாரணன் நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி வீயுந் தருகுவனே. 163
கொளு
மைத்தடங் கண்ணியை யுய்த்திடத் தொருபால்
நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.
17. தளர்வகன்றுரைத்தல்
காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத்தென் னோவந்து வைகி நயந்ததுவே. 164
கொளு
வடுவகி ரனைய வரிநெடுங் கண்ணியைத்
தடுவரி யன்பொடு தளர்வகன் றுரைத்தது.
18. மருங்கணைதல்
அகிலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித் தேம்ப லிடைஞெமியப்
புகலு மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. 165
கொளு
அன்புமிகுதியி னளவளாயவளைப்
பொன்புனை வேலோன் புகழ்ந்துரைத்தது.
19. முகங்கொண்டு மகிழ்தல்
அழுந்தேன் நரகத் தியானென்றி ருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப் புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர் வானத் திளமதியே. 166
கொளு
முகையவிழ்குழலி முகமதிகண்டு
திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.
20. பள்ளியிடத்துய்த்தல்
கரும்புறு நீலங் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. 167
கொளு
பிரிவது கருதிய பெருவரை நாடன்
ஒள்ளிழைப் பாங்கியொடு பள்ளிகொள் கென்றது.
21. வரவு விலக்கல்
நற்பகற் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத் திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே. 168
கொளு
தெய்வமன் னாளைத் திருந்தமளி சேர்த்தி
மைவரை நாடனை வரவுவிலக் கியது.
22. ஆற்றாதுரைத்தல்
பைவா யரவரை அம்பலத் தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத் தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை யின்றென் முன்னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப தென்றுமென் இன்னுயிரே. 169
கொளு
வரைவு கடாய வாணுதற் றோழிக்
கருவரை நாடன் ஆற்றா துரைத்தது.
23. இரக்கங்கூறி வரைவு கடாதல்
பைவா யரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவுயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே. 170
கொளு
அதிர்கழலவன் அகன்றவழி
யெதிர்வதறியா திரங்கியுரைத்தது.
24. நிலவு வெளிப்பட வருந்தல்
நாகந் தொழவெழில் அம்பலம் நண்ணிநடம் நவில்வோன்
நாகமிதுமதி யேமதி யேநவில் வேற்கை யெங்கள்
நாகம் வரவெதிர்நாங் கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. 171
கொளு
தனிவே லவற்குத் தந்தளர் வறியப்
பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.
25. அல்லகுறி யறிவித்தல்
மின்னங் கலருஞ் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந் துயிலா தழுங்கினவே. 172
கொளு
வல்லி யன்னவ ளல்ல குறிப்பாடு
அறைப்புனற் றுறைவற்குச் சிறைப்புறத் துரைத்தது.
26. கடலிடை வைத்துத் துயரறிவித்தல்
சோத்துன் னடியமென் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னா ளிவள்துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும் மதியும் இழந்தவம்நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. 173
கொளு
எறிகடல் மேல்வைத் திரவருதுயரம்
அறைகழலவற் கறியவுரைத்தது.
27. காம மிக்க கழிபடர் கிளவி
மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை செப்புமினே. 174
கொளு
தாமமிக்க தாழ்குழ லேழை
காமமிக்க கழிபடர்கிளவி.
28. காப்புச் சிறைமிக்க கையறுகிளவி
இன்னற வார்பொழிற் றில்லை நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமில் லோருந் துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே. 175
கொளு
மெய்யறு காவலிற் கையறு கிளவி.
29. ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி
தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில் நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே. 176
கொளு
நாறு வார்குழ னவ்வி நோக்கி
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.
30. தன்னுட்கையா ரெய்திடுகிளவி
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல் லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. 177
கொளு
மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையா றெய்திடு கிளவி.
31. நிலைகண்டுரைத்தல்
பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப் பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமலரிட் டுன்னை வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. 178
கொளு
நின்னினழிந்தனள் மின்னிடை மாதென
வரைவுதோன்ற வுரைசெய்தது.
32. இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல்
பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள ரோசென் றகன்றவரே. 179
கொளு
எறிவேற்கண்ணி யிரவருதுயரம்
செறிகடலிடைச் சேர்த்தியுரைத்தது.
33. அலரறிவுறுத்தல்
அலரா யிரந்தந்து வந்தித்து மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய் தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத் தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம் மிக்கைய மெய்யருளே. 180
கொளு
அலைவேலண்ணன் மனமகிழருள்
பலராலறியப் பட்டதென்றது.
இரவுக் குறி முற்றிற்று
பதினைந்தாம் அதிகாரம்
15. ஒருவழித்தணத்தல்
பேரின்பக் கிளவி
ஒருவழித் தணத்தல் ஒருபதின் மூன்றுஞ்
சிவனது கருணை யருள்தெரி வித்தது.
1. அகன்றணைவு கூறல்
புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினால் லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. 181
கொளு
வழிவேறு படமன்னும், பழிவேறு படுமென்றது.
2. கடலொடுவரவு கேட்டல்
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்தார்க்குஞ் செறிகடலே. 182
கொளு
மணந்தவர் ஒருவழித் தணந்ததற் கிரங்கி
மறிதிரை சேரும் எறிகடற் கியம்பியது.
3. கடலொடுபுலத்தல்
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே. 183
கொளு
செறிவளைச் சின்மொழி எறிகடற் கியம்பியது.
4. அன்னமோடாய்தல்
பகன்தா மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையென்ன மேவண்டு நீல மணியணிந்து
முகன்றாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னகையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல் லோநம் மகன்றுறையே. 184
கொளு
மின்னிடை மடந்தை, யன்னமோ டாய்ந்தது.
5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்
உள்ளு முருகி யுரோமஞ் சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந் தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. 185
கொளு
மீன்றோய் துறைவர் மீளு மளவு
மான்றேர் வழியை யழியே லென்றது.
6. கூடலிழைத்தல்
ஆழி திருத்தும் புலியூ ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக் கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி யோவுள்ளம் வள்ளலையே. 186
கொளு
நீடலந் துறையிற், கூடல் இழைத்தது.
7. சுடரொடுபுலம்பல்
கார்த்தரங் கந்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந் துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு மாறென்கொ லாழ்சுடரே. 187
கொளு
குணகட லெழுசுடர் குடகடற் குளிப்ப
மணமலி குழலி மனம்புலம் பியது.
8. பொழுதுகண்டு மயங்கல்
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே. 188
கொளு
மயல்தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது.
9. பறவையொடு வருந்தல்
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா தவரினுள் நோய்
இன்னு மறிகில வாலென்னை பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே. 189
கொளு
செறிபிணி கைம்மிகச் சிற்றிடைப் பேதை
பறவைமேல் வைத்துப் பையுளெய் தியது.
10. பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்
கருங்கழி காதற்பைங் கானவில் தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென் றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. 190
கொளு
முருகவிழ் கான, லொடுபரி வுற்றது.
11 அன்னமோடழிதல்
மூவல் தழீஇய அருண்முத லோன்தில்லைச் செல்வன்முந்தீர்
நாவல் தழீஇயவிந் நானிலந் துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா தளிய களியன்னமே. 191
கொளு
இன்னகையவ ளிரவரு துயரம்
அன்னத்தோ டழிந்துரைத்தது.
12. வரவுணர்ந்துரைத்தல்
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென் றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை யான்இன் றிரக்கின்றதே. 192
கொளு
சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத் துரைத்தது.
13. வருத்தமிகுதிகூறல்
வளருங் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம் பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே. 193
கொளு
நீங்கி யணைந்தவற்குப் பாங்கி பகர்ந்தது.
--------------------------
பதினாறாம் அதிகாரம்
16. உடன்போக்கு
பேரின்பக் கிளவி
உடன்போக் கைம்பதோ டாறு துறையும்
அருளுயிர்க் கருமை யறிய வுணர்த்தலும்
ஆனந் தத்திடை அழுத்திற் றிரோதை
பரைவழி யாக பண்புணர்த் தியது.
