பதிக வகை: 2. அறிவுநாடல்
ஐயநாட லாங்கவை யிரண்டும் மையறு தோழி யவன்வர வுணர்தல். பேரின்பக் கிளவி இருவரு முள்வழி யவன்வர வுணர்தல் துறையோ ரிரண்டுஞ் சிவமுயிர் விரவிய தருளே வுணர்ந்திடற் றாகு மென்ப. 1. ஐயறுதல் பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல் எல்லிலன் நாகத்தொ டேனம் வினாயவன் யாவன்கொலாம் வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டமெய்யோர் சொல்லில னாகற்ற வாகட வானிச் சுனைப்புனமே. 60 கொளு அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி நோக்கித் தையற் பாங்கிஐய முற்றது. 1
ஆழமன் னோவுடைத் திவ்வையர் வார்த்தை யனங்கன்நைந்து வீழமுன் னோக்கிய வம்பலத் தான்வெற்பி னிப்புனத்தே வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்றழையாய் மாழைமென் னோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. 61 கொளு வெற்பன் வினாய சொற்பத நோக்கி நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது. இருவரு முள்வழி அவன் வரவுணர்தல் (ஐந்தாம் அதிகாரம்) முற்றிற்று 2