logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-paniseyyavareer

பணி செய்ய வாரீர்

திருமுறைக்கதை

உமாபாலசுப்ரமணியன்


“ஏனப்பா நீ வேலை வேண்டும் என்று சொன்னாயே! ஒரு இடம் இருக்கிறது, அந்த எஜமானனிடம் சென்று வேலை செய்கிறாயா ?”

 

“தாங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? அவர் பக்கத்தில் சதா நாய் இருந்து கொண்டே இருக்குமே அவரையா?”

 

“ஆம்! அதனால் என்ன? ஒரு குறையும் இல்லையே?”

 

“அதுமட்டுமல்ல ஒரு பழைய ஓட்டை வண்டியையல்லவா வைத்திருக்கிறார். சரி! அப்படி நான் அவரிடம் வேலைக்குச் சென்றால் எனக்குச் சரியான சம்பளம் தருவாரா?”

 

“அப்பா! அவருடைய நாயையும், வண்டியையும் வைத்து அவரை எடை போடாதே! அவர் மிகவும் நல்லவர். வயிறு முட்டுமட்டும் சோறு போட்டு உன்னைக் காப்பாற்றுவார்.”

 

“தாங்கள் தான் இப்படிச் சொல்கிறீர்கள் . ஆனால் அவரைப் பார்த்தால் தான் நன்றாக ச்சாப்பிட்டு , மற்றவர்களுக்கும் சாப்பாடு போடுவார் என்று தோன்றவில்லையே!. மிகவும் எளிமையாக இருக்கிறாரே!”–

“அதைப் பற்றி உனக் கென்னகவலை? அவர் உன்னிடமிருந்து வாங்கும் வேலைக்குத் தக்கபடி சம்பளம் கொடுக்கிறாரா? , உன் வயிறு நிறைய சோறு போடுகிறாரா?என்பதை மட்டும் கவனி . அதைமட்டும் தெரிந்துகொள்! ”—

“இன்னும் ஒன்று கேட்க விரும்புகிறேன் ஐயா! . அவர் எப்பொழுது மேசாமானிய உடைதானே அணிந்து கொள்கிறார் ?அவரிடம் நல்ல பகட்டான ஆடை வாங்குவதற்குப் போதிய வசதி இல்லையோ ?”

“அவருடைய இயல்பு அது.அவரிடம் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் பட்டுச்சட்டையும் , சரிகை வேட்டியும் அணிந்து கொண்டிருப்பார்கள். அவர் மட்டும் எப்பொழுதும் சாதாரண உடையில் தான் இருப்பார்.மிகவும் எளிமையானவர்.பகட்டிலும் , ஆடம்பரத்திலும் ஆசைவையாதவர்.அவர்வாகனம் , உடை ,அணிகலன்கள் இவற்றைக் கண்டு அவருடைய குணத்தையும் பெருந்தன்மையும் தெரிந்து கொள்ளாமல் ஏமாந்தவர்கள் பலர் உண்டு.”---பேச்சு இவ்வாறு நீடித்தது.

மேற்கண்ட சம்பாஷணை போலவே அர்த்தமுள்ள வேறு ஒரு சம்பாஷணை நடக்கிறது. அதைக் கவனிக்கலாம் .

ஒரு சிவனடியார் தன் நெஞ்சுடன் பேசுகிறார் .

ஒரு வயதான சிவபக்தர் தன் நெஞ்சைப் பார்த்து , சிவபிரானுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

            “ நெஞ்சமே ! நீ இத்தனை காலம் யார்யாருக்கோ பணி செய்தாய் அல்லவா? அதனால் ஏதேனும் உனக்குப் பயன்கிட்டியதா?” ---

            “எங்கே!  அவரவர்கள் தங்கள் நன்மையைப் பார்த்துக் கொண்டார்களேயன்றி எனக்கு அதனால் ஒன்றும் ஊதியம் இல்லை. அவர்களால் நான் அடைந்தவேதனையும் , கவலையும்  தான்நான் கண்டபலன் !”---

“போகட்டும் ! செல்வந்தர்களையும்  , கல்வியில் சிறந்தவர்களையும் , ஆற்றல் மிகுந்தவர்களையும் தேடிச்சென்றாயே! அதனால் ஏதேனும் பலன் பெற்றாயோ?”----

“அவர்களிடமே அவைகளெல்லாம் நிலையாக நிற்காத போது எனக்கு மட்டும் என்ன பயன்கிட்டிவிடும்? . சுற்றிச் சுற்றி வந்து என் வாழ்நாள் தான் வீணாயிற்று! ”

            “ அப்படியா! சரி ! கவலைப்படாதே! இவ்வளவு அநுபவப்பட்ட உனக்கு நான் வேறு ஒரு பிரபுவைக் காண்பிக்கிறேன் . அவருடன் சேர்ந்துபணி புரிகிறாயா? ” ---

            “ யார் அவர் ? எந்த ஊர்க்காரர் . சொல்லுங்களேன்!”அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டியது.

            “ சோழ மண்டலத்தில் ஓர்ஊரில் தான் உள்ளார். திருவையாற்றுக்கு அருகில் திருச்சோற்றுத்துறை என்ற அழகான ஓர்ஊர் இருக்கிறது. அங்கேதான் அவர் வாழ்கிறார்.”---        “ஆஹா! இவ்வளவு அருகாமையில் இருப்பவரா? எனக்குத் தெரியாமல் போயிற்றே!”-

            “ நான் சொல்லும் நபரை உனக்கு முன்பே தெரிந்திருக்கலாம். நீ அவரைப் பார்த்திராவிட்டாலும் , பிறர் அவரைப்பற்றிச் சொல்லி நீ கேட்டிருக்கலாம்”–

“இன்னார் என்று சொல்லுங்களேன் . மிக்க ஆவலாக இருக்கிறேன் ” –

“சிவபெருமான்” –

“அட ! அவரா! நான் யாரோ என்று நினைத்து விட்டேன்.மாட்டின் மேல் ஏறிவருவார் என்று சொல்வார்களே . அவர்தானே?” ---பேச்சில் அலட்சியம் தெரிந்தது

“ஆம்! பெற்றம் ஏறும் பெருமானைத் தான் சொல்கிறேன்”. –

“குதிரையும் ,யானையும் , தேரும், விமானமும் இருக்க , பெற்றம் தானா கிடைத்தது இவருக்கு ? நல்லபேர் வழியாகப் பார்த்துச் சொன்னீர்களே!அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் . அவரைச் சுற்றி எப்போதும் பேய்க்கூட்டம் அலைந்து கொண்டிருக்குமாமே ? உண்மைதானா?” ---

“ஆம்! அவர் அடையாளத்தை நீ நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாயே ! பேயைப்படையாகக் கொண்ட பேராளரே அவர் !”

            “ எல்லோரும்  பொன்னும் , மணியும் , இரத்தின வகைகளும் பூண்டிருக்க , பாவம் இவர் ஏனோ பாம்பை அணிந்து கொண்டிருக்கிறார் என்று  எல்லோரும் கூறுகிறார்கள். பாம்பு போல மாலையைக் கட்டி அணிந்திருப்பார் என்று தான் எண்ணினேன், ஆனால் யாவும் உண்மையான பாம்புதானாமே! படம் எடுத்து ஆடுகின்ற நஞ்சு நிறைந்த பாம்பைத் தான் தன் உடலில் ஒரு பாகம் விடாது , கையிலும் , கழுத்திலும் , தலையிலும் அணிந்து கொண்டிருக்கிறாராம். சரியான பைத்தியக்காரராக இருப்பார் போல் தோன்றுகிறது! ” ---