1. பருவங்கூறல்
ஓராக மிரண்டெழி லாயொளிர் வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந் தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர மிப்பரி சேபணத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை யேயெம ரெண்ணுவதே. 194
கொளு
உருவது கண்டவள் அருமை யுரைத்தது.
2. மகட்பேச்சுரைத்தல்
மணியக் கணியும் அரன்நஞ்ச மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுநின் றார்பலர் மேன்மே லயலவரே. 195
கொளு
படைத்துமொழி கிளவியிற் பணிமொழிப் பாங்கி
அடற்கதிர் வேலோற் கறிய வுரைத்தது.
3. பொன்னணிவுரைத்தல்
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணிவான் றோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசே. 196
கொளு
பலபரி சினாலும் மலர்நெடுங் கண்ணியை
நன்னுதற் பாங்கி பொன்னணிவ ரென்றது.
4. அருவிலையுரைத்தல்
எலும்பா லணியிறை யம்பலத் தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங் கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை யென்நீ கருதுவதே. 197
கொளு
பேதைய ரறிவு பேதைமை யுடைத்தென
ஆதரத் தோழி அருவிலை யுரைத்தது.
5. அருமைகேட்டழிதல்
விசும்புற்ற திங்கட் கழும்மழப் போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய் கிடந்தரன்! தில்லையன்னாள்
குயம்புற் றரவிடைகூ ரெயிற் றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. 198
கொளு
பெருமை நாட்டத்தவள், அருமைகேட்டழிந்தது.
6. தளர்வறிந்துரைத்தல்
மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை யும்மல்குற் பைந்தொடியே. 199
கொளு
தண்டுறைவன் தளர்வறிந்து
கொண்டுநீங்கெனக் குறித்துரைத்தது.
7. குறிப்புரைத்தல்
மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறி யேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளின்றென் பைந்தொடியே. 200
கொளு
நறைக்குழலி, குறிப்புரைத்தது.
8. அருமையுரைத்தல்
மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந் தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங் கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை சேய்த்தெம் அகல்நகரே. 201
கொளு
கானின் கடுமையும் மானின் மென்மையும்
பதியின் சேட்சியும் இதுவென வுரைத்தது.
9. ஆதரங்கூறல்
பிணையுங் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே. 202
கொளு
அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும்
நிழல்தட மவட்கு நின்னொடெகி னென்றது.
10. இறந்துபாடுரைத்தல்
இங்கய லென்னீ பணிக்கின்ற தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம் நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற் கண்ணித் திருநுதலே. 203
கொளு
கார்த் தடமுங் கயலும் போன்றீர்
வார்த்தட முலையு மன்னனு மென்றது.
11. கற்புநலனுரைத்தல்
தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண் கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத் தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே. 204
கொளு
பொய்யொத்தவிடை போக்குத்துணிய
வையத்திடை வழக்குரைத்தது.
12. துணிந்தமைகூறல்
குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே. 205
கொளு
பொருவே லண்ணல் போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது.
13. துணிவொடுவினாவல்
நிழற்றலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென் னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள் கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப் பாகும்நங் கொற்றவர்க்கே. 206
கொளு
சிலம்பன் றுணிவொடு செல்சுரம் நினைந்து
கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.
14. போக்கறிவித்தல்
காயமும் ஆவியும் நீங்கள்சிற் றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங் கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம் போக்குத் துணிவித்தவே. 207
கொளு
பொருசுடர் வேலவன் போக்குத் துணிந்தமை
அரிவைக் கவள் அறிய வுரைத்தது.
15. நாணிழந்து வருந்தல்
மற்பாய் விடையோன் மகிழ்புலி யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே. 208
கொளு
கற்பு நாணினு முற்சிறந் தமையிற்
சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.
16. துணிவெடுத்துரைத்தல்
கம்பஞ் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே. 209
கொளு
செல்வ மாதர் செல்லத் துணிந்தமை
தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது.
17. குறியிடங்கூறல்
முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந் தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன் னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே. 210
கொளு
மன்னிய இருளில் துன்னிய குறியிற்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது.
18. அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல்
பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கொன்கொ லாம்புகுந் தெய்துவதே. 211
கொளு
நெறியுறு குழலியடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது.
19. கொண்டுசென்றுய்த்தல்
வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந் துயிலுமிம் மூதெயிலே. 212
கொளு
வண்டமர் குழலியைக், கண்டுகொள் கென்றது.
20. ஒம்படுத்துரைத்தல்
பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா
அறம்திருந் துன்னரு ளும்பிறி தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே. 213
கொளு
தேம்படு கோதையை, யோம்ப டுத்தது.
21. வழிப்படுத்துரைத்தல்
ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன் சிற்றம்பலம் நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே. 214
கொளு
மதிநுதலியை வழிப்படுத்துப்
பதிவயிற் பெயரும் பாங்கிபகர்ந்தது.
22 மெல்லக்கொண்டேகல்
பேணத் திருந்திய சீறடி மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன் னாமன்னு கானங்களே. 215
கொளு
பஞ்சிமெல்லடிப் பணைத்தோளியை
வெஞ்சுரத்திடை மெலிவகற்றியது.
23. அடலெடுத்துரைத்தல்
கொடித்தேர் மறவர் சூழாம்வெங் கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெ·கின் வாய்க்குத வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன் நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ் விண்தோய் கனவரையே. 216
கொளு
வரிசிலையவர் வருகுவரெனப்
புரிதரு குழலிக் கருளுவனுரைத்தது.
24. அயர்வகற்றல்
முன்னோ னருள்முன்னும் உன்னா வினையின் முனகர்துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே. 217
கொளு
இன்னல் வெங்கடத் தெறி வேலவன்
அன்ன மன்னவள் அயர்வ கற்றியது.
25. நெறிவிலக்கிக்கூறல்
விடலையுற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள் மன்றுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந் தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை இன்றிக் கடுஞ்சுரமே. 218
கொளு
சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு
சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.
26. கண்டவர் மகிழ்தல்
அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப் பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி போன்றொளிர் நாடகமே. 219
கொளு
மண்டழற் கடத்துக், கண்டவ ருரைத்தது.
27. வழிவிளையாடல்
கண்கடம் மாற்பயன் கொண்டனங் கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்பருக வருக இன்னே
விண்கட நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகந் தண்ணெனவே. 220
கொளு
வன்தழற் கடத்து வடிவே லண்ணல்
மின்றங் கிடையொடு விளையா டியது.
28. நகரணிமைகூறல்
மின்றங் கிடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குங் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே. 221
கொளு
வண்டமர் குழலியொடு, கண்டவ ருரைத்தது.
29. நகர்காட்டல்
மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன் தோன்றும்நன் னீணநகரே. 222
கொளு
கொடுங்கடங் கடந்த குழைமுக மாதர்க்குத்
தடங்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.
30. பதிபரிசுரைத்தல்
செய்குன் றுவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும் பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம் உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல வற்கிடம் ஏந்திழையே. 223
கொளு
கண்ணிவர் வளநகர் கண்டுசென்றடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி சுரைத்தது.
31. செவிலிதேடல்
மயிலெனப் பேர்ந்திள வல்லியி னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென் கொலாமின் றயர்கின்றதே. 224
கொளு
கவலை யுற்ற காதற் றோழியைச்
செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.
32. அறத்தொடுநிற்றல்
ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட லாயத்தெம் வாணுதலே. 225
கொளு
சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியிற்
சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது.
33. கற்புநிலைக்கிரங்கல்
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப் பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி யாவன எம்மனைக்கே. 226
கொளு
விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக்
கோடா யுள்ளநீடா யழுங்கியது.
34. கவன்றுரைத்தல்
முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல் லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர் வானா மொளியிழையே. 227
கொளு
அவள்நிலை நினைந்து, செவிலி கவன்றது.
35. அடிநினைந்திரங்கல்
தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படியாய்
ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே. 228
கொளு
வெஞ்சுர முமவள் பஞ்சுமெல் லடியுஞ்
செவிலி நினைந்து கவலை யுற்றது.
