logo

|

Home >

shaiva-vina-vidai >

sivamoolamantra-iyal

சிவ மூலமந்திர இயல்

 

  1. சைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது?

     

    திருஐந்தெழுத்து

     

  2. திருவைந்தெழுத்தாவது யாது?

     

    நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் வேதத்தின் நடுவனதாகவும், நால்வர் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் எல்லோரும் எப்போதும் எண்ணத்தக்கதாகவும் உய்தி தருவதாகவும் உள்ள திருவைந்தெழுத்து மந்திரம் ஆகும். இது தூல பஞ்சாக்கரம் எனப்படும். சூக்குமம், காரணம் என்று சிறப்புப் பஞ்சாக்கரங்கள் உண்டு. குருநாதர் மூலம் திருவைந்தெழுத்து உள்ளிருத்தப் பெற்றவர்கள் அந்த திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சாலச் சிறந்தது.

     

  3. திருவைந்தெழுத்தைக் எண்ணத் தகுதி உடையவர் யாவர்?

     

    எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோரும் மனதில் அன்புடன் திருவைந்தெழுத்தை எண்ணி இருக்க வேண்டும். குறிப்பு: கீழ் வரும் விடைகள் மந்திர ஜபம் செய்யும் முறையைச் சொல்லுகின்றன. மற்றபடி எங்கும் எப்போதும் எல்லோரும் திருவைந்தெழுத்தை எண்ணி இருத்தலே சிறப்பு. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் - சம்பந்தர்.

     

  4. திருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாகக் கணிக்க வேண்டும்?

     

    நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.

     

  5. எப்படி இருந்து கணிக்க வேண்டும்?

     

    முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு அமைதியாகச் சீரான மூச்சுடன் கணிக்க வேண்டும்.

     

  6. திருவைந்தெழுததைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?

     

    மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.

     

  7. நிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்?

     

    உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.

     

  8. மந்திர உபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?

     

    குருவை வழிபட்டு அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்து கொண்டே செபித்தல் வேண்டும்.

     

  9. திருவைந்தெழுத்தை முறையாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?

     

    நூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

     

  10. கணித்தற்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?

     

    செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். ( விரலிறை - கட்டைவிரல் ).

     

  11. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?

     

    உருத்திராக்க மணி கொண்டு செய்வது உத்தமம்.

     

  12. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?

     

    இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தக்கதாகும். இல்வாழ்வான் நூற்றெட்டு மணி, ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.

     

  13. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?

     

    இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டு முக மணியும், பதின்மூன்று முக மணியும் செபமாலைக்கு ஆகாவாம். அன்றியும் எல்லா மணியும் ஒரே விதமாகிய முகங்களை உடையனவாகவே கொள்ளல் வேண்டும். பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை ஆகாது.

     

  14. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

     

    வெண்பட்டிலேனும், பருத்தியிலேனும் இருபத்து ஏழிழையினால் ஆக்கிய கயிற்றினாலேனும் கோத்தல் வேண்டும்.

     

  15. செபமாலையை எப்படி செய்தல் வேண்டும்?

     

    முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோத்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு மணி என்று பெயர்.

     

  16. செபமாவது யாது?

     

    தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.

     

  17. மந்திரம் என்பதற்கு பொருள் யாது?

     

    நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது ).

     

  18. மானசமாவது யாது?

     

    நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.

     

  19. உபாஞ்சுவாவது யாது?

     

    தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.

     

  20. வாசகமாவது யாது?

     

    அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

     

  21. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

     

    ஆம். வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.

     

  22. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

     

    வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும், மரப்பலகை, துணி, இரத்தினக் கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்றதொன்றிலே முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ளே வலப்புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.

     

  23. எப்படி இருந்து செபித்தல் ஆகாது?

     

    சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்.

     

  24. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

     

    பிறர் கண்ணுக்கு புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகச் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனதிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயகமணி அடுத்த, முகம் மேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும், முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைபபட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும்போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படலாகாது.

     

  25. திருவைந்தெழுத்து செபத்தால் பயன் என்ன?

     

    திருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார்.

     

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்