            “  நான் புற்றில் ஆடும் அரவைப் பூண்ட புண்ணியமூர்த்தியைப் பற்றித்தான் சொல்கிறேன் . அவரைச் சுற்றியுள்ளவைகளைப் பற்றித் தெரிந்து கொண்டாயே அன்றி , அவரைப் பற்றி நீ உண்மையாக ஒன்றும் அறிந்து கொள்ளவில்லை போல் தெரிகிறதே!”----“ இன்னும் நான் என்ன அறிந்து கொள்ள வேண்டும் ? வேறு ஏதும் வாகனம் கிடைக்கவில்லையோ அல்லது புத்திக்கோளாறோ?, அவர்,மாட்டில் ஏறி வருகிறார். மனிதர்கள் யாவரும் அவர் பக்கத்திலேயே போகப் பயப்படுகிறார்கள். ஏனென்றால் பேய்கள் அவரைச் சுற்றிக்கும் மாளம் போடுகின்றன. போதாக்குறைக்கு , யாவரும் அஞ்சும் படியாக தன் உடம்பு முழுதும் பாம்புகளை அணிந்திருக்கிறார்.முட்டுகிற மாட்டையும் , ஆளையே சாப்பிட்டு விடுகிற பேய்களையும் , கடிக்கிற பாம்பையும் படைத்த அவரிடம் போகவே முடியாதே!அவரை நான் அணுகிப் பணி விடைசெய்வது என்பது நடக்கிற காரியமா என்ன? ” ---

            “ அட மட நெஞ்சமே! புறத்தோற்றத்தை கண்டு மயங்கி மயங்கித் தான் நீ ஏமாந்து போகிறாய். எந்தப் பொருள் எப்படித் தோன்றினாலும் , அதனுடைய உண்மையைத் தெரிந்து கொள்ளும் அறிவை நீ படைக்கவில்லை . அந்த அறிவு  இல்லாத உனக்கு, அவரைச் சுற்றியிருக்கும் பொருளைக் காணக்கண் இருக்கிறதே ஒழிய,அவரைப் பற்றி நன்றாக அறியக் கூடிய தெளிவுஇல்லை. சரி ! அவர் வாழ்கிற இடம்பற்றிச் சொன்னேனே! அதையாவது கருத்தில் வாங்கிக் கொண்டாயா?”

            “ தெரியுமே ! சொன்னீர்களே! . சோற்றுத் துறை என்ற ஊரில் இருக்கிறார் என்று” ---

“சரி! சோற்றுத் துறை என்ற ஊருக்கு எப்படி அந்தப் பெயர்வந்தது தெரியுமா?”---

“தெரியாது .சொல்லுங்கள் கேட்டுக் கொள்கிறேன்” –

“அடியவர்கள் பசியோடு இருப்பதைப் பாராத பரமதயாளு அந்தப் பெருமான் . உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை அந்த ஊரில்‘அருளாளன்’ என்று ஒரு சிறந்த அடியவருக்கு ,  அள்ள அள்ளக் குறையாத படி சிவபெருமான் சோறு அளித்தாராம். அடியார்கள் பசிப்பிணியால் வருந்திய போது இறைவன் அக்ஷசய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவனுக்குத் தொலையாச் செல்வர் என்றும் இறைவிக்கு, அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று. அதனால்தான் அந்த ஊருக்குச் ‘சோற்றுத்துறை என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள்.”—

            “ யாருக்கோ எப்போதோ சோறு அளித்தாராம், அதை நான் நம்ப வேண்டுமாம் ! கதையாக இருக்கிறதே !” –

“செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்ப னென்னாதருளே துணையாக

ஒப்பரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்

றப்பர் சோற்றுத்துறை சென்றடைவோமே.

பிறையும் அரவும் புனலுஞ் சடை வைத்து

மறையும் ஓதிமயானம் இடமாக

உறையுஞ் செல்வம் உடையார் காவிரி

அறையும் சோற்றுத் துறை சென்றடைவோமே..

என்று திருஞானசம்பந்தரே பாடியிருக்கிறார்

மேலும் சுந்தரரும் சோற்றுத் துறை பற்றிப் பாடியிருக்கிறார்கேள்-----

அழல் நீர் ஒழுகி அனைய சடையும்

உழையீர் உரியும் உடையான் இடமாம்

கழை நீர் முத்துங்கனகக் குவையும்

சுழல் நீர்ப் பொன்னிச் சோற்றுத்துறையே.

ஓதக் கடல் நஞ்சினை யுண்டிட்ட

பேதைப் பெருமான்பேணும் பதியாம்

சீதப் புனலுண்டெரியைக் காலும்

சூதப் பொழில்சூழ் சோற்றுத்துறையே..-------

 

“உனக்குப் புண்ணியம் இருந்தால் நம்பு . சோறு அளித்த காரணத்தினால் தானேஅந்த ஊருக்கு அப்பெயர் வந்தது என்பதை நீகவனிக்க வேண்டும்.அப்பெருமானுடன் உறைகின்ற பெருமாட்டிக்கு ‘அன்னபூரணி ’என்று பெயர். அந்த ஊரில் சோறு படைத்தவயல், சோறுடையான் வாய்க்கால் என்ற பெயர்களோடு உள்ளவயலும் , வாய்க்காலும் இந்த வரலாற்றுக் குச்சாட்சியைச் சொல்கின்றன என்பதை நன்றாகத் தெரிந்துகொள்! ”---

            “சரி !நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையாகவே இருக்கட்டும். இன்று நமக்கு அவர் சோறு தருவாரா?”---

            “ பைத்தியமே ! அவர் வெறும் மனிதன் என்று நினைத்தாயா? மனிதனாக இருந்தால் , அன்று அவர் பணக்காரராக  இருந்ததினால் யாவருக்கும் சோறுபோட்டார் . இன்று ஏழையாகிவிட்டார், அதனால் அப்படிச் செய்ய இயலவில்லை என்று சொல்லலாம்.ஆனால் இவரோபரம் பொருளாயிற்றே ! , நித்தியர்! என்றும் மாறாத செல்வத்தை உடையவர்; அவர் உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் என்றுமே சோறு அளிக்கவல்லவர். அவர் நமக்கு உணவு தரா விட்டால் நாம் உண்ண முடியாது. நாம் முயன்று பொருள் ஈட்டி, நம்மை உண்ணும் படியாக வைத்த அவன் அருள் ஆணையினால் தான் இவை யாவுமே நிகழ்கின்றன. எல்லாமே அப்பெருமானுடைய திருவுள்ளப் படியேதான் நடக்கின்றன. சொல்லப் போனால் உலகம் முழுதுமே சோற்றுத் துறைதான் என்று கூடக் கூறலாம். ஒவ்வொரு வாய்க்காலும் அதன் நீரினால் நெல் முதலிய வைகளை விளைவித்து , மக்கள் யாவருக்கும் சோறு உண்டாகக் காரணமாக இருப்பதால் எல்லாவாய்க் கால்களுமே சோறுடையான் வாய்க்கால்களே ஆகும்,மேலும் உலகிலுள்ளவயல்கள்யாவும் மனிதர்களுக்குச் சோறுபடைக்கும் வயல்களே !”

            “ அவர் சோறு வழங்கும் தலைவராக இருந்தால் ஏன் சாதாரண பெற்றம் ஏறுகிறார் ? எவரும் நெருங்க முடியாத பேயை ஏன் படையாகக் கொள்கிறார்? யாரும் அஞ்சும் படியான பாம்பை ஏன் பூணாக அணிகிறார்?”---

“அவர் பெற்றம் ஏறினால் என்ன ? பேய் அவருக்குப் படையானால் என்ன ? புற்றில் ஆடும் அரவையே அவர் பூண்டால் தான் என்ன? உனக்கு வேண்டியது சோறு தானே! அதை அவர்தருகிறார்!. அவர் விலாசமே அதைத் தெரிவிக்கிறதே! . யார் யாரையோ சுற்றிச் சுற்றி என்ன பயனைக் கண்டாய்? ஒரு பயனையும் காணவில்லையல்லவா? இந்தப் பெருமானை ஒரு முறை சுற்றிவா ! வலம் வந்து வணங்கு! , மனமாரப் பற்றிக்கொள்! தொண்டுசெய்!  உனக்கு இதுவரை கண்டிராத எத்தனை இன்பம் உண்டாகும் தெரியுமா? ”----

            “ அவர் எதற்காகத் தான் அந்தக் கோலம் புனைந்திருக்கிறாரோ!”–அலுத்தது.

“பெரியவர்கள் யாவரும் புறத் தோற்றத்திலே எளியவராக இருப்பார்கள். அவர்கள் செயல்பித்தரைப் போன்று இருக்கலாம் . அவர்களுடன் பலகாலம் பழகினால் தான் , அவர்களின் தோற்றத்துக்கும் ,செயலுக்கும் காரணம் தெளிவாகத் தெரியும். அந்தக் காரணங்கள் அவர்களுடைய நல்ல பண்புகளை சிறப்பிக்குமே தவிர , எப்போதும் அவற்றிற்கு மாறாக இராது ”

“அப்படியானால்….”  --

“அவருடைய தோற்றத்தின் காரணத்தைத் தானே அறிய விரும்புகிறாய்? சொல்கிறேன்”-

“அவர் ஏறுவது பட்டியிலே அடைபடும் காளை அன்று. அறத்தையே விடையாக்கி அதில் ஊர்ந்து வருகிறார். இவர் அறத்தை வாகமனமாக்கிக் கொண்டிருப்பது , இவர் அந்த அறத்தையே நடத்துகிறார் என்பதைக் காட்டுகின்றது.அதனாலேயே அவருக்கு ஏறமர்கடவுள் ,விடையேறிய விமலர் ,விடையேறுவர்

விருஷபவாகனன் –,பெற்றம் ஊர்ந்தவர் என்ற பெயர்கள் உண்டு

“அவரைச் சுற்றியிருக்கும் பேய்ப்படையைக் கண்டுயாரும் அஞ்சாமல் இருக்க முடியுமா? ”---

“அசடே ! மனிதர்களிலேயும் பேய் இருப்பது உனக்குத் தெரியுமா? மற்ற இடங்களில் வாழ்கின்றதே அந்த பேய்களே அச்சத்தை தருவன.  இறைவருடன் உள்ள பேய்கள் கட்டுப்பாட்டுக்கு அடங்கின படையாக இருக்கின்றன. கண்டதை உண்டு , கண்டபடி திரியும் அவை இப்பெருமானிடம் வந்துசேவை செய்கின்றன.வடிவினால் தான் அவை பேய்களேயன்றி அதன் சேவைகளினால் அத்தனையும் அடியார்கூட்டம் என்றே சொல்லலாம் . திருந்தி வந்த பேய்களை இறைவர் கருணையுடன் தமது அடியார்களாக்கிக் கொள்வார் இறைவன் . தங்களுக்குள் இருக்கும் பேய்த்தனைத்துக் களைந்து , தங்களையும் அடியார்களாக்கிக் கொள்வார் என்ற நம்பிக்கையிலேயே அவரைச் சுற்றித் திரிகின்றன. சிவபிரானுடைய மகனைச் சுற்றியும் பேய்கள் உள்ளன.  இதை அருணகிரிநாதரே ஒரு திருப்புகழ் பாடலில் கூறுகிறார்.

“பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் குருநாதா! என்று. ”

“சரி ! பாம்பைப் பற்றிச் சொல்ல ஏதாவது வைத்திருப்பீர்களே!”---

“பாம்பு வழுவழுப்பாக இருக்கிறது . குளிர்ச்சியாக உள்ளது. அதன் படமும் பளபளப்பாக இருக்கிறது. இத்தனை பெருமைகள் இருந்தும் அதைக் கண்டுஅஞ்சுவதற்குக் காரணம் அதனிடம் நஞ்சு இருப்பதால் தான். நஞ்சணிகண்டராகிய சிவபிரானோ, ஆலகால நஞ்சையே உண்டு அமுதாக்கியவர் ஆயிற்றே!. அதனால் பாம்பிற் கெல்லாம் பயப்படாதவர் . பாம்பையும் நஞ்சு இல்லாததாக ஆக்குகிறவர்.

நஞ்சுள்ள பாம்பு என்று தன்னைக் கண்ட மாத்திரத்திலேயே மற்றவர்கள் சொல்லிவிலகுவார்களே என்று நினைத்து ,பாம்பு புற்றில் போய் ஒளிந்து கொள்ளும் இயல் புள்ளதாகிவிட்டது.. ஆனால் இறைவரை அடைந்த பிறகு அதற்கு ஒளிய வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று . இப்போது அதனிடம்நஞ்சு இல்லை.யாரும் சீண்டிப் பார்க்க மாட்டார்கள் . படமெடுத்துக் கொண்டே இருந்தாலும், அது சீறுவதில்லை. ஆன்மாக்களிடத்தில் உள்ள நஞ்சாகிய பாசத்தைப் போக்கித் தம்மோடு இணையச் செய்யும் அருள் படைத்த பெருமான் அவர். பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றுகூறுவார்கள். ஆனால் இந்தப் பாம்பைக் கண்டு நடுங்க வேண்டிய அவசியம் இல்லை. கருணை வடிவமான கடவுள் திருமேனியில் தவழும் நஞ்சிழந்த பாம்பு வணங்கக் கூடியது. பிறரை அச்சுறுத்தும் பொருட்கள் யாவுமே ,  இறைவரை அச்சுறுத்த இயல்வதில்லை .

“ஆம் ! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்!. இந்த உண்மையை உணரும்போது , அவருக்குப் பணிசெய்தால் அந்தப் பெருமான் நலம் அருள்வார் போல் தெரிகின்றது ” ----

            “  மடநெஞ்சமே! உன்னிடத்தில் பிறரைப் புண்படுத்தும் எருதின் தன்மை இருக்கிறது. நீ அவரை அண்டினால் உன்னையே வாகனம் ஆக்கி உன் மேல் அவர் வீற்றிருப்பார். பிறரை அச்சுறுத்திப் பிறர் பொருளால் வாழும் எண்ணம் படைத்த பேய்நீ!  உன்னை அவர்தம் அருளாட்சியிலே இழுத்துக் கொண்டு, ஞான வீரப்படையிலே சேர்த்துவிடுவார். பிறரைக் கண்டால் சீறிக்கொடுமை செய்யும் பாம்பாகவும் நீ சிலசமயத்தில் இருக்கின்றாய் !  உன் கொடும் குணத்தை மாற்றித் தமக்கு அணியாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றலும், அருளும் உடையவர் அவர்.  ஆதலால் நீ யார் யாரையோ சுற்றித் திரியாதே . அவர்களைப் பற்றாதே . சுற்றி நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே பற்றி நீ பணிசெய் !.

மேற் கண்ட சம்பாஷணையின் கருத்தை வைத்து திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறையில் ,  33 ஆம் திருப்பதியான சோற்றுத்துறை திருப்பதிகத்தில் எட்டாவது பாட்டாகப் பாடியுள்ளார் . பாடலை முழுதும் பார்ப்போம் .

 

பெற்றம் ஏறில் என்? பேய்படை ஆகில் என்?

புற்றில் ஆடரவேயது பூணில் என்?

சுற்றி நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே

பற்றி நீ பணி செய்மட நெஞ்சமே --------

 

அறியாமை உடைய நெஞ்சே! சோற்றுத் துறையிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் எருதிலே ஏறினால் உனக்கு என்ன? பேய் அவருடைய படை ஆகில் அதனால் உனக்கு வரும் தீங்கு என்ன? புற்றிலே ஆடும் இயல்புடைய அரவையே பூண்டால் தான் என்ன ? அவரையே சுற்றியும் , பற்றியும் நீ தொண்டு செய்வாயாக!.

 

திருச்சோற்றுத்துறை இப்பொழுது திருச்சத்துறை என்று வழங்கப்படுகிறது.  இதன் வடமொழிப் பெயர் ஓதனவனம் . இங்குள்ள சிவபெருமானுடைய திருநாமம் வடமொழியில் ஓதனவனேஸ்வரர். சோறுடையான் என்பது தமிழ்ப் பெயர்.

 

தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்குக் கிழக்கே  5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென்கரையில் திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் உள்ளது. இத்தலம் தோகூர் - அய்யம்பேட்டை சாலையில் உள்ளது.

 

Related Content

Stories for Children - குழந்தைகளுக்கான ஆன்மீகக் கதைகள்

பொன்னனையாள் நாடகம் The History of Ponnanaiyal enacted as Dra

பட்டினத்தார் நாடகம்

63-nayanmar-drama-விறன்மிண்ட நாயனார் - நாயன்மார் நாடகம்

History of Thirumurai Composers - Drama-திருவிளையாடல் நாடகம்