logo

|

Home >

shivarchana-chandrikai >

sivarchana-chandrika-bojana-vithi

சிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி


ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை

போஜன விதி

ஆபஸ்தம்பம், போதாயனம் முதலிய அவரவர் சூத்திரத்திற் கூறப்பட்டவாறு ஸ்வாஹாந்தமான மந்திரங்களால் ஓமஞ் செய்து அக்கினி முதலாயினாரை அனுப்புதல் வேண்டும். இவ்வாறு அக்கினி காரியத்தைச் செய்து கை, கால்களைக் கழுவி ஆசமனம் செய்து ஈன சாதியர்களான தீக்ஷை பெறாதவர்களைத் தம்முடைய பந்திக்கு வரவொட்டாது விலக்கிக் கொண்டு, நல்லொழுக்கத்துடன் கூடின சிவபக்தர்களுடன் போசனம் செய்யும் இடத்தை அடைந்து பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்து, சதுரச்ரமாயும், ஒரு கை முழ அளவுள்ளதாயும், ஆசாரியர், +புத்திரர், *சாதகர், சமயி ஆகிய இவர்களுக்கு முறையே நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆகிய எண்களையுடைய ரேகையினால் அடையாளம் செய்யப்பட்டதாயும் நான்கு பக்கத்திலும் விபூதியுடன் கூடினதாயுமுள்ள மண்டலத்தினால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சுவர்ணம் வெள்ளி செம்பு என்னும் உலோகங்களுள் யாதானும் ஒன்றாலாவது, அல்லது வெங்கலத்தாலாவது செய்யப்பட்டதாயும், ஏழுமுறை பஸ்மத்தால் சுத்தம் செய்யப்பட்டதாயும், அகோரமந்திரத்தால் அபிமந்திரணம் செய்யப்பட்டதாயுமுள்ள பாத்திரத்தை வைத்தல் வேண்டும்; குறித்த சுவர்ணம் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரம் கிடையாவிடில் வாழை, புரசு, தாமரை, மா, இலுப்பை என்னும் இவற்றின் இலைகளையாவது பாத்திரமாகச் செய்துகொள்ளல் வேண்டும். பின்னர் அந்தப் பாத்திரத்தில் நெய்யைத் தௌ¤த்து, கறி, அன்னம், பருப்பு என்னும் இவற்றைப்படைத்து, அன்னத்தில் இருமுறை நெய்யைப் பெய்து அஸ்திரமந்திரத்தால் புரோக்ஷித்து மூன்று அக்கரங்களையுடைய மிருத்யுஞ்சய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு “மிருத்யுஞ்ஜ்யாய வெளஷட்” என்னும் மந்திரத்தால் ஏழு முறை அபிமந்திரணம் செய்து வருணத்திற்குத் தக்கவாறு நீரால் சுற்றுதலாகிய பரிஷேசனம் முதலியவற்றைச் செய்து, அரைக்கவள அளவுள்ள அன்னத்தை, நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்னும் வாயுக்களின் பொருட்டு “நாககூர்ம கிரிகர தேவதத்த தனஞ்சயேப்ய:, உபப்ராண வாயுப்யஸ் ஸ்வாஹா” என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய வலது பக்கத்தில் கோமயத்தால் பூசப்பட்ட மண்டலத்தில் கொடுத்தல் வேண்டும். பின்னர் வலது கைக்கட்டைவிரலால் ஜலத்தை வார்த்து நாகர் முதலாயினோர்க்குச் சுளுகோதகம் கொடுத்து, உழுந்து முழுகுவதான அளவுள்ள எஞ்சிய ஜலத்தை அமிருத மந்திரத்தால் உட்கொண்டு ஐந்து பிராணாகுதிகளையும் செய்தல் வேண்டும், அவ்வாறு செய்யப்பட்ட பிராணாகுதிகளால் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்னும் இவர்களும், இவர்களில் ஆவாகனம் செய்யப்பட்ட ஆன்மா, பூதங்கள், பாதாளத்தில் வசிப்பவர்கள், பிதுருக்கள், தேவர்கள் ஆகிய இவர்களும் திருப்தி அடைந்தவர்களாகவும் பாவித்தல் வேண்டும்.

