logo

|

Home >

shaiva-vina-vidai >

thalai-iyal

தளை இயல்

 

  1. பாசமானவை யாவை?

     

    ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகளாம். ( பந்தித்தல் - கட்டுதல் ). பாசம், மலம் என்பவை ஒரு பொருட் சொற்கள்.

     

  2. தளை எத்தனை வகைப்படும்?

     

    ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும். இம்மூன்றோடு மாயேயம், திரோதாயிஎன இரண்டும் கூட்டி தளை ஐந்து என்று கொள்வது உண்டு.

     

  3. ஆணவமாவது யாது?

     

    இறைவனுடைய சிந்தனையில் ஒன்றாமல் இருக்கும் தன்முனைப்பே ஆணவம் ஆகும். செம்பில் களிம்புபோல் உயிர்களில் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையும் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால எல்லையிலே நீங்கும் அநேக சத்திகளையுடையதாய்ச் சடமாய் இருப்பது.

     

  4. கன்மமாவன யாவை?

     

    ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலே செய்த புண்ணிய பாவங்கள், இவை எடுத்த பிறப்பிலே செய்யப்பட்ட பொழுது, ஆகாமியம் எனப் பெயர் பெறும். பிறவி தோறும் இப்படி ஈட்டப்பட்டுப் பக்குவப்படும் வரையும் புத்தி தத்துவம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இச்சஞ்சித, கன்மங்களுக்குள்ளே பக்குவப்பட்டவை, மேல் எடுக்கும் உடம்பையும் அது கொண்டு அனுபவிக்கப்படும் இன்ப துன்பங்களையும் தந்து பயன்படும் பொழுது, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

     

  5. மாயாகாரியமாகிய தனு கரண புவன போகங்களைச் சிவபெருமான் ஆன்மாக்களுக்குக் கொடுப்பது எதன் பொருட்டு?

     

    ஆன்மாக்களைப் பந்தித்த ஆண்வ மலமும், கன்ம மலமும் ஆகிய நோய்களைத் தீர்த்துச் சிவானந்தப் பெரும்பேற்றைக் கொடுக்கும் பொருட்டு.

     

  6. தனு கரணம் முதலியவைகளும் மலமன்றோ? மலம் என்பது அழுக்கன்றோ? ஆணவமாகிய அழுக்கை, மாயா மலமாகிய அழுக்கினாலே எப்படிப் போக்கலாம்?

     

    வண்ணான், கோடிப் புடவையிலே சாணியையும் உவர் மண்ணையும் பிசறி, மிகக் கறுத்தது என்னும்படி செய்து, முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக்கையும் போக்கி, அப்புடவையை மிக வெண்மையுடையதாகச் செய்வன். அதுபோலவே சிவபெருமான் ஆன்மாவினிடத்தே மாயா மலத்தைக் கூட்டி, அநாதி பந்தமாகிய ஆணவமலத்தோடு ஆதிபந்தமாகிய மாயா மலத்தையும் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாம் தன்மைப் பெருவாழ்வுடையதாகச் செய்வார்.

     

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்