logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-ippothaikku-mazhaivendam

இப்போதைக்கு மழைவேண்டாம்!

திருமுறைக் கதை

        உமாபாலசுப்ரமணியன்


“மழைவேண்டாம் ” என்று அவர்கள் சொன்னார்கள். “ இப்படியும் சொல்வார்கள் உண்டோ ?”  என்று நமக்குத் தோன்றுகிறது . எத்தனையோ காலமாக மழையைக் காணாமல் பஞ்சத்தில் அடிபட்ட நமக்கு “ வருமா! , வருமா!” என்ற ஏக்கம் இருப்பதுதான் இயற்கை. ஆனால் நமக்கு வேண்டிய மழை பெய்து,  அதற்கு மேலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டி , ஆற்றில் வெள்ளம் , ஏரியில் உடைப்பு , குளங்களில் கரைகள் உடைப்பு , வீடுகளில் நீர் , எங்கும் வெள்ளம் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால் ,“ மழையே மழையே வாவா!  ” என்றா பாடுவோம் ?  “கடவுளே! இப்போதைக்கு மழை வேண்டாம் !” என்று தானே சொல்வோம் .
    மழை பெய்யாமலும் கெடுக்கும் ; பெய்தும் கெடுக்கும் . அளவுக்கு மிஞ்சிப் போகும் எதனாலும் துன்பம் விளைவது தான் இயற்கை . குறைந்த மழையை அநாவிரிஷ்டி என்றும் , மிகுபெயலை , அதிவிருஷ்டி என்றும் சொல்வார்கள். இரண்டினாலும் யாவருக்கும் துன்பம் உண்டாகும்
    மழை இல்லாமையால் “ மழை வேண்டும் ” என்று . பழனியைச் சார்ந்த இடங்களில் வாழ்ந்த குறிஞ்சி நில மக்களாகிய குறவர்கள் ஆவினன் குடிமுருகனுக்குப் பூசை போட்டார்கள். முருகனும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி திருவருள் செய்தான் . மழை பெய்தது.  எப்படிப் பெய்தது ?  அது அளவுக்கு மிஞ்சிவிட்டது. ஆகவே மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து , “ கடவுளே! எங்களுக்கு , பெய்த மழை போதும் !. இந்த மேகங்கள் கீழே வந்து , எங்களுக்காகக் கொட்டியது போதும் . இனி மேகங்கள் மேலே  போக ஏதாவது செய் ! ” என்று மறுபடியும் முருகனுக்குப் பூசை போட்டார்கள். மழை நின்றது,  அவர்களுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. நன்றி தெரிவிக்கும் வகையாகத் தாங்கள் விளைத்த தினையைச் சமைத்து, முருகனுக்குப் பொங்கலிட்டு விருந்துண்டுகளிக் கூத்தாடினார்கள்.  இதைப் புறநானூறு என்ற நூலில் கபிலர் என்ற புலவர் ஒருபாட்டில் சொல்கிறார். 
மலைவான் கொள்கென உயர் பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்கென
கடவுட் பேணிய குறவர்மாக்கள்
பெயல் கண்மாறிய உவகையர்,சாரற்
புனத்தினை அயிலும் நாட  ------
‘மலையில் மேகங்கள் வந்து சூழட்டும் என்று கடவுளுக்கு உயர்ந்த பூசனைப் பொருளைத் தூவி   (வழிபட்டார்கள் )  அப்பால் ( மழைமிகுதியாகப்பொழிந்தமையால் ) மழைநின்று மேகம் மேலே போகட்டும் என்று கடவுளை வழிபட்ட குறவர்கள் , மழை மாறி விட்டதனால் மகிழ்ச்சியடைந்து மலைச்சாரலிலே உள்ள புனத்தில் விளைந்த தினைச் சோற்றை உண்ணும் நாடனே’ என்பதாக உடையது இதன் பொருள். 
இதே மாதிரி வேறு ஒரு நிகழ்ச்சியைச் சுந்தரமூர்த்திசுவாமிகள் பாடிய தேவாரப் பாடலிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் . 
சோழ நாட்டில் திருப்புன் கூர் என்பது ஒரு தலம் . நாடு முழுவதும் மழையில்லாமல் மக்கள் வாடினர் . அப்போது திருப்புன் கூரிலுள்ள அன்பர்கள் சிலர் ஆலயத்துக்குச் சென்று ,சிவபெருமானிடம் ஒரு பிரார்த்தனை செய்து முறையிட்டுக் கொண்டார்கள். 
“கடவுளே!  உலகம் முழுவதும் மழை மறைந்து நீரற்றுப் போயிற்று. வயலில் நீரில்லை. அதனால் மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். மழை பெய்யச் செய்து நாங்கள் உய்யும்படி திருவருள் பாலிக்க வேண்டும்! . தேவரீருக்குப் பன்னிருவேலி நிலத்தை எழுதிவைக்கிறோம்! “ என்று வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் வேண்டுதலுக்கு இறைவன் செவிசாய்த்தான் . அவன் அருளால் மழை பெய்யத் தொடங்கியது. சொல்லியபடியே ஊரார் , சிவபிரானுக்கு பன்னிரண்டு வேலி நிலத்தை எழுதி வைத்தார்கள். 
    எந்த முறையுமே பார்த்திராத அளவுக்கு மழைவிடாமல் பெய்தது. அதனால் எங்கும் வெள்ளம் பரந்தது.  ‘இனி மழை பெய்தால் நாடு முழுதும் நாசமாகும் ’ என்ற நிலை உருவாயிற்று . அச்சமடைந்த அன்பர்கள் மறுபடியும் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனிடம் வேண்டி நின்றனர். 
“திருப்புன்கூர் பெருமானே! உன்னுடைய அளவிலாப் பெரும் கருணையால் மழை பெய்தது போதும்! . இனி மேல் மழை வேண்டாம் ! மழை நின்றால் மறுபடியும் பன்னிரு வேலி நிலம் உமக்குத் தந்து விடுகிறோம் ” என்று மீண்டும் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.     
    மறுபடியும் இறைவன் கருணையினால் மழை நின்றது. ஊரார்கள் பன்னிரண்டு வேலி நிலத்தை ஆலயத்துக்கு எழுதிவைத்தார்கள். இரண்டு முறை பன்னிரு வேலி நிலத்தை வாங்குவதில் இறைவன் சித்தம் கொண்டான் போலும்!  இந்த நிகழ்ச்சியைப் பின்வரும் தேவாரத் திருப்பாட்டினால் உணரலாம் .  

வையகம் முற்றும் மா மழை மறைந்து
வயலில் நீர் இலை மா நிலம் தருகோம்
உய்யக்கொள்க மற்றெங்களை என்ன
ஒளி கொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி ஆய்ந்தேன்
செழும் பொழில் திருப்புங்கூர் உளானே !
“திருப்புன்கூரில் உள்ள சிவபெருமானே ! உலக முழுவதும் பெரியமழை மறந்து வயலில் நீர்இல்லை . உனக்குப் பெரிய நிலத்தைத் தருவோம் . எங்களை உய்யும் படி செய்ய வேண்டும் ’ என்று வேண்ட ,ஒளியையுடைய வெள்ளை முகிலாகப் பரந்து ( கறுத்துப்) பெற்ற பெருமழையால் உண்டான பெரிய வெள்ளத்தை மாற்றி , மறுபடியும் பன்னிரண்டு வேலி நிலம் கொண்டருளிய அருட்செய்கையைக் கண்டு , ( நீ வேண்டுவார் வேண்டியவண்ணம் அருளும் பெருந்தகை என்பதை உணர்ந்து ) நின் திருவடியைப் புகலாக அடைந்தேன் ” என்பது பொருள் . 
    முன்னே பார்த்தது கொங்கு நாட்டுக்கதை . அதைப் பாடியவர் கபிலர். பின்னே சொன்னது சோழநாட்டுக் கதை. அதைப் பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார்.   
    கங்கா குலத்தவர் என்பவர்கள் கொங்கு நாட்டில் வசிப்பவர்கள் ஒருமுறை அவர்கள் சொற்கிணங்க கவிப்புலவர் கம்பர்  “ கன்னியழிந்தனள்” என்ற பாடலைப் பாடினார் . அதன் விரிவான நிகழ்ச்சியை இப்பொழுது பார்க்கலாம் .                 
கன்னியழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந்தாளெனு நிந்தை புவியிலுளோர்
பன்னியிகழாத மரெனக்கம் பரோர்பாச் சொலச் செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ் கொங்கு மண்டலமே.-------

    குலோத்துங்க சோழன் காலத்தில் ஒருமுறை காவேரி நதி நீர் பெருக்குற்று வெள்ளம் மிகுதியாகி கரைகடந்தது. இதனால் அந்நதியின் கரையின் இருபக்கங்களிலும் உள்ள நிலம் , ஊர் முதலியன வெல்லாம் அழியும் படியான சூழ்நிலை உருவாயிற்று. அதனால் அரசன் அதிகாரிகளையும் , முக்கிய குடிகளையும் அரசவைக்கு வருவித்துப் பெரும் ஆலோசனை செய்தான். யாவரும் குடிமக்களுடன் கூடிக் கரைகட்டத் தீர்மானித்து அதன்படி செய்தனர். இரு மருங்கிலும் கரைகட்டியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது நிற்கவில்லை. என்ன செய்வது என்று யாவரும் விழித்திருக்கும் சமயத்தில், குடிகளாகிய வேளாளர்கள் அரசனை நோக்கி ,
”ஐயா, நாங்கள் ஒன்று சொல்கிறோம் . கம்பர் என்ற புலவர் தெய்வீகம் வாய்ந்தவர். அவர் கூடியிருக்கும் நிலைக்குத் தகுந்தாற் போல் பாடி,  அவையாவும் வெற்றியைத் தந்திருக்கின்றன . அதனால் தெய்விகப் புலமைவாய்ந்த கம்பர் பாடினால் ஒருவேளை கரை நிற்கும் என்பது எங்கள் கருத்து” என்றார்கள்.
முற் காலத்தில் சில சமயங்களில் காவேரியாற்றில் பெருவெள்ளம் வந்துவிடும் . அப்படி கட்டுக் கடங்காத வெள்ளம் வந்தால் அதைக் கட்டுப் படுத்துவதற்கு வேண்டியவைகளைச் செய்வதற்காக, அரசன் ஆணையை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று அறிந்தமக்கள் அந்த அந்த ஊரில் உள்ள வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு , ஒன்று திரண்டு வந்து கரையை வலியுறுத்தத் தொடங்குவார்கள். 
ஆனால் இச்சமயம் மனிதனின் முயற்சிக்கு அடங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் , தங்கள் மேல் நம்பிக்கையில்லாது , கடவுளிடம் முறையிட எண்ணினர்.
அந்தச் சமயத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் , கொங்கு நாட்டுப் பகுதியில் உள்ள ஊர்களைப் பார்வையிட்டுக் கொண்டும் , அங்கு வசித்து வந்த புலவர் பரம்பரைகளைக் கண்டு அளவளாவியும்  , மற்றும் வள்ளல் பெருமான்களைத் தரிசித்தும் வந்து கொண்டிருந்தார்.
இவ்வாறு அவர் சென்று கொண்டிருந்த பொழுது தான் திடீரென்று காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.
    உடனே, வேளாளர்கள் சொற்படி , அரசனும் குடிகளும்  மகாகவியாகிய கம்பரைச் சந்திக்க, அவர் வசிக்கும் இடம் சென்றனர்.
    அப்போது அருகில் இருந்த கொங்கு நாட்டுத் தலைவர் ஒருவர் புலவர் அருகில் வந்து , யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவர் காலடியில் விழுந்து , எழுந்து , “ வெள்ளம் கட்டுக் கடங்காமல் போகிறது . அப்படியானால் இந்தப் பகுதியில் உள்ளகரை நெடுந்தூரம் உடைந்துவிடும். அப்படி உடைந்து விட்டால் இதைச் சுற்றியுள்ள பகுதிகளும்,  இதன் பின் உள்ள சோழ நாட்டின் பகுதிகளும் வெள்ளக் காடாக ஆகிவிடும் . ஓரிடத்தில் ஒரு சிறிய உடைப்பு எடுத்தாலும் போதும், பெரிய ஆபத்துதான். மக்கள் நிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. என்று கூறினார். 
மேலும் தொடர்ந்தார் .  
 “  மனிதர்களால் செய்ய முடியாததை இறைவன் செய்யலாமே ! இறைவன்தான் திருவுள்ளம் இரங்கி வெள்ளத்தை மட்டுப்படுத்த வேண்டும் . ஆனால் அந்த இறைவனை நாங்கள் கண்டறியோம்!. இப்போது தங்கள்வரவால் நாங்கள் பேறு பெற்றோம் . தாங்கள் அருள்வாக்கு உடையவராதலால் தங்கள் திருவாக்கால் ஒரு கவிபாடி அன்னையின் சீற்றத்தைத் தணிக்க வேண்டுகிறோம். மழையும் குறைந்து , வெள்ளமும் பெருகாது தடுக்க வேண்டும்”என்று கூறி மீண்டும் அவர் திருவடியை வணங்கினார் . அவ்வாறே கூடியிருந்தமக்களும் கீழே வீழ்ந்து வணங்கினர்.  
    கவலை நிறைந்த உள்ளங்களின் அன்பை நினைந்து இறைவன் இவர்களுடைய வேண்டுகோளைப் புறக்கணிக்க மாட்டார் என்ற நம்பிக்கை எழுந்தது கம்பருக்கு
    “ கன்னி அழிந்தனள் , கங்கை திறம்பினள்
    பொன்னிகரை அழிந்து போயினள் ” என்று--- இந்நீர்
    உரைகிடக்கலாமோ? உலகுடைய தாயே!
    கரைகடக் கலாகாது காண் “ ------ 
“கன்னியாகிய பெருமாட்டி தன் வரம்பை மீறினாள். கங்காதேவி தன் போக்கினின்றும் மாறினாள். காவிரித் தாய்கரை அழிந்து போனாள்.” --- என்று இந்த நீர் மையை உடைய வார்த்தை உன் திறத்தில் நிலை பெறலாமோ? உலகை யெல்லாம் பாதுகாக்கும் தாயே ! இத்தகைய பழிச் சொல்வராவண்ணம் நீ அருள் செய்யவேண்டும் . நீ இந்தக் கரையைக் கடப்பது முறையன்று .” --- கம்பன் மனமுருகிப் பாடிய பாடலின் பொருள் இது.
என்னே அதிசயம் !   மழை மிதமாகி , நதிப்பெருக்கு அடங்கியது, 
பெருமகிழ்வுற்ற அரசனும் குடிகளும். “ கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் அழியாது ஆற்றுப் பெருக்கை அடங்கச் செய்த பேருபகாரத்துக்கு நாங்கள் யாது கைம்மாறு செய்யவல்லோம் ? ; ஆயினும் தாங்கள் ஏது விரும்பினும் உதவத்தயாராக இருக்கின்றோம் .  தயை கூர்ந்து தெரிவித்தால் மிகவும் நலமாக இருக்கும் ”என்றார்கள். 
கம்பர் உடனே புன்னகை புரிந்தார் . 
அப்பொழுது அருகிலிருந்த கொங்குநாட்டைச் சேர்ந்த ஒருவர் , “ அரசே! எங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் போது அரசாங்கத்துக்கு கல்யாணவரி செலுத்தி வருகிறோமே ! அந்த வரியை இனி கவிச்சக்கரவர்த்திக்குச் செலுத்தலாமே! ” என்றார். அரசனும் குடிமக்களின் ஒப்புதலுடன் அதற்கு இசைந்தார் . 

உடனே கம்பரும்  “ இப்பொழுது நிகழ்ந்த நிகழ்ச்சியானது என் வல்லமையால் நிகழ்ந்தது அன்று. தெய்வத் தமிழால் தான் நடந்தது ஆதலின் இக்கலியாணவரியை அத்தமிழுக்கே உரிமையாக்குகின்றேன் ! ” என்றுரைத்தார். அரசனையும் குடிகளையும் பார்த்து,  
 “ அரசே, குடிகளே! இத்தமிழ் நாட்டுப் பழங்குடிகளான புலவர் கூட்டத்தார்கள் இக்கொங்கு நாட்டில் வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறார்கள். அரசர்களாலும் குடிகளாலும் ஆதரிக்கப்பட்டுத் தமிழை வளர்த்து வந்தார்கள். இப்பொழுது அவர்களின் செழிப்பு குறைந்து கொண்டு வருவதாகத் தோன்றுகிறது. ஆகையால் இக்கொங்கு நாட்டார் கலியாண காலத்தில் , மணமகன் மணமகளை அப்பழங்குடிகளான புலவர்கள் வாழ்த்துப்பாடி,  எனக்குக் கொடுத்த கலியாண வரியை அப்புலவர்களுக்குக் கொடுத்துப் புகழையும் பெருக்கத்தையும் அடையுமாறு செய்ய விரும்புகிறேன் ” என்றார்
அரசனும் குடிகளும் இப்பேருதவிக் குணத்தை வியந்து பாராட்டி
“அப்படியே ஆகுக !ஆகுக! ” என்றார்கள். கம்பர்வழிபாடி ஈட்டிய தொகையை அப்புலவர்களிடம் கொடுத்துவிட்டு , பின் , தலைமுறை தலைமுறையாகத் திருமணங்களில் வாழி கூறிவரிப்பணத்தைப் பெற்றுத் தமிழை வளர்த்து வருமாறு கூறினார் தன் கவிதையால்  வெள்ளத்தை நிறுத்தி , புலவர்களை உய்ய வைத்த கம்பர் பெருமான் . 
மாணிக்கவாசகரை சிறையில் அடைத்த பாண்டியனுக்கு , அப்பெரியாருடைய பெருமையை உணர்த்தும் வண்ணம் வைகையிலே பெருவெள்ளம் வரச்செய்து , பக்தையான கிழவி வந்தியின் பிட்டுக்கு மண் சுமந்து , பிரம்படி வாங்கி , வேலையாளாக வந்த சொக்கநாதர் ஒருகூடை மண் கொட்டி வைகையாற்றின் உடைப்பை அடைக்கவில்லையா? 
இறைவன் பக்தி செய்வார் மாட்டு அருள் செய்யக் காத்திருக்கிறான் ! 

இவ்வாறு புலவர்கள் பாடலைக் கேட்டு , இறைவனும் அவர்கள் பாடலுக்கு ஏற்ப அருள்புரிந்தார் என்று பார்க்கும் பொழுது புலவர்களின் தன்மையையும் இறைவனின் கருணையையும் பாராட்டாமல் இருக்க முடியாது . நாம் புலவர்களாக இல்லாவிட்டாலும் நல்ல மனிதர்களாக இருந்து கருமேகம் கூடி , வேண்டிய அளவு மழை பெய்து பயிர்கள் தழைத் தோங்கி , நாடு வளம் பெறவும்  ,  மழை மிஞ்சி வெள்ளமாகாது உயிர்கள் இயல்பு வாழ்க்கை வாழவும் அந்த இறைவன் மேல் நம்பிக்கை வைத்து வேண்டி நிற்போம் !  பருவத்தில் பெய்யும் மழையுடன் இறைவன் அருள் மழையையும் எதிர்நோக்குவோம்!
 

Related Content

கனிக்கும் கரும்புக்கும் எட்டா இனியவன்

பிள்ளையைத் தரச்சொல்

மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு

சுந்தரரின் வேண்டுகோள்

யாழ்மூரி பாடியது