( + புத்திரர் - விசேட தீக்ஷை பெற்றவர். * சாதகர் - நிருவாண தீக்ஷைபெற்றவர்.)

பின்னர் உண்டது போக எஞ்சிய உச்சிஷ்டான்னத்தை எடுத்து நரகத்தில் வசிப்பவரின் பொருட்டு “நரகவாஸிப்யஸ் ஸ்வாஹா” என்று சொல்லிக்கொண்டு பூமியிற்கொடுத்து உத்தரா போசனம் செய்து, அதன்பின்னர் ஆபோசனத்தில் எஞ்சிய ஜலத்தைக் கட்டைவிரலால் வார்த்து கை கழுவுதல் முதல் சுத்தாசமனம் ஈறாகவுள்ள கருமங்களனைத்தையும் செய்து உண்டதாலுண்டாம் தோஷம் நீங்கும்பொருட்டு வலதுகைக் கட்டைவிரல் ஜலத்தினால் வலது கால்க் கட்டைவிரல் நுனியிலிருக்கும் காலாக்னிருத்திரரை நனைத்தல் வேண்டும்.

நிவேதனம் செய்யப்படாத அன்னத்தை உண்பவர்களுக்கு உண்ணுஞ் சமயத்தில் செய்யவேண்டிய கிரியை அனைத்தும் முன்னரே சுப்ரபேதாகம வசனத்தை எடுத்துக்காட்டிக் கூறப்பட்டிருக்கின்றது.

நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை உண்பவர்களும், நிவேதனம் செய்யப்படாத அன்னத்தை உண்பவர்களும், உண்ணும் காலம் அல்லாத ஏனையகாலங்களில், உண்ணத்தக்க ஒளணதம், தாம்பூலம், பானீயம் முதலியவற்றையும், அணியத்தக்க சந்தனம் புஷ்பம் முதலியவற்றையும், இவையல்லாத ஏனையவற்றையும் மனத்தாலாவது சிவபெருமானுக்குச் சமர்ப்பித்த பின்னரே அனுபவித்தல் வேண்டும். இதற்குப் பிரமாணமாகக் காமிகாகமத்தில் கூறப்பட்ட வாக்கியங்கள் வருமாறு:- “பத்திரம், புஷ்பம், பலம், ஜலம், அன்ம், பானம், ஒளஷதம் என்னும் இவற்றையும், ஏனையவற்றையும் பகவானுக்கு நிவேதனம் செய்யாது புசித்தல் கூடாது” என்பதாம். இக்கருத்துப் பற்றிக் கூறப்பட்ட வாதுளாகம வசனம் வருமாறு:- “தன்னுடைய அநுபவத்தின் பொருட்டு எந்த எந்தப் பொருள்கள் தனக்கு முன்னர் வைக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தையும் ஈசுவரருக்குச் சமர்ப்பித்தபின்னரே தான் அனுபவித்தல் வேண்டும்” என்பதாம்.

“அன்னம் முதலியன, ஒளஷதம், ஜலம், பத்திரம், புஷ்பம், பலம் முதலிய அநுபவிக்கக் கூடிய பொருள்கள் அனைத்தையும் புத்திமானாகயிருப்பவன் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து அதன் பின்னர் அனுபவித்தல் வேண்டும்” என்னும் வசனத்தால் ஒளஷதம் முதலியவற்றையும் நிவேதனம் செய்த பின்னரே அநுபவித்தல் வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கவும், அவற்றை மனத்தாலாவது ஈசுவரார்ப்பணம் செய்து அனுபவித்தல் வேண்டும் என்பது எவ்வாறு பொருந்தும் எனின், யாதானும் ஒரு காரியத்தின் பொருட்டு நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை உண்பவன், உண்ணும் நடுவில், உண்ணுதற்குரிய ஒளஷதம் முதலியவற்றைக் கொள்ளும்படியாக நேர்ந்தால் அப்பொழுது ஈசுவரனுக்கு மனத்தால் அர்ப்பணம் செய்த பின்னர் உண்ணுதல் வேண்டுமென்பது பொருளாதலின் பொருந்தும் என்க. போசனம் செய்யும் காலம் அல்லாத ஏனைய காலங்களில் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டவற்றையே சிவபக்தர் புசித்தல் வேண்டும்.

அன்றியும், சிவபக்தர்கள் யாதானும் ஓர் பலனைக் கருதி இலௌகிகமாகவாவது, வைதிகமாகவாவது உள்ளயாதானும் ஒரு கிரியையைச் செய்யின், அந்தக் கிரியை அனைத்தும் சிவாராதன ரூபம் என்னும் பாவனையுடன் செய்யப்படல் வேண்டும். அந்தக் கிரியைகளால் உண்டாம் சுகத்தையும் சிவனே அநுபவிக்கிறார் என்று தியானித்துக் கொண்டு சிவபெருமானிடத்துச் சமா¢ப்பித்து அதன் பின்னர் அவரால் அநுபவிக்கப்பட்ட சுகமே என்னால் அநுபவிக்கப்படுகிறதென்னும் பாவனையுடன் அநுபவித்தல் வேண்டும்.

இவ்வாறே தன்னுடைய முயற்சி இன்றி நேர்ந்த சப்தப் பரிசரூப ரச கந்தங்கனென்னும் விடயங்களையும், ஈசுவரனிடத்துச் சமர்ப்பித்து அவரது உச்சிட்டமென்னும் புத்தியுடன் தன்னுடைய இந்திரியங்களால் அநுபவித்தல் வேண்டும். அந்த அந்த விடய அநுபவங்களால் உண்டாகும் சுகத்தையும் அவருடைய உச்சிட்டம் என்னும் புத்தியுடனேயே அநுபவித்தல் வேண்டும். இதற்குப் பிரமாணமாக வாதுளாகமத்திற் கூறப்பட்ட வாக்கியங்கள் வருமாறு:- “எந்த எந்தக் கிரியைகள் செய்யக்கூடியனவாயும், நிகழக் கூடியனவாயும் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் சிவபெருமானிடத்துச் சமர்ப்பிக்கப்பட்ட புத்தியுடனேயே செய்தல் வேண்டும். இந்திரியங்களால் கொள்ளப்பட்ட எந்த எந்தச் சுகங்களுண்டோ, அவை அனைத்தையும் சிவபெருமானிடத்து அர்ப்பணம் செய்து அவருடைய பிரசாதமாக அதே இந்திரியங்களின் வழியாய் அநுபவித்தல் வேண்டும்” என்பதாம்.

ஆகையால் சிவபத்தர்கள் எக்காலத்தும் சிவனை மறவாது, ஞாபகமாய் இருத்தல் வேண்டும். இதற்குப் பிரமாணமாக பிருகத்காலோத்ர ஆகமத்தில் கூறப்பட்ட வாக்கியங்கள் வருமாறு:- கூடுதல், பிரிதல், போதல், இருத்தல், தூங்குதல், விழித்தல், உண்ணுதல், புணர்தல் என்னும் இவற்றைச் செய்துகொண்டு எவன் இருக்கின்றானோ, அவன் சாவதானத்துடன் சிவபெருமானிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட மனதை உடையவனாக இருத்தல் வேண்டும். ஏனைய இடங்களில் மனதைச் செலுத்துதல் கூடாது என்பதாம்.

இவ்வாறு கிரியையைச் சமர்ப்பித்து அதனைச் செய்துகொண்டும், விடயங்களைச் சமர்ப்பித்து அதனை அனுபவித்துக்கொண்டும், அந்த அந்த இந்திரியங்களால் உண்டாகும் சுகத்தைச் சமர்ப்பித்து அதனை அனுபவித்துக் கொண்டும் எக்காலத்தும் சாவதானத்துடன் இருக்கும் சிவபக்தருக்கு முற்பிறவியிலுள்ள வாசனை நாசமடையுங் காலத்தில் சிற்சில சமயங்களில் மறதியால் விலக்கப்பட்ட கிரியைகளைச் செய்யவும், விலக்கப்பட்ட விடயங்களை அனுபவிக்கவும், விலக்கப்பட்ட சுகங்களை அனுபவிக்கவும் நேரிடினும், அவரைச் சிறிதேனும் பாவம் அணுகாது. அவர் எல்லாவற்றையும் சிவசமாராதன ரூபமென்று பாவிப்பதால் அவருடைய எல்லாக் கிரியைகளும் சிவபெருமானுடைய பிரீதியின் பொருட்டே ஆகின்றன.

ஆன்மபோகத்திற்காக நிருத்தனம் முதலியவைகளைப் பார்த்தல், உப்பரிகை, உத்தியானவனம், தடாகம் முதலியவற்றில் கீரீடை செய்தல் என்னும் கிரியைகளைச் செய்கின்றவன், அவற்றைச் செய்யும்பொழுது வாக்கு, கை, கால், குதம், உபத்தம் என்னும் கன்மேந்திரியங்களின் தொழில்களால் நேர்ந்தவையாயும், காது, மெய், கண், நாக்கு, மூக்கு என்னும் ஞானேந்திரியங்களால் உண்டான அந்தந்த விடயங்களால் நேர்ந்தவையாயும் உள்ள சுகங்களைச் சிவபெருமானிடத்துச் சமர்ப்பித்தற் பொருட்டு, தன்னைச் சார்ந்த காது முதலிய ஐந்து ஞானேந்தி£¤யங்களிலும், வாக்கு முதலிய ஐந்து கன்மேந்திரியங்களிலும், முறையே தனித்தனி அதிட்டித்திருக்கும் ஈசானம் முதலிய ஐந்து மூர்த்திகளின் காது முதலியவற்றைத் தன்னுடைய காது முதலியவற்றில் ஐக்கியம் அடைந்திருப்பதாக அநுசந்தானம் செய்துகொண்டு, அந்தந்த இந்திரியங்களின் தொழில்களால் உண்டாகக் கூடிய சுகம் முதலியவற்றை, ஈசானம் முதலிய மூர்த்திகளை அதிட்டிக்கும் சிவபெருமானால் அநுபவிக்கப்படுகின்றவையாகப் பாவித்துக்கொண்டு, அந்தச் சுகங்களையே சிவபெருமானுடைய உச்சிட்டமென்னும் புத்தியுடன் தான் அநுபவித்தல் வேண்டும்.

தனது முயற்சியின்றி நேரிட்ட விடயசுகஙகளின் அர்ப்பணத்தை அந்தந்த விடய சுகங்களை அநுபவிக்கும் சமயங்களில் சாவதானத்துடன் செய்வதற்கு முடியவில்லையாயின் காலையிலாவது, சிவபூஜையின் முடிவிலாவது, மூன்று காலங்களிலும் முயற்சியின்றி நேரிட்ட சப்த, பரிச, ரூப, ரச, கந்த ரூபமான விடயங்களின் அநுபவத்தால் உண்டாகும் சுகங்களைச் சிவனுக்கு அர்ப்பணஞ் செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு ஒரே காலத்திலேயே அர்ப்பணஞ் செய்யலாம்.

இவ்வாறு செய்யப்படும் விடயார்பணத்தை ஈசுவரனுடைய இருதயம் முதலியவற்றிலாவது, தனது இருதயம் முதலிய தானங்களில் பாவிக்கப்பட்ட சாம்பசிவருடைய செவி முதலியவற்றிலாவது, இருதயம் முதலிய தானங்களில் பாவிக்கப்பட்ட சதாசிவருடைய முறையே ஈசானம் முதலிய முகங்களிலிருக்கும் செவிமுதலியவற்றிலாவது, தன்னுடைய செவி முதலியவற்றில் ஐக்கியத்துடன் கூடிய ஈசானம் முதலியவற்றின் செவி முதலியவற்றிலாவது செய்தல் வேண்டும்.

அர்ப்பணம் செய்யும்பொழுதெல்லாம் நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய சிவமந்திரத்தை உச்சரித்துக்கொண்டே செய்தல் வேண்டும். அந்த மந்திரத்தின் பொருள் வருமாறு:- இது சிவன் பொருட்டு; என்னுடைய தன்று என்பதாம். என்னுடைய தன்று என்னும் இந்தப் பொருளானது சீவனை குறிக்கக் கூடிய மகாரத்தின் ஆறாம் வேற்றுமையால் கிடைக்கின்றது. (மகாரத்திற்கு ‘என்’ என்பது பொருள்; அதில் ஆறாம் வேற்றுமை உருபுவா என்னுடையதென்றாகும். நகாரம் ‘அன்று’ என்பதை உணர்த்தும்) இது பரம இரகசியம்.

Related Content

சிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்

சிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-

சிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி

சிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி

சிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை