logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-kadal-aamaiyum-paavakaarikalum

கடல் ஆமையும் பாவகாரிகளும்

திருமுறைக் கதை

உமாபாலசுப்ரமணியன்    சிவன் கோயிலில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஏதேனும் உபந்யாசம் நடந்து கொண்டே இருக்கும்.  சொற்பொழிவு ஆற்றுபவர்கள் எந்த விஷயத்தைச் சொன்னாலும் அது எப்போதும் சிவனைச் சுற்றியே இருக்கும்.

 

    சிவனுடைய பராக்கிரமத்தையும் , அவர் கருணையையும் அந்த உபன்யாசத்தின் மூலம் கேட்டறிந்தார் ஒரு பக்தர். அவருடைய உள்ளம் முழுதும் சிவபெருமானே நிறைந்து , நாள்தோறும் அவரை நினைந்து பக்தியில் திளைக்கும் உள்ளமாக மாறியது .   அறிஞர்களிடம் சிவபெருமான் வீற்றிருக்கும் தலங்கள் பற்றி விசாரித்து , ஊர்ஊராக, தலம் தலமாகச் சென்று இறைவனை நெக்குருகதரிசித்தார்.தேவதேவனாகிய மகாதேவனைத் தரிசித்ததோடல்லாமல் ,  அங்கங்கே அவர் புகழையும் பாடினார். இங்கு மங்கும் அலையும் மனத்தை அடக்கி அவனை ஒருமித்துத்தியானித்தார்.    நாட்கள் செல்லச்செல்ல அவர் உள்ளத்தை அது வரை அலைக்கழித்த தீய குணங்கள் யாவும் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கின. ஐம்பொறிகள் யாவும் தம் முடைய ஆற்றலை இழந்தன. உள்ளமெனும் திருக்கோயிலில் ,ஞானமென்னும் விளக்கேற்றி ,இறைவனை அங்கு எழுந்தருளச்செய்து, அன்பு என்னும் நீரால் ஆட்டினார்.

 

    இப்போது அவர் இறைவனுடைய திருவருளைப் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். அந்த பக்தர் தம்முடைய சிறுமையையும் பாராது தம்மை ஆண்டு கொண்ட இறைவனின் அருமைப்பாட்டை உணர்ந்து உணர்ந்து வியந்தார். அப்பெருமான் தன்னை நினையாதவர்க்கும் வேண்டியவற்றை வழங்கிப்பாதுகாக்கும் பெருந்தன்மையை எண்ணிப் பூரித்தார்.

 

    முன்பெல்லாம் இருந்த படபடப்பு ,  இப்போது அவருக்கு இல்லாமல் புது மனிதராக மாறிவிட்டிருந்ததை உணர்ந்தார் அந்த பக்தர்.

 