36. நற்றாய்க்குரைத்தல்
தழுவின கையிறை சோரின் தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற் பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம் பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே. 229
கொளு
முகிழ்முலை மடந்தைக்கு முன்னியதறியத்
திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி செப்பியது.
37. நற்றாய்வருந்தல்
யாழியன் மென்மொழி வன்மனப் பேதையொ ரெதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென் றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. 230
கொளு
கோடாய்கூற, நீடாய் வாடியது.
38. கிளிமொழிக்கிரங்கல்
கொன்னுனை வேல்அம் பலவற் றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ் சேருமென அயரா
என்னனை போயினள் யாண்டைய ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தை யீர்க்கின்றதே. 231
கொளு
மெய்த்தகை மாது வெஞ்சுரஞ் செல்லத்
தத்தையை நோக்கித் தாய்புலம் பியது.
39. சுடரோடிரத்தல்
பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந் தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந் தேன்சுடர் வானவனே. 232
கொளு
வெஞ்சுரந் தணிக்கெனச் செஞ்சுடரவற்கு
வேயமர் தோளி தாயர் பராயது.
40. பருவநினைந்துகவறல்
வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென் றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ரால்கண் புதைத்துப் பதைக்குமெங் கார்மயிலே. 233
கொளு
முற்றா முலைக்கு, நற்றாய் கவன்றது.
41. நாடத்துணிதல்
வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண் ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே. 234
கொளு
கோடாய் மடந்தையை, நாடத் துணிந்தது.
42. கொடிக்குறி பார்த்தல்
பணங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும் இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள் நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே. 235
கொளு
நற்றாய் நயந்து, சொற்புட் பராயது.
43. சோதிடங்கேட்டல்
முன்னுங் கடுவிட முண்டதென் தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக் கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத் தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள் நான்மறை யுத்தமரே. 236
கொளு
சித்தந் தளர்ந்து தேடுங் கோடாய்
உய்த்துணர் வோரைஉரைமி னென்றது.
44. சுவடு கண்டறிதல்
தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி யென்று கருதுவனே. 237
கொளு
சுவடுபடு கடத்துச் செவிலிகண்டறிந்தது.
45. சுவடுகண்டிரங்கல்
பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற் பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின் நின்றோர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே. 238
கொளு
கடத்திடைக் காரிகை அடித்தலங்கண்டு
மன்னருட் கோடாயின்னயெய்தியது.
46. வேட்டமாதரைக் கேட்டல்
பேதைப் பருவம் பின்சென்றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப் பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின் றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப் பல்குரற் பொற்றொடியே. 239
கொளு
மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப்
பின்வரும் செவிலி பெற்றி வினாயது.
47. புறவொடுபுலத்தல்
புயலன் றலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி
பயலன் றலைப்பணி யாதவர் போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே. 240
கொளு
காட்டுப்புறவொடு, வாட்ட முரைத்தது.
48. குரவொடு வருந்தல்
பாயும் விடையோன் புலியூ ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக் கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில் வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும்நின்று நிலாவிடும் நீள்குரவே. 241
கொளு
தேடிச் சென்ற செவிலித் தாயர்
ஆடற் குரவொடு வாடி யுரைத்தது.
49. விரதியரை வினாவல்
சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு மோவொர் பெருந்தகையே. 242
கொளு
வழிவரு கின்ற மாவிரதியரை
மொழிமின்க ளென்றுமுன்னி மொழிந்தது.
50. வேதியரை வினாவல்
வெதிரேய் கரத்துமென் தோலேய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான் எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே வெறுப்பவொ ரேந்தலொடே. 243
கொளு
மாதின்பின் வருஞ்செவிலி
வேதியரை விரும்பிவினாவியது.
51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை யோஅன்னை சொல்லியதே. 244
கொளு
புணர்ந்துடன்வரும் புரவலனொருபால்
அணங்கமர்கோதையை யாராய்ந்தது.
52. வியந்துரைத்தல்
பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம் மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது திண்டிற லாண்டகையே. 245
கொளு
வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையும்
நாடா வருங்கோடாய் கூறியது.
53. இயைபெடுத்துரைத்தல்
மின்றொத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன் றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற் றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை நீசொன்ன கொள்கையரே. 246
கொளு
சேயிழை யோடு செம்மல் போதர
ஆயிழை பங்கனென் றயிர்த்தே மென்றது.
54. மீளவுரைத்தல்
மீள்வது செல்வதன் றன்னையிவ் வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையினெல்லை யணுகுவரே. 247
கொளு
கடுங்கடங் கடந்தமை கைத்தாய்க் குரைத்து
நடுங்கன்மின் மீண்டும் நடமி னென்றது.
55. உலகியல்புரைத்தல்
கரும்பிவர் சந்துந் தொடுகடல் முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே. 248
கொளு
செவிலியது கவலை தீர
மன்னிய உலகியன் முன்னியுரைத்தது.
56. அழுங்குதாய்க்குரைத்தல்
ஆண்டி லெடுத்தவ ராமிவர் தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தொங்கொ டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்த பஃறாமரை கீழும் பழனங்களே. 249
கொளு
செழும்பணை யணைந்தமை
அழுங்குதாய்க் குரைத்தது.
------------------------------
பதினேழாம் அதிகாரம்
17. வரைவுமுடுக்கம்
பேரின்பக் கிளவி
வரைவு முடுக்க மொருபதி னாறுஞ்
சிவனது கருணை தெரிய வுரைத்தல்
இன்பம் பெறவரு ளெடுத்தியம் பியது.
1. வருத்தமிகுதி கூறிவரைவுகடாதல்
எழுங்குலை வாழையின் இன்கனி தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென் னோநின் னருள்வகையே. 250
கொளு
இரவுக் குறியிடத் தேந்திழைப் பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.
2. பெரும்பான்மைகூறி மறுத்தல்
பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந் தோன்றுமிக் குன்றிடத்தே. 251
கொளு
குலம்புரி கொம்பர்க்குச், சிலம்பின் செப்பியது.
3. உள்ளதுகூறி வரைவுகடாதல்
சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில் உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே. 252
கொளு
இன்மை யுரைத்தமன்ன னுக்கு
மாழை நோக்கி தோழி யுரைத்தது.
4. ஏதங்கூறியிரவரவு விலக்கல்
கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறும் தீஅர வன்னம் பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப நின்னருள் தோன்றுவதே. 253
கொளு
இரவரு துயரம் ஏந்தலுக் கெண்ணிப்
பருவர லெய்திப் பாங்கி பகர்ந்தது.
5. பழிவரவுரைத்துப் பகல்வரவுவிலக்கல்
களிறுற்ற செல்லல் களைவயிற் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை நாடபெடை நடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகல்நீ செய்யும் மெய்யருளே. 254
கொளு
ஆங்ஙனம் ஒழுகும் அடல்வே லண்ணலைப்
பாங்கிஐய பகல்வர லென்றது.
6. தொழுதிரந்து கூறல்
கழிகட் டலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின்வரல்கழல் கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலில் துவளு மிவள்பொருட்டே. 255
கொளு
இரவரவின் ஏதமஞ்சிச்
சுரிதருகுழற் றோழிசொல்லியது.
7. தாயறிவு கூறல்
விண்ணுஞ் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற் கானல் அரையிரவில்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும் நோக்கினள் கார்மயிலே. 256
கொளு
சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப
வெறிக்குழற் பாங்கி மெல்லியற் குரைத்தது.
8. மந்திமேல்வைத்து வரைவுகடாதல்
வான்றோய் பொழிலெழின் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை யானையும் மேனியைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. 257
கொளு
வரிவளையை வரைவுகடாவி
அரிவைதோழி உரைபகர்ந்தது.
9. காவல்மேல்வைத்துக்கண்டுயிலாமை கூறல்
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர் காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும் படர்முலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே. 258
கொளு
நகர்காவலின், மிகுகழிகாதல்.
10. பகலுடம்பட்டாள் போன்றிரவரவு விலக்கல்
கரலா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை யோநும் வரையிடத்தே. 259
கொளு
விரைதரு தாரோய், இரவர லென்றது.
