logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-pizhaithupoka-oruvazhiyinai-cholli-arul

பிழைத்துப்போக ஒருவழியினைச் சொல்லி அருள்

திருமுறைக் கதை

உமாபாலசுப்ரமணியன்


ஒரு செல்வந்தன் தனக்கு வந்த செல்வத்தைக் கொண்டு ஒரு வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று பல காலமாக நினைத்துக் கொண்டிருந்தார். அது இப்பொழுது நடந்து விட்டது .  வீடும் தயாராகிக் கொண்டிருந்தது . அதில் பல வசதிகள் அமைத்து , அதன் முகப்பும் பிரமாதமாக அமைந்து யாவரும் வியந்து பாராட்டும் படி இருக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு.  அவ்வாறே சிங்காரவாயிலை வைத்து பல தோரணங்களைக் கட்டி மகிழ்ந்தார். வீடு கட்டி முடிந்து , நல்ல நாளில் வீடு குடியேறி வாழத் தொடங்கினார்.

அவர் நல்ல ஆபரணங்களையும் , உடையையும் தரித்து , தன் வீட்டுப் பெருமைகளைப் பேசிக் கொண்டு, நாளைக் கடத்தி வந்தார். அவருடைய உடம்பு வரவரப்பருத்து , தளதளவென்றிருந்து யாவரையும் கவர்ந்தது .

                சில காலம் கழிந்தது.  உடல் மெலிந்து , தலை மயிர்கொக்கு போன்று நரைத்து , உடம்பு முடியாமல் போய் வைத்தியரும் வந்து பார்க்கும் படியாயிற்று . இது ஏதோ தீராத நோய் என்று அவர் சொல்ல, சில நாட்களில் செல்வந்தரின் உயிரும் பிரிந்தது.

சிங்காரமான வாயிலுடன் அழகான வீட்டைக் கட்டினாலும் , அதிக நாட்கள் அதில் இருந்து வாழ முடியவில்லை.  சில நாட்களே நன்றாக வாழ்ந்து இறந்து போனார்.

அவர்போனாலும் , ஊர் மக்கள் யாவரும் அவரது சரித்திரத்தைச் சொல்லித் திரிந்தனர்.

‘அவர் உலகில் இருந்த காலத்திலே யாவரும் கண்ணாரக் காணும் படியாக நடந்தார், உடுத்தார்,  நரைத்தார், ----‘

இப்பொழுது அந்தச் செல்வந்தரைப் பற்றியவை எல்லாம் வெறும் வார்த்தைகளாகக் கழிகின்றன. உண்மையான நிகழ்ச்சிகளாக முன்பு இருந்தவை , கண்ணிலே காண முடியாது இறந்தகாலத்துச் செய்திகளாகி , இப்பொழுது வெறும் சொல்லாகி நிற்கின்றன. அந்தச் சொல்லாவது நிலைத்து நிற்கிறதா? அதுவும் இல்லை. அவர் இறந்த புதிதில் சில காலம் அவரைப் பற்றிச் சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“அடடா!  எவ்வளவு உயர்ந்த மாளிகை கட்டினார்.  அந்த அலங்காரமான வாசலைத் தான் எத்தனை ஆசையோடு அமைத்தார்! அதற்கு எத்தனை பணம் செலவழிந்ததோ! இப்பொழுது அநுபவிக்க அவர் இல்லையே!” இவ்வாறு பேசித்தம்மை ஆற்றிக் கொண்டிருந்தனர்.

சில காலம் கழிந்தது. அவருடைய நினைப்பும் மக்கள் மனத்திலிருந்து சிறிது சிறிதாக மறைந்து அவரைப் பற்றிப் பேசுவதும் அறவே நின்று விட்டது.  மறுபடியும் புதிதாக இறந்த வேறு மனிதரைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர்.

இப்படி அவர் கழிய, அவரைப் பற்றிய செய்திகள் சொல்லாய்க்கழிகின்றன. உலகத்திலுள்ள எல்லா மக்களுடைய திறத்திலும் இதே நிலையைத் தான் பார்க்கிறோம் . இது தான் வாழ்க்கை.

சுந்தரமூர்த்தி நாயனார் இதையே ஒரு பாட்டில் சொல்கிறார்.

“நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்

                நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்

சொல்லாய்க் கழிகின்றது…..”

“ இதனை நான் அறிந்தேன் உலகவாழ்க்கைச் செய்திகளெல்லாம் இறந்த காலத்தில் சொல்லும்படியாக அமைகின்றனவே ஒழிய, எதுவும் நிலையாகச் சொல்லும்படி இ ருப்பதில்லை. அவ்வாறு இறந்தகாலத் தோடுசொலும் சொல்லாவது நிற்கிறதா என்றால் அந்தச் சொல்லும் கழிந்து விடுகிறது.

சுந்தரமூர்த்தி நாயனார் யோசனை செய்கிறார்.

“உலக வாழ்வின் நிலையாமையை தெரிந்து கொண்ட போது ,நிலைத்த விலாசத்தோடு நிலையாக வாழ்கிறவன் யார் என்று ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். சில காலம் ஓரிடத்தில் வாழ்ந்து மறைகிறவர்கள் மக்கள்.அவர்கள் மலத்தோடு சம்பந்தம் உடையவர்களாதலின் மீண்டும் பிறக்கிறார்கள்;  இறக்கிறார்கள். அப்படியின்றி நீடு உறையும் நின்மலம் ஒருவன் இருக்கின்றான். அந்த நின்மலனை யாவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு அவனுக்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன. அவன் தன் தலையிலே அறிவுக்கு அடையாளமான , நிலாவைத்தரும் வெண்மதியைச் சூடியிருக்கிறான்.அதனால் அவன் எப்போதும் ஞானம் நிறைந்தவன் என்பது விளங்குகிறது. அந்த மதி ,உலகத்துமதி போல்அல்லாது குறைவதும் , வளர்வதும் இன்றி அப்படியே இளம்பிறையாக இருக்கிறது. அவன் தன்னுடைய விலாசத்திலே நெடுங்காலமாக வாழ்கின்றான். கைலாசம் என்று குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு விலாசம் மட்டுமன்று.மதுரை , சிதம்பரம் , என்று சில விலாசங்கள் மாத்திரமும் அன்று. அவன் எத்தனையோ இடங்களில் ஒரே சமயத்தில் உறைகின்றான்.

இருந்தாலும் நான் நெல் வாயில் அரத்துறை எனற இறைவன் மாளிகைக்குச் செல்லப் போகிறேன் “-------

இப்பொழுது நெல் வாயில் அரத்துறை என்ற இறைவன் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார் சுந்தரர்.அங்கே இறைவன் நீடு உறைகின்றான் என்பதை அறிந்தார்.


நெல்வாயில் அறத்துறையில் நீடுஉறைகின்ற நிலா வெண்மதி சூடிய நின்மலன் ஒருவன்------இருக்கின்றான் என்பதையும் நன்கு அறிந்தார்.

அந்த விலாசத்தை சுந்தரர் தெரிந்து கொண்டாயிற்று. இப்போது அந்த இடம் எத்தகையது என்று பார்க்க விரும்பினார்.

“ஆஹா!  எவ்வளவு அழகான இடம்! நெல் வாயில் தலத்தில் இருக்கும் அரத்துறை எனும் கோயிலைக் கண்டேன்.

“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்“  என்ற ஔவை சொற்கிணங்க ஒரு வெள்ளாறும் ஓடுகிறதே! எத்தனை இயற்கையாக அந்த வெள்ளாற்றின் கரையின் மேல் நெல்வாயில் அரத்துறை அமைந்திருக்கிறது“ பார்த்து வியந்தார் சுந்தரர்.

மேலும் நினைக்கிறார்“  இந்த வெள்ளாறு இங்கேயே மறைந்து விடவில்லையே! அது மலையிலே பிறந்து , இடையிலே பல காடுகளையெல்லாம் கடந்து, நெல் வாயிலைத் தாண்டிச் செல்கின்றதே! “

ஆற்றில் கை வைத்தவுடன் ஏதோகையில் அகப்படுகிறது சுந்தரருக்கு.

“ஓஹோ! இந்த ஆறு மலையிலிருந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக மலையிலே வளர்கின்ற பல பொருட்களை அடித்து வருகின்றதோ!  அகிலையும் சேர்த்துக் கொண்டு வருகின்றதே! .  பல மணிகள் , வைரங்கள் நிறைந்திருந்தாலும் , கல்லுக்கு இடையிலே வளர்ந்திருக்கின்ற அகிலையும் அரித்துக் கொண்டு நிலா என்கிற இந்த வெள்ளாறு பாய்வது மனதிற்கு மணம் தருகின்றது. ஒளி வீசுகின்ற மணிகள் இதோ வருகின்றதே! “ ஆற்றில் வரும் பொருட்களைப் பார்த்து அசந்து விட்டார் சுந்தரமூர்த்தி நாயனார்.

“ கல்வாய் அகிலும் கதிர் மாமணியும்க லந்து உந்தி—“

அத்தகைய நிலாவின் கரையின் மேல், நெல்வாயில் அரர்த்துறையிலே நெடுங்காலமாக உறைகின்ற நின்மலனாகிய நிலா வெண்மதிசூடியைப் பார்த்துச் சுந்தரர் பேசுகிறார். பிறை சூடியைப் பார்த்துப் பேசுவதிலே எப்பொழுதும் விருப்பம் உள்ளவர் தானே!  உடனே அவனிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்கிறார்.

“ உலகத்தில் வீணேயார் யாரையோ போய் கண்டேன் . அவர்களுடைய செய்தியைக் கேட்டேன். அவர்களெல்லாம் வாழ்ந்தார்கள்.  செத்தார்கள் என்று தான் கேட்கிறேனே ஒழிய , வாழ்ந்து நிலையாக உறைகிறார்கள் என்று கேட்டதில்லை. நிலையாக உறையும் நின்மலன் நீ என்று நான் பூரணமாக அறிந்தேன். இதோ உன்னிடத்தில் இப்பொழுது நான் வந்துவிட்டேன்.  உன்பால் ஒரு சிறிய விண்ணப்பம்  செய்து கொள்ளப் போகிறேன்.  அடியேன் உன்னைத் தொடர்ந்தேன். நான் மற்றவர்களைப் போல வாழ்ந்து இறந்து படாதவாறு உய்வதற்குரிய வழியை நீ சொல்ல வேண்டும் “   என்று கேட்கிறார்.

 

                                                “………………………   அடியேன்

தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல் சொல்லே-“-----

இறைவன் ஒருவன் தான் நிலையாக இருப்பவன் என்பது முதலில் அவ்வளவு சிறப்பாகத் தெரியாது. உலகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையாதது என்பதே முதலில் கண்கூடாகத் தெரியும் . அதன் பிறகே இறைவனைத் தொடரும் முயற்சி எழும்.  அவனைத் தொடர்ந்து உய்ய வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகும்--

 

 

கல்வாய் அகிலுங் கதிர் மாமணியுங்

கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்

நெல் வாயிலரத்துறை நீடுறையுந்

நில வெண்மதி சூடிய நின்மலனே

நல் வாயில் செய்தா ர்நடந்தார் உடுத்தார்

நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்

சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்

தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல் சொல்லே------

திருநெல்வாயில் என்பது நடுநாட்டில் உள்ள தலம்

பொருள்;---

மலையிடத்துள்ள அகில்களையும், ஒளியையுடைய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக் கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத்துறையின்கண் என்றும் எழுந்தருளியிருக்கும், நிலவினையுடைய வெள்ளிய பிறையைச் சூடிய மாசற்றவனே, உலகியலில் நின்றோர் அனைவரும், ` நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார் ; இல்லற நெறியிலே ஒழுகினார் ; நன்றாக உண்டார் ; உடுத்தார் ;  மூப்படைந்தார் ;  இறந்தார் ` என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன் ; ஆதலின், அடியேன் அச்சொல்லிலிருந்து பிழைத்துப் போவதற்குரிய ஒருவழியினைச் சொல்லியருள்.

இது ஏழாம் திருமுறையில் மூன்றாம் திருப்பதிகமான திருநெல்வாயில் அகத்துரையில் உள்ள முதற்பாடல். (குறிப்பு:---நானிலம் ---உலகம் .  நிலத்தைக் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் என நான்கு வகையாகப் பிரித்துச் சொல்வது தமிழ் மரபு .பாலை என்ற ஒன்று இருந்தாலும் அது இயற்கையான நிலப்பகுதியன்று. சில காலத்தில் சில இடங்களில் பாலைத் தன்மை உண்டாகும் ) .


 

Related Content

இருவகைக் கணக்கு

பணி செய்ய வாரீர்

கடல் ஆமையும் பாவகாரிகளும்

இப்போதைக்கு மழைவேண்டாம்!

கனிக்கும் கரும்புக்கும் எட்டா இனியவன்