logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-aavi-vaazhum-veedu

ஆவி வாழும் வீடு

திருமுறைக் கதை

உமாபாலசுப்ரமணியன்


                வீட்டிற்குள் வெகுநேரம் இருந்ததால் வியர்வை வழிந்து, சில்லென்ற காற்றுக்கு ஏங்கியது உடல். சரி ! வெளியே கடற்கரை சென்று காற்றை அநுபவிக்கலாம் என்றுபுறப்பட்டான் அவன்.

                கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்த பொழுது “ நண்பா! எங்கே வந்தாய்? ” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் . என்ன ஆச்சரியம் ! கூப்பிட்டது அவனுடன் பள்ளியில் படித்த தோழன் .

 “ என்னப்பா!  எவ்வளவு நாளாக ஆகிவிட்டது நாம் சந்தித்து. பள்ளி நாட்களில் கதைகள் சொல்வாயே ! ஏதாவது கதை சொல்லேன் !” என்று கேட்டான் கடற்கரைக்கு வந்தவன்.

                “ சொல்கிறேன் . இது கதையல்ல. கதை மாதிரி நிஜம் “ என்று சொல்லஆரம்பித்தான் நண்பன் .

                “ சின்ன வீட்டை எனக்குத் தெரிந்த ஒருவர் கட்டினார். மண்ணினால் அமைந்த சிறிய கூரை வீடு தான் , இருந்தாலும் மரம் ,மண் , தென்னங்கீற்று இந்த மூன்றையும் வைத்துக் கொண்டே அவர்வீட்டை அழகாகக் கட்டி முடித்துவிட்டார்.  அவர் கட்டிய வீட்டைச் சுற்றிப்பார்த்தால் பூமியிலே இது நிற்பதற்கும் , நிழல் தருவதற்கும் என்ன என்ன பொருள்கள் இருக்கின்றன என்பதைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம்.

                வீட்டின் கூரையைத் தாங்க முக்கியமாக இரண்டு கால்களை நட்டிருந்தார். இரண்டு பக்கங்களிலும் கைமரங்களை வைத்து அவற்றின் குறுக்கே வரிசையாகக் கோல்களைப் பரப்பியிருந்தார்.  அதன் பிறகு சுற்றிச் சுவர் எடுத்தார்.  அந்தச் சுவர் எதனால் ஆனது என்பது தெரியுமா? மண்ணையும்  , தண்ணீரையும் குழைத்துப் பூசிப்பதமாக அமைத்த சுவராகும் . பிறகு மேலே தென்னங்கீற்றால் கூரையை வேய்ந்தார்.

                இந்தச் சின்ன வீட்டிற்கு முன்வாசல் ஒன்றும்,  பின்வாசல் ஒன்றும் வைத்தார். .வீட்டிற்குள் காற்று வருவதற்காக ஏழு சன்னல்களை வைத்தார்.  பிறகு வீட்டை அழகு படுத்த வேண்டாமா ? வண்ணம் பூசிமேலும் அழகுசெய்தார்.  அதனைக்கட்டும்பொழுதுபார்த்தால்நன்றகவேஇல்லை . ஆனால்இப்பொழுது வீடு கட்டி முடிந்தவுடன் பார்த்தாலோ , ஆஹா! கண்ணைப் பறிக்கிறது . ஒரு குடியும் வைத்துவிட்டார் என்றால் பாரேன்! . கெட்டிக்காரர்தான் . நான் குடிபுகுந்தவரைச் சொல்லவில்லை , வீட்டைக் கட்டியவரைத் தான் சொல்கிறேன் “ என்று தான் காலையில் பார்த்து வந்த புதுவீட்டைப் பற்றிக் கதை அளந்தான் தோழன் .

                “ இது என்ன கதை? அங்கே மணலில் உட்காரலாம் வா!  இதே போன்று  .  நான் ஆன்மீகம் வழியாக உனக்கு ஒரு கருத்துள்ள கதை சொல்கிறேன் பார்!”  என்று தனக்குத் தெரிந்ததைத் தன் தோழனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி ஆரம்பித்தான் கடற்கரைக்கு வந்த நண்பன்.

“உனக்குத் தெரியுமா?   நீ கூறிய வீட்டைப் போன்று திருநாவுக்கரசரும் வீட்டைப் பற்றிச் சொல்கிறார். –

                அந்த வீட்டைக் கட்டினவர் ஒருவர்.  ஆனால் அதில் குடியிருப்பவரோ வேறொருவர். இருந்தாலும் குடியிருப்பவர் அந்த வீட்டைத் தம்முடையது என்று எண்ணி வீணாக ஏமாந்து போகிறார்.  எந்தச் சமயத்திலும் அந்த வீட்டில் குடியிருப்பவர் அந்த வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டியிருக்கும் என்பதனை மறந்து விட்டு அந்த வீட்டுக்கு மேலும் , மேலும் அலங்காரம் செய்து , அழகு பார்க்க ஆரம்பிக்கிறார். தாம் அந்தக் குடிலில் வாழும் வரைக்கும் அதனை சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாதோ ? அதைத் தாமே கட்டினது போலவும் , தமக்கே உரியது போலவும் எண்ணிக் கொண்டு அந்த வீட்டை அலங்காரம் செய்யத் தொடங்குகிறார் குடியிருப்பவர் .  அது மட்டுமல்லாது , அந்த வீட்டிற்கு ஒரு எஜமானர் இருக்கிறார் என்பதையே அடியோடு மறந்துவிட்டு . அதற்குக் கொடுக்க வேண்டிய வாடகையையும் கொடுக்காது இன்பமாகக் காலம் கழித்து வருகிறார்.  

                வீட்டுக்காரர்,  அதாவது அந்த வீட்டைக் கட்டித் தந்தவர் --   குடியிருக்கிறவரின் செயலை எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்கிறார்.

“இந்த மனிதன் இந்த வீட்டிலேயே இருந்து கொண்டு, தான் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்வான் என்று தான் இதனை அருமையாகக் கட்டிக் கொடுத்தேன். ஆனால் இவன் நாம் நினைத்த வேலை ஒன்றும் செய்யாது வீட்டை அழகுபடுத்துவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறானே !”  என்று எஜமானர் நினைக்கிறார்.

                இந்த எஜமானர் இந்த ஒரு வீட்டை மட்டும் தானா கட்டியிருக்கிறார்?. கோடிக்கணக்கான வீடுகளைக் கட்டி அங்கங்கே மனிதர்களை குடிவைத்திருக்கிறாரே!

எத்தனை வீடுகள் கட்டியிருந்தாலும் சில மனிதர்கள் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொண்டு பலநாள் அதில் வாழ்கிறார்கள். வேறு சிலருடைய வீடுகளோ அடிக்கடி பழுதுபட்டு விடுகின்றன. மழைக்கு ஒழுகுகின்றன. பூச்சிகளின் தொந்திரவு வேறு !

                பல வீடுகளைக் கட்டிய இந்த எஜமானர்  , ஒருவரை ஒரே வீட்டில் குடி இருக்கும்படி விடுவதில்லை. அவருக்கு மாற்றி மாற்றிப் புதுப்புது வீடுகளை க்கட்டிக் கொடுக்கிறார். ஆனால் அவர் வாழ்ந்த பழைய வீடுகளில் யாரும் குடிபுக முடியாதவாறு அதனை இடித்துத் தள்ளிவிடுகிறார்.

                ஒருவர் பலகாலமாக வாழ்ந்து வந்த அந்த வீட்டை முதலாளி இடிக்கும் பொழுது “ ஐயோ! இவ்வளவு நாளும் வாழ்ந்த வீட்டை இடிக்கிறாரே! “ என்று மற்றவர்கள் வருந்துகிறார்கள். நண்பர்களும் , உறவினர்களும் ,யாவரையும் கூட்டிக் கொண்டு அழக்கூடச் செய்கிறார்கள். . அந்த வீட்டில் வாழ்ந்த ஒருவரை , அவர் அந்த வீட்டில் இருந்து கொண்டு செய்த செயலுக்கு ஏற்றவாறு முதலாளி வேறு ஒரு புதுவீட்டில் குடியேற்றி விடுகிறார்.  அவரும் பழைய வீட்டில் இருந்த வாசனையுடன் புதுவீடு புகுந்து விடுகிறார்.

    இப்படியெல்லாம் நிகழும் வீடு என்ன என்று உன்னால் ஊகிக்க முடிகிறதா நண்பனே?—

                நம் உடம்பைப் பற்றித் தான் இந்த விளக்கங்கள். உயிர் வாழும் உடம்பைத் தான் அப்பர் சுவாமிகள் இவ்வாறு வருணிக்கிறார். அவர் சொல்லும் இந்த வீட்டையார் கட்டினார்கள் என்று சொல்கிறார் தெரியுமா?  மறைக்காட்டில் இருக்கிற முதலாளி தான் கட்டினார் என்பது அவர்வாக்கு. அதற்குள் ஆவியைக் குடிவைத்து , நன்றாக வாழும் படிச்செய்தார்.  என்கிறார்.--மேலும் தொடர்ந்தான் கடற்கரைக்கு வந்த முதல் நண்பன் .

                ‘இந்த வீட்டைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?  இந்த வீட்டுக்கும் கால்கள் உண்டு.  மற்றவர்கள் யாவரும் கட்டும் வீடோ ஒரே இடத்தில் அசையா துஇருக்கும் வீடுகள். ஆனால் இந்த வீடோ , அங்கும் , இங்கும் , எங்கும் செல்லக் கூடிய வீடாகும் . மேல் நாடுகளில் இடம் விட்டுமாறும் வகையில் செல்லக் கூடிய வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்ததே! . இந்த வீடும் அதைப் போலவே இயங்கும் வீடுதான் . இரண்டு கால் படைத்த வீடு இது.  மேலு ம்அதற்கு ஏற்றாற் போல் இரண்டு கைகளும் உண்டு. இவைகள் எப்படி இருக்கின்றன தெரியுமா? வீட்டுக்கு இரண்டு பக்கங்களிலும் அமைக்கும் கைமரங்களைப் போலவே இருக்கின்றன. வீட்டிற்குக் குறுக்கே போடும் கழிகளைப் போல இங்கும் எலும்புகளை அடுக்கி வைத்திருக்கிறார். அவற்றிற்கு மேலே ஊனை வேய்ந்திருக்கிறார். ஊனுக்கும் மேலே தோலைப் பரத்திப் போர்த்தி மூடியிருக்கிறார்.  சுவர் எடுக்கத் தண்ணீர் வேண்டும் அல்லவா? இங்கே உதிரம் என்கிற நீரைக் கொண்டு தசைகளைக் குழைத்துச் சுவர்களை எழுப்பியிருக்கிறார். மல ஜலம் கழிக்கக் கூட இரண்டு வாசல்களை தகுந்த இடத்தில் மறக்காமல் வைத்திருக்கும் பாங்கை எண்ணினால் வியப்பாகத் தான் இருக்கிறது.  இரண்டு கண்கள் , காது இரண்டு , மூக்குத்துளைகள் இரண்டு , வாய் ஒன்று ஆக ஏழு சன்னல்கள் சாமர்த்தியமாக வைத்திருக்கிறார்.  இதிலே குடியிருப்பவர் பெயர் என்ன தெரியுமா? ‘ஆவி’ – அதாவது  ‘உயிர்’ என்பவர் தான் . அருணகிரிநாதர் கூடக் கந்தர் அலங்காரத்தில் நாற்பத்து நான்காவது பாடலில் இதே கருத்தை வைத்து ஒருபாடல் இயற்றியிருக்கிறார் .

 

“தோலால்சுவர்வைத்துநாலாறுகாலில்சுமத்திஇரு

காலால்எழுப்பிவளைமுதுகுஓட்டிகைநாற்றிநரம்பால்

ஆர்க்கையிட்டுத்தசைகொண்டுமேய்ந்தஇந்தஅகம்  “  -- என்கிறார்.

 

                ஊனும் , எலும்பும், தோலும்கொண்டு இந்த வீட்டைக் கட்டினார் முதலாளி என்கிறாரே! அப்பர் பெருமான் . ஆனால் ஊன், மலங்கள் முதலியவற்றை நாம் தனித்தனியே பார்த்தால் எத்தனை அருவருப்பாக இருக்கிறது? எலும்பும், இறைச்சியும் , இரத்தமும் ஒரே குவியலாக வைத்திருந்தால் நாம் பயப்படக் கூடச் செய்வோம். முதலாளியின் சாமர்த்தியம் இந்த வீட்டைக் கட்டியதிலே கூட அதிகமாகப் புலப்படவில்லை.  உள்ளே இவ்வளவு அழுக்கும் , அழகற்றதும் , அருவருக்கத்தக்கதுமான பண்டங்களையும் வைத்துக் கட்டியிருந்தாலும் இவையாவும் வெளிப்பார்வைக்குத் தெரியாதவாறு , வீட்டைப் பார்க்கப் பார்க்க ஒரு அருவருப்பும் இல்லாதவாறு   , வெளியே அழகாகத் தோன்றும் படிச் செய்திருக்கிறாரே! அவர் திறமையைக் கண்டு வியப்பதா? போற்றுவதா? ஒன்றுமே புரியவில்லை . என்ன ஆச்சரியம் ! இதைக் கண்டமற்றவர்கள் இந்த வீட்டினிடம் ஆசை கொள்கிறார்கள். .இந்த வீட்டின் உள்ளே வாழ்பவனோ,  அதை விட்டு வெளியேற மாட்டேன் என்கிறான் . அவனுக்கு அத்தனை மோகம் இந்த வீட்டின் மேல்.

                மேலும் அப்பர் சொல்கிறார் – இவ்வாறாக இதனிடம் ஒருவிதமான கவர்ச்சியை வைத்திருக்கிறார் மறைக்காடனார். யாருமே பார்த்து மயங்கும் நிலையில் உள்ள இந்த வீட்டிலே வாழும் ஆவிக்கு,  ஆசையோ,  கேட்கவே வேண்டாம் , அளவற்றதாக இருக்கிறது. வெறும் குருதியும் , நரம்பும்,  எலும்பும் கூடின கூட்டம் தானே இந்த உடம்பு ?  என்ற நினைப்பு யாருக்குமே வருவதில்லை. அதுமட்டுமல்ல இதனிடம் தனி மோகம் கொண்டு இதனைப் பேணியும், வளர்த்தும் அழகு செய்கிறார்கள்.  தன் உடல் அல்லாது மற்றவர்கள் உடம்பைக் கண்டும்மால்                     ( மயக்கம் )  கொள்கிறார்கள்.  யாவருக்கும் இந்த  ’மாலை ‘  முதலாளிவைத்தது மிகுந்த ஆச்சரியத்தைத் தான் கொடுக்கிறது.”                

“இந்தக்கருத்தைச்சொல்லும்பதிகம்உனக்குநினைவுஇருக்கிறதா?   சொல்கிறேன்கேள்”

கால்கொடுத்துஇருகைஏற்றிக்கழிநிரைத்துஇறைச்சிமேய்ந்து

தோல்படுத்துஉதிரநீரால்சுவர்எடுத்துஇரண்டுவாசல்

ஏல்வுடைத்தாஅமைத்துஅங்குஏழுசாலேகம்பண்ணி

மால்கொடுத்துஆவிவைத்தார்மாமறைக்காடனாரே.

 

                இப்பாடல் நான்காம் திருமுறை , முப்பத்து மூன்றாம்பதிகமாகிய திருமறைக்காட்டுத் திருநேரிசையில் நான்காவது பாடலாகும் .

பொருள்:-

                பெருமையையுடைய திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும் இறைவர், காலைக் கொடுத்து , இரண்டு கையை அமைத்து , கழிகளை வரிசையாக வைத்து , மாமிசத்தால் வேய்ந்து , தோலைப் பரப்பி , இரத்தம் என்ற நீரால் குழைத்துச் சுவரை எடுத்து , இரண்டு வாசல்களைப் பொருத்தமுடையனவாக அமைத்து , அந்த வீட்டில் ஏழு சாளரங்களையும் வைத்து ,  யாரும் கண்டுமயங்கும் வண்ணம் கவர்ச்சியையும் அதற்குக் கொடுத்து,  உயிரைக் குடியிருக்க வைத்தார் .

உனக்குத் தெரியுமா?   இது ஒரு உருவகம் தான் . கால், கை என்பன இரண்டும் சிலேடையாக வீட்டில் உள்ள தூண்களையும் ,  கைமரங்களையும் குறிக்கும் பெயர்களாகவும் , உடம்பிலுள்ள கால்களையும்  , கைகளையும் குறிக்கும் பெயர்களாகவும் உள்ளன.  கழி, சுவர் , வாசல் , சாலேகம் என்பவை வீட்டிற்கு உரிய பெயர்களாகிக் குறிப்பால் எலும்பு , முண்டம் , மலஜலம் கழிக்கும் உறுப்புகள் , கண் முதலிய ஏழு உறுப்புகள் ஆகியவற்றை முறையே புலப்படுத்தின. கழி என்பதற்கு மாமிசம் என்ற பொருள் இருந்தாலும் கூட இறைச்சி என்று பின்னால் வருவதனால் அது இங்கு பொருந்தாது. இறைச்சி , தோல் என்பன உடம்புக்குரிய பொருளாய்க் கூரை, கூரையின் மேலே போடும் வைக்கோல் முதலிய உருவகப் பொருளாகக் கொள்ள வேண்டும். எவ்வளவு நல்ல கருத்து !  .” கூறி முடித்தான் நண்பன் .

                “ நண்பா! இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே ! பொறுமையாக நீ விளக்கியதற்கு நன்றி! . நானு ம்இனிமேல் திருமுறைகளைப் படித்து அதில் உள்ள உட்கருத்தைத் தெரிந்து கொள்கிறேன். மீண்டும் விரைவில் சந்திப்போம் ”. இருவரும் காற்றினூடே இறைவன் பெருமைகளையும் அனுபவித்து நிம்மதியாக வீடு திரும்பினர்.


 

Related Content

இருவகைக் கணக்கு

பணி செய்ய வாரீர்

கடல் ஆமையும் பாவகாரிகளும்

இப்போதைக்கு மழைவேண்டாம்!

கனிக்கும் கரும்புக்கும் எட்டா இனியவன்