11. இரவுடம்பட்டாள் போன்றுபகல்வரவு விலக்கல்
இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல ராம்பக லுன்னருளே. 260
கொளு
இகலடு வேலோய், பகல்வர லென்றது.
12. இரவும்பகலும் வரவு விலக்கல்
கழியா வருபெருநீர் சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரில் நீயிர வேதும் பயனில்லையே. 261
கொளு
இரவும் பகலும், வரவொழி கென்றது.
13. காலங்கூறி வரைவு கடாதல்
மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத் தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே. 262
கொளு
முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
வரைதரு கிளவியில் தெரிய உரைத்தது.
14. கூறுவிக்குற்றல்
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்
வாமான் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்னாஞ் சொல்லுந் தன்மைகளே. 263
கொளு
ஒத்த தொவ்வா துரைத்த தோழி
கொத்தவிழ் கோதையாற் கூறுவிக் குற்றது.
15. செலவு நினைந்துரைத்தல்
வல்சியி னெண்கு வளர்புற் றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென் பவர்ப்பெறிற் கார்மயிலே. 264
கொளு
பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைபுறக் கிளவி.
16 பொலிவழிவுரைத்து வரைவுகடாதல்
வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந் நீர்மையென் னெய்துவதே. 265
கொளு
வரைவு விரும்பு மன்னுயிர்ப்பாங்கி
விரைதரு குழலி மெலிவு ரைத்தது.
வரைமுடுக்கம் முற்றிற்று
பதினெட்டாம் அதிகாரம்
18. வரைபொருட்பிரிதல்
பேரின்பக் கிளவி
வரைபொருட் பிரிதல் துறைமுப் பத்து
மூன்றுங் கருணை தோன்ற வருளே
உணர்த்தலு முணர்தலும் திரோதையும் பரையும்
தெரிசன மாகித் திவ்விய வின்பம்
கூடுங் குறியுங் குலவி யுணர்தல்.
1. முலைவிலைகூறல்
குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும் நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே. 266
கொளு
கொலைவேற் கண்ணிக்கு, விலையிலை யென்றது.
2. வருமதுகூறி வரைவுடம்படுத்தல்
வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்சிற் றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா திரவின்நின் னாரருளே. 267
கொளு
தொடுத்தன விடுத்துத் தோகைதோளெய்
திடுக்கண்பெரி திரவரினென்றது.
3. வரைபொருட் பிரிவையுரையெனக் கூறல்
குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து
மின்தங் கிடைநும் மையும்வந்து மேவுவன் அம்பலஞ்சேர்
மன்தங் கிடைமரு தேகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னச்
சென்றங் கிடைகொண்டு வாடாவகைசெப்பு தேமொழியே. 268
கொளு
ஆங்க வள்வயின் நீங்க லுற்றவன்
இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.
4. நீயே கூறென்றல்
கேழே வரையுமில் லோன்புலி யூர்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி யேகுதனி வள்ளலே. 269
கொளு
காய்கதிர்வேலோய் கனங்குழையவட்கு
நீயேயுரை நின்செலவென்றது.
5. சொல்லாதேகல்
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங னேசொல்லி ஏகுவனே. 270
கொளு
நிரைவளை வாட, உரையா தகன்றது.
6. பிரிந்தமை கூறல்
நல்லாய் நமக்குற்ற தென்னென் றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப் பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண் தில்லை தொழார்களல்லாற்
சொல்லா அழற்கட மின்றுசென் றார்நம் சிறந்தவரே. 271
கொளு
தேங்கமழ் குழலிக்குப், பாங்கி பகர்ந்தது.
7. நெஞ்சொடு கூறல்
அருந்தும் விடமணி யாம்மணி கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ் வாறுசிதைக்கு மென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாமினி வாழ்வகையே. 272
கொளு
கல்வரை நாடன் சொல்லா தகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்தது.
8. நெஞ்சொடு வருந்தல்
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்தமணலிற் கலந்த கன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென் கொலாமின்று செய்கின்றதே. 273
கொளு
வெற்பன் நீங்கப், பொற்பு வாடியது.
9. வருத்தங்கண்டுரைத்தல்
கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும்
வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர்
போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. 274
கொளு
அழலுறு கோதையின் விழுமுறுபேதையை
நீங்கலரெனப் பாங்கி பகர்ந்தது.
10. வழியொழுகிவற்புறுத்தல்
மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த வாறென்ப ரேந்திழையே. 275
கொளு
சூழிருங் கூந்தலைத், தோழி தெருட்டியது.
11. வன்புறையெதிரழிந்திரங்கல்
வந்தாய் பவரையில் லாமயில் முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்பண் போஇனிதே
கொந்தார்நறுங் கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி நையுந் திருவினர்க்கே. 276
கொளு
வன்கறை வேலோன் வரைவுநீட
வன்புறை யழிந்தவள் மனமழுங் கியது.
12. வாய்மை கூறி வருத்தந் தணித்தல்
மொய்யென் பதேஇழை கொண்டவ னென்னைத் தன்மொய்கழற்காட்
செய்யென் பதேசெய்தவன் தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற் புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ லாமிவ் வியலிடத்தே. 277
கொளு
வேற்றடங் கண்ணியை, ஆற்று வித்தது.
13. தேறாதுபுலம்பல்
மன்செய்த முன்னாள் மொழிவழியே அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே. 278
கொளு
தீதறுகண்ணி தேற்றத்தேறாது
போதுறுகுழலி புலம்பியது.
14. காலம்மறைத்துரைத்தல்
கருந்தினை யோம்பக் கடவுட் பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே. 279
கொளு
காந்தள் கருவுறக் கடவுண் மழைக்கென்
றேந்திழைப் பாங்கி இனிதியம் பியது.
15. தூதுவரவுரைத்தல்
வென்றவர் முப்புரஞ் சிற்றம் பலத்திள்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையுஞ் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே. 280
கொளு
ஆங்கொரு தூதுவரப், பாங்கிகண் டுரைத்தது.
16. தூது கண்டழுங்கல்
வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண் டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய் வானின் றிருக்கின்றதே. 281
கொளு
அயலுற்ற தூதுவரக், கயலுற்றகண்ணி மயலுற்றது.
17. மெலிவுகண்டு செவிலிகூறல்
வேயின மென்தோள் மெலிந்தொளி வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க் கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன ளாம்இத் திருந்திழையே. 282
கொளு
வண்டமர் புரிகுழ லொண்டொடி மெலிய
வாடாநின்ற கோடாய் கூறியது.
18. கட்டுவைப்பித்தல்
கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. 283
கொளு
மால்கொண்ட கட்டுக், கால்கொண்டது.
19. கலக்கமுற்று நிறுத்தல்
மாட்டியன் றேயெம் வயிற்பெரு நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைச்தொல் லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே. 284
கொளு
தெய்வத்தில் தெரியுமென
எவ்வத்தின் மெலிவுற்றது.
20. கட்டுவித்திகூறல்
குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்று மவன்வடிவே. 285
கொளு
கட்டு வித்தி, விட்டு ரைத்தது.
21. வேலனையழைத்தல்
வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. 286
கொளு
வெறியாடிய வேலனைக் கூஉய்
நெறியார்குழலி தாயர்நின்றது.
22. இன்னலெய்தல்
அயர்ந்தும் வெறிமறிஆவி செகுத்தும் விளர்ப் பயலார்
பெயர்ந்தும் ஒழியாவிடி னென்னை பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென் ஆதுந் துறைவனுக்கே. 287
கொளு
ஆடிய வெறியிற் கூடுவ தறியாது
நன்னறுங் கோதை இன்ன லெய்தியது.
23. வெறிவிலக்குவிக்க நினைதல்
சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை தில்லை தொழாரின் நைந்தும்
ஒன்றாமிவட்கு மொழிதல்கில் லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன் உரைப்பனிக் கூர்மறையே. 288
கொளு
அயறரு வெறியின் மயறரு மென
விலக்க லுற்ற குலக்கொடி நினைந்தது.
24. அறத்தொடு நிற்றலையுரைத்தல்
யாயுந் தெறுக அயலவ ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே. 289
கொளு
வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்
கறத்தொடு நின்ற ஆயிழை யுரைத்தது.
25. அறத்தொடுநிற்றல்
வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர் போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென் றானொர் கழலவனே. 290
கொளு
செய்த வெறியி னெய்துவ தறியாது
நிறத்தொடித் தோழிக் கறத்தொடு நின்றது.
26. ஐயந்தீரக்கூறல்
குடிக்கலர் கூறினுங் கூறா வியன்தில்லைக் கூத்தன்தாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம் மறைக்கும் பரிசுகளே. 291
கொளு
விலங்குதல் விரும்பு மேதகு தோழி
அலங்கற் குழலிக் கறிய வுரைத்தது.
27. வெறி விலக்கல்
விதியுடை யாருண்க வேரி விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற் பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே. 292
கொளு
அறத்தொடுநின்ற திறந்தினிற்பாங்கி
வெறிவிலக்கிப் பிறிதுரைத்தது.
28. செவிலிக்குத் தோழி யறத்தொடுநிற்றல்
மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே. 293
கொளு
சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது.
29. நற்றாய்க்குச் செவிலியறத் தொடுநிற்றல்
இளையா ளிவளையென் சொல்லிப் பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன்
திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே. 294
கொளு
கற்பினின் வழாமை நிற்பித் தெடுத்தோள்
குலக்கொடி தாயர்க் கறத்தொடு நின்றது.
30. தேர்வரவுகூறல்
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந் தேரின்று மெல்லியலே. 295
கொளு
மணிநெடுந்தேரோன் அணிதிணின்வருமென
யாழியன் மொழிக்குத் தோழிசொல்லியது.
31. மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல்
பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென் றேங்கும் மணமுரசே. 296
கொளு
நிலங்காவலர் நீண்மணத்தின்
நலங்கண்டவர் நயந்துரைத்தது.
32. ஐயுறுற்றுக் கலங்கல்
அடற்களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற் றில்லைப் பரமன்வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க் கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக ரார்க்கும் வியன்முரசே. 297
கொளு
நல்லவர்முரசுமற் றல்லவர்முரசெனத்
தெரிவரிதென அரிவைகலங்கியது.
33. நிதிவரவு கூறாநிற்றல்
என்கடைக் கண்ணினும் யான்பிற வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே. 298
கொளு
மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
திகழ்நிதி மடந்தைக்குத் தெரிய வுரைத்தது.
வரைபொருட்பிரிதல் முற்றிற்று
கற்பியல் (19 முதல் 25 அதிகாரங்கள்)
பத்தொன்பதாம் அதிகாரம்
19. மணஞ்சிறப்புரைத்தல்
பேரின்பக் கிளவி
மணஞ்சிறப் புரைத்தல் வருமோர் ஒன்பதும்
உயிர்சிவ மணம்பெற் றுண்மைஇன் பாகிய
பரைகடந் தின்பப் பண்பாய் நிற்றல்.
1. மணமுரசுகூறல்
பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர் தீரப்புகுந்து நின்றே. 299
கொளு
வரைவுதோன்ற மகிழ்வுறுதோழி
நிரைவளைக்கு நின்றுரைத்தது.
2. மகிழ்ந்துரைத்தல்
இருந்துதி யென்வயிற் கொண்டவன் யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ் சிலம்பன் அருந்தழையே. 300
கொளு
மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
நன்னுதற் றோழி தன்னின் மகிழ்ந்தது.
3. வழிபாடுகூறல்
சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டவர்வண் தில்லை வணங்குமெங் காவலரே. 301
கொளு
மணமனை காண வந்தசெவி லிக்குத்
துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.
4. வாழ்க்கைநலங்கூறல்
தொண்டின மேவுஞ் சுடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள் நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா ளயல்மன்னும் இவ்வயலே. 302
கொளு
மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி
அணிமனைக் கிழத்திக் கதன்சிறப் புரைத்தது.
5. காதல் கட்டுரைத்தல்
பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போலிடை யெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. 303
கொளு
சோதி வேலவன், காதல்கட்டு ரைத்தது.
6. கற்பறிவித்தல்
தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத்
தெய்வம் பணியச்சென் றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான்
பெளவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே. 304
கொளு
விற்பொலி நுதலி, கற்பறி வித்தது.
7. கற்புப்பயப்புரைத்தல்
சிற்பந் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவ னீர்ங்களிறே. 305
கொளு
கற்புப் பயந்த, அற்புத முரைத்தது.
8. மருவுதலுரைத்தல்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே>
றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலந் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூலவன் னாளும்மற் றோர்தெய்வ முன்னலளே. 306
கொளு
இருவர் காதலும், மருவுத லுரைத்தது.
9. கலவியின்பங்கூறல்
ஆனந்த வெள்ளத் தழுந்துமொர் ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதிவ் வணிநலமே. 307
கொளு
நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
மகிழ்தூங் குளத்தோ டிகுளை கூறியது.
கற்பியல் முற்றிற்று
இருபதாம் அதிகாரம்
20. ஓதற்பிரிவு
பேரின்பக் கிளவி
கல்வியிற் பிரிவொரு நான்கும் காதல்
புல்லும் ஆனந்த இன்பப் பூரணம்
சொல்லும் பயனின் திறம்பா ராட்டல்.
1. கல்விநலங்கூறல்
சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென் றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன் இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின ராகுவ ரேந்திழையே. 308
கொளு
கல்விக் ககல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக் கறிவறி வித்தது.
2. பிரிவுநினைவுரைத்தல்
வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. 309
கொளு
கல்விக் ககல்வர் செல்வத் தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது.
3. கலக்கம்கண்டுரைத்தல்
கற்பா மதிற்றில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல் லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. 310
கொளு
ஓதற் ககல்வர் மேதக் கவரெனப்
பூங்கொடி கலக்கம் பாங்கிகண் டுரைத்தது.
4. வாய்மொழி கூறித்தலைமகள் வருந்தல்
பிரியா மையுமுயி ரொன்றா வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப் பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி யென்னாம் புகல்வதுவே. 311
கொளு
தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப்
போதுறு குழலி புலம்பியது.
ஓதற்பிரிவு முற்றிற்று
இருபத்தொன்றாம் அதிகாரம்
21. காவற்பிரிவு
பேரின்பக் கிளவி
காவற் பிரிவுத் துறையோர் இரண்டும்
இன்பத் திறத்தை எங்கும் காண்டல்.
1. பிரிவுஅறிவித்தல்
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி தாழ்குழற் பூங்கொடியே. 312
கொளு
இருநிலங் காவற் கேகுவர் நமரெனப்
பொருசுடர் வேலோன் போக்கறி வித்தது.
2. பிரிவுகேட்டிரங்கல்
சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது வோவின்று சூழ்கின்றதே. 313
கொளு
மன்னவன் பிரிவு நன்னுத லறிந்து
பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது.
காவற்பிரிவு முற்றிற்று
இருபத்திரண்டாம் அதிகாரம்
22. பகைதணிவினைப் பிரிவு
பேரின்பக் கிளவி
பகைதணி வித்தல் துறையோர் இரண்டும்
எங்கும் இன்பக் கனமென் றியறல்.
1. பிரிவுகூறல்
மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண் டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. 314
கொளு
துன்னுபகை தணிப்ப மன்னவன் பிரிவு
நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.
2. வருத்தந்தணித்தல்
நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலுந் திருநுதலே. 315
கொளு
மணிப்பூண் மன்னவன் தணப்பதில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.
பகைதணிவினைப் பிரிவு முற்றிற்று
இருபத்திமூன்றாம் அதிகாரம்
23. வேந்தற் குற்றுழிப் பிரிவு
பேரின்பக் கிளவி
உற்றுழிப் பிரிவார் எட்டும் ஆனந்தம்
பெற்றவா ராமை முற்றும் உரைத்தல்.
1. பிரிந்தமைகூறல்
போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென் றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்றதின் றொன்னா ரிடுமதிலே. 316
கொளு
விறல்வேந்தர் வெம்முனைக்கண்
திறல்வேந்தர் செல்வரென்றது.
2. பிரிவாற்றாமை கார்மிசைவைத்தல்
பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. 317
கொளு
வேந்தற்குற்றுழி விறலோன்பிரிய
ஏந்திழைபாங்கிக் கெடுத்துரைத்தது.
3. வானோக்கி வருந்தல்
கோலித் திகழ்சிற கொன்றி னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன தாங்கொலென் போதரவே. 318
கொளு
மானோக்கி வடிவுநினைந்தோன்
வானோக்கி வருந்தியது.
4. கூதிர்கண்டு கவறல்
கருப்பினம் மேவும் பொழிற்றில்லை மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ் சென்றல்குங் கொல்வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில் தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பின மேறித் தமியரைப் பார்க்கும் புயலினமே. 319
கொளு
இருங்கூதிர் எதிர்வுகண்டு
கருங்குழலி கவலையுற்றது.
5. முன்பனிக்கு நொந்துரைத்தல்
சுற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனப் பெற்றாள் பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப் புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப் பெறுமிம் மயங்கிருளே. 320
கொளு
ஆன்றபனிக் காற்றாதழிந்
தீன்றவளை ஏழைநொந்தது.
6. பின்பனிநினைந்திரங்கல்
புரமன் றயரப் பொருப்புவில் லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும் மிக்க தமியருக்கே. 321
கொளு
இரும் பனியின் எதிர்வு கண்டு
சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.
7. இளவேனில் கண்டின்னலெய்தல்
வாழும் படியொன்றுங் கண்டிலம் வாழியிம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே. 322
கொளு
இன்னிள வேனில் முன்னுவது கண்டு
மென்னகைப் பேதை இன்னலெய் தியது.
8. பருவங் காட்டிவற்புறுத்தல்
பூண்பதென் றேகொண்ட பாம்பன் புலியூ ரரன்மிடற்றின்
மாண்பதென் றேயென வானின் மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங் கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில் வாய்த்த பனிமுகிலே. 323
கொளு
கார்வருமெனக் கலங்குமாதரைத்
தேர்வருமெனத் தெளிவித்தது.
9. பருவமன்றென்று கூறல்
தெளிதரல் காரெனச் சீரனஞ் சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவந்
துளிதரற் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித் தலர்ந்தனவே. 324
கொளு
காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு
இன்றுணைத் தோழி யன்றென்று மறுத்தது.
10. மறுத்துக்கூறல்
தேன்றிக் கிலங்கு கழலழல் வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண்டோட் கொண்டற் கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும் போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை யோமெய்யிற் றோன்றுவதே. 325
கொளு
பருவமன்றென்று பாங்கிபகர
மருவமர்கோதை மறுத்துரைத்தது.
11. தேர்வரவுகூறல்
திருமா லறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம் போற்கொண்ட லெண்டிசையும்
வருமா லுடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல் லாயின்று தோன்றுநம் பொன்னகர்க்கே. 326
கொளு
பூங்கொடி மருளப், பாங்கி தெருட்டியது.
12. வினைமுற்றிநினைதல்
புயலோங் கலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின் இன்றோர் திருமுகமே. 327
கொளு
பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன்
மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.
13. நிலைலமைநினைந்துகூறல்
சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக தேர்பிறங் கும்மொளியார்
நிறப்பொற் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை தேரும் எழில்நகர்க்கே. 328
கொளு
பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
திருந்துதேர்ப் பாகற்கு வருந்துப் புகன்றது.
14. முகிலொடுகூறல்
அருந்தே ரழிந்தனம் ஆலமென் றோலமிடு மிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண் தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. 329
கொளு
முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன்
கழும லெய்திச் செழுமுகிற் குரைத்தது.
15. வரவெடுத்துரைத்தல்
பணிவார் குழையெழி லோன்தில்லைச் சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும் மாவோட ணுகினரே. 330
கொளு
வினை முற்றிய வேந்தன் வரவு
புழையிழைத் தோழி பொற்றொடிக் குரைத்தது.
16. மறவாமைகூறல்
கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. 331
கொளு
பாசறை முற்றிப் பைந்தொடி யோடிருந்து
மாசறு தோழிக்கு வள்ள லுரைத்தது.
வேந்தற் குற்றுழிப் பிரிவு முற்றிற்று
இருபத்திநான்கம் அதிகாரம்
24. பொருள்வயிற்பிரிவு
பேரின்பக் கிளவி
பொருட்பிரிவு இருபதும் அருட்பிரி வுயிரே
ஆனந்த மாகி அதுவே தானாய்த்
தானே அதுவாய்ப் பேசிய கருணை.
1. வாட்டங்கூறல்
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று வந்திக்கும் நன்னுதலே. 332
கொளு
பிரிவு கேட்ட வரிவை வாட்டம்
நீங்க லுற்றவன் பாங்கிக் குரைத்தது.
2. பிரிவுநினைவுரைத்தல்
வறியா ரிருமை யறியா ரெனமன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன்தில்லைச் சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே. 333
கொளு
பொருள்வயிற் பிரியும் பொருவே லவனெனச்
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.
3. ஆற்றாது புலம்பல்
சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ் சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழுகுவ தஞ்சனம் அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென் றம்ம கொடியவளே. 334
கொளு
பொருள்தரப் பிரியும் அருள்தரு பவனெனப்
பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.
4. ஆற்றாமைகூறல்
வானக் கடிமதில் தில்லையெங் கூத்தனை ஏத்தலர்போற்
கானக் கடஞ்செல்வர் காதல ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க் கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ இனிச்சென்று தேர்பொருளே. 335
கொளு
ஏழை யழுங்கத் தோழி சொல்லியது.
5. திணைபெயர்த்துரைத்தல்
சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பல வன்மலயத்
திருடரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. 336
கொளு
துணைவன் பிரியத் துயருறு மனத்தோடு
திணைபெயர்த் திட்டுத் தேமொழி மொழிந்தது.
6. பொருத்தமறிந்துரைத்தல்
மூவர்நின் றேத்த முதல்வன் ஆடமுப் பத்துமும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன்தில்லை யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம் உரைப்பது பூங்கொடியே. 337
கொளு
பொருள்வயிற் பிரிவோன் பொருத்த நினைந்து
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.
7. பிரிந்தமைகூறல்
தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே
வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. 338
கொளு
எதிர்நின்று பிரியிற் கதிர்நீ வாடுதற்
குணர்த்தா தகன்றான் மணித்தேரோ னென்றது.
8. இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல்
ஆழியொன் றீரடி யும்மிலன் பாகன்முக் கட்டில்லையோன்
ஊழியொன் றாதன நான்குமைம் பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கடலும் மெண்டிசையுந் திரிந்தி ளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. 339
கொளு
அயில்தரு கண்ணியைப் பயில்தரு மிரவினுள்
தாங்குவ தரிதெனப் பாங்கி பகர்ந்தது.
9. இகழ்ச்சி நினைந்தழிதல்
பிரியா ரெனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின
தரியா ளெனஇகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்எழி லம்பலத் தோனெவர்க்கும்
அரியா னருளிலர் போலன்ன என்னை யழிவித்தவே. 340
கொளு
உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ்குழலி வாடியது.
10. உறவுவெளிப்பட்டு நிற்றல்
சேணுந் திகழ்மதிற் சிற்றம் பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
சூணுந் திருத்து மொருவன் திருத்தும் உலகினெல்லாங்
காணுந் திசைதொறுங் கார்க்கய லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. 341
கொளு
பொருள்வயிற் பிரிந்த ஒளியுறு வேலவன்
ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.
11. நெஞ்சொடுநோதல்
பொன்னணி யீட்டிய ஒட்டரும் நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக ரன்னஅன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. 342
கொளு
வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.
12. நெஞ்சொடுபுலத்தல்
நாய்வயி னுள்ள குணமுமில் லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும் பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத் தக்கதுன் சிக்கனவே. 343
கொளு
அழற்கடத் தழுக்கமிக்கு
நிழற்கதிர்வேலோன் நீடுவாடியது.
13. நெஞ்சொடுமறுத்தல்
தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்தேர்ந் தெம்மை வாழ்விப்பதே. 344
கொளு
நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.
14. நாளெண்ணிவருந்தல்
தெண்ணீ ரணிசிவன் சிற்றம் பலஞ்சிந்தி யாதவரிற்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்க
ணுண்ணீர் உகவொளி வாடிட நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி யும்விர லிட்டறவே. 345
கொளு
சென்றவர் திறத்து நின்றுநனி வாடுஞ்
சூழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது.
15. ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல்
சுற்றம் பலமின்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும் பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் லேறுசெல் லாநின்ற கூர்ஞ்செக்கரே. 346
கொளு
நீடியபொன்னின் நெஞ்சம்நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது.
16. பருவங்கண்டிரங்கல்
கண்ணுழை யாதுவிண் மேகங் கலந்துகண மயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின் றாலுமின மலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன ளாங்கொல்மன் பாவியற்கே. 347
கொளு
மன்னிய பருவ முன்னிய செலவின்
இன்ன லெய்தி மன்னனே கியது.
17. முகிலொடு கூறல்
அற்படு காட்டில்நின் றாடிசிற் றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகி லென்னின்முன் னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய ராநிற்கும் நீள்நகர்க்கே. 348
கொளு
எனைப்பல துயரமோ டேகா நின்றவன்
துணைக்கா ரதற்குத் துணிந்துசொல்லியது.
18. தேர்வரவு கூறல்
பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோ னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர் தேர்வந்து மேவினதே. 349
கொளு
வேந்தன் பொருளோடு விரும்பி வருமென
ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.
19. இளையரெதிர்கோடல்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர் தேர்வந்து தோன்றியதே. 350
கொளு
செறிகழலவன் திருநகர்புகுதர
எறிவேல் இளைஞர் எதிர்கொண்டது.
20. உண்மகிழ்ந்துரைத்தல்
மயின்மன்னு சாயலிம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல் லாம்விடை யோன்புலியூர்க்
குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென் அங்கத் திடைகுளிப்பத்
துயின்மன்னு பூவணை மேலணை யாமுன் துவளுற்றதே. 351
கொளு
பெருநிதியோடு திருமனை புகுந்தவன்
வளமனைக் கிழத்தியோ டுளமகிழ்ந் துரைத்தது.
பொருள்வயிற்பிரிவு முற்றிற்று
இருபத்தைந்தாம் அதிகாரம்
25. பரத்தையிற் பிரிவு
பேரின்பக் கிளவி
பரத்தையிற் பிரிதல் எண்ணா(று) ஒன்றும்
உரைத்த சிவானந்தம் உற்றது வாம்பின்
எப்பதம் எவ்வுயிர் எவ்வுல(கு) யாவும்
அப்படி யேகண்(டு) அறிவு பூரணம்
ஆகி நின்(று) அளவில் அனுபவம் பெற்று
நின்ற தன்மை நிலைமை உரைத்தது.
1. கண்டவர் கூறல்
உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. 352
கொளு
உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத்
திண்டேர் வீதியிற் கண்டோ ருரைத்தது.
2. பொறையுவந்துரைத்தல்
சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் னாவியுந் தேய்வுற் றழிகின்றதே. 353
கொளு
கள்ளவிழ்க் கோதையைக் காதற்றோழி
உள்ளவிழ் பொறைகண் டுவந்துரைத்தது.
3. பொதுப்படக் கூறிவாடியழுங்கல்
அப்புற்ற சென்னியன் தில்லை யுறாரி னவர்உறுநோய்
ஒப்புற் றெழில்நல மூரன் கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றத்தம் மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ லாருயிர் தேய்பவரே. 354
கொளு
பொற்றிக ழாவன் மற்றிகழ் தில்லைப்
பிரிந்த வூரனோ டிருந்துவா டியது.
4. கனவிழந்துரைத்தல்
தேவா சுரரிறைஞ் சுங்கழ லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன் நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன் தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித் தேனரும் பாவியனே. 355
கொளு
சினவிற் றடக்கைத் தீம்புன லூரனைக்
கனவிற் கண்டகாரிகை யுரைத்தது.
5. விளக்கொடு வெறுத்தல்
செய்ம்முக நீலமலர் தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. 356
கொளு
பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
அன்பனோ டழுங்கிச் செஞ்சுடர்க் குரைத்தது.
6. வாரம்பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல்
பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங் கொள்கநள் ளார்அரணந்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத் தோமன் உறாவரையே. 357
கொளு
வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயிற்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.
7. பள்ளியிடத்தூடல்
தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந் தொடல்விடு நற்கலையே. 358
கொளு
பீடிவர் கற்பிற் றோடிவர் கோதை
ஆடவன் றன்னோ டூடி யுரைத்தது.
8. செவ்வணிவிடுக்கவில்லோர்கூறல்
தணியுறப் பொங்குமிக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத் தொல்லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே. 359
கொளு
பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர் புகன்றது.
9. அயலறிவுரைத்தவ ளழுக்கமெய்தல்
இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ ளால்இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின வாறுநந் தன்மைகளே. 360
கொளு
உலகிய லறியச் செலவிடலுற்ற
விழுத்தகை மாதர்க் கழுக்கஞ் சென்றது.
10. செவ்வணிகண்டவாயிலவர்கூறல்
சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி ஊரற் குலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப் பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே. 361
கொளு
மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.
11. மனைபுகல்கண்ட வாயிலவர்கூறல்
குராப்பயில் கூழை யிவளின்மிக் கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங் காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன் புகுமிக் கடிமனைக்கே. 362
கொளு
கடனறிந் தூரன் கடிமனை புகுதர
வாய்ந்த வாயி லவராய்ந் துரைத்தது.
12. முகமலர்ச்சிகூறல்
வந்தான் வயலணி யூரனெனச் சினவாள் மலர்க்கண்
செந்தா மரைச்செவ்வி சென்றசிற் றம்பல வன்னருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர் நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. 363
கொளு
பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
தேம்புனை கோதை திறம்பிற ருரைத்தது.
13. காலநிகழ்வுரைத்தல்
வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண் டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வயலூரற் கெதிர் கொண்டதே. 364
கொளு
இகழ்வ தெவன்கொல் நிகழ்வதிவ் வாறெனச்
செழுமலர்க் கோதைஉழையர் உரைத்தது.
14. எய்தலெடுத்துரைத்தல்
புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென் றெய்திக் கதிர்கொண்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம் பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த லாயின வூரனுக்கே. 365
கொளு
சீரிய லுலகிற் றிகழ்தரக் கூடி
வார்புன லூரன் மகிழ் வுற்றது.
15. கலவிகருதிப்புலத்தல்
செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக் கலுழந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகுமென நினைந் தின்னகையே. 366
கொளு
மன்னிய வுலகில் துன்னிய அன்பொடு
கலவி கருதிப் புலவி யெய்தியது.
16. குறிப்பறிந்துபுலந்தமைகூறல்
மலரைப் பொறாவடி மானுந் தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழல்விழித் தோனம்பலம் வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை கொல்லோ கருதியதே. 367
கொளு
குறப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணிபுலவி யுற்றது.
17. வாயிலவர்வாழ்த்தல்
வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய் யேதக்க வாய்மையனே. 368
கொளு
தலைமகனது தகவுடைமை
நிலைதகுவாயில் நின்றோருரைத்தது.
18. புனல்வரவுரைத்தல்
சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக் குதர்செம்ம லூரன்திண்டோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகி ழத்தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே. 369
கொளு
புனலா டுகவெனப் புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வையமுரைத்தது.
19. தேர்வரவு கண்டுமகிழ்ந்துகூறல்
சேயே யெனமன்னு தீம்புன லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனமன்னு சிற்றம் பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந் தேர்வந்து மேவினதே. 370
கொளு
பயின்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
கயன்மணிக் கண்ணியர் கட்டுரைத்தது.
20. புனல்விளையாட்டிற்றம் முளுரைத்தல்
அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு கும்மவ ளன்றுகிராற்
சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதைய காத்துநம் பொற்பரையே. 371
கொளு
தீம்புனல் வாயிற் சேயிழை வருமெனக்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.
21. தன்னைவியந்துரைத்தல்
கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற் றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப் பிரியும்புன லூர்கணப் பூங்கொடியே. 372
கொளு
அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
முனிவு தோன்ற நனிபுகன்றது.
22. நகைத்துரைத்தல்
இறுமாப் பொழியுமன் றேதங்கை தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியனோ
டிறுமாப் பொழிய இறுமாப் பொழிந்த இணைமுலையே. 373
கொளு
வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.
23. நாணுதல்கண்டுமிகுத்துரைத்தல்
வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம் பலமனை யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே. 374
கொளு
மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
நாணுதல் கண்ட வாணுத லுரைத்தது.
24. பாணன்வரவுரைத்தல்
விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி யோமை யறிந்திலரே. 375
கொளு
இகல்வே லவனகல் வறியாப் பாணனைப்
பூங்குழல் மாதர்க்குப் பாங்கி பகர்ந்தது.
25. தோழியியற்பழித்தல்
திக்கின் இலங்குதிண் டோளிறை தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறகத ணிந்துநின் றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ் வேலெந் தனிவள்ளலே. 376
கொளு
தலைமகனைத் தகவிலனெனச்
சிலைநுதற்பாங்கி தீங்குசெப்பியது.
26. உழையரியற்பழித்தல்
அன்புடை நெஞ்சத் திவள்பே துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின் றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந் தன்னஞ்சலஞ் சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே. 377
கொளு
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக் குழைய ருரைத்தது.
பாடபேதம்
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.
27. இயற்படமொழிதல்
அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவுகனவு முண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே. 378
கொளு
வரிசிலை யூரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை யுரைத்தது.
28. நினைந்து வியந்துரைத்தல்
தெள்ளம் புனற்கங்கை தங்குஞ் சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத் தேவரும் பான்மையளே. 379
கொளு
மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
அல்லியங் கோதையை அகனமர்ந் துரைத்தது.
29. வாயில்பெறாதுமகன்திறம் நினைதல்
தேன்வண் டுறைதரு கொன்றையன் சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன் மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கைஎவ் வாறுகொ னண்ணுவதே. 380
கொளு
பொற்றொடி மாதர்நற்கடை குறுகி
நீடிய வாயிலின் வாடினள் மொழிந்தது.
30. வாயிற்கண்நின்று தோழிக்குரைத்தல்
கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத் தோனம் பலம்நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன் னாட்டுப் பொலிபவரே. 381
கொளு
பெருந்தகை வாயில் பெறாதுநின்று
அருந்தகைப் பாங்கிக் கறிய வுரைத்தது.
31. வாயில்வேண்டத்தோழிகூறல்
கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோளிழித்தால்
போற்றான் செறியிருட் பொக்கமெண் ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா வெனநீர் வருவது பண்டின்றெம் மீசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற் போதிர்அத் தேர்மிசையே. 382
கொளு
வைவேல் அண்ணல் வாயில் வேண்டப்
பையர வல்குற் பாங்கி பகர்ந்தது.
32. தோழிவாயில் வேண்டல்
வியந்தலை நீர்வையம் மெய்யே யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர் அரனிருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. 383
கொளு
வாயில் பெறாது மன்னவ னிற்ப
ஆயிழை யவட்குத் தோழி சொல்லியது.
33. மனையவர்மகிழ்தல்
தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணுத லாள்தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந் தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. 384
கொளு
கன்னி மானோக்கி கனன்றுநோக்க
மன்னியமனையவர் மகிழ்ந்துரைத்தது.
34. வாயின்மறுத்துரைத்தல்
உடைமணி கட்டிச் சிறுதே ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று கண்டனர் காதலரே. 385
கொளு
மடவரற்றோழி வாயில்வேண்ட
அடல்வேலவனா ரருளுரைத்தது.
35. பாணனொடுவெகுளுதல்
மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல் கூரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பின ரென்பதென் விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட வூசிகொல் சேரியின் விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே. 386
கொளு
மன்னியாழ்ப்பாணன் வாயில்வேண்ட
மின்னிடைமடந்தை வெகுண்டுரைத்தது.
36. பாணன்புலந்துரைத்தல்
கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே. 387
கொளு
கருமமலர்க்கண்ணி கனன்றுகட்டுரைப்பப்
புரியாழ்ப்பாணன் புறப்பட்டது.
37. விருந்தொடுசெல்லத்துணிந்தமைகூறல்
மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலுந்
தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவளைச் செவ்வி யோடிக் கெழுமினவே. 388
கொளு
பல்வளை பரிசு கண்டு, இல்லோர் இயம்பியது.
38. ஊடல்தணிவித்தல்
கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றல் துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற் பாலை யரசனுக்கே. 389
கொளு
தோன்றலைத் துணையொடு தோழி கண்டு
வான்றகை மடந்தையை வருத்தந் தணித்தது.
39. அணைந்தவழியூடல்
சேறான் திகழ்வயற் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம் மேவும் படிறுவவேம்
காறான் தொடல்தொட ரேல்விடு தீண்டலெங் கைத்தலமே. 390
கொளு
தெளிபுன லூரன் சென்றணைந் தவழி
ஒளிமதி நுதலியூடி யுரைத்தது.
40. புனலாட்டுவித்தமைகூறிப்புலத்தல்
செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே. 391
கொளு
ஆங்கதனுக் கழுக்கமெய்தி
வீங்குமென்முலை விட்டுரைத்தது.
41. கலவிகருதிப்புலத்தல்
மின்றுன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம் பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை சாலுமன் னெங்களுக்கே. 392
கொளு
கலைவல ரல்குல் தலைமகன் றன்னொடு
கலவிகருதிப் புலவிபு கன்றது.
42. மிகுத்துரைத்தூடல்
செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே. 393
கொளு
நாடும் ஊரும் இல்லுஞ்சுட்டி
ஆடற் பூங்கொடி ஊடி யுரைத்தது.
43. ஊடல்நீடவாடியுரைத்தல்
திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க் கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித் தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ வருவதொர் வஞ்சனையே. 394
கொளு
வாடாவூடல், நீடாவாடியது.
44. துனியொழிந்துரைத்தல்
இயன்மன்னும் அன்புதந் தார்க்கென் நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம் பலவர்தென் னம்பொதியிற்
புயன்மன்னு குன்றிற்பொரு வேல்துணையாப் பொம்மென் னிருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி தேரும் அதரகத்தே. 395
கொளு
தகுதியினூரன் மிகுபதநோக்கிப்
பனிமலர்க்கோதை துனியொழிந்தது.
45. புதல்வன்மேல்வைத்துப் புலவிதீர்தல்
கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித் தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா எம்மைப் பூசிப்பதே. 396
கொளு
புதல்வனது திறம்புகன்று
மதரரிக்கண்ணி வாட்டந்தவிர்ந்தது.
46. கலவியிடத்தூடல்
சிலைமலி வாணுத லெங்கைய தாகமெனச் செழும்பூண்
மலைமலி மார்பினு தைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற் கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே. 397
கொளு
சீறடிக் குடைந்த நாறிணர்த் தாரவன்
தன்மை கண்டு பின்னுந் தளர்ந்தது.
47. முன்னிகழ்வுரைத்தூடறீர்தல்
ஆறூர் சடைமுடி அம்பலத் தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச் செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு கங்குற் சிறுதுயிலே. 398
கொளு
முன்னிகழ்ந்தது நன்னுதற்குரைத்து
மன்னுபுனலூரன் மகிழ்வுற்றது.
48. பரத்தையைக்கண்டமை கூறிப்புலத்தல்
ஐயுர வாய்நம் அகன்கடைக் கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத் தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம்இதுன் னில்லே வருகென வெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. 399
கொளு
பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவெல் அண்ணற் குரைத்தது.
49. ஊதியமெடுத்துரைத்து ஊடல்தீர்த்தல்
காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கும் ஊதியமே. 400
கொளு
இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி
விரும்பினர்மகிழ மேவுதலுரைத்தது.
திருச்சிற்றம்பலக்கோவையார் முற்றுப் பெற்றது.
- திருச்சிற்றம்பலம் -