logo

|

Home >

shaiva-vina-vidai >

uyir-iyal

உயிர் இயல்

 

  1. ஆன்மாக்களாவார் யாவர்?

     

    என்றும் உள்ளவராய், வியாபகமாய்ச், சேதனமாய்ப், பாசத்தடை உடையோராய்ச், சார்ந்ததன் வண்ணமாய் உடல் தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்போராய்ச், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையோராய்த் தமக்கு ஒரு தலைவனை உடையவராய் இருப்பவர். ( சேதனம் - அறிவுடைய பொருள் ).

     

  2. ஆன்மாக்கள் எடுக்கும் உடல்கள் எத்தனை வகைப்படும்?

     

    தூல உடம்பு, சூக்கும உடம்பு என இரண்டு வகைப்படும்.

     

  3. தூல உடம்பாவது யாது?

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐந்து பூதமும் கூடிப் பரிணமித்த உருவுடம்பு. ( பரிணமித்தல் - உருத்திரிதல் ).

     

  4. சூக்கும உடம்பாவது யாது?

     

    ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் காரண தன் மாத்திரை ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணம் மூன்றும் ஆகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அனுபவித்தற்குக் கருவியாய் ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு.

     

  5. ஆன்மாக்கள் எப்படி பிறந்து இறந்து உழலும்?

     

    நல்வினை, தீவினை என்னும் இருவினைக்கு ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், ஏழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய் பிறந்து இறந்து உழலும்.

     

  6. ஆன்மாக்கள் வினைகளைச் செய்வதற்கும் வினைப் பயன்களை அனுபவித்தற்கும் இடம் எவை?

     

    இருவினைகளைச் செய்வதற்கும் இருவினைப் பயன்களை அனுபவித்தற்கும் இடம் பூமி. நல்வினைப் பயனை அனுபவித்தற்கு இடம் சுவர்க்க முதலிய மேலுலகங்கள். தீவினைப் பயனை அனுபவித்தற்கு இடம் இருபத்தெட்டுக் கோடி நரகங்கள்.

     

  7. பூமியிலே பிறந்த ஆன்மாக்கள் சரீரத்தை விட்டவுடனே யாது செய்யும்?

     

    நல்வினை செய்த ஆன்மாக்கள் தூல உடலை விட்டவுடனே, சூக்கும உடலோடு பூதசார உடலாகிய தேவ உடலை எடுத்துக்கொண்டு, சுவர்க்கத்திலேயே போய் அந்நல்வினைப் பயனாகிய இன்பத்தை அனுபவிக்கும். தீவினை செய்த ஆன்மாக்கள் தூல உடலை விட்டவுடனே, சூக்கும உடலோடு பூத உடலாகிய, யாதனா உடலை எடுத்துக்கொண்டு, நரகத்திலே போய் அத்தீவினைப் பயனாகிய துன்பத்தை அனுபவிக்கும். இப்படியன்றி, ஒரு தூல உடலை விட்டவுடனே, பூமியிலே தானே ஒரு யோனி வாய்ப்பட்டு, மற்றொரு தூல உடலை எடுப்பதும் உண்டு.

     

  8. சுவர்க்கத்திலே இன்பம் அனுபவித்த ஆன்மாக்கள் பின்பு யாது செய்யும்?

     

    தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து மனிதர்களாய் பிறக்கும்.

     

  9. நரகத்திலே துன்பம் அனுபவித்த ஆன்மாக்கள் பின்பு யாது செய்யும்?

     

    தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து முன்பு தாவரங்களாயும், பின்பு நீர் வாழ்வனவாயும், பின்பு ஊர்வனவாயும், பின்பு பறவைகளாயும் பின்பு விலங்குகளாகவும் பிறந்து, பின்பு முன் செய்த நல்வினை வந்து பொருந்த மனிதர்களாய்ப் பிறக்கும்.

     

  10. எழுவகைப் பிறப்பினுள்ளும் எந்தப் பிறப்பு அருமையுடையது?

     

    பசுபதியாகிய சிவபெருமானை அறிந்து வழிபட்டு முத்தி இன்பம் பெற்றுய்தற்குக் கருவியாதலால் மனிதப் பிறப்பே மிக அருமையுடையது.

     

  11. மனிதப் பிறப்பை எடுத்த ஆன்மாக்களுக்கு எப்பொழுது அம்முத்தி சித்திக்கும்?

     

    அவர்கள், தங்கள் தங்கள் பக்குவத்துக்கு ஏற்ப, படி முறையினாலே, பிறவி தோறும் பௌத்தம் முதலிய புறச்சமயங்களில் ஏறி ஏறி, அவ்வச் சமயத்துக்கு உரிய நூல்களில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள். பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே வைதிக நெறியை அடைந்து, வேதத்தில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள். பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே சைவ சமயத்தை அடைவார்கள். சைவ சமயத்தை அடைந்து, சிவாகமத்தில் விதிக்கப்பட்ட சரியை, கிரியை, யோகங்களை விதிப்படி மெய்யன்போடு அனுட்டித்தவருக்குச் சிவபெருமான் ஞானாசாரியாரை அதிட்டித்து வந்து சிவஞானம் வாயிலாக உண்மை முத்தியைக் கொடுத்தருளுவார்.

     

  12. புறச்சமயங்களின் வழியே ஒழுகினவர்களுக்கு யாவர் பலன் கொடுப்பர்?

     

    புறச்சமயிகளுக்கு, அவ்வவரால் உத்தேசித்து வழிபடப்படும் தெய்வத்தைச் சிவபெருமானே தமது சத்தியினாலே அதிட்டித்து நின்று அவ்வவ் வழிபாடு கண்டு, பலன் கொடுப்பார்.

     

  13. சரியையாவது யாது?

     

    சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்தல்.

     

  14. கிரியையாவது யாது?

     

    சிவலிங்கப் பெருமானை அகத்தும் புறத்தும் பூசித்தல்.

     

  15. யோகமாவது யாது?

     

    விடயங்களின் வழியே போகாவண்ணம் மனத்தை நிறுத்திச், சிவத்தைத் தியானித்துப் பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாது தியானப் பொருளாகிய சிவம் ஒன்றே விளங்கப் பெறுதல்.

     

  16. ஞானமாவது யாது?

     

    இறை, உயிர், தளை என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களை அறிவிக்கும் அறிவு நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து, நிட்டை கூடல்.

     

  17. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினாலும் அடையும் பலன்கள் யாவை?

     

    சரியையினால் அடையும் பலன் சிவனுலகமும் ( சாலோகம் ), கிரியையினால் அடையும் பலன் சிவனருகில் இருத்தலும் ( சாமீபம் ), யோகத்தினால் அடையும் பலன் சிவ உருவமுமாம் ( சாரூபம் ) இம்மூன்றும் பதமுத்தி : ஞானத்தினால் அடையும் பலன் சிவமாய் இருந்து ஆனந்தித்தலாகிய பரமுத்தி.

     

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்