    எந்த வகையிலாவது பொருள் ஈட்டி , அதைச் சேமிப்பதே தன் வாழ்க்கையின் குறிக்கோளாக எண்ணி வாழும் ஒரு பணப்பித்தர் இந்த பக்தரைச் சந்திக்க அவர் இல்லம் வந்தார். 
“இப்போதெல்லாம் ஏதோ ஒரு மாதிரி இருக்கிறீர்களே ! ஏதாவது புதையல் கிடைத்துள்ளதா என்ன ? உங்கள் முகத்தில் ஏதோ ஒரு புது மலர்ச்சி தெரிகிறதே ! “   என்றுகேட்டார்.
    பக்தரும் உடனே “ உங்களுக்குஎப்படித்தெரிந்தது ! நன்றாகச் சொன்னீர்கள் ! புதையல் தான் கிடைத்தது ! “ என்று பதில் அளித்தார். 
    கேட்டவர் பணத்தாசை பிடித்தவராயிற்றே! 
“அப்படியா! பொருளாகக் கிடைத்ததா? இல்லை பொன்னாகக் கிடைத்ததா? எவ்வளவுகிடைத்து ? “   அடக்கமாட்டாத ஆவல் அவரை கேட்கத் தூண்டியது.
“பொருள் தான் கிடைத்தது.”என்று பக்தர் கூறினார்.
பணத்தில் ஆசை கொண்டவர் ஏதோ பாத்திரமோ பண்டமோ என்று நினைத்து , “ என்ன பொருள் கிடைத்தது ? “ என்று கேட்டார்.
“பரம்பொருள் “ என்றார்
அவருக்குப் புரியாததால் .” என்ன? “ என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
“சிவபரம்பொருள் “ என்று விளக்கமாகக் கூறினார் அந்த பக்தர்.
பணத்தைத் தவிர ஒன்றும் தெரியாத பணக்காரர்  ,             “ ஓ! அப்படியும் ஒரு பொருள் இருக்கிறதா?”  என்றார்.
    “ ஆம். உண்டு !. உங்களுக்குத் தெரியாமலேயே அது உங்களுக்குப் பயனைத் தருகிறது.”
“எப்படிச் சொல்கிறீர்கள்?” 
“சிவபரம் பொருள் தன்னுடைய பெருந்தன்மையால் தன்னை ஒரு போதும் நினைக்காதவர்களையும் காப்பாற்றுகிறது. உடலும்  , அதற்கு வேண்டியவை யாவையும் வழங்குகிறது “—
‘நீங்கள் எந்த மனிதரைப் பற்றிச் சொல்கிறீர்கள் ?”
“அவர் ஒருமனிதர் அல்ல . உலகத்தில் இருக்கும் மனிதர்கள் யாவரையும் காப்பாற்றி அருளும் பெருமான் “ விடாது பக்தரும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
    “ அப்படியானால் நீங்கள் குறிப்பிடுவது தேவரோ?”
    “ தேவர்களுக் கெல்லாம் பெரியதேவன் . தேவதேவன் . மகாதேவன் “-
“அந்த மகாதேவனால் நமக்கு என்ன பயன்? , நமக்குகை, கால்கள் இருக்கின்றன. அதனால் உழைத்துச் சம்பாதிக்கிறோமே !” – தர்க்கம் வலுத்தது.
“அந்தக்கை, கால்களைக் கொடுத்தவனே  அவன் தான் ஐயா! அதை மறந்துவிட்டால் ‘ இவன் நம்மை நினைக்கவில்லை , இவனிடமிருந்து கை, கால்களைப் பறித்து விட்டுப் பயன்படாமல் செய்துவிடலாம்  ‘ என்று அவன் ஒரு போதும் நினைத்ததில்லை .நாம் செய்யும் குற்றங்களை அவன் பொருட்படுத்துவதில்லை . அவனுடைய பெருந்தன்மைக்கு அளவேது “ பக்தர்தன் பக்தியின் எல்லைக்கு வந்தார். 
    பணத்தில் ஆசை கொண்டவருக்கு அவர்சொல்வது ஒன்றுமே விளங்கவில்லை . புண்ணியம் செய்திருந்தால் தான் இறைவனைப் பற்றிய விளக்கங்கள் மூளையில் ஏறும் . 
“ஏன் ஐயா அந்தத் தேவன் நம் யாவரையும் விடப் பெரியவனா என்ன ?” –
“ஆம்! அளக்கவொணாத பெம்மான்”
“சரி! அவனை நான் பார்க்க முடியுமோ ?”—பணக்காரர் கேட்டார்
பக்தர் தங்குதடையின்றி அவர் கேள்விக்குப் பதில் சொன்னார் ’ பார்க்கும் முறையிலே பார்த்தால் நிச்சயமாக அவரைப் பார்க்கலாம்”-
