logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-iruvakaikkanakku

இருவகைக் கணக்கு

திருமுறைக்கதை

உமாபாலசுப்ரமணியன்


          அது ஒரு பெரிய கிராமம். அங்கு ஏழைகள் பலர் நிறைந்திருந்தார்கள். ஆனால் ஏழையாக இருந்தாலும் சிலரைக் கண்டால் உழைப்பில் சலிக்காத உழைப்பாளிகள்போல் காணப்பட்டனர். அந்த ஊரில் வசித்துவந்த செல்வந்தர். ஒருவர் அவர்களைக் கண்டவுடன், அவர்களுக்கு ஏதாவது வேலை கொடுத்து, உழைப்பு என்னும் செல்வத்தைப் பயன்படுத்தி அதற்கு ஏற்ற கூலியையும் வழங்கி அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்ற நல்ல எண்ணம் கொண்டார். அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்ததால், அவர்களுக்கு ஏற்ற எளிமையான வேலையாகக் கொடுத்தால் ஊன்றிச் செய்வார்கள் எனக்கருதி, என்ன செய்யலாம் எனப்பல நாட்கள் யோசனை செய்து, கடைசியில் கிடைத்தது ஒருமுடிவு.

 

          உட்கார்ந்து கொண்டே செய்யும் வேலையாக இருந்தால் இன்னும் ஊக்கத்துடன் அவ்வேலையைச் செய்வார்கள் எனநினைத்து, நன்றாகத் திட்டமிட்டு, பஞ்சு வாங்கினார். பிறகு ராட்டினம், பஞ்சு அரைக்கும் மணை போன்ற பொருட்களையும் வாங்கிக் குவித்துக் கொண்டார்.

 

          ஏழைகள் குடியிருப்பிற்குச் சென்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருராட்டினம் கொடுத்து , பஞ்சும் , மற்ற பொருட்களையும் கொடுத்து எவ்வாறு பஞ்சை சுத்தப்படுத்தி , இராட்டினத்தைச் சுற்றி நூல் இழைக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார்.

            “ பெருமக்களே ! நான் இதை எதற்காக உங்களுக்குக் கற்றுக் கொடுத்து , அதற்கு வேண்டிய பொருட்களையும் கொடுக்கிறேன் தெரியுமா? நான் கொடுத்த பொருட்களை நீங்கள் நன்கு பயன்படுத்தி , நூல்நூற்று , வாரத்திற்கு ஒருமுறை என்னிடம் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் . அதற்கு ஈடாக நீங்கள் செய்த வேலைக்கு ஏற்றார் போல் , உங்களுக் கெல்லாம் கூலி தருவதற்கு ஏற்பாடும் செய்துள்ளேன்.  புரிந்ததா?” என்று பொறுமையுடன் அவர்களுக்கு விளக்கி விட்டு வீடு திரும்பினார்.

            பஞ்சு வாங்குவது , மற்ற பொருட்கள் வாங்குவது , அவைகளை ஏழைகளுக்குக் கொடுப்பது , அவர்கள் கொண்டு வந்த நூலுக்குக் கணக்கு எழுதுவது போன்ற வேலைகளைச் செய்ய ஒருகணக்குப் பிள்ளையை நியமித்தார்.

            ஏழை மக்களும் செல்வந்தர் சொன்னபடியே , பஞ்சிலிருந்து கொட்டையை நீக்கி , வில்லால் அடித்து , பின்பு பட்டை போட்டு நூற்றார்கள். அவர்கள் யாவரும் வீணேபொழுதைப் போக்காது கிடைத்த நேரத்தில் வேலைகளைச் செய்து நூல்நூற்று , வாரந்தோறும் கணக்குப்பிள்ளையிடம் கொண்டு வந்து கொடுத்தனர். அதற்கு ஈடாகச் செல்வந்தர் சொல்லியபடி கணக்குப்பிள்ளை அவர்களுக்குக் கூலி வழங்கினார் . இவ்வாறு சில ஏழை மக்கள் கணக்கில், சிறிது சிறிதாகக் கூலிப் பணம் ஏறிக்கொண்டே வந்தது. அவைகளைச் சேர்த்து வைத்துத் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

            ஆனால் வேறு ஒரு சாராரோ ராட்டினத்தை வாங்கிச் சென்றதுதான் , அதற்குப் பிறகு அவர்களிட மிருந்து ஒருத கவலும் இல்லை . கணக்குப் பிள்ளையிடம் வாங்கிய பஞ்சைக் காற்றிலே பறக்கவிட்டு அக்கடா என்றிருந்தார்கள். வீணே அரட்டையடித்தார்களே தவிர ராட்டினத்தைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை . அதைப் புறக்கணித்து மூலையில் போட்டு விட்டனர்.. சிலந்திக்கு ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. சோம்பேறிகள் தான் நூல்நூற்கவில்லையே என்று எண்ணி ,  ராட்டினத்தின் மேல் சிலந்தி நூல்நூற்று வலை பின்னிச் சுகமாக இருந்தது.

            செல்வந்தர் வீட்டில் ஒவ்வொருநாளும் கணக்கு எழுதி வந்த கணக்குப்பிள்ளை தன் எஜமானரிடம் , யார் அதிகமாக நூல்நூற்றார்களோ அவர்களைப் பற்றி விவரமாகச் சொல்வார். அப்படியே பஞ்சும் , ராட்டினமும் தங்கள் இல்லத்திற்கு வாங்கிக் கொண்டு போயும் நூல்நூற்காது சோம்பித் திரிபவர்கள் பற்றியும் விளக்கமாக அவருக்கு எடுத்துரைத்தார்.

            எஜமானனுக்கு அந்த மற்ற ஏழைகளின் சோம்பல் குணத்தைக் கேட்டுக் கோபம் தான் வந்தது.

“அவர்களுக் குராட்டினம் கொடுத்தது என் பிசகுதான் . இனி மண் வெட்டியைக் கொடுத்துக் கூடவே இருந்து அவர்களைக் கடுமையாக வேலை வாங்க வேண்டும். அதனால் நீங்கள் மண் வெட்டி வாங்கி வாரும்! , அவர்களுக்குக் கொடுத்து வேலை செய்யச் சொல்லலாம் ” என்று கணக்குப் பிள்ளையிடம் கூறினார்.அப்படியே கணக்குப் பிள்ளையும் ஏற்பாடு செய்தார்.

            நூல் நூற்கிறவர்கள் , சும்மா இருந்தவர்கள் ஆகிய இரண்டு வகையானவர்களின் கணக்கும் ,  கணக்கர் மூலமாக அந்தச் செல்வந்தரை அடைந்தது. அந்தக் கணக்கைச் செல்வந்தர் எழுதச் செய்தார் . அவரவர்கள் தாங்கள் நூற்றநூலைக் கொடுத்தால் ,  அவரவர்கள் கணக்கிலே அதன் அளவுதானே பதிவாகிவிடும் . அப்படி ஒரு கருவி வைத்திருந்தார் .  யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. அதனால் வேலை செய்தவர்கள் கணக்கும் , சோம்பேறிகளின் கணக்கும் அவரிடம் அகப்பட்டிருந்தன.   நன்கு வேலை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியும் , வேலை செய்யாதவர்களுக்குத் துன்பமும் கிடைத்தன.

தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு

காலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டிகை நாற்றி

நரம்பால் ஆர்க்கையிட்டு தசை கொண்டு மேய்ந்து ---( கந்தர்அலங்காரம் )

வந்தது இந்த உடம்பு.

உலகத்தில் உள்ள பிராணிகள் யாவற்றிற்கும் எவ்வாறு உடல் அமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு அழகாக வகுத்துத் தந்திருக்கிறான் இறைவன் . அதுவும் ஏழறிவு படைத்த மனிதன் , தன்னைத் தொழுது அன்பாகிய செல்வத்தை ஈட்டிக் கொள்ள வேண்டும் என்று தநு, கரணம்புவனம், போகம் ஆகியவற்றையும் நல்கியிருக்கிறான். அவன் பட்சபாதம் இன்றி யாவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் அளித்திருக்கிறான். ஆனால் அதைப்பெற்றுக் கொண்டயாவரும் இறைவன் விருப்பத்திற்கு ஏற்றார்போல் செயல்படுகின்றனரா? அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எல்லோருமே அன்புச் செல்வத்தை ஈட்டுவதில்லை என்றே சொல்லலாம்.

ஆனால் சிலர் இறைவன் முன்பு சென்று , ஐம்புலன்களையும் இறைவன் வழிபாட்டில் ஈடுபடுத்துகின்றனர் .

எளிய நற்றீபம் இடல் மலர் கொய்தல்

அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்

பளி பணிபற்றல் பன் மஞ்சனமாதி

தளிதொழில் செய்வது தான் தாசமார்க்கமே.----- திருமந்திரம்

           

திருக்கோயிலில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்து கொடுத்தல், தொடுத்துக் கொடுத்தல், அலகிடல் மெழுகல், துதிபாடல், ஊர்தி சுமத்தல், பல வகைத் திருமஞ்சனப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்தல் முதலிய எளிய பணிகளைச் செய்தல், தாசமார்க்கம், தொண்டர் நெறியாகும். இவ்வாறு தாசமார்க்கத்தில் ஈடுபடாது இருந்தாலும் இறைவன் நமக்குக் கொடுத்த உறுப்புக்களை உபயோகித்து அவனை நினையலாமே!

 

 

தலையே நீவணங்காய் - தலை

மாலை தலைக் கணிந்து

தலையாலே பலி தேருந் தலைவனைத்

தலையே நீ வணங்காய். ---

கண்காள் காண்மின்களோ - கடல்

நஞ்சுண்டகண்டன் றன்னை

எண்டோள் வீசிநின்றாடும் பிரான்றன்னைக்

கண்காள் காண்மின்களோ.------

செவிகாள் கேண்மின்களோ - சிவன்

எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதும்

செவிகாள் கேண்மின்களோ.-----

மூக்கே நீ முரலாய் - முது

காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை

மூக்கே நீ முரலாய்.--------

வாயே வாழ்த்து கண்டாய் - மத

யானையுரி போர்த்துப்

பேய் வாழ்காட்டகத்தாடும் பிரான்றன்னை

வாயே வாழ்த்துகண்டாய்.------

 

நெஞ்சே நீநினையாய் - நிமிர்

புன்சடை நின்மலனை

மஞ்சாடும் மலை மங்கை மணாளனை

நெஞ்சே நீ நினையாய்.. -------

கைகாள்கூப்பித் தொழீர் - கடி

மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

கைகாள் கூப்பித் தொழீர்.--------

தலையே நீ வணங்கு;

தலைக்குத் தலை மாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. கண்களே! கடல் விஷத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக்கொண்டு நின்ற நிலையில் ஆடும் எம்பெருமானை நீங்கள் காணுங்கள். செவிகளே!  சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய், செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள்.  மூக்கே! சுடு காட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல்வடிவமாய் இருக்கும் பார்வதிகேள்வனை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.  வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக. நெஞ்சே! மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக. கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக்கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக.

 

நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் திருஅங்கமாலையில் இவ்வாறு பாடியிருக்கிறார்.

 

ஆக்கையாற்பயனென் - அரன்

கோயில் வலம் வந்து

பூக்கையாலட்டிப் போற்றி யென்னாத இவ்

ஆக்கையாற் பயனென்.

எம்பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றிவந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்?

திருநாவுக்கரசர் சொல்வது போல் சில அன்பர்கள் இறைவன் முன்பு சென்று அவன் கொடுத்த உடம்பை வைத்துக் கொண்டு,   கையினால் தொழுதும் கீழே விழுந்து வணங்கியும் , தூய்மையான மலர்களைக் கொண்டு அருச்சித்தும் ,அவனுடைய புகழை வாயாரப் பாடியும் அன்பு செய்கின்றனர்.  அவர்கள் முதலில் இறைவனைத் தொழுகிறார்கள். பிறகு தூமலர் தூவுகின்றனர். பின் புகழ்பாடித் துதிக்கின்றனர். அந்தத் துதியினூடே உள்ளம்நைந்து அழுகின்றனர். அழ அழ அவர்களுக்கு ஈசன் மேல் இருக்கும் அன்பு முறுகுகிறது. புலம்புகிறார்கள் அரற்றுகிறார்கள். இப்படியாக அவர்களுடைய அன்பு நாளுக்கு நாள் முதிர்ச்சியடைகிறது. 

நாட்கள் செல்லச் செல்ல தம்முடைய வாழ் நாட்களை முழுமையாக்கு வதற்காக இறைவன் பால் செலுத்தி ,அந்தவழியிலேயே போகும் கூட்டத்தார் ஒருவகை .

 

மற்றொருவகைக் கூட்டத்தாரும் உண்டு . அவர்கள் ஏதோதோ வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவைகளெல்லாம் வேலையா? அவர்கள் செய்வதெல்லாம் பயனுள்ள செயல் அல்லாது வெறும் பொழுதைப்போக்கும் செயல் என்றே சொல்லலாம். இறைவன் எதற்காக உடம்பு முதலியவற்றைத்தந்தானோ , அந்தக் காரியத்தைச் செய்யாமல் வீண்பொழுது போக்கித் தம்முடைய கடமையைப் புறக்கணிப்பவர்கள் ஒருசாரார்.

எவ்வாறு ஏழைகளின் நூற் கணக்கை கணக்குப் பிள்ளை எழுதினாரோ அவ்வாறே , மேற்கண்ட இரண்டு சாரார்களுடைய கணக்கையும் இறைவன் எழுதி வைத்துக் கொள்கிறான். நாம் செய்வது நமக்கே தெரியா விட்டாலும் அது ஆண்டவனுக்குத் தெரியும் . எவ்வாறு செல்வந்தர் , ஏழைகளின் கணக்கைத்தானே பதிவு செய்யும் கருவி வைத்திருந்தாரோ , அவ்வாறே இறைவனுடைய ஆணையினாலே நம்வினை ஒவ்வொன்றும் தானே பதிவாகிவிடுகிறது.

 

ஈசன் எழுதும் இந்தச் சின்னக்கணக்கில் ., நாம் எந்தக் கணக்கில் சேர வேண்டும் என்று உறுதியாக இருத்தல் வேண்டும் . நாம் நல்ல கூலி வாங்குவதற்குரிய கூட்டத்தோடு அல்லவா சேரவேண்டும் ?   அவனை நினைந்து தொழுது , தூமலர் தூவித் துதித்து , அழுது காமுற்று அரற்றி நிற்பவர் கூட்டத்திலே சேர்ந்தால் இறைவன்

“இவன் நாம் தந்ததைத் தக்கவண்ணம் பயன்படுத்தி உழைத்தான் . இவனுக்கு நல்ல கூலி கொடுக்க வேண்டும் “ என்று திருவுள்ளம் கொள்வான் . இல்லையேல்?---

நினைக்கவே பயமாக இருக்கிறதே !

 

அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி

உன்னுவர் உள்மகிழ்ந் (து)  உள்நின்றடி தொழக்

கண்ணவன் என்று கருதுமவர்கட்குப்

பண்ணவன் பேரன்பு பற்றி நின்றானே.    ---திருமந்திரம்

. சிவனைத் தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லி உளம்மகிழ்ந்து போற்றித் தியானிப்பர். அவர் அவன்பாலே நின்று அங்ஙனம் செய்யினும் அவன் தன்னைத் தமக்குக் கண்போலச் சிறந்தவன் எனக்கருதி, அன்பும், ஆர்வமும் கொண்டு வழிபடுகின்ற அடியவரது உள்ளத்தில் நீங்காது நின்று, அவர்கள் பாலே பேரருள் உடையவனாகின்றான்.

 

இறைவனுக்கு இது சின்னக்கணக்குதான் , கீழ்க்கணக்கு. ஆனால் நமக்கோ அதுதலையின் மேல் உள்ள பெரியகணக்கு மேற்கணக்கு. –

இறைவன் எழுதும் இந்தச் சின்னக்கணக்கைப் பற்றி திருநாவுக்கரசர் சொல்கிறார்

 

தொழுது தூமலர் தூவித்து தித்து நின்

றழுது காமுற்றரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதுங் கீழ்க்கணக்கின்னம்பரீசனே -------

பொருள்---

தன்னைத் தொழுது தூமலர் தூவிஅருச்சித்து துதிகளைச் சொல்லி நின்று அன்பு மீதூர்ந்தமையால் அழுதுதன்பால் இடையறாத விருப்பத்தைப் பெற்றுப் புலம்பி நைந்து போகின்றவர்களையும் , வீணே பொழுது போக்கித் தாம் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக் கணிப்பவர்களையும் அவரவர்கள் செயலோடு வேறு வேறாகப் பிரித்துச் சிறுகணக்காக இன்னம் பரிலே எழுந்தருளியிருக்கும் இறைவன் எழுதுவான் .

தொழுதலும் , மலர் தூவலும் உடம்பின் செயல் ; வாயாரத் துதித்தல் வாக்கின் செய்கை; காமுறுதல் மனத்தின் செய்கை .

இங்கு கீழ்க்கணக்கு என்று சொல்கிறார் . பதினெண் கீழ்கணக்கு என்ற பெயர் தமிழ் நூல்களில் ஒருவரிசைக்கு வழங்குகிறது அங்கே கணக்கு என்பது நூலைக் குறிக்கும் . இங்கே கணக்கு என்பது புள்ளிக் கணக்கையே குறிக்கும் .

இன்னம்பர் என்ற தலம் சோழநாட்டில் கும்பகோணத்திற்கு மேற்கே இருக்கிறது. இங்குள்ள இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்று பெயர் . அந்தத் திருநாமத்தை நினைவு கூறுவதற்காக ,  அப்பர்சுவாமிகள் ,” இவர் அவரவர்கள் செயற்கணக்கை எழுதவும் அறிந்தவர் “ என்று இந்தப் பாசுரத்தில் கூறுகிறார்.

இந்தப் பதிகம் ஐந்தாம் திருமுறையில்  21 ஆம் பதிகத்தின் எட்டாவது பாடலாகும்.

 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை