logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-marulneekkiyar-thirunavukkarasar-aana-varalaru

மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு

திருமுறைக் கதை

உமாபாலசுப்ரமணியன்


       திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் தலத்தில் வேளாண் மரபில் புகழனார் , மாதினியார் என்ற கணவன் மனைவியர் சிவனை பூசித்து அழகாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.. இறைவன் திருவருளால் அவர்களுக்கு திலகவதியார் என்ற மகளும் , சிறித காலத்திற்குப் பின் மருள்நீக்கியார் என்ற மகனும் பிறந்தனர். திலகவதியாருக்கு பன்னிரண்டு வயது நிரம்பும் தருவாயில் மருள்நீக்கியார் பல கலைகளையும் திறம்படக் கற்றுத் தேர்ந்திருந்தார். திலகவதியாருக்குத் திருமண வயது வந்தவுடன் , தமிழ் நிலமன்னனின் படைத் தலைவனான கலிப்பகையாரை மணமுடிக்கத் தீர்மானித்தனர் பெற்றோர்கள் . போருக்குச் சென்ற கலிப்பகையார் விதி வசத்தால் திரும்பாத நிலையில் திலகவதியின் பெற்றோரும் இறந்தனர். தன் பெற்றோர்கள் தனக்கு கணவனாக நிச்சயித் திருந்த கலிப்பகையார் இறந்தது கேட்டு தானும் உயிர் துறக்க எண்ணினாள் திலகவதியம்மை . ஆனால் மருள்நீக்கியார் அந்தத் துக்கம் தாளாது , தன் தமக்கையின் திருவடிகளில் விழுந்து , தமக்கையை உயிர் போக்கிக் கொள்ளாமல் இருக்குமாறு கெஞ்சினார். தம்பியின் மனக்கலக்கம் திலகவதியின் எண்ணத்தை மாற்றி, அவரைப் பேணிப்பாது காக்கும் பணியில் ஈடுபட வைத்தது.


       உலகியல் அறிவுவாய்க்கப் பெற்ற மருள்நீக்கியார் தமக்கையுடன் சேர்ந்து கொண்டு அறச்சாலை, தண்ணீர்பந்தல் , சோலை, குளம் முதலிய அறப்பணி மேற்கொண்டு வருந்தி வந்தோர்க்கு விருந்து படைத்தனர். 
அந்தக்காலத்தில் பள்ளிகளும் , பாழிகளும் அமைத்துக் கொண்டு பல்லவமன்னன் மகேந்திரவர்மன் ஆதரவில் சமணசமயம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. மருள்நீக்கியார் பாடலிபுரம் சென்ற தருவாயில் சமண முனிவர்கள் தங்கள் தர்க்கத்தின் திறமையால் தங்கள் சமயத்தின் முக்கியத்துவத்தை மருள்நீக்கியாருக்குக் கூறி அவரை தங்கள் மதத்தில் ஈடுபடச் செய்தனர். தருமசேனர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற மருள் நீக்கியாரும் சமண மத நூல்களில் வல்லவராகி பல தர்க்கங்களில் வென்று சமண சமயத் தலைவராய் பதவி ஏற்று விளங்கி வந்தார்.


       தன் சகோதரன் புறச் சமயம் சார்ந்தது குறித்து வருந்திய திலகவதி யாரும் தூயசிவ நன்நெறி சார்ந்து , திருவதிகை வீரட்டானம் அடைந்து திருவலகிடுதல் , திருமெழுக்கிடுதல் , மாலை புனைதல் போன்ற திருப்பணிகளை மேற் கொண்டு இறைவன் திருவருளை போற்றி வந்தார்.வருத்தம் அடைந்த திலகவதியும் அதிகைப் பெருமானிடம் வேண்டினாள் ’ இறைவா! என்னை ஆண்டருள வேண்டும் என்று உமக்கு இருந்தால் , அடியேன் பின் வந்தவனான என் தம்பியை புறச்சமயப்படு குழியினின்றும் நீக்க வேண்டும் “ என்று விண்ணப்பித்தாள். பெம்மானும் திலகவதியார் முன் தோன்றி ,” உன் தம்பி முன்னமே முனியாகி எனை அடைவதற்கு தவம் முயன்றவன். அவனை சூலை நோய் கொண்டு ஆட்கொள்வோம். உன்னுடைய மனக்கவலையை ஒழி” என்று அருள் செய்து மறைந்தார். அவர் கூறியபடியே சூலை நோய் தருமசேனன் வயிற்றை ஆட்கொண்டது.


       சூலை நோய் தணிக்க குண்டிகை நீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தும் , பீலிகொண்டு தடவியும் , பல   தந்திரங்கள் செய்தும் சமணர்கள் சோர்வுற்று ஓய்ந்தனர்.  சமணர்கள் தன்னைக் குணப்படுத்து முடியாது கைவிட்டதை அறிந்த தருமசேனருக்கு தன் தமக்கையின் நினைவு எழும்பியது. தன் தமக்கைக்கு சேதி சொல்லி அனுப்பி, அவளும் ,  “ நன்றறியா அமண்பாழி நண்ணேன் “ என்று கூறி தூதுவனை அனுப்பிவிட்டாள்.
இச்செய்தியறிந்த தருமசேனரும் , குண்டிகை , பீலி , பா ய்இவைகளைத் தவிர்த்து , வெண்மையான உடையணிந்து திருவதிகை தலம் நோக்கிச் சென்றார்.  திலகவதியார் திருவடிகளில் வீழ்ந்து ,” உய்த்து கரையேறும் உபாயம் அருள்க” என்று கூறி அவள் கால் மேல் வீழ்ந்தார்.
“தம்பி கவலை வேண்டாம் !. சூலைநோய் வருவதற்குக் காரணம் இறையருளேயாகும் . தன்னைச் சரணடைந்தாரை என்றுமே கைவிடாத சிவபெருமான் திருவடிகளை வணங்கி பணி செய்வீராக! “ என்று கூறி திருவதிகை கோயிலுக்கு மருள் நீக்கியாரை அழைத்துச் சென்று , திருவைந் தெழுத்து ஓதி , திருநீறு அணிவித்து ,  அவரை வாழ்த்தினாள். , மறுநாள் காலை தன் தமக்கை திலகவதியார் பின் சென்று கோயிலை வலம் செய்து கீழே வீழ்ந்து பணிந்தார், இறைவன் திருவருளால் தமிழ் மாலை சாத்தும் உணர்வு வர
“கூற்றாயினவாறு “ என்று திருப்பதிகம் பாடத் தொடங்கிவிட்டார்.


கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றா தென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே.


       கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில்       உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப்பல கொடுஞ்செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை.  அவ்வாறாகச் சூலை நோய், யாருக்கும் நோய் முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். 
இவ்வாறு திருப்பதிகம் பாடும் போதே சூலை நோய் நீங்கியதை உணரமுடிந்தது மருள்நீக்கியாருக்கு.. கூத்தாடினார் . ஆனந்த வெள்ளம் பெருக தம்மைபுறச் சமயத்திலிருந்து விடுபடவைத்த சூலை நோய்க்கு நன்றி தெரிவித்தார். இந்த வேளையில் யாவரும் வியக்குமாறு வானத்தில் இறைவன் திருவாக்கு எழுந்தது ,             ” செந்தமிழ்ச் செம்மலராலாகிய பாமாலை பாடிய தன்மையால் நின்பெயர் , நாவுக்கரசு என உலகேழினும் வழங்குக!” ---
இனி தனக்கு வாழ்வளித்த அண்ணலைப் பாடுவது எனத் தீர்மானித்து அதிகைப் பெருமானை வணங்கிப் போற்றினார்.

 
       அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண்படுத்தி விட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்கமாட்டேன். இச்சூலை நோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக்கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக என்று பொருள்படும்படி அடுத்தபாட்டு தயாராகியது.இவ்வாறு ஒன்பது பாடல்கள் பாடியபின் பத்தாவதாக கீழ்க்கண்ட பாடலைப் பாடினார் திருநாவுக்கரசர் பெருமான் .


போர்த்தாயங் கோரானையின் ஈருரி தோல் புறங்காடரங்கா நடமாட வல்லாய்
ஆர்த்தான் அரக்கன்றனை மால்வரைக் கீழ் அடர்த்திட்டருள் செய்த அதுகருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையான விலக்கியிடாய்
ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே.     

 

ஆரவாரித்து நிரம்பும் நீரை உடைய கெடிலக்கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர்யானையின் உதிரப்பசுமை கெடாததோலைப் போர்த்தவனே! சுடுகாட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரிய மலையின் கீழ் நசுக்கிப்பின் அருள்செய்த அதனை நினைத்துப் பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கிஅருளுவாயாக.

 

       இவ்வாறு மருள்நீக்கியார் , தருமசேனராகி பின் திருநாவுக்கரசாகி , புறச்சமய இருள் நீக்கப்பட்டு , சிவச்சின்னங்களை அணிந்து , உழவாரப்படை ஏந்தி சைவ உலகை மகிழ்விக்க, சிவபெருமான் மேல் பலபாடல்கள் புனைந்தார் என்றால் இறைவன் சிவபெருமானின் நற்பண்பினை என்னென்று போற்றுவது!
 

Related Content

பிள்ளையைத் தரச்சொல்