ஒன்றாகியுணர்வொருங்கியோமொழிப்பொருடானாகி
மன்றாடுநின்னையன் பின் வழிபடுமறிவொன்றின்றிப்
பொன்றாலி பூட்டுமாதர் புணர்ச்சியே பொருளென்றெண்ணிச்
சென்றாடியுணங்கிப்போனேன்றிருப்புவனத்துளானே. 1
நிராமயநிமலமாகிநித்தியாநந்தமாகிப்
பராபரப்பிரமமாகிப்பங்கயன் முதலதேவர்
சராசரமனந்தயோனிதத்துவக்குவால் பிறங்கத்
திராசெனநின்றதென்னே திரிப்புலிவனத்துளானே. (2)
மலரயனாய்ப்படைத்தான்மாலவனாகிக்காத்தா
னிலகரனாகியெல்லாந் துடைத்தவனிறைவனானான்
மலைமகட்கொருபாலீந்துமலி புனற்கங்கையாளைச்
சிலைமதிமுடியில் வைத்தான்றிருப்புவனத்துளானே. (3)
ஒருவனோடொருத்தியாகியுடறொறுங்குடியிருந்தா
னிருவினையொப்பாலன்றியாவர்க்குமறியவொண்ணான்
குருவடிவாகித்தாளார் கொடும்பவமிரியச்சூட்டித்
திரிபதார்த்தமுந்தெரித்தான்றிருப்புலிவனத்துளானே. 4
பேசுவதுயிரேயந்தப் பிராணணுக்குயிரைப்பேசின்
மாசிலாமணியொருத்தன்வரவிலன்போக்குமில்லான்
பாசமோசகனாய்நிற்பனவனுருப்பாராவண்ண
மாசையேபாசமென்றான் வயப்புலிவனத்துளானே. 5
நெல்லிடையுமிபோலாவி நினைப்பெலாமாவரித்துத்
தொல்லையிலுளவஞ்ஞானந்துஞ்சலும்பிறப்புமின்றி
மல்லர்போன் றறிவைவையவனத்திடைவலியவீர்ப்பச்
செல்கதிவேறுகாணேன்றிருப்புலிவனத்துளானே 6
மூலையிலிருந்தவென்னை முற்றத்திலீர்த்துவிட்டுச்
சாலமோகஞ்செய்மாயை தனுகரணங்களாகி
வேலைவாயமுதிருப்பவிடத்தையே விழுங்கப்பண்ணுஞ்
சீலநின்னினையவொட்டாத்திருப்புலிவனத்துளானே. 7
கன்மமாயொன்றாயூழாய்க்கருதிருவினையாய் மூன்று
வன்மைகொள் சஞ்சிதா திவருவினைக்காரர்வந்துன்
னன்மையையுணரவொட்டார் நல்லர்பாற்செல்லவொட்டார்
சின்மயமாகவொட்டார் திருப்புலிவனத்துளானே. 8
வெறும்படம்போல்வை நீ தான் வேறுவேறோவியம்போ
னறுந்துழாய்முடியோனீசனான்முகனாதி தேவர்
பெரும்பயனுணர்ந்தோர்நின்னைப்பேணுவரவரைப் பேணார்
தெறுங்கடையுகத்திலாடுந்திருப்புலிவனத்துளானே. 9
பஞ்சவிந்தியங்களென்னும்பாயிருள் சீக்குஞானக்
கஞ்சுகம்போர்த்துன் பாதக்கழலடிபரவுந்தொண்டர்
நஞ்சையுமுண்பருன் போனாதனாய் ஞானமீவர்
செஞ்சுடர்மணிபிறங்குந்திருப்புலிவனத்துளானே. 10
காதினாலறியாநின்னைக்கண்ணினாற் காணவென்னை
மேதைசேர்விவேகத்தாலும் வேதத்தார்விஞ்சையாலும்
பாதத்துக்கேற்றதொண்டுபற்பலகுயிற்றியன்பாற்
சேதனங்கண்டுகொண்டேன்றிருப்புலிவனத்துளானே. 11
பாவமுமறமுமொத்துப்பக்குவம்பருவமுற்றிங்
காவியைம்புலனைப்பற்றா தகமுகமாகியென்று
மோவியம்போன்றிட்டங்கணுணருணராமைபோக்கிற்
சீவனுஞ்சிவனும் வேறோ திருப்புலிவனத்துளானே. 12
ஆகநாமல்லவிந்தவைம் பொறிநாமேயல்ல
வேகமேநாமென்றுன்னுமிருடிகளி தயத்துள்ளாய்ப்
பாகமாமுமைமணாளபசுபதிபிறவி வேண்டேன்
சேகருமனத்தோர்போற்றுந்திருப்புலிவனத்துளானே. 13
அறிவினிலகமுண்டாகியகத்தினின்மனமுண்டாகிப்
பிறிவருமனத்தின்மாயமாயையிற்பிண்டாண்டங்கள்
மறியுலகத்தினாக்கைவந்தவிம்மாயமெல்லாஞ்
செறிதராதருளிச்செய்வாய் திருப்புலிவனத்துளானே.(14)
புத்தியாய்ப்பொறிகளாகிப்புலன்களாய்ப்பூதமாகிக்
கத்தனாய்க்காமமாதிகுணங்களாய்க்காமியாகிப்
பெத்தனாய் முத்தனாகிப்பேணுவார்பேணுநித்த
சித்தனாய்நின்றதென்னே திருப்புலிவனத்துளானே. 15
ஒன்பதுவாய்தலார்ந் தவூரினிலோரைந்தாய
துன்புறுமமைச்சரோடுஞ்சுகதுக்கத் தேவியோடு
முன்பினோடுறவேரோடுமுற்றரசாளமாட்டேன்
செம்பொனார்மாடநீடு திருப்புலிவனத்துளானே. 16
ஆரணவுருவமாகியம்பரக்கோயிறோறு
நாரணன் பிரமன்காணாநட்டநீ செய்ததென்னே
காரணமுயிரேயென்னக்கண்டவர்காணாதேங்கச்
சீரணிமாடமோங்குந்திருப்புலிவனத்துளானே. (17)
மாயையாலிரண்டுபட்டுன்மலரடிப்புகலிழந்தேன்
றூயமெய்ஞ்ஞானத்தாலே துறந்திடினேகமாகுந்
தாயினுமினியனாகித் தடுத்தெனையாண்டுகொண்ட
சேயமாநதிதென்பாங்கார் திருப்புலிவனத்துளானே. 18
கண்ணொளிகதிரின் மாட்டுங்கடவெளிலிசும்பின்மாட்டு
மண்ணுறுவிளக்கின் சோதி தாரகசத்திமாட்டு
நண்ணு தன்மானப்பொல்லா நாயினேன் வந்தடைந்தேன்
றெண்ணிலாவெறிக்குஞ்சென்னித்திருப்புலிவனத்துளானே. (19)
பவத்துயரான் மெலிந்தபக்குவவுயிர்கட்கெல்லாஞ்
சிவத்தைமுன்விளக்கிப் பின்னர்சீவனை விளக்கி மூன்றா
மவத்தையைவிளக்கி நீக்கியறிவுருவானாயென்னுஞ்
சிவத்துவமசிநீயன்றோ திருப்புலிவனத்துளானே. 20
காந்தமுமூசியும் போற்கடலுறுநதியும்போல
வேய்ந்துபின்னீனானாகியெண்ணமுமின்றி நின்று
வாய்ந்தபேராக்க நீ சொல்வாக்கியத்தாலே கண்டேன்
றேய்ந்தசந்திரனைச்சூடுந்திருப்புலிவனத்துளானே. 21
அறிவொருகடலாயாவியலையதாய்த்தத்துவங்கள்
பிறினுரைகுமிழியுப்புப்பிணைமலம் வாயுகன்மங்
குறிபலமீனமாயையிவற்றினாற்குறைவொன்றில்லைச்
செறிதிருவருளான்மாற்றாய்த்திருப்புலிவனத்துளானே. 22
புழுவினநிறையுமாக்கையொன்பதுபொள்ளலாலு
மிழிபடுமலங்கள் வீசுமி தனினுநரகநன்றே
வழுவையினுரிபோர்த்தாடும் வள்ளலேபிறவி வேண்டேன்
செழுமணிமாடமோங்குந்திருப்புலிவனத்துளானே. 23
பிறந்தவரிறக்கையாலுமிறந்தவர் பிறக்கையாலு
மறிந்துயர் பெரியோரெல்லாமாக்கையை வெறுத்தலாலு
மறந்துநான் பிறவிவேண்டேன்மறுபிறப்பிலாதவண்ண
செறிந்தருள்செய்யவேண்டுந்திருப்புலிவனத்துளானே. 24
அரனரியயனுமொன்றென் றருமறையறையுமாற்றா
லரனையேயேத்துமின்களயனெறிப்புகுதவேண்டா
மரனுக்குமடிமையாகியரிக்குமாட்செய்வாருண்டோ
வொருவனே தெய்வமென்பருறுதியின் வழிபட்டோரே. 25
சிவனையே தெய்வமென்று சிந்தையிற்சிந்தைசெய்மி
னவனலாற்றெய்வமில்லையவனுக்கேயடிமை செய்யின்
றவமிலாமனிதரெல்லாமவனடிசாரமாட்டார்
புவனவாதனைகடத்திப்பொன்னடிக்கமலமீவன். 26
நூலிடைக்கருத்தைவிட்டு நுண்ணியஞானமின்றி
மாலுறுசமயவாதவசனத்தைவசனியாதே
சீலவாசிரியன் சொன்னசெந்நெறிச்சித்தம் வைத்திட்
டாலமார்கண்டத்தானையகமுகமாகநோக்கே. 27
நாரணன் முதலோரெல்லாநாடொறுமடிமை செய்ய
வாரிணர் முடித்தவேணியண்ணலுக்காட்செய்யாதே
காரணமின்றியோடுங்கடிக்குரன்ஞமலிபோலப்
பாரிடையுழன்றலுத்தேன் பாவியேன் பாவியேனே. 28
பண்டையவினைவாய்ப்பட்டுப்பத்தியும் பரிவுமின்றி
வண்டறைகொன்றையானைமனத்திடையிருத்தமாட்டீ
ரண்டருமுனிவர்தாமுமரகரவெனுஞ்சத்தத்தைத்
கண்டுகொண்டிருப்பீரல்லீரென்செய்வீர்காலனுக்கே. 29
மனமவன்பாலிற்செல்லவாக்கவனாமஞ்சொல்லப்
பனிதரக்கண்ணிரண்டும்பத்தியாய்ப்பராபரன்பா
லனுசரிப்பொன்றுமில்லேனடியர் பால்விருப்புமில்லேன்
கனியிலாமரத்தையொத்தேன் கறைவளர்கண்டனுக்கே.30
ஐயமுமிட்டேனில்லையடியர்க்கொன் றீந்தேனில்லை
துய்யமெய்ஞ்ஞான நூலின்சொற்பொருளறிந்தேனில்லை
மையணிகண்டத்தானை மலர்கொடுபணிந்தேனில்லை
வையகத்துவர்நீரொத்தேனென்செய்கேன் மதிவல்லீரே. 31
சாவதும்பிறப்புமில்லாச்சங்கரற்கடிமைசெய்வான்
றேவருமுனிவர் தாமுந்தீயிடை நிற்பரென்றாற்
பாவியேனடிகளுக்குப் பணிவிடைபலவியற்றேன்
காவியந்தடங்கண்மா தர்கலவியிலழுந்தினேனே. 32
நீரிலாக்குளமுஞானநிலையிலா நெஞ்சுநீண்ட
தேரிலாவூரும்பன்னூற்றெரிந்தவரில்லாநாடு
மேரிலாச் சீரும்போல வீசனுக்கடிமையென்னு
பேரிலாவாக்கை பெற்றேன்பேதையேன்பேதையேனே. 33
ஞானத்தான்ஞானியல்லேன்மையாற்குடும்பியல்லேன்
மோனத்தாற்றுறவியல்லேன் மூடத்தான் மூடனல்லேன்
வானத்தார்வணங்குந் தூயவயப்புலிவத்துளார்க்குத்
தானற்றவடிமைசெய்யேன்சழக்குடைச்சழக்கனேனே. 34
எல்லையில் காலமெல்லாமேழைமார்வலையுட்பட்டுக்
கல்வியுங்கருத்துமின்றிக்கலக்க நானலக்கணுற்றே
னல்லுநண்பகலுமுன்றனடியின் கீழிருத்தல்வேண்டுஞ்
செல்வமுஞ்சிறப்பும்வேண்டேன்றிருப்புலிவனத்துளானே. 35
ஐவகைப்பொறிகளாலுமறுவகைக்குற்றத்தாலு
மைநிகழ்கண்டாநின்னை மறந்துழல்மனிதனானே
னுய்வகைவேறுகாணேனுயிர்க்குயிராகிநின்ற
தெய்வமேயஞ்சலென்னாய