புளி Tamarindus indica. Linn.; Caesalpiniaceae.
வினையா யினதீர்த் தருளே புரியும் விகிர்தன் விரிகொன்றை
நனையார் முடிமேல் மதியஞ்சூடும் நம்பா நலமல்கு
தனையார் கமல மலர்மே லுறைவான் தலையோ டனலேந்தும்
எனையா ளுடையா னுமையா ளோடும் ஈங்கோய் மலையாரே.
- திருஞானசம்பந்தர்.
திருஈங்கோய்மலை , திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது புளியாகும். சிறிய கூட்டிலைகளையும், மஞ்சள் வரியுடைய இளஞ்சிவப்பு நிறமலர்களையும், பழுப்புநிற கடினமான நொறுங்கக் கூடிய புறவோட்டினையுடைய கனிகளையும் உடைய பெரு மரமாகும். இலை, பூ, காய், கனி, பட்டை, விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டு விளங்குகின்றது.
இலை வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; நாடி நடையை மிகுத்து உடல் வெப்பந்தரும்; பூ குளிர்ச்சி தரும்; காய் பித்தம் தணிக்கும்; பழம் குடல் வாயு அகற்றி குளிர்ச்சி தரும்; மலமிளக்கும்; பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; தாது பலந்தரும்; கொட்டை சிறுநீர் பெருக்கும்.
திருமுறைகளில் புளி பற்றிய குறிப்பு :-
பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர்
மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா
ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில்
சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான்
திருவூறலை உள்குதுமே. 1.106.10
ஓதுவித் தாய்முன் அறவுரை
காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி
தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்
கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி
வாய்கச்சி யேகம்பனே. 4.099.1
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி
அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்
விடையாய் பொடியாடீ
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட
என்னாரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 8.25.5
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே. 10.01.08.2
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே. 10.04.05.20
புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 10.09.13.17
தாளது ஒன்றினில் மூன்று பூ மலரும்
தமனியச் செழும் தாமரைத் தடமும்
நீள வார் புனல் குடதிசை ஓடி
நீர் கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்து செங்குவளை பைங் கமலம்
நண்பகல் தரும் பாடலம் அன்றிக்
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில்
கண் படாத காயாப் புளி உளதால். 12.025.79