உ
சிவமயம்
இது, திருவாரூரின்கண் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய தியாகராசர் தோத்திரம். கழிநெடில் என்பது ஐந்து சீர்க்கு மேற்பட்ட அடிகலுள்ளது. சொற்சுவையும் பொருளமைதியும் உள்ள இத்தோத்திரத்தை இயற்றிய ஆசிரியரைக் கமலை ஞானப்பிரகாசர் என்பர். போதியசான்று கிடைத்திலது.
தண்ணார்மதியும் பகீரதியும் சாந்தமெழுது திருத்தோடுந்
தவிராதணிமும் மாலிகையுந்1 தம்பேர்கொடுத்த கரைத்ததூசும்
[1 தியாக விநோதனென்னும் திருநாமத்தை எழுதிய சேலை.]
பண்ணார்2 தவளப்பாளிதமும் பதுமராகப் பலபணியும்
பசும்பொன் குயிற்றுநவரத்னப் பணிவாங்கதமு மணிச்சிலம்பு
[2 தவளப்பாளிதம் பச்சைக்கர்ப்பூரம்.]
மெண்3ணாடரவக் கிண்கிணியுமிழைத்த சுடர்ப்பூ வாசிகையு
மிமைத்த 4வீரகண்டயமு மிணங்குமிடங்க டொறுந்தரித்துக்
[3 ஆடாவக்கிண்கிணி தியாகர் திருவடிகளிலணிவது.
4 வீரகண்டையம் – தியாகரின் வாட்படை.]
கண்ணாரமுத மயலிருக்கக் கனகவரியா சனத்திருக்குங்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (1)
திங்களெனவெண் குடைநிழற்றச் சிங்காதனத்தி லினிதேறித்
தேவியிருக்க மகனிற்கச் செழித்தகவரிப் பணிமாறத்
தங்கத்தகளி விளக்கேந்தித் தளருமிடையா ரணிநெருங்கச்
சங்குபடக மெக்காளந்தாளஞ் சின்னம் துடிமுழவம்
பொங்குகடலி னொலியடங்கப் பிறவின்னியங்கள் மழைகாட்டப்
புவனாதிபர்கள் திசைபோற்ற புரைதீர்பருகிக் கடலாடிக்
கங்குலுதவுந் 5திருவந்திக் காப்புக்கண்டு வீற்றிருக்குங்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (2)
[5 திருவந்திக்காப்பு – மாலைக்காலத்தில் தியாகருக்கு நடைபெறும் அலங்காரம். இத்தரிசனம் மிக்க விசேடமுடைத்தென்பர்.]
மோனவிரதந் திசைகடொறும் மொய்த்தோர்பிடிக்க வோவியம்போல்
முத்தநகையார் புடைசூழ முறையேநந்தி கணம்பரவ
நானநறிய 6பசுந்தென்றல் நடக்குந்திருச்சா லகத்திடையே
நாலுமறையும் மொருமூவர் நாதத்தமிழும் புறத்தமிழும்
[6 தென்றற்காற்று திருமேனியில் வீசுமாறு சாளரத்தருகில் வீற்றிருக்கச் செய்து வழிபடுதல்.]
பானல்விழியார் சங்கீதப் பாட்டும் பற்றுமணியாழும்
பலதந்திரிகொள் விணைமுதல் பஞ்சக்கருவி கஞ்சமுறக்
கானமழலை தவழ்ந்துகுழைக் காதுநிறைய வீற்றிருக்குங்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (3)
விதித்தநாளில் வருந்தேவர் மிடைந்ததிருக்கா வணத்தில்நின்று
வேளைதெரிய வேத்திரக்கை மேலோரருளிப் பாடென்ன
பதித்தமணி மாலிகைமுன்றிற் பரவிநெருங்கு மவரவர்க்கு
பணித்தமுறையே முடித்தூசும் பழுக்காயிலையும் மடிநீட்டி
மதித்தவகத்து ளடியாரும் புறத்து ளடியாருமருவ
வாழுங்கோயின் முதன்மையரும் மற்றுளோரும் புடைசூழக்
கதித்த வீரசோழியத்திற் கவரியசைய வீற்றிருக்கும்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (4)
பாந்தள்நெளியப் பாரசையப் பதினாலுலகு மொருங்கீண்டப்
பரமர்முழவ மிசைந்தேங்கப் பலமாமறையும் புகழ்பாட
மாந்தரரவென் றெடுத்த்வொலி வானம்பிளந்து திசைதூர்க்க
வகுத்தகனக மதிலெனவே வளைந்ததிரைக்குள் வந்தேறித்
தீந்தந்திமிதோ திமிதெனவே திக்குநெருங்க வசைந்தாடிச்
செம்பொ னடிக்காயிர முதவி செருக்கிபவனி விளையாடிக்
கந்தாமணிமா மண்டபத்திற் கவரியசைய வீற்றிருக்கும்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (5)
வழுத்தவிரவு செனங்களுக்கு வரைசூழ்புவனம் சிறிதெனவே
வந்துவந்து மணிமாட மறுகுதெற்றி யாடரங்கம்
பழுத்தசோலை யெங்கெங்கும் பரவிநின்றார் நின்றபடி
பணியப்பரவப் பங்குனியைப் பலரும்புகழப் பணையார்ப்ப
அழுத்துமகுட மழைகிழிக்க ஆடுங்கொடிகள் திசையளக்க
அசையுமசையா தெனநடக்க ஆழிபுரளுந் தொறுஞ்சேடன்
கழுத்துநெரிய வரும்பெரிய கனகத்தேரி லுலாப்போதும்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (6)
சுடருமந்தா கினிச்சடையிற் சுவறப்பெருமைக் கறுநதியும்
சுளித்தவேணி நனைத்திருக்குந் தொன்னீர்க்குணர்ந்து பொருவபோ
லுடையபஞ்சக் குரோசத்தி னுள்ளேயடங்காப் பழமலையை
யுருட்டியினிமாங் கனிகனிந்தே யூறுமமுதும் பசுந்தேனும்
வடிகொளினிய சுவைப்பாலும் மதுரத்தயிரும் நறுநெய்யும்
வழிபாளிதச் சந்தனச்சேறு மருவுபுனலுங் கலித்தோடிக்
கடல்வாய்மடுப்ப லபிஷேகம் கண்டுகனகா சனத்திருக்கும்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (7)
பாலுக்கினிய மொழிகாணப் பரமானந்தச் சுடர்வீசப்
பகுத்துவகுத்த பல்லுயிருட் பலமாபரிசு வெளிதோன்ற
நாலுக்கிசைந்த மறைபரவ நதியுமதியு மிடைததும்ப
நகைசேர்பாடகக் குண்டலந்தவழ நாதமணிக் கிண்கிணியசைய
மாலுக்குரிய படகியம்ப மதங்கமஞ்சு முக்குடங்கள்
வட்டத்துடனே யிசைந்தேங்க மழலைமுழவஞ் சதிகாட்டக்
காலுக்கிசைய 7வசபைநடம் காட்டிக்கனகா சனத்திருக்கும்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (8)
[7 அசபாநடம் ஒர்வகை நடனம் தியாகர்க்குரியது.]
பொருநீர்க்கடல்கள் புகுந்தாலும் போதாதள்ளித் தாவவெனப்
போந்தோர் புற்றின்குட திசையிற்பொய்கை படிந்துபடிந்தேறி
வருமூவினையின் வேர்சாய வந்துவந்து பணிந்தேதம்
மற்றப்போய தேவரெல்லாம் மகுடமிழைய நெருக்குண்டு
பெருமாநந்தி கணம்புடைக்கும் பிரம்பினடிகொண்டய லொதுங்கப்
பேரானந்த முலகடங்கப் பெறும்பங்கு னியுத்தரநாளில்
கருதாடரவக் கிண்கிண்க்கால் காட்டியரவா சனத்திருக்கும்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (9)
வாணாளிரந்து மவனிரங்க மலரோன்விதியா திளைப்பாற
வகுத்தவகுத்த பல்லுயிருள் மருவும்பாவக் கதிசேரப்
பூணார்முலையார் பல்லாண்டுபோற்றி யிசைப்பப் பதஞ்சலியும்
புலியும்பசுவும் முனிவருடன் போந்துபணிந்து பணிந்தேகச்
சேணாடமரர் புடைசூழச் சிலையார்திருவா திரைநாளிற்
றிருவாசகப்பூந் தேன்பருகிச் செந்தாமரைக் கண்ணனுமின்னுங்
காணாதரவக் கிண்கிணிக்கால் காட்டியரியா சனத்திருக்குங்
கருணாநிதியை யாரூரிற்கண்டார் பிறவிக் காணாரே. (10)
[ பங்குனி யுத்தரமும்- திருவாதிரையும் – பாதசேவைக்குரியநாட்கள். ஆடவக்கிணிகிணிக்கால் – ஆடாவமும் கிண்கிணியும் அணிந்த திருவடியென்று பொருள் கொள்க.]
முற்றிற்று.