    “ ஓ! முறையா? அது என்ன முறை?” கேட்டார் மற்றவர்.
“அவனிடம் ஆராத அன்பு கொண்டு வழிபட்டால் அவனைப் பார்க்கலம் “ என்று கூறி அன்பு நெறியையும் , சிவபெருமானின் பெருமைகளையும் அவருக்கு விளக்கினார். 
    பணப் பித்தர் செய்த பாவங்கள் அவர் அறிவைத் திரை போட்டு மறைத்தது .
“நீங்கள் சொல்வ தெல்லாம் சுத்தப் பொய் ! அப்படி ஒருவனைப் பார்க்கவே முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக முடிவு கட்டினார் . சுத்த நாஸ்திகனாக இருப்பார் போல் தோன்றியது அன்பருக்கு.
சிவபெருமானிடம் பேரன்பு வைத்திருந்த பக்தர் , பணப்பித்தரிடம் ( பாவகாரியிடம்)  செய்து கொண்டிருந்த வாக்கு வாதத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் , இனி பயனில்லை எனஎண்ணினார் .
அவர் மேல் கோபம் வந்தது பக்தருக்கு “கல்லால் ஆன பசுவிடம் பால் கறக்க முடியுமா? கிணற்று ஆமைக்குக் கடலின் பெருமையை உணர்த்தமுடியுமா?” என்று மனதுக்குள் முணுமுணுத்தார் பக்தர் .
“ஏதோ மனதிற்குள் சொல்லிக் கொண்டீர்களே ! கடைசியாக என்ன சொன்னீர்கள்?  ஏதோ ஆமை , கடல் என்று ? என்ன அது?  கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன் .”- 
‘ஐயோ! இவர்  செய்த தீவினைகள் யாவும் சேர்ந்து , சிவபிரானுடைய பெருமைகளை அறிந்து கொள்ள வொட்டாமல் மறைக்கிறதே ! “ என மனத்துக்குள் எண்ணி வருந்தி , ஆமைக் கதையைக் கூற ஆரம்பித்தார்.
“ஒரு ஊரில் ஒருகிணறு இருந்தது .  அங்கிருந்து பார்க்கும் தூரத்தில் கடல் தெரிந்தது . பல நாட்களாகக் கடலில் வாழ்ந்து வந்த ஆமை ஒன்று , வேகமாக வீசிய அலையில் சிக்கி , ஒருநாள் கரைக்கு வந்த போது வழி தடுமாறி , கரையில் இருந்த மணல் மேட்டில் ஏறியது.   ஒன்றும் புரியாது யாராவது நம்மைத் தாக்கி விடுவார்களோ என்ற பயத்துடன் மெதுவாக திக்குத்தெரியாமல் சென்று கொண்டே இருந்தபோது அங்கு இருந்த ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து சேர்ந்தது. கிணற்றுச் சுவர்அதிகம் இல்லாததால் , அந்தச் சுவரில் ஏறி கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது . அதில் தண்ணீர் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தது. அதுவுமல்லாமல் அது கடல் நீர் மாதிரி இல்லையென்றாலும் , பாதுகாப்பான இடமாகப்பட்டதால் அந்தக் கிணற்றில் மெதுவாக நுழைந்துவிட்டது கடல் ஆமை.   கிணற்றில் ஏற்கெனவே ஒருசிறிய ஆமை வசித்து வந்தது. 
    கிணற்றில் இருந்த ஆமைக்குக் கடல் ஆமையைப் பார்த்தவுடன் மிகவும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் அந்த மாதிரிப் பெரிய ஆமையைக் கிணற்று ஆமை இதுவரை பார்த்தது இல்லை . அது தன் வாழ்நாளைக் கிணற்றிலேயே கழித்தது அல்லவா?  அதனால் அதற்கு வெளியுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது.
உருவத்தில் தன்னைப் போலவே இருந்த கடல் ஆமையைப் பார்த்து,  கிணற்று ஆமை , “ நீ என்னைப் போலவே இருக்கிறாயே  ? நீ எங்கிருந்து வருகிறாய் ?” என்றுகு சலம் விசாரித்தது.
    “ ஏன் ? நான் கடலிலிருந்து வருகிறேன் .” என்று பெருமையாகச் சொன்னது.
“கடலா? அப்படி ஒன்று இருக்கிறதா  ? அப்படியென்றால் என்ன?”  கடலைப் பற்றிக் கேட்டது கிணற்று ஆமை .
“அங்குநிறை.....ய நீர் இருக்கும்” –
“அப்படியா? இதில் கூடத்தான் நிறைய நீர் இருக்கிறது . என் கிணற்றைப் பார்த்தாயா? இவ்வளவு ஆழம் இருக்குமா உன் கடல் ?”  --
இந்த இரண்டு ஆமைகளும் இப்படி விடாமல் பேசிக் கொண்டிருந்ததை ஒரு தவளை கேட்டுக் கொண்டிருந்தது.
“இந்த ஆமையை ஏன் கேட்கிறாய் ? நான் பல நீர் நிலைகளுக்குப் போயிருக்கிறேன் , ஆனால் இந்தக் கிணற்றில் உள்ள ஆழத்தைப் போல் நான் எங்குமே கண்டதில்லை “  முந்திரிக் கொட்டை போல் கிணற்றுத் தவளை தனக்குத் தெரிந்ததை , அதனிடம் யாருமே கேட்கா விட்டாலும் சொன்னது . 
    கிணற்றுத் தவளையும் , ஆமையும் கூட்டுச் சேர்ந்ததைக் கண்டு கடல் ஆமை சும்மாவிடுமா? அதுவும் தன் பங்குக்குக் கடலைப் பற்றிப் பெருமையாகக் கூறியது.
“கடல் எவ்வளவோ பெரியது . அதற்கு ஒருபக்கம் தான்கரை . மறு கரையை நான் பார்த்ததே இல்லை . அதன் ஆழத்தை அளவிடவே முடியாது “ 
கிணற்று ஆமை அதை நம்பவில்லை ,” நீ பொய் சொல்கிறாய் ! கரை இல்லாமல் தண்ணீர் எங்காவது நிற்குமா?   ஆழம் தெரியாமல் ஒரு கிணறு இருக்குமா?” கடலையும் கிணறு என்று நினைத்து இப்படிக் கூறியது அந்தக் கிணற்று ஆமை . இரண்டும் ஒன்று தான் அதற்கு.
“உங்களுக்குச் சொன்னால் புரியாது . கிணற்றுக்கும் கடலுக்கும் நெடுந்தூரம் “ --- கடல் ஆமை கூறியது. 
ஆனால் கிணற்று ஆமைகடல் ஆமையின் கூற்றை நம்பாமல் இதெல்லாம் சுத்தப் பொய் என்று சொல்லிக் கொண்டே இருந்தது . அதனால் கடல் ஆமை இவைகளுக்குக் கடலைப் பற்றிச் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை,  என்று மேலும் பேசாமல் இருந்து விட்டது.
“இவ்வளவு தானா கதை ? – நானும் சொல்கிறேன் . நீங்கள் தேவனைப் பற்றிச் சொல்வதெல்லாம் பொய் என்று “ என்று கிணற்று ஆமை போல் கூறிக் கொண் டேஇருந்தார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நினைவூட்டும் படியாக அப்பர்ஸ்வாமிகள் ஐந்தாம் திருமுறையில் நூறாவது பதிகமாகிய திருக்குறுந்தொகையில் ஐந்தாம் பாடல் பாடியிருக்கிறார் …
    கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
    கூவலோடு ஒக்கு மோகடல் என்றல் போல்
    பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால்
    தேவதேவன் சிவன் பெருந்தன்மையே -----

பொருள் ---- கிணற்றிலுள்ள ஆமை , ஒலிக்கின்ற கடலில் உள்ள ஆமையை ,” கிணற்றோடு ஒக்கு மோகடல்?” என்று கடலின் பெருமையை அறியாமல் கேட்பது போல் , பாவம் செய்தவர்கள் தேவதேவனாகிய சிவபெருமானுடைய சிறந்த அருட்குணத்தை நேரேகாண அரியது என்று சொல்வார்கள்.
கருத்து --- தனக்குத் தெரியாத ஒன்றை இல்லை என்று சொல்லும் இயல்பு ஆமைக்கும் , பாவகாரிகளுக்கும் பொதுவாகும் .
 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை