நந்தியாவட்டம் Ervatamia Coronaria. Stapf.; Apocyanaceae.
சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டஎம்
ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.
- திருஞானசம்பந்தர்.
திருவெண்ணியூர் திருக்கோயிலில் தலமரமாக விளங்குவது நந்தியாவட்டமாகும். இது கரும்பச்சை இலைகளையும், வெண்ணிற மலர்களையும் உடைய பாலுள்ள செடியினம். இதில் ஒற்றையடுக்கு, பலஅடுக்கு இதழ்களுடைய இனமும் காணப்படுகின்றன. பூசனைக்குரிய சிறந்த மலராதலால் இஃது எல்லாத் திருக்கோயில் நந்தவனங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பூ. வேர் முதலியன மருத்துவக் குணமுடையது.
வயிற்றுப் புழுக்கொல்லியாகவும் தோல்நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயற்படுகிறது.
திருமுறைகளில் நந்தியாவட்டம் பற்றிய குறிப்பு :-
முந்திவட் டத்திடைப் பட்டதெல்
லாம்முடி வேந்தர்தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப்
புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க்
கொன்றையு நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச்
சேர்ந்ததென் ஆருயிரே. 4.084.8
அந்திவட் டத்திங்கட் கண்ணியன்
ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை
யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
வளாவிய நம்பனையே. 4.098.1
அந்திவட் டத்திளங் கண்ணிய
னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை
யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
வளாவிய நம்பனையே. 4.113.5
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம்
மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை
கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்
துன்னு சாதி மரு மாலதி மௌவல்
துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த
பன் மலர்ப் புனித நந்த வனங்கள்
பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 12.06.94