logo

|

Home >

shivarchana-chandrikai >

sivarchana-chandrika-praartha-aalaya-tharisanam

சிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை

பரார்த்தாலய தரிசனம்

இவ்வாறு கபில பூசை முடிந்த பின்னர் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும். தரிசிக்கும் முறைவருமாறு:-

ஆலயத்துக்கு அருகே சென்று கோபுரத்துவாரத்திற்கு வெளியிலாவது, பலிபீடத்திற்கு வெளியிலாவது, தூலலிங்க சொரூபமான விமானத்திற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் பத்திரலிங்கமாகிய பலிபீடம், கொடிமரம், இடபம் என்னும் இவற்றிற்கு நமஸ்காரத்தைச் செய்து, “ஆலயத்திற்குள் செல்லுதலாலும், சிவபெருமானைத் தரிசித்தலாலும், அவரை அருச்சித்தலாலும் உண்டாகும் பலனை அடையும் பொருட்டுத் தேவரீர் பிரசன்னராயிருந்து, நும்முடைய பாதகமலங்களில் பணிந்த எனக்கு உத்தரவு தந்தருள வேண்டுமென்று” இடபதேவரைப் பிரார்த்தித்துப் பலிபீடத்தின் முன்னர் சாஷ்டாங்கமாகச் சிவனை நமஸ்கரிக்க வேண்டும். தேகத்தை ஆடையால் மறைத்துக் கொண்டு நமஸ்காரஞ் செய்தலாகாது. சிவபெருமானுக்கு நேரிலும், பின்பக்கத்திலும்; இடப்பக்கத்திலும், கருப்பக்கிருகத்திலும் நமஸ்காரம் செய்தல் கூடாது.

மேற்கு முகமாகவும், வடக்கு முகமாகவும் சிவலிங்கமிருக்குமாயின் இடது பக்கத்தில் நமஸ்கரிக்கலாம்.

நமஸ்காரம் செய்தபின்னர், சிவபெருமானுடைய சந்நிதியில் அஞ்சலியோடு கூடிய புஷ்பத்தைத் சொரிய வேண்டும். அதன் பின்னர் பிரதக்ஷிணம் செய்தல் வேண்டும். கருப்பக் கிருகத்தில் அருச்சகரும், + அந்தர் மண்டலத்தில் தீக்ஷை பெற்றவரும், $அந்தர்ஹாரம் முதலியவற்றில் அனைவரும் பிரதக்ஷிணம் செய்தல் வேண்டும். அந்தர் ஹாரத்தில் பிரதக்ஷிணம் செய்யின் ஒரு மடங்கும், *மத்திய ஹாரத்தில் பிரதக்ஷிணம் செய்யின் மூன்று மடங்கும் ++மரியாதையில் பிரதக்ஷிணம் செய்யின் நான்கு மடங்கும், $$மகாமரியாதையில் பிரதக்ஷிணம் செய்யின் ஐந்து மடங்கும்; ஊரின் எல்லையில் பிரதக்ஷிணம் செய்யின் ஆறு மடங்கும் பலனுண்டு. இவ்வாறு பலன், காலம், அதிகாரம் என்னும் இவற்றிற்கு உரிமையான இடத்தில் இருபத்தொன்று, பதினைந்துஅ ஏழு, ஐந்து, மூன்று என்னும் இவற்றில் யாதானும் ஓர் எண்ணையுடைய பிரதக்ஷிணங்களைச் செய்தல் வேண்டும்; மிகவும் அவகாசம் கிடையாவிடில் ஒரு பிரதக்ஷிணத்தையாவது செய்தல் வேண்டும்.

(+ அந்தர் மண்டலம் - இரண்டாவது பிரகாரம், $ அந்தர் ஹாரம் - மூன்றாவது பிரகாரம், *மத்தியகாரம் - மதிலையொட்டி உள்ளருக்கும் வீதி, ++மரியாதை - மதிலையொட்டி வெளியிலிருக்கும் வீதி, $$ மகாமரியாதை - இரத வீதி.)

பிரதக்ஷிணம் செய்யும்பொழுது கர்ப்பக்கிருகம், அந்தர் மண்டலம் என்னும் இவற்றிலிருக்கும் சோமசூத்திரமாகிய அபிஷேகதீர்த்தம் செல்லும் வழியைத் தாண்டுதல் கூடாது. அதனைத் தாண்டாதிருத்தற் பொருட்டுக் கருப்பக் கிருகத்தில் சோமசூத்திரம் முதற்கொண்டு வலது, இடது பக்கமாகவே பிரதக்ஷிணம் செய்தல் வேண்டும். அதற்கு வெளியிலுள்ள அந்தர் மண்டலத்திலும் வலது, இடது பக்கமாகவே பிரதக்ஷிணம் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் பிரதக்ஷிணத்தைக் கிழக்குத் திக்கைமுதலாகவேனும், அல்லது சோமசூத்திரத்தை முதலாகவேனும் கொண்டு செய்தல் வேண்டும் என்று முன்னரே கூறப்பட்டிருக்கின்றது.

பிரதோஷ காலத்தில் பிரதக்ஷிணம் செய்யும் முறை வருமாறு:-

முதலாவது இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடது பக்கமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்துச், சென்ற வழியே திரும்பிவந்து மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் வலமாகச் சென்று சோம சூத்திரத்தைக் கடவாது சென்றவழியே திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பி இடபதேவரைத் தரிசியாது சோமசூத்திரம் வரை சென்று, அங்கு நின்றும் திரும்பி இடபதேவரைத் தரிசியாது இடது பக்கமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்துத் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் பிரதக்ஷிணத்தில் இடபதேவரை நான்கு முறையும் சண்டேசுவரரை மூன்றுமுறையும், சோமசூத்திரத்தை இரண்டு முறையும் தரிசித்ததாக ஆகின்றது.

விமானத்திற்கு வெளிப்பக்கத்தில் நாளமாகிய கோமுகியிலிருந்து விமானத்தினுடைய நீளத்தின் அளவாகவேனும், அதில் பாதி அளவாகவேனும் சோமசூத்திரத்தைச் செய்ய வேண்டும். அதைத் தாண்டினால் குற்றமுண்டாம். சோமசூத்திரத்துக்கு வெளியில் தாண்டினால் குற்றமில்லை. சோமசூத்திரத்தை இன்றியமையாது தாண்டும்படி நேரிட்டால் புல் முதலியவற்றால் அதனை மறைத்துக்கொண்டு தாண்டல் வேண்டும். இக்கருத்தை “புல், விறகு, இலை, கல், மண்கட்டி ஆகிய இவற்றால் மறைத்துச் சோமசூத்திரத்தைத் தாண்டல் வேண்டு”மென்ற வாக்கியம் வலியுறுத்துமாறு காண்க.

*இரண்டு சோமசூத்திரங்களும், விட்டுணு ஆலயமும், எந்த ஆலயத்தில் இருக்கின்றனவே, அந்த ஆலயத்தில் இடது பக்கமாகப் பிரதக்ஷிணம் செய்தல் கூடாதென்றும், வலது பக்கமாகப் பிரதக்ஷிணம் செய்தல் வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருத்தலால் சில இடங்களில் இடது பக்கமாகச் செய்யும் அபசவ்யப் பிரதக்ஷிணத்திற்கு விலக்குக் காணப்படுகின்றமை அறிக.

( * இரண்டு சோமசூத்திரங்கள் - சுவாமி கோவிலும், அம்மன் கோவிலும் ஒன்றாயிருக்கும் ஆலயத்தில் இருப்பன.)

பின்னர், துவாரபாலர், நந்திகேசுவரராகிய இவர்களை நமஸ்காரம் செய்து, அவ்வவர்களுடைய அநுமதியினால் உள்ளே புகுந்து, விநாயகருக்கு அஞ்சலி புஷ்பம் சொரிந்து சிரசில் குட்டிக் கொண்டு கீழேவிழுந்து சிரசு பூமியிற்படும்படி நமஸ்காரம் செய்து, மண்டபத்துள் புகுந்து சிவபெருமானை நமஸ்கரித்து, சிரசு அல்லது இருதயத்தில் இருகைகளையும் குவித்துக் கொண்டு அந்தந்த அதிகாரிகளுக்குரிய முறைப்படி வேதம், ஆகமம், புராணம், கவியம், திராவிடம் என்னும் இவற்றின் சம்பந்தமான தோத்திரங்களால் தோத்திரம் செய்தல் வேண்டும்.

ஆசாரியன் ஒருவனே கருப்பக்கிருகத்துட் புகுந்து சிவபெருமானைத் தரிசிக்கலாம். ஏனைய பிராமணர்கள் அர்த்த மண்டபத்தில் நின்று தான் தரிசித்தல் வேண்டும். க்ஷத்திரியர் அர்த்த மண்டபத்து வாயிலின் முன்னின்று தரிசித்தல் வேண்டும். வைசியர் இடபத்தின் முன்னின்று தரிசித்தல் வேண்டும். சூத்திரர் இடபத்தின் பின்னின்று தரிசித்தல் வேண்டும்.

வைசியரும் சூத்திரரும் முறையே இடபத்தின் முன்னும் பின்னுமாகக் கோமயத்தால் சதுரச்ரமாக மண்டலஞ் செய்து அம்மண்டலத்தில் அஞ்சலி புஷ்பத்தைச் சொரில் வேண்டும்.

இவ்வாறு நிருத்தமூர்த்தி முதலியோர்க்கும் அஞ்சலி புஷ்பம் சொரிந்து நமஸ்காரத்தைச் செய்து, பின்னர் சண்டேசுவரரை நமஸ்கரித்தல் வேண்டும்.

இவ்வாறு பலிபீடம் முதல் சண்டேசுவரர் ஈறாகவுள்ள மூர்த்திகளுக்கு நமஸ்காரம் சமர்ப்பித்த பின்னர், ஆலயத்தில் நேரிட்ட அபராதங்களை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமானுடைய சந்நிதியிலிருந்து சக்திக்குத் தக்கவாறு சிவமூலமந்திரத்தைச் செபித்து, பின்னர் சிவபெருமானுக்குத் தனது முதுகைக் காட்டாமல் வெளியில் வரல் வேண்டும்.

சிவாலயத்தில் நேரக்கூடிய அபராதங்கள் வருமாறு:- ஆலயத்துக்குள் வாகனத்தில் ஏறிச் செல்லல், பாதர¬க்ஷயுடன் சஞ்சரித்தல், கோபுரப்பிரதிமையின் நிழலைத் தாண்டுதல், நிருமாலியத்தைத் தீண்டுதல், நிருமாலியத்தைத் தாண்டுதல், சிவபெருமானும் பலிபீடத்திற்கும் நடுவே செல்லுதல், பெண்களைத் தீண்டுதல், அவர்களை ஆசையுடன் உற்றுப் பார்த்தல், பயனின்றிச் சிரித்தல், கானம்செய்தல், பயனில்லாத வார்த்தைகளைப் பேசுதல், உத்தரீயத்துடன் பிரதக்ஷிணம் நமஸ்காரங்களைச் செய்தல், ஒருகையால் நமஸ்கரித்தல், இடது பக்கதில் நமஸ்கா¤த்தல், அகாலத்தில் நமஸ்கரித்தல் முதலிய. இவ்வபராதங்களைப் பொறுத்தருளும்படி சிவபெருமானிடம் பிரார்த்தித்துக்கொண்டு வெளியில் செல்லல் வேண்டும்.

சிவபெருமானைத் தரிசிப்பவன், பூமி பொன் முதலாகப் பத்திரபுஷ்பம் ஈறாகவுள்ள திரவியங்களைக் கொடுத்தாவது, அசுத்தத்தைப் போக்கிச் சுத்தம் செய்தல் முதலிய காயத்தொண்டேனும் வாக்குச் சகாயம் என்னும் வாக்குத் தொண்டேனும் செய்தாவது தரிசித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் சிவபெருமானைத் தரிசிக்க முடியாவிடில் அட்டமி முதலிய விசேஷ தினங்களிலாவது தரிசித்தல் வேண்டும். அட்டமியில் தரிசித்தால் எட்டுத் தினங்களிலும், ## பர்வாக்களில் தரிசித்தால் ஒரு பக்ஷத்திலும், சங்கராந்தியில் தரிசித்தால் ஒரு மாதத்திலும் செய்த பாவங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தில் தரிசித்தால் மனம், வாக்குக், காயங்களால் ஈட்டப்பட்ட கொடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். நிசுவம், அயநம், கிரஹணம், மகோத்ஸவம் முதலிய தினங்களில் தரிசித்தால் சிவ பதங்கிடைக்கும்.

( ## பருவாக்கள் - கிருஷ்ணபக்ஷத்து அஷ்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி, மாசப்பிறப்பு என்ப.)

Related Content

சிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்

சிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-

சிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி

சிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி

சிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை