logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி

திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்


Acknowledgements: 
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany 
for providing us with a photocopy of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S. Karthikeyan, K. Kalyanasundaram, V. Devarajan and S. Anbumani
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/  
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவமயம்

திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி

(பழைசை - பட்டீச்சரம்;
இத்தலம் கும்பகோணத்தின் தென்மேற்கிலுள்ளது)

திருச்சிற்றம்பலம்

		அழகியவிநாயகர் துதி.

2544	ஓங்கு பழனத் திருப்பழைசை யுறையும்
		பெருமா னிறையருட்குப்,
	பாங்குபெறுவா னொருபதிற்றுப்
		பத்தந் தாதி யுரைசெய்ய
	வாங்கு மொருகோட் டிருசெவிமும் மதநால்
		வாயைங் கரத்தலங்க,
	டாங்கு சோதிக் குணப்பெருங்குஞ்
		சரக்கன் றடிகடலைக்கொள்வாம். 				1


			நூல்

2545	பூவார் முளரிப் புத்தேளும்புயங்க வணைமேற்
		றுயில்வோனும்,
	நாவார் துதிசெய் தஞ்சலிக்கு நலமார்
		பழைசை நாயகனே,
	தேவா தேவர்க் கிறைவாநின் றிருத்தாள்
		கருத்தி லிருத்தேற்கு,
	மாவா வென்றிங் கருள்புரிந்தா யதுதா
		னின்பே ரருட்கழகே. 					1

2546	அழகா ருமையோர் பங்குடையோ யமர
		ரேத்துந் திருப்பழைசைக்,
	குழகா கொன்றை முடிமிலைந்த கோமா
		னேநின் னடியரொடும்,
	பழகா திருக்கும் வன்னெஞ்சப் பாவி
		யேனைப் பவமென்னுந்
	தழல்கா யழுவத் தழுத்தாது தடுத்தாட்
		கொள்ள றக்கதே. 					2

2547	தக்க னியற்று மகஞ்சிதைத்தாய் தறுகட்
		கூற்றந் தனைவதைத்தாய்,
	செக்கர் முகிலேய் சடைமுடிமேற் றிங்கட்
		கொழுந்தோடரவணிந்தாய்,
	முக்க ணுடையாய் திருப்பழைசை
		முதல்வா நின்றாட்கன்பில்லாப்,
	பொக்க முடையே னானாலும்
		போற்றிக் கோடல் கடுனனக்கே. 				3

2548	கடங்கால் பொருப்பி னுரிபோர்த்தாய்
		கண்ணார் நெற்றிப்புண்ணியனே,
	விடங்கா லரவ மரைக்கசைத்த
		விடங்கா தடங்கணுமைபாகா,
	தடங்கா மருவுஞ் செழும்பழைசைத்
		தலைவா பல நாணினைப்புகழா
	தடங்கா வுள்ளம் பொறிவழியே
		யணுகத் திரிந்தேணுறவுள்ளே. 				4

2549	உள்ளம் பொறியின் வழிநடையுற்
		றோடச் சுழன்றுமடமாதர்,
	கள்ள விழியின் வலைப்பட்டுக் கடையே
		னாகித் திரிவேனைத்,
	தெள்ளு தமிழ்நற் றொடைப்பாடல் செய்து
		பணியப் பணித்தாண்டான்,
	பள்ளவயற்கண் வளைமுத்தீன்
		பழைசைப் பதிவாழ் பெருமானே. 				5

2550	மானேர் நோக்கி யொருபாகா மறைவாய்
		முழக்க நிறைபழைசைக்,
	கோனே பொதுவிற் குனிக்குமருட் கூத்தா
		முக்கட்கொழுக்கரும்பே,
	தேனே கனியே யன்பருளந் தித்தித்
		திருக்குந்தெள்ளமுதே,
	வானே பெறினும் யானின்றாள்
		வழுத்து மன்பின்மாண்பருளே. 				6

2551	மாணா வுள்ளப் பறவைமட
		மானார்மையற் கண்ணிவிழ,
	நாணா துழன்று தடுமாறி நவவாய்ப்
		புழுக்கூ டதுசுமந்து,
	வீணாள்கழிக்கு மறிவில்லேன் மெய்யா
		பழைசை யையாநின்,
	பூணார் மலர்த்தாண் முடிக்கணிந்து
		புகழப் பெறுநா ளெந்நாளோ. 				7

2552	என்னா யகனை விண்ணவருக் கிறையா
		யவனை மறைநான்கு,
	முன்னா நிற்கும் வடிவானை மூவா
		தானை மூத்தானைப்,
	பொன்னார் மேனிப் புய்லும்விரைப்
		பூந்தா மரைவே தனுநாடிப்,
	பன்னாடிரிந்துங் காணானைப்
		பழைசை நகரிற் கண்டேனே. 				8

2553	கண்டேன் பழைசைப் பதியானைக் கைகான்
		முடங்குமறிவிலிவாய்த்,
	தண்டே னெடுங்கோட் டிருந்தொழுகுந்
		தன்மையெனக்கண் டுளங்களிப்புக்,
	கொண்டேன் சிரமே லிருகரமுங் குவித்தேன்
		குளித்தேன் முகமலர்ந்தேன்,
	விண்டேன் பண்டை வினைக்கடலை
		வேண்டேன் மற்றைத் தேவரையே. 			9

2554	வரைமா திருக்கு மொருகூறு மழுமா
		னணிந்த திருக்கரமு,
	மரைசேர் வேங்கை யதளுடையு மரவா
		பரணத் தகன்மார்பும்,
	விரைசேர் கொன்றை முடியுமரை
		மேவுமடியும் வெளித்தோற்றி,
	நரைசேர் விடையான் றிருப்பழைசை
		நகரி லருளப் பெற்றேனே. 				10


			வேறு

2555	பெற்ற மேறிய பிரானையெம் மிறைவனைப்
		பெய்வளைகூறானைச்,
	சுற்று நாககங் கணத்தனைப் பழைசைவாழ்
		சுந்தரப் பெருமானை,
	யற்ற மின்மதி முடியனைப் பொடியணி
		யையனைக் கரங்கூப்பிப்,
	பற்றெ லாமறப் பற்றுவா ரெவரவர்
		பவக்கடல் கடந்தாரே. 					11

2556	கடத்த யானையின் சருமமே யங்கக
		பாயெனக் கொண்டானைப்,
	படத்த ராவணி புயத்தனை நயத்திருப்
		பழைசையம் பதியானை,
	நடத்த பாதனை வாழ்த்தியன் பொடுதின
		நாடுவா ரெவரேனும்,
	வடத்தின் மேற்றுயின் மாலயன் முதற்சுரர்
		வாழ்த்தவீற் றிருப்பாரே. 					12

2557	இருப்பை நேரும்வன் னெஞ்சனாய்
		மானமி லீனனாயெழிலாரும்,
	மருப்பை நேர்முலை மாதர்பா லாதரம்
		வைத்துழன் றலைவேனைக்,
	கருப்பை நீங்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்
		கண்ணிசூட்டிடச்செய்தான்,
	பொருப்பை வாங்கிய புராதனன்
		பழைசைவாழ்புண்ணியப் பெருமானே. 			13

2558	பெருகு மையலம் பறவைவீழ்ந் தறிவெனும்
		பெருங்கலந் தகர்ந்தோடத்
	திருகு வெஞ்சினத் தீவினைச் சுறவுவாய்
		திறந்துணச் செயலின்றிக்,
	கருகு நாயினே னுருகியுன் சிவானந்தக்
		கனிதருசெந்தேறல்,
	பருகு மாறளித் ததுதிருப் பழைசைவாழ்
		பரம்பரன் விளையாட்டே. 				14

2559	ஆட்ட மன்றிடைச் செய்பவன்
		பழைசைவா ழந்தணனந்தாத,
	நாட்ட மூன்றுடைப் புண்ணிய னாலய
		நண்ணியஞ் சலிப்பாரே,
	வாட்ட மின்றியிப் புவனபோ கந்துய்த்து
		வானிடைப் புகுந்தாங்கு,
	வேட்ட போகமுந் துய்த்துப்பின்
		சிவபுர மேவிநன் குறைவாரே. 				15

2560	வாரு லாமுலை மாதர்பா லாதரம்
		வைத்துழன் றலைவீர்காள்,
	தேரு லாமணி மறுகும்பொன் னெயிலுஞ்சூழ்
		திருப்பழைசையிற்சென்றே,
	காரு லாமணி கண்டனைக் கண்டுகண்
		களிப்புறத்தொழுதன்னா,
	னேரு லாம்புகழ் பாடுவீ ராடுவீ
		ரெழுபிறப் பறுமாறே. 					16

2561	மாறு கொண்டெனை வஞ்சித்து நின்றனை
		மதியிலா மடநெஞ்சே,
	தாறு கொண்டபைங் கமுகடர் பழைசையிற்
		சார்ந்துசந்தனக்கொங்கை,
	கூறு கொண்டதம் பிரான்டி கண்டுகை
		குவித்துக்கண் ணீர்வார,
	நீறுகொண்டணிந் துருகிலை யெங்ஙன
		நிறையருள் பெறுவாயே. 					17

2562	வாயி னாலுனை வாழ்த்தவுஞ் சென்னியால்
		வணங்கவு மடங்காச்செந்,
	தீயில் வீழ்மெழு கொத்துள முருகவுஞ்
		செய்தவமுனமில்லேன்,
	பேயி னேனிய தருளுறேன் பழைசைவாழ்
		பிறைமுடிப் பெம்மானிற்,
	றோயு மாறினி நின்னடிக் காம்பவந்
		தோன்றிடவருள்வாயே. 					18

2563	அரிதுமானிட யோனியிற் சனித்திட லதனினு மரிதாகு,
	முரிய வாகிய வுறுப்புக்கள் குறைபடா துதித்துநான் மறையாதி,
	விரியு நூலறிந் தநித்திய நித்திய விவேகமுற் றிருபற்றும், பரிய மால்
	பணி பட்டிலிங் கேசர்தாள் பற்றிநின் றிடறானே. 			19

2564	தான வாறிழி தரவரு வாரணச் சருமமே னியிற்போர்த்த,
	ஞான வாரியே யன்பருக் கமுதமே நற்பழை சையின்வாழ்வே,
	கானலார்குழ லம்மையோர் பங்குடைக் கடவு ளெல் லாம்வல்ல,
	ஞானமூர்த்திநீ யென்னையு மடிமைகொண் டாளுத லரிதாமோ. 	20


			வேறு

2565	அருவரை யேய்க்குங் குஞ்சரவுரித்தா
		ரமுதொழு கியமதி முடித்து,
	மருவிய வரிண மழுவணி கைத்து
		மாண்டசெஞ் சூட்டகிப் பூட்டு,
	கருநிற வேனங் காணருந் தாட்டுக்
		கனலவிர் மத்தகக்கட்டு,
	தருவடர்பழைசை யென்னவென் னுளத்துஞ்
		சார்ந்தினி திருந்தபே ரொளியே. 				21

2566	ஒளிபெறு நீலப் பொருப்பென நடக்கு
		மொழுகுமுக் கடத்தகுஞ் சரத்தை,
	அளிபெறு முளரி நாளநூல் கைக்கொண்டசைத்திட
		வொருமுடச் சிறுவன்,
	தெளிவுற நினைத்த தேய்க்குமாலடியேன்
		சிற்றறிவா னின்றன் பெருஞ்சீர்,
	களியுறப் பாடி நின்மலரடிகள் கைக்கொளல்
		பழசையம் பரனே. 					22

2567	அம்பரம் புலித்தோ லணிகல மரவ மாமையோட்
		டொடுமுழு வெலும்பு,
	வெம்புசெந் தழல்வெய் யவன்மதி நாட்டம்
		விரும்புமூண் வெய்யவெங் காளம்,
	பம்புவெம் பேய்கள் படையெனி னருளார்
		பட்டிலிங் கேசனைப் பழிச்சு,
	மும்பர்தம் பிரானை மண்ணுல கடியா
		ருற்றுநின் றேத்தலெவ் வாறே. 				23

2568	எவ்வமாம் பிறவித் தொடுகட லிடைவீழ்ந்
		திந்திரி யச்சுற வரித்துக்,
	கவ்வநீள் வினையின் சுழலகப் பட்டுக்
		கதறுவேற் கின்னருள் புரிந்தான்,
	மவ்வலங் கோதை தன்னையோர் பாகம்
		வைத்தவன் பட்டிலிங் கேசன்,
	தெவ்வர்த மரண மூன்றும் வெந்தொழியச்
		சிரித்தவன் றேவர்தம் பிரானே. 				24

2569	தேவர்தம் பிரானே பட்டிலிங் கேசா
		செப்பரு மொப்பினின் குணங்கள்,
	தாவரு மறைக ளுரைப்பது கேட்டுச்
		சரணடைந்தேனலேன் றோலுந்,
	தீவரு விடமு மரவும்வெள் ளென்புஞ்
		செறிமுடைத் தலைகளு நமக்கே,
	யாவவென் றுடுத்துப் பூண்டு கொண்டிருக்கு
		மதிசயங் கண்டடைந் தேனே. 				25

2570	ஏனமு மனமு மாயவர் வாய்வாழ்த்
		திடுமொலி யெழுகட லடைக்கும்,
	வானவர் கணங்கள் வச்சிரத் தடக்கை வள்ளல்
		வாழ்த் தொலிமுகின் மாற்று,
	மானமா முனிவர் மறைமுழக் கொலியெண்
		மாச்செவி களைச்செவி டாக்கும்,
	ஞானநா யகனைப் பழசையிலடியே
		னாவழுத் தொலியெங்குப் புகுமே. 				26

2571	எங்குநின் னடியார் நின்னிடம் பெற்ற
		தெடுத்துரை யாடிவீற் றிருப்பார்,
	செங்கரங் குவிப்பார் கண்கணீர் சொரிவார்
		சிந்திப்பா ரவையெலா முணரேன்,
	பொங்கொளி மலையைக் குழைத்தது கேட்டுப்
		புகுந்தன னென்மன மலையுங்,
	கொங்குலா மிதழிப் பட்டிலிங்கேசா
		குழைத்தெடுத் தாளுவை யெனவே. 			27

2572	எனக்குநீ யருளு நல்வர மொன்றஃ
		தியாதெனி னெப்பிறப் புறினுங்,
	கனக்குழன் மடவார் மயக்கிடை விழினுங்
		கற்பகா டவிநிழ லிருந்து,
	மனக்கினி தாம்பல் போகமுந் துய்த்து
		வாழினும் வரையிடை யுதித்த,
	வனக்கொடி பாகா பட்டிலிங் கேசா
		மலர்புரை நின்னடிக் கன்பே. 				28

2573	அடிநினைந் துருகித் தொடுமணற் கேணி
		யதனினுங் கண்களூற் றெடுக்கப்,
	படிமிசைப் புரண்டு பதைபதைத் தலறேன்
		பாடிடே னாடிடேன் பணியேன்,
	முடிவது மறியேன் மூர்க்கனே னெனையு
		முன்னிநீ யருள்புரி வாயோ,
	பொடியணி மேனிப் புண்ணியா பழசைப்
		புராதனா பூரணப் பொருளே. 				29

2574	பொருளலா வதனைப் பொருளென மதித்துப்
		பொறிவழிப் புலன்செலப் போக்கி,
	மருளிலா மடவார் மயக்கிடை முயங்கிமாண்டதோர்
		செய்கையு மின்றித்,
	தெருளிலா தடியேன் றியங்குவதழகோ திருப்பழ
		சையில்விருப் புடையாய்,
	இருளுலா மிடற்றா யமரர்நா யகநின்
		னிணையடிக் கறாதவன் பருளே. 				30


			வேறு

2575	அன்புகுடி கொண்டுபழுத் தமைந்தமனத் துன்னடியார்
	பின்புசிவ மணங்கமழப் பித்தேறித் திரிகில்லே
	னென்புதசை பொதிகுடிலை யினிவேண்டே னிரங்காயோ
	தென்புனைபாட் டளிச்சோலைத் தேனுபுரி மேயவனே. 		31

2576	மேயகொடும் பாசமொடு வெம்போத்தை நடத்திவருங்
	காய்சினக்கூற் றென்செயுந்தீக் கடும்பிணிகோ ளென்செயுமால்
	வேயனமென் றிரடோ ளி மேவுமொரு கூறுடையான்
	தீயகொடி யேனுளமுந் தேனுபுரி யாக்கொளினே. 			32

2577	கொள்ளையின வண்டிழிந்து கொழுதிமூக் குழவுடைந்து
	கள்ளொழுகு நறுங்கொன்றைக் கண்ணிமுடி மிலைந்தபிரான்
	தெள்ளுபுனற் பெருவேலி திகழ்பட்டீச் சரமுமென
	துள்ளமுநான் மறைமுடியு முறையிடமாக் கொண்டானே. 		33

2578	ஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்
	கூனமரு மதிமுடித்த கோதிலாக் குணக்கொண்ட
	றானமருந் தடஞ்சோலை தழைபழசைப் பதியன்றோ
	வானமரர் தாம்வாழ்வான் வலஞ்செயவந் தடைவதுவே. 		34

2579	அடையலார் புரம்பொடித்த வண்ணலார் நறுங்கொன்றைத்
	தொடையலா ரென்னுளம்போற் றோன்றவினி துறையுமிட
	மடையெலாந் தவழ்சங்க மணியீன்ற வயற்சாலிப்
	புடையெலா மணங்குலவப் பொலிபட்டீச் சரந்தானே. 			35

2580	பட்டாரு மிடைமடவாள் பாகாதென் பழசையாய்
	மட்டாருஞ் சடைமுடியாய் வானவர்தம் பெருமானே
	கட்டார்நின் றிருவடிக்கே கசிந்தணியேன் கரங்குவியேன்
	ஒட்டாம லுழல்வேனோ வுடையாய்நின் னடியேனே. 			36

2581	அடிமுடிபன் னாடேடி யலைந்ததுவு மறிந்திலார்
	முடிவின்மடி வதுங்கருதார் முழுவெலும்பு தலைமாலை
	பொடியணிமே னியினோக்கார் புகழ்ப் பழசைப் பரனொடுவெள்
	கொடியவர்மா லயனையுடன் குறித்தெண்ணி யெய்ப்பாரே. 		37

2582	எய்த்தேத முறுவேனை யிறப்பினொடு பிறப்பேற்று
	பொய்த்தேவர் புன்சமையம் புகுத்தாது புரந்தளித்தான்
	மெய்த்தேவ னுமைபாகன் விரிசெழுந்தா மரைமலருஞ்
	செய்த்தேறன் மடையுடைக்குந் திருப்பழசைப் பதியானே. 		38

2583	ஆனையுரி போர்த்தபிரா னருட்பழசை நகர்வாணன்
	தேனொழுகு மலர்வாயாற் றீவிடமன் றருந்தானே
	லூனொழுகு நேமிதரித் தோங்குமா லயன்முதலாம்
	வானவர்மங் கையர்கழுத்தின் மங்கலநா ணிற்குமே. 			39

2584	இருக்காதி மறைமுடிமே லிலங்குதிரு வடிப்பெருமான்
	மருக்காலுந் தடஞ்சோலை மந்திமதி மேற்பாயப்
	பெருக்காறு பொன்கொழிக்கும் பெரும்பட்டீச் சரமெனவுட்
	டிருக்காதி யரிறபவென் சிந்தைகுடி கொண்டானே. 			40


			வேறு

2585	கொண்டலி னிருண்ட கண்டன் கோமள வல்லி பாகன்
	தண்டலை வேலி சூழுந் தடமதிட் பழசை வாணன்
	புண்டரீ கத்தாள் போற்றிப் பூசித்த பெரும்பே றன்றோ
	வண்டுளர் தண்டுழா யோன் மலரவன் குதுகலிப்பே. 			41

2586	கலம்பயில் கடனஞ் சுண்ட கண்டனே பழசை வாணா
	நலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோ ர்க்
	கலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவு
	மிலங்கிட வளிப்பாய் நீசென் றேற்றதென் னியம்புவாயே. 		42

2587	இயம்புபல் லண்ட மெல்லா மிமைப்பொழு தழித்து மாற்றி
	வயங்கெழ மட்டித் தாடும் வல்லவன் பழசை வாணன்
	சயம்பெறு வான்கூட் டுண்ணுந் தரியல ராண மூன்றுந்
	தயங்கற வழித்தா னென்று சாற்றுதல் சீர்த்தியாமே. 			43

2588	சீரமர் கஞ்சத் தண்ணல் சிரங்கர நகத்தாற் கொய்தாய்
	தாரம ரடிந கத்தாற் சலந்தர னுடலங் கீண்டாய்
	போரமர் வேளைப் பார்த்தும் புரத்தினை நகைத்துந் தீத்தாய்
	வாரமர் பழசை யாய்கைம் மழுச்சூலஞ் சுமந்த தென்னே. 		44

2589	என்னிது விடையு நீவிற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி
	மன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்
	பொன்னிற வாளிகொண்ட புராதனா பழசை வாணா
	சென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே. 		45

2590	செய்தவ முடையீர் நுங்கள் செறிபிறப் பகலக்காண்மின்
	கையில்வெண் டலையொன் றேந்திக் கடியபாம் பரைக்கசைத்துப்
	பொய்யினூற் சரட்டாற் பொல்லம் பொத்துகோ வணமுஞ்சாத்தி
	யையனற் பழசை வாண னாடுவா னெங்கும் போந்தே. 		46

2591	எங்கணு நிறைந்து நின்றோ னெழினகர்ப் பழசை வாணன்
	றிங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதி பாத
	பங்கயம் புணையாப் பற்றிப் பவக்கடல் கடக்க வல்லா
	ரிங்கெவ ரேனு மன்னா ரிணையடிக் கடிய னியானே. 		47

2592	யானுனக் குரைப்ப தொன்றுண் டறிவினெஞ் சினிது கேட்டி
	வேனெடுங் கண்ணி னார்கள் விருப்பறுத் துய்ய வேண்டி
	னூனுடற் குயிரே யாயவ் வுயிர்க்குமோ ருயிராய் நின்ற
	பானலங் குழலி பாகன் பழசையை வணங்கு வாயே. 		48

2593	வணங்குநுண் ணிடையாள் பாகன் மானிட மேந்தும் வள்ளல்
	குணங்கினந் துணங்கை கொண்டு குதித்திடக் குனிக்கு மையன்
	பணங்கெழு மரவப் பூணன் பட்டிலிங் கேசன் யான்றன்
	மணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே. 		49

2594	அருட்பெருங் கடலைத் தேவ ரணிமணி முடியை யின்பத்
	திருக்கிளர் தவத்தோர் நெஞ்சுட் டித்திக்கு மமுதை யென்னை
	யுருக்குமொள் ளொளியை மாட முயர்பழ சையிற்கண் டோ ர்கள்
	கருக்குழி வீழார் காலன் கண்ணுற வும்ப டாரே. 			50


			வேறு

2595	படவர வணிகலம் பலிக்க லந்தலை
	யுடல்பொதி சாந்தநீ றுறையு மூர்வனம்
	விடமுண வுடையதண் மேவக் கண்டும்வா
	னடர்சுரர் பழசையாற் கடிமை யாவரே. 				51

2596	ஆவலித் தழுதுதீ யடுத்த வெண்ணெயை
	யோவருங் கல்லென வுருகித் தேம்பியே
	பாவலர் குழாம்புகழ் பழசை வாணனுக்
	கேவர்தா மிரங்கிடா திருந்த பேர்களே. 				52

2597	பேரருண் மேனியன் பிறைமு டித்தவன்
	தாரணி கொன்றையன் சரும வாடையன்
	பார்புகழ் பழசையன் பதக னேனையு
	மோரடி யானென வுயக்கொண் டானின்றே. 				53

2598	இன்றமிழ் மாலைபொன் னிணைய டிக்கியான்
	பொன்றிகழ் கொன்றையிற் புனைந்து சூட்டிடேன்
	பன்றிகண் டறிவரு பழசை வாணன்றா
	ளொன்றிவெம் பவமறுத் துய்யு மாறெனே. 				54

2599	என்னினி யான்பெறு மிலாப மாவது
	பன்னரும் புகழுடைப் பழசை நாயகன்
	பொன்னடி மலர்தலை பூணப் பெற்றது
	மன்னிய சீர்த்திவாய் வாழ்த்தப் பெற்றதே. 				55

2600	பெறற்கரும் பேறெலாம் பெறவ ளித்தருள்
	சிறக்குநன் பழசையிற் செழிக்கு மையனை
	யறக்கொடி பாகனை யமரர் நாதனை
	மறக்கொடும் பதகரே மறக்கு நெஞ்சரே. 				56

2601	நெஞ்சிடைக் கவலையு நீங்கிற் றேதஞ்செய்
	வெஞ்சினக் கூற்றமும் விலகிற் றெம்பிரான்
	பஞ்சடி கூறுடைப் பழசைநாயகன்
	செஞ்சடைப் பிரானடி சேர்ந்த பின்னரே. 				57

2602	பின்னிய குழன்முடிப் பேதை பாகனார்
	பன்னிய மறையொலிப் பழசை வாணனார்
	பொன்னடி துதித்தபின் பொய்யனேன் மற்றோ
	ரன்னைதன் வயிற்றுதித் தலற லற்றதே. 				58

2603	அற்றமின் மதிக்கலை யணிந்த வேணியன்
	நற்றமிழ்ப் பழசைவாழ் நாய கன்வசை
	சற்றுமில் லவனடி தாழ்ந்த வென்றலை
	மற்றொரு தேவர்க்கும் வணக்கஞ் செய்யுமே. 			59

2604	செய்யுறு பழசையிற் சிறக்கு நாயகன்
	மெய்யறி வானந்தம் விளங்கு மூர்த்தியா
	மையனை யன்றிமற் றவரை நாயினேன்
	கையுமஞ் சலிக்குமே கண்ணு நோக்குமே. 				60


			வேறு

2605	நோக்க மூன்றுடை நோன்மைய னான்மறை
	யாக்கும் வாய னருளும் பழசையான்
	தேக்குந் தேனினுந் தித்திக்குஞ் சீர்புகழ்
	வாக்கு வந்திட மாய்ந்ததென் றுன்பமே. 				61

2606	துன்ப மேயடர் சோற்றுத் துருத்தியாம்
	புன்பு லாற்புழுக் கூடு பொறுக்கிலே
	னின்ப மேவு மெழிற்பழ சைப்பதிக்
	கன்ப னேயெனை யாட்கொண் டருள்வையே. 			62

2607	வையு லாமயின் மானு நெடுங்கணார்
	மையல் வாரியின் மாழ்கி யழுந்துவேன்
	பைய ராவணி பட்டிலிங் கேசவென்
	னைய வுய்ய வளித்தருள் செய்வையே. 				63

2608	செய்யி ருக்குந் திருப்பழ சைச்சிவா
	நெய்யி ருக்கு நெறிக்குழல் பாகனே
	பொய்யி ருக்கும் புலைத்தொழி லேற்கருண்
	மெய்யி ருக்குமுன் னன்பருண் மேவவே. 				64

2609	மேவி ராமன் வணங்கும் விமலனார்
	தேவ தேவர் சிறக்கும் பழசையார்
	தாவின் மெல்லடித் தாமரை வாழுமே
	தீவி னைச்சிறி யேனுட் சிலையினே. 				65

2610	சில்ல ரிச்சிலம் பாரடிச் சேயிழை
	புல்லும் பாகன் புரக்கும் பழசையான்
	எல்லை யில்வினை யாவு மடியனேற்
	கொல்லை நீக்கின னோரில் வியப்பிதே. 				66

2611	இதையந் தீமெழு கென்ன வுருகுவார்
	புதைகொள் கண்ணியர்க் குப்பொற் பழசையிற்
	சிதைவி லான்றனைத் தேர்கிலர் காலனா
	ருதைய மெய்தினெங் கோடி யொளிப்பரே. 				67

2612	ஓடு வீருழல் வீரைம் பொறிக்கிரை
	தேடு வீர்கிடை யாமற் றிகைத்துப்பின்
	வாடு வீரிங்கு வம்மின் பழசையைக்
	கூடு வீரெங்கள் கூத்தனை வாழ்த்தவே. 				68

2613	கூத்த யர்ந்து குழைந்து கசிந்துநின்
	றேத்தும் பட்டிலிங் கேசனை நேசனைத்
	தோத்தி ரஞ்செய்ம்மின் றொல்லை வினையறக்
	காத்த ளிப்பன் கருணை வடிவனே. 				69

2614	வடியுண் கண்ணியோர் கூறன் மழுவலான்
	பொடிகொண் மேனியன் பூம்பழ சைப்பிரா
	னெடிய பாத நினைப்பவர் யாங்கணு
	முடிவி லின்பத்து மூழ்கி யிருப்பரே. 				70


			வேறு

2615	இருவி னைக்கிட மாயவிப் புழுக்குடி லினிதென்
	றொருவி டாதெடுத் துழலவே னியமனா ருடன்று
	துருவி நாளையென் முன்வரி லென்செய்வேன் சுருதி
	மருவி யேத்துநற் பழசையம் பதியுறை மணியே. 			71

2616	மணியை மாதவர் முத்தியைப் பழசைநன் மருந்தைப்
	பணியை நேரல்குன் மாதரார் மையலிற் படுவார்
	பிணியை மெய்யடி யார்நிதிச் சேமத்தைப் பெட்பி
	னணியை யாசையை மாற்றியா னடைவதெந் நாளே. 		72

2617	நாளெ லாம்வறி தாய்ச்செல வஞ்சரை நட்டு
	வாளெ லாமணி கண்ணியர்க் குருகிமா ழாந்தேன்
	றோளெ லாமர வணிந்தவா பழசைவாழ் தூயா
	ஆளெ லாம்வல்ல வுனக்கெனைப் புரப்பது மரிதே. 			73

2618	அரிமு ரட்கருங் கேழலா கியுமுல களித்தோன்
	வரிசி றைப்பெரு வாரன மாய்முன மேவித்
	தெரிவ தற்கரி தாகிய பழசையான் றிருத்தாள்
	பரிவு பெற்றவோர் பற்றிலார்க் கெளிதகப் படுமே. 			74

2619	படரு மண்புன லனல்வளி விண்ணெனப் பட்டங்
	கடரு மவ்வைந்தி னோடிய மானனிந் தருக்கன்
	றொடரு மெட்டுரு வாகிய பழசையான் றோற்று
	மிடரும் வீணுமென் றனக்கிலை யாக்குவ னினியே. 			75

2620	இனிய வாசக மிதுபறி தலையிக லருகர்
	முனித ரும்புத்தர் சூனிய வாதியர் முதலீர்
	புனித மாமறைப் பழசைவாழ் பூரண னவனே
	நனிசெய் முத்தொழிற் றலைவன்யா வருக்கு நாயகனே. 		76

2621	நாயி னேனுக்கு மின்னருள் சுரந்தவ னலஞ்சேர்
	தூய மாதவர் சூழ்பழசைப்பதித் தோன்றல்
	பாயும் வெண்கதி ரொண்மணிப் பந்தரொண் காழி
	மேய பிள்ளையார்க் கருளினா னென்பதும் வியப்பே. 		77

2622	ஏத மாறுந்தென் கூடலிற் பழசைவா ழிறைவா
	ஓது நாவொரு பாணற்கா விறகெடுத் துழன்றாய்
	வாத வூரெம தடிகட்கா மண்சுமந் துடலிற்
	போத வோரடி பொறுத்தது போதுமோ வுனக்கே. 			78

2623	உன்னு வோர்க்கருள் சுரக்குநற் பழசையுத் தமனே
	பன்னு மப்பர்தம் வயிற்றிடை நஞ்சினைப் பதித்தாய்
	மன்னு காழியர்க் கமுதுவைத் தாயிது வஞ்ச
	மன்ன தாலன்றோ நினக்குமூ ணஞ்சமா கியதே. 			79

2624	ஆக மாதுற வருளிய பழசையம் மானே
	யேகி நாவலூ ரார்மணந் தவிர்த்ததென் னினிநீ
	போக தூதென வவர்சொலு முனம்புரி குழல்பால்
	வேக மாகவே நடந்ததென் னிதுவிளம் புவையே. 			80


			வேறு

2625	விளம்புவதொன் றுளதுனக்கு மடநெஞ்சே
		கேட்டியருள் வேட்டுநின்று,
	வளம்புகுநன் மணச்சோலை வளர்பழசைப்
		பெருமானை வானோ ருய்யத்,
	தளம்புதிரைக் கடனஞ்ச முண்டவனைக்
		கண்டுகரந் தலைமேற் கூப்பிக்,
	களம்புனையா தாடிடுவை பாடிடுவை
		யவன்றிருத்தாள் காணுமாறே. 				81

2626	காணியிது வெனமண்ணைக் கருதியரைக்
		காணியருள் வேறுங் காணா,
	தூணியைபொன் மனைமாத ரெனவுழல்வீ
		ருய்யுமா றுரைப்பக் கேண்மின்,
	சேணியைகற் பகந்தாழுஞ் செழுஞ்சோலைத்
		திருப்பழசைத் தேவதேவன்,
	வேணியிலொண் புனறரித்தான் றாள டைமி
		னுங்கள்வினை வீயத் தானே. 				82

2627	வீயாத பெருவாழ்விங் கடிமைநா
		யேற்கிதனின் மேலுமுண்டோ ,
	வேயார்மென் றடந்தோளி யொருபாகன்
		றிருப்பழசைமேவு மையன்,
	தீயார்தம் புன்சமையத் தீநெறியிற்
		செலுத்தாது தேவர் வாய்வாழ்த்,
	தோயாத தன்னடிக்கே யெனைப்புகுவித்
		தாண்டதையிங் குணருங் காலே. 				83

2628	காலனார் விழச்சினந்த கழற்காலா
		பழசைநகர்க் கடவுள் கேட்டீ,
	கோலவா ளரக்கன்முடி நெரித்துமண்டோ 
		தரிக்கின்பங்கொடுத்தாய் நட்புச்,
	சாலவியற் பகைபாற்சென் றென்னேற்றாய்
		பொன்னனையா டனக்கென் செய்தா,
	யேலவிவை கண்டலவோ வம் மையுடற்
		பாதிகொண்டா ளென்செய் வாளே. 				84

2629	செய்யேந்துந் திருப்பழசை யெம்பிரா
		னுடையின்றிச் சென்னியோடு,
	கையேந்தி யரவசைத்துச் சண்ணித்த
		நீறுகவின் புதைப்பக்காள,
	மையேந்து மிடற்றொடுசென் றிடுபலியேற்
		றான் கண்ட மாயோன் மாழ்கிப்,
	பையேந்து மரவல்கு லாவானேற்
		பெண் கள்மயல் பட்டிடாரே. 				85

2630	பட்டாரு மிடையாளைப் பாகத்து
		வையாயேற் பழசை வாணா,
	கட்டாருங் குழலார்நீ பலியேற்ற
		ஞான்று மனங் கலங்கிச் சோர்ந்தார்,
	முட்டாத மால்கொண்டா னெடுமாலா
		தலினழகு முழுதுங் கண்ணுற்,
	றெட்டாமன் மலர்மாதர் முதலரம்பை
		மாதரெல்லா மிகல்செய் வாரே. 				86

2631	செய்யிருக்குங் கழைகுழைக்கு மைங்கணைக்கா
		ளையை விழியாற் சினந்து சுட்டீ,
	ரையிருக்குஞ் சடைதரித்தீர் விற்கருஞ்செங்
		கற்றோய்த்த வாடை கொண்டீர்,
	மையிருக்கு மணிமிடற்றீர் துறவி
		யர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்,
	பொய்யிருக்கு மருங்குலாண் முலைச்சுவடு
		கொண்டதென்னை புகலு வீரே. 				87

2632	வீரமழு வலந்தரித்த பழசைநகர்ப்
		பெருமானே வெய்யோர் மேவு,
	மாரலொரு மூன்றுமெரித் தம்மூவர்
		நிரயம் வீழ்ந் தாழா தாண்டாய்,
	சோருமறி வுடைநாயே னின்றிருத்தா
		ளன்றியொரு துணையுங் காணேன்,
	சீரருடந் தாண்டிடினுய்ந் திடுவேன்
		கை விடில்வாடித் தியங்கு வேனே. 			88

2633	வேனில்வேள் கணைகிழிக்கப் பொறிவழிச்சென்
		மனமலைப்ப வெம்பி வாடிப்,
	பானலார் கண்ணியர்வாய்ப் பட்டுழலு
		வேற் குமருள் பாலிப் பாயோ,
	கானவார் பசுங்கதலி கமுகுநிறை படப்பையிற்
		போய்க் கழுநீர் பாயுந்,
	தேனவாம் பொழிற்பழசைச் சிவபுரத்
		தில் வீற்றிருக்குஞ் செம்பொற் குன்றே. 			89

2634	குன்றனைய முலைமடவாள் கூறானை
		நீறானைக் கொன்றை வேய்ந்த,
	பொன்றிகழ்செஞ் சடையானை விடையானைக்
		கருமிடற்றுப் புனிதன் றன்னை,
	வன்றறுகட் கூற்றொடுங்கச் சினந்தானை
		மானேந்து மலர்க்கை யானை,
	கன்றுகுணி லாக்கொண்டோ ன் காணானைப்
		பழசைநகர்க் கண்டே னியானே. 				90


			வேறு

2635	கண்ட பேர்க்குடன் காணு மற்புதம்
	பண்ட மாடமார் பழசை வாணனார்
	வண்டு லாங்குழல் வல்லி பாகனார்
	தொண்ட னேற்கருள் சுரந்த வாற்றையே. 				91

2636	ஆற்ற வஞ்சினே னளவி னாளெலாம்
	போற்றி வைத்தவிப் புழுக்கு டம்பையைக்
	கூற்ற நாடுமுன் கூவிக் கொள்ளுவாய்
	பாற்ற டங்கள்சூழ் பழசை வள்ளலே. 				92

2637	வள்ள லேயினி மற்றொர் பற்றிலேன்
	றள்ளு வாயெனிற் றளர்வ தன்றிப்பின்
	கொள்ளு வாரிலை கூவிக் கொள்ளுவாய்
	பள்ள வாவிசேர் பழசை யப்பனே. 					93

2638	அப்பு லாஞ்சடைப் பழசை யையனே
	துப்பு லாமிதழ்த் தோகை பாகனே
	கப்பு லாவுடல் கழிய நின்னருள்
	வெப்பு லாமனத் தேற்கு வேண்டுமே. 				94

2639	வேண்டு நந்திநீ விலகெ னச்சொனாய்
	பூண்ட வன்புடைப் புகலி வள்ளற்கா
	மூண்ட வென்வினை விலக முன்னினு
	மீண்டுய் வேனருள் பழசை யெந்தையே. 				95

2640	எந்தை யெம்பிரா னெங்கு முள்ளவன்
	நந்த லில்சுக நல்க வேண்டினூல்
	வந்த நாவலீர் வம்மி னிங்ஙனம்
	பந்த நான்மறைப் பழசை பாடுமே. 				96

2641	பாட வேண்டுநின் பழசை யம்பதி
	கூட வேண்டுநின் கூட்டத் தார்களைத்
	தேட வேண்டுநின் செம்பொற் சீரடி
	வீட வேண்டுமென் வினைகள் யாவுமே. 				97

2642	வினையி லாதவன் விடையொன் றுள்ளவன்
	புனைந றுங்குழற் பூவை பங்குளான்
	றனைய டைந்தனன் பழசை யந்தலத்
	தினைவு தீர்ந்தன னின்ப மெய்தியே. 				98

2643	எய்யு மாரனை யெரித்த வீரனார்
	பைய ராவணிப் பட்டி லிங்கர்தஞ்
	செய்ய தாண்மலர் சிரத் திருத்தியே
	யுய்ய வேண்டுவீ ரொருங்கு வம்மினே. 				99

2644	வம்மி னெந்தைவாழ் பழசை வந்துநீர்
	கைம்ம லர்கொடு காலிற் சூட்டிநின்
	றெம்மை யாளென வெளிமை யின்மைவெம்
	பொய்ம்மை தீர்ப்பனம் பூவை பாகனே. 				100

- திருப்பழசைப்பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று -

Related Content

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I

சித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II

கண்டதேவி புராணம் - ஆசிரியர்: திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்

கலைசைப் பதிற்றுப்பத்து அந்தாதி

திருமுல்லைவாயில் அந்தாதி