logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வேதஸார சிவஸ்தோத்ரம் - உரை

சிவமயம்

ஆதிசங்கரர் அருளியது

தமிழ் உரை:

ஞானபாஸ்கர பிரம்மஶ்ரீ பி. என். நாராயண சாஸ்திரிகள்


சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]


       பசூனாம் பதிம் பாபநாசம் பரேசம்

              கஜேந்த்ரஸ்ய க்ருத்திம் வஸானம் வரேண்யம்,

       ஜடாஜூடமத்யே ஸ்புரத்காங்க வாரிம்

              மஹாதேவமேகம் ஸ்மராமி ஸ்மராரிம்.                    1

 

1.     எல்லா ஜீவர்களுக்கும் தலைவனாயும், பாபத்தைப் போக்கடிப்பவராயும், உயர்ந்த யானையின் தோலை உடுத்தியிருப்பவரும், தலைமுடியின் நடுவில் ஒளிவிடுகின்ற கங்கை நீரைக் கொண்டவராயும், காமனையெரித்தவராயும் ஒரே கடவுளாயுமுள்ள பரமேச்வரனை மனதில் நினைக்கின்றேன். (குறிப்பு) “இமம் பசும் பசுபதே தே” என்னும் யஜுர் வேதம் 3-வது காண்டத்தில் உள்ள வாக்யமே இந்த சுலோகத்தில் சொல்லப்படுகிறது. ஜீவர்களுக்குத் தலைவனான பசுபதிட்யின் அனுமதி பெற்றே யாகங்கள் நடத்த வேண்டும் என்பது அந்த மந்திரத்தின் பொருள்.

 

       மஹேசம் ஸுரேசம் ஸுராராதிநாசம்

              விபும் விச்வநாதம் விபூத்யங்க பூஷம்

       விரூபாக்ஷமிந்த்வர்க்க வஹ்னித்ரிநேத்ரம்

              ஸதானந்தமீடே ப்ரப்ம் பஞ்சவக்த்ரம்.                       2

 

2.     கடவுள்களுக்கெல்லாம் தலைவரும், தேவர்களுக்கு அரசரும், தேவர்களின் பகைவர்களை அழிப்பாவரும், எங்கும் நிறைந்தவரும், உலகத்திற்குத் தலைவரும், உடலில் திருநீற்றையணிந்தவரும், மிக அழகிய கண்களை உடையவரும், சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூவரையும் கண்களாக உடையவரும், எப்பொழுதும் மகிழ்ச்சியோடிப்பவரும், எல்லாவற்றையும் தன்னிடத்தே கொண்டவரும் ஐந்து முகங்களும் உள்ள பரமசிவனைத் துதிக்கின்றேன்.

 

 

       கிரீசம் கணேசம் கலே நீலவர்ணம்

              கவேந்த்ராதிரூடம் குணாதீதருபம்,

       பவம் பாஸ்வரம் பஸ்மனா பூஷிதாங்கம்

              பவாநீகலத்ரம் பஜே பஞ்சவக்த்ரம்.                          3

 

3.     கைலையங்கிரிக்குத் தலைவரும், பூதக்கூட்டங்களுக்கு அரசரும், கழுத்தில் நீலநிறமுடையவரும், சிறந்த காளை மாட்டின் பேரில் ஏறிக் கொள்பவரும் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவரும், உலகம் உண்டாவதற்கு காரணமானவரும், பவாநி தேவியை மனைவியாயுடையவரும், ஐம்முகத்தோனுமான பரமேச்வரனைத் தொழுகின்றேன். (குறிப்பு) யஜுர் வேதத்திலுள்ள (4-வது காண்டம்) சதருத்ரம் என்னும் ருத்ர ப்ரச்னத்தில் கிரிசா, கணபதி:, நீலக்ரீவ:, பவ:, முதலிய பல பெயர்களால் துதிக்கப்படும் பரமேச்வரனே இந்த சுலோகத்தில் சொல்லப்படுகின்றார்.

       சிவாகாந்த சம்போ சசாங்கார்த்தமெளலே

              மஹேசான சூலின் ஜடாஜூடதாரின்,

       த்வமேகோ ஜக்த்வ்யாபகோ விச்வரூப:

              ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ பூர்ணரூப.                           4

 

4.     மங்களரூபிணியான பார்வதியின் நாயகரும், சுகத்திற்கிருப்பிடமானவரும், பிறைச்சந்திரனை தலையில் கொண்டவரும், பிரம்மா முதலிய கடவுளுக்கெல்லாம் கடவுளானவரும், சூலத்தைக் கையிலுள்ளவரும், ஜடை முடியை உடையவருமான நீர் ஒருவரே உலகத்தில் நிறைந்தவரும், உலகமேயானவரும், எங்கும் நிறைந்து உருவமுள்ள பிரபு, என்னிடம் கருணை காட்டுவீராக.

      (குறிப்பு) “ருதரும் ஸத்யம் பரம்ப்ரம்ம” எனும் தைத்திரீய உபநிஷத் 4-வது ப்ரச்ன வாக்கியத்திலுள்ள பரமேச்வரனே இங்கு சொல்லப்படுகிறார்.

       பராத்மானமேகம் ஜகத்பீஜமாத்யம்

              நிரீஹம் நிராகாரமோங்காரவேத்யம்,

       யதோ ஜாயதே பால்யதே யேன விச்வம்

              தமீசம் பஜே லீயதே யத்ர விச்வம்.                          5

 

5.     முதலானதும், ஒன்றேயான பரமாத்மாவும் உலகமுண்டாவதற்குக் காரணமானவரும், ஆசையற்றவரும் உருவமற்றவரும், “ஓம்” என்னும் எழுத்தால் அறியத்தக்கவரும் எங்கிருந்து உலகமுண்டாயிற்றோ எதனால் காப்பாற்றப்பட்டதோ எங்கு மறைகிறதோ அந்த அத்வைத ஆத்மரூபியுமான பரமேச்வரனைத் தொழுகிறேன்.

      (குறிப்பு) தைத்தரீய உபநிஷத்தில் பிரணவமே பிரம்மம் என்றும், எங்கும் நிறைந்து பரமாத்மாவிடமிருந்தே காணப்படுகின்ற உலகம் உண்டாக்கிக் காக்கப்பட்டு அடங்கி விடுகிறதும், உருவம் பெயர் குணம் ஒன்றுமில்லாது எங்கும் நிறைந்து பரமாதமா ஒன்றே உண்மை என்று கூறப்பட்டுள்ளதையே ஶ்ரீ ஆசார்யாள் இந்த சுலோகத்தில் கூறியுள்ளார்.

       பூமிர்ந சாபோ வஹ்னிர்ந வாயு:

              சாகாசமாஸ்தே தந்த்ரா நித்ரா,

       சோஷ்ணம் சீதம் நதேசோ வேஷோ

              யஸ்யாஸ்தி மூர்த்திஸ்த்ரிமூர்த்திம் தமீடே.       6

      

6.     பூமி, ஜலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களாயுமில்லை. சோம்பல், தூக்கம், சூடு, குளுமை, இருப்பிடம், உருமாற்றம் ஒன்றும் பரமேச்வரனுக்கில்லை. மூன்று கடவுள் உருவம் கொண்ட அந்த பரமேச்வரனைத் துதிக்கின்றேன்.

      (குறிப்பு) தைத்திரீயோபநிஷத் 4-வது ப்ரசனம், விரஜாஹோம ப்ரகரணத்தில் சொல்லப்படும், எல்லாவற்றையும் கடந்த பரமாத்மாவான பரமேச்வரனே இந்த சுலோகத்தில் சொல்லபடுகிறார்.

அஜம் சாச்வதம் காரணம் காரணானாம்

              சிவம் கேவலம் பாஸகம் பாஸகானாம்,

       துரீயம் தம: பாரமாத்யந்தஹீனம்

              ப்ரபத்யே பரம் பாவனம் த்வைதஹீனம்.                    7

 

7.     பிறப்பற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், காரணங்களுக்கெல்லாம் காரணரும், ஒளியைத் தருகிற சூரிய சந்திரர் முதலியவர்களுக்கும் ஒளியைத் தருபவரும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் கடவுள்களுக்கு மேலான நான்காமவரும், முதல் முடிவற்றவரும், மிகப் பரிசுத்தமானவரும், இரண்டற்றவரும், பரமாத்மாவுமான பரமேச்வரனைச் சரண் அடைகிறேன்.

      (குறிப்பு) “ந தத்ர ஸூர்யோ பாதி” என்னும் கடோபநிஷத்தில் சொல்லப்பட்ட வேத வாக்யப்படி சூரியன், சந்திரன் நக்ஷத்திரங்கள் நெருப்பு, மின்னல் எல்லாம் பரமாத்மாவிடமிருந்து ஒளியைப் பெற்றே பிரகாசிக்கின்றன. என்னும் வேதத்தின் பொருளையே ஆசார்யாள் இங்கு விளக்கியுள்ளார்.

      

 

 

நமஸ்தே நமஸ்தே விபோ விச்வமூர்த்தே

              நமஸ்தே நமஸ்தே சிதானந்த மூர்த்தே,

       நமஸ்தே நமஸ்தே தபோயோககம்ய

              நமஸ்தே நமஸ்தே ச்ருதிஞானகம்ய.                       8

 

8.     எங்கும் நிறைந்தவரும், உலகமாய் ஆனவருமான உமக்கு வணக்கம். அறிவு மகிழ்ச்சி வடிவான உமக்கு வணக்கம். தவத்தினாலும் யோகத்தினாலும் அடையத் தகுந்த உமக்கு வணக்கம். வேதத்தில் கூறப்பட்டுள்ல அறிவினாலேயே அடையத் தகுந்த உமக்கு வணக்கம்.

