logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-pillaiyai-tharachol

பிள்ளையைத் தரச்சொல்

திருமுறைக் கதை

 

 

உமாபாலசுப்ரமணியன்


பிழைப்பித் தேகூற்றான் முதலை வாய்ப்பிள்ளை
யழைப் பித்தார் பாதம் நினைப்பாம்----          ஆறுமுகநாவலர்

கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச் சொல்லு காலனையே  ----திருப்புக்கொளியூர் அவினாசி---பாடல்

காலனையும் , முதலையையும் பிள்ளைதரச் சொல் என்று இறைவனிடம் யார் வேண்டுகிறார் ? என்ன நிகழ்ந்தது ?------

திருப்புக்கொளியூர் என்று முற்காலத்தில்  போற்றப்பட்ட‘ அவிநாசி ’என்னும் தலத்தில் கங்காதரன் என்பவர் வசித்துவந்தார் . வெகுநாட்களாகப் பிள்ளையில்லாது வருந்திய கங்காதரனும் அவர்மனைவியும் அத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் அவினாசலிங்கேசுவரர் , கருணாம்பிகையைத் துதித்து குழந்தைப் பேறுவேண்டிநின்றனர் . இறைவன் ,இறைவிகருணையால் அவர்கள் வேண்டுதலுக்குப் பலன் கிடைத்தது . அவர்களுக்கு விரைவிலேயே ஒரு அழகான பிள்ளை பிறந்தது . மகிழ்ச்சியுற்ற இருவரும் அவனுக்கு இறைவன் நினைவாக ‘ அவிநாசிலிங்கம் ’ என்ற பெயர் வைத்து , பெயர் சூட்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடினர். அவிநாசிலிங்கம் நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ஐந்து வயதை எட்டி விட்டான் . 


    அவன் வயதை ஒத்த எதிர்வீட்டுச் சிறுவன் ஒருநாள் அவிநாசிலிங்கத்தை விளையாட அழைக்க இருவரும் ஆவலுடன் வெளியே சென்றனர். விளையாடிக் கொண்டே, எங்கே போகிறோம் என்று தெரியாது அவர்கள் இருவரும் கோவிலுக்கு அருகில் இருந்த பெரிய தாமரைக் குளத்தை அடைந்தனர்.


    நீரைக் கண்டால் சிறுவர்கள் சும்மா இருப்பார்களா? இருவரும் பேசிக்கொண்டே , குளத்தின் படியில் இறங்கி சிறிது நேரம் விளையாடினர் . விதியாரை விட்டது? பிறகு குளத்தில் இறங்கி ஒருவர் மேல் ஒருவர் தண்ணீரை வாரி இறைத்து ஆனந்தமாக விளையாடிப் பொழுதைக் கழித்தனர் . நேரம் போவதே தெரியாது இருவரும் குளத்தில் விளயாடிக் கொண்டிருந்த தருணத்தில், வெகுநாட்களாக அந்தக் குளத்தில் வசித்து வந்த ஒரு பெரிய முதலை அவிநாசிலிங்கத்தின் காலை இறுகப் பற்றிக் கொண்டது. முதலில் அந்தச் சிறுவன் அதனை உணரவில்லை , முதலைப் பிடியென்றால் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா?. காலை ஏதோ கவ்வுவது போல் உணர்ந்து அவிநாசிலிங்கம் பயந்துவிட்டான் . பிறகு அது முதலை தான் என்று அறிந்து , செய்வதறியாது திகைத்து அழுதான் . யானையாகிப் போன மன்னன், ஆதிமூலமே! என்று கதற எவ்வாறு திருமால் வந்து அந்த யானையை முதலையின் வாயினின்றும் காத்து அருளினார் என்பதை “கஜேந்திர மோட்சத்திலிருந்து ” நாம் அறியலாம் ! அது சாபத்தினால் வந்தது . ஆனால் இறைவன் இப்பொழுது இப்படிப்பட்ட நிகழ்வு நேரும்படி ஏன் செய்தான்? ---
காரணம் இல்லாமல் செய்திருப்பானா? இச்சம்பவம் சுந்தரருடைய தமிழ்ப் புலமையையும் அவர் சிவபெருமானிடம் கொண்ட தீராத பக்தியையும் , நம்பிக்கையையும், உலகத்திற்கு எடுத்துரைக்கவே எழுந்த திருவிளையாடலாகும் .


      அவிநாசிலிங்கத்தை முதலை கவ்வியதைக் கண்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவன் நண்பன் அஞ்சி மிரண்டு விட்டான் . அவனும் சிறுவன் தானே! என்ன செய்வது என்று புரியாமல் அழுது கொண்டே இருந்தான். நேரம் சென்று கொண்டே இருந்தது. பிற்பாடு சமாளித்துக் கொண்டு தன் நண்பனைக் காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலால் ஊருக்குள் சென்று அவிநாசிலிங்கத்தின் பெற்றோர்களிடம் அழுகையினூடே நடந்த நிகழ்ச்சியை விவரமாகத் தெரிவித்தான். இதைக் கேள்வியுற்ற பெற்றோர்கள், தெருவிலுள்ள மற்ற பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு , கவலையுடனும் , பரபரப்புடனும் அழுது கொண்டே வேகமாக சம்பவம் நடந்த தாமரைக் குளம் வந்தடைந்தனர் .  ஆனால் நீருக்கு வெளியே, சிறுவன் கூறிய படி முதலையும் , பையனும் இருந்ததான எந்த விதமான சுவடும் தெரியவில்லை . எக்கோணத்தில் தேடியும் முதலையையும் , பிள்ளையையும் காணவில்லை.குளத்தில் இறங்கிப் பார்க்கும் தைரியம்கூட ஒருவருக்கும் இல்லை . யாவரும் செய்வதறியாது பதைபதைத்து நின்றனர். அவினாசிலிங்கத்தின் பெற்றோர்கள் தம்பிள்ளையை நினைத்து அழுது புலம்பினர் .


“முதலை தான் விழுங்கி இருக்க வேண்டும் ! அதன் வேலை தீர்ந்துவிட்டது , அதனால் அதன் வழி சென்றுவிட்டது! ”-----
“பாவம் பெற்றோர்கள்! என்ன பாவம் செய்தார்களோ! கறிவேப்பிலை போன்று இருந்த ஒரே பிள்ளையை முதலை வாய்க்குப் பறிகொடுத்து நிற்கிறார்களே! ”


        இன்னும் பல விமரிசனங்களைக்காது கொடுத்துக் கேட்க முடியாது மிகவும் வருந்தினர் பெற்றோர்கள் .
ஆனால் மற்றவர்கள் கூறுவதிலும் உண்மை இருக்குமோ என்றும் அஞ்சினர். தாம் இறைவனிடம் இறைஞ்சிப் பெற்ற பிள்ளையை அருமையாக வளர்த்து அநியாயமாக முதலைவாய்க்குக் கொடுத்து விட்டோமே ! என்று சொல்லிச் சொல்லிப் புலம்பினர் . தங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை குறித்து நாணம் கொண்டனர் .
ஒருவாறாக அவர்களுடன் கூட வந்த நண்பர்களும் உறவினர்களும் அவர்களைத் தேற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் . காலம் உருண்டோடியது . ஆனால் கவலை மட்டும் விலகவில்லை .


        இந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன . அவிநாசிலிங்கத் தோடு விளையாடிய சிறுவனுக்கு அவனது பெற்றோர்கள் உபநயனம் ( பூணூல்) நடத்த வரும்பி , அதன் படியே ஒரு நல்ல நாளும் குறித்தனர். 
குறித்த உபநயன நாளும் வந்தது . ஒரே தெருவில் ஒரு வீட்டில் உபநயனம் , மேளதாளங்கள் , மகிழ்ச்சி , ஆரவாரம் உறவினர் கூட்டம் என்று மகிழ்ச்சி தான் . ஆனால் எதிர் வீடாகிய கங்காதரன் வீட்டில் ---  அழுகை ஒலி !  தன் மகன் இந்நேரம் இருந்திருந்தால் இந்த வயதில் அவனுக்கும் உபநயனம் நடந்திருக்குமே! –என்று எண்ணி எண்ணிப் பெற்றோர் புலம்பும் ஓலம் ! அந்தத் தெருவில் ஒரே சமயத்தில் ஒரு வீட்டில் மங்கல ஓசை , மற்றொரு வீட்டில் அமங்கல ஓசை  . ஈசன் செயல் தான் என்னே!


      சுந்தரமூர்த்தி நாயனார் தலம் தலமாக இறைவனை தரிசித்து ,பதிகங்கள் பாடிவரும்பொழுது  , திருப்புக்கொளியூருக்கும் விஜயம் செய்தார் . அங்குள்ள கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனை தரிசிப்பதற்காக கங்காதரன் வீட்டுத் தெருவழியே அவர் செல்ல நேர்ந்தது. 


     “ஒரே தெருவில் இரண்டு எதிர்மறையான நிகழ்ச்சிகள்உ ள்ளனவே ! என்னே இறைவன் சித்தம் !. இதை நாம் விசாரித்து அறிய வேண்டும் ” என்று எண்ணியபடி அருகிலிருந்தோரை விசாரித்தார் .
ஊராரும் , இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியை ஒன்று விடாது , சுந்தரருக்குத் தெரிவித்தனர். 
உடனே சுந்தரரும் ,காலம் தாழ்த்தாது , “ சம்பவம்நிகழ்ந்த தாமரைக் குளம் எங்கே ? அவ்விடத்திற்கு என்னை இட்டுச் செல்லுங்கள்!” என்று கூற , அவிநாசிலிங்கத்தின் பெற்றோர்களும் சுந்தரர்வந்திருக்கும் சேதிகேட்டு ஓடோடிவந்தனர் . அவர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு , ஊர் மக்களுடன் தாமரைக் குளத்திற்கு விரைந்து சென்றார் சுந்தரர். 


       எல்லோருடைய உள் மனமும் ஏதோ ஒரு அதிசயம் நடக்கப் போகிறது என்று சொல்வதை உணர்ந்தனர். மக்கள் கூட்டம் கூடிவிட்டது.
தாமரைக் குளம் வந்தாகிவிட்டது . சுந்தரமூர்த்தி நாயனார் கண்களை மூடிக்கொண்டு , கைகளைக் கூப்பி , சிவபிரானை தியானித்து அவரைப் புகழ்ந்து பாடிய பின்,
“அவிநாசி அப்பனே ! நீ எமனிடம் , இக்குளத்தில் ஆழ்ந்த குழந்தையைத் தரச்சொல்! ” என்ற பொருள்படப் பதிகம் பாடத் தொடங்க எங்கோ பதுங்கி இருந்த முதலை தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தது .

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெருமானையே
உற்றாய் என்றுன்னையே உள்குகின்றேன்
உணர்ந்துள்ளத்தால்
புற்றாடரவாபுக் கொளி
யூர்அவினாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபரமேட்டியே------

-புற்றின்கண் வாழ்கின்றதும், படமெடுத்து ஆடுகின்றதுமான பாம்பை அணிந்தவனே!, உயிர்களுக்கெல்லாம் தலைவனே !, மேலான இடத்தில் உள்ளவனே!, திருப்புக்கொளியூரில் உள்ள ,’ அவினாசி ’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே!, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து , மனத்தால் நினைக்கின்றேன் ; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன் ; உன்னை எக்காரணத்தால் நான் மறப்பேன் !.


      இது முதல்பாடல் இது தொடங்கி பத்து பாடல்கள் பாடினார் . ஒரே பாடலிலேயே இறைவன், குழந்தையைத் திருப்பிக் கொடுத்திருப்பார் . ஆனால் இறைவன் அடியவரின் பாடலைக் கேட்பதற்கு இச்சை கொள்பவராயிற்றே! தொடர்ந்தார் சுந்தரர்   -----

வழிபோவார்தம்மோடும்வந்துடன்
கூடியமாணிநீ
ஒழிவதழகோசொல்லாய்அரு
ளோங்குசடையானே
பொழிலாருஞ்சோலைப்புக்கொளி
யூரிற்குளத்திடை
இழியாக்குளித்தமாணிஎன்
னைக்கிறிசெய்ததே     ----இரண்டாவதுபாடல்


      அருள்மிக்க ,தவக் கோலத்தையுடையவனே! , பெருமரப் பொழில்களையும் , நிறைந்த இளமரக்காடுகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ளகுளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச்சிறுவன் செய்தகுற்றம் தான்யாது ? உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன் , உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ ? நீசொல்லாய் !. என்ற பொருள்படும்படிப் பாடினார்.

 

உரைப்பார் உரை உகந்துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்காடரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப்புக்
கொளியூர் அவினாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச் சொல்லு காலனையே  ------நான்காவது பாடல்

 

       உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே , உன்னை எஞ்ஞான்றும் மறவாது  நினைக்க வல்லவர்களுடைய தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே , எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும் , சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , கூற்றுவனையும் முதலையையும் , இக்குளக்கரைக் கண்பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள் !.


       இவ்வாறு பாடியவுடன் அடியவரின் பாடலுக்கு ஏற்ற வகையில் முதலையும் இரண்டு வருடங்களுக்கு முன்தான் விழுங்கித் தன்வயிற்றில் வைத்திருந்த பிள்ளையை , கரைக்கு வந்து உமிழ்ந்தது . என்னே ஆச்சரியம்!. அவிநாசிலிங்கம் வெளியுலகத்தில் இருந்தால் இந்த இரண்டு வருடங்களில் எவ்வளவு  வளர்ச்சி கண்டிருப்பானோ , அவ்வாறு வளர்ந்திருந்தான்.


      இறைவன் மேல் எவ்வளவு நம்பிக்கை பூண்டிருந்தால் , இறைவனிடம் ஆணைபோல் கூறியிருப்பார் சுந்தரர், இறைவனும் அதற்கு செவிசாய்த் திருக்கிறானே!.

     அருணகிரிநாதர்‘ ஐங்கரனை ‘ என்று தொடங்கும் திருப்புகழ்பாடலில்
“கொங்கில் உயர் பெற்றுவளர் தென்கரையில் அப்பர் அருள்கொண்டு உடலுற்றபொருள் அருள்வாயே! “
என்று வேண்டுகிறார்  (அப்பர் -- இறைவன் ) .


       சிவபெருமனின் அருள் கொண்டு , குழந்தையை முதலையின் வாயினின்றும் மீட்டுத் தந்ததின் ரகசியப் பொருளை , முருகா எனக்கு நீ அருள வேண்டும்! என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.
இங்ஙனம் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி , இரண்டு வருடங்களுக்கு முன் முதலை விழுங்கிய குழந்தையை திரும்பப் பெற்றார் என்றால் அரன் அடியாரின் திறனைப் புகழுவதா? அன்றி தம் அடியார்களின் வேண்டுதலுக்குத் திறம்பட செவிசாய்க்கும் தலைவனாகிய சிவபெருமானின் அருள் தன்மையைப் போற்றுவதா?
 

Related Content

இப்போதைக்கு மழைவேண்டாம்!

கனிக்கும் கரும்புக்கும் எட்டா இனியவன்

மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு

சுந்தரரின் வேண்டுகோள்

யாழ்மூரி பாடியது