      (குறிப்பு) “விக்ஞாநாதாநந்தோ ப்ரம்மயோநி:” என்னும் தைத்திரீய உபநிஷத் வாக்யம் ஞானத்தினாலேயே ப்ரம்மத்தையறிந்து ப்ரம்மமே ஆகலாம் என்று கூறியுள்ளதையே இங்கு ஆசார்யாள் சொல்லியுள்ளார்கள்.

       ப்ரபோ சூலபாணே விபோ விச்வநாத

              மஹாதேவ சம்போ மஹேச த்ரிநேத்ர,

       சிவாகாந்த சாந்த ஸ்மராரே புராரே

              த்வதன்யோ வரேண்யோ மான்யோ கண்ய:.           9

 

9.     எல்லாவற்றிற்கும் தலைவனான சூலத்தைக் கையில் ஏந்திய உலகத்திற்கு அரசனான மஹாதேவன் – மஹேசன் – முக்கண்ணம், மங்களையான பார்வதியின் கணவன், அமைதி பெற்றவன், காமனையெரித்தவன், முப்புரங்களையழித்த்வனான பரமேச்வரனான உன்னைத் தவிர உயர்ந்தவராகவோ கெளரவிக்கத் தக்கவராகவோ வேறு யாரையும் நான் எண்ணமாட்டேன்.

      (குறிப்பு) “கைவல்யோபநிஷத்” “உமா ஸஹாயம்” என்று ஆரம்பிக்கும் வாக்யத்தினால் உமையோடு கூடிய பரமேச்வரனே எல்லா முறையாலும் மேலாக அடையத்தக்கவர் என்று கூறியிருப்பதையே இங்கு குறிப்பிட்டு உள்ளார்,

       சம்போ மஹேச கருணாமய சூலபாணே

              கெளரீபதே பசுபதே பசுபாச நாசின்,

       காசீபதே கருணயா ஜகதேததேக:

              த்வம் ஹம்ஸி பாஸி விததாஸி மஹேச்வரோஸி.         10

 

10.    சூலத்தைக் கையில் கொண்ட கருணையே உருவான கெளரி நாயகனே, ஜீவர்களுக்குத் தலைவனே, ஜீவர்களின் கர்மாவாகிற கட்டையழிக்கிற காசிநகரத் தலைவனே, ஜீவர்களிடம் உள்ள தயையினால் நீயே உண்டு பண்ணி, காத்து உன்னுள் அடக்கி எல்லோருக்கும் மேலான நிகரற்ற பரமேச்வரனாய் விளங்குகிறீர்.

      

தவத்தோ ஜகத்பவதி தேவ பவ ஸ்மராரே

              த்வய்யேவ திஷ்டதி ஜகன்ம்ருட விச்வநாத,

       த்வய்யேவ கச்சதி லயம் ஜகதேததீச

              லிங்காத்மகே ஹர சராசரவிச்வரூபின்.                    11

     

11.    காமனையெரித்த தேவனே! ‘பவ’ என்னும் பெயருடைய உம்மிடமிருந்து உலகம் உண்டாகிறது. ‘ம்ருட’ என்னும் பெயரிலிருந்து காக்கப்படுகிறது. ‘ஹர’ என்னும் பெயரில் இந்த உலகம் ஒடுங்குகிறது. அசைவது அசையாததுமான இந்த உலகத்தின் மூன்று தொழில்களுக்கும் மூல காரணமாயுள்ளது உன் லிங்க உருவான வடிவமேயாகும்.

      வேத ஸாரம், வேதத்தின் முடிவான உபநிஷத்துகள், அதில் சொல்ப்படுவது உருவமற்ற ஒன்றேயான பரம் பொருள். அந்த இரண்டற்ற பரமாத்மா தான் பரமேச்வரன் எனப்படுகிறார். ஆகவே ஶ்ரீ சங்கரபகவத்பாதர்கள் வேத ஸாரமான உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட சிவபிரான் மீதான இந்த துதியைப் படித்து இம்மை மறுமைப் பயனை அடையவே செய்திருக்கிறார்கள்.

Related Content

சிவ தண்டகம்

சிவாஷ்டகம் - உரை

திருவாசகம் தமிழ் உரை & Thiruvasagam English Translation

சிவஞான போதம் - தமிழ் உரை & English Translation

ஶ்ரீ சிவ கேசாதிபாதாந்த வர்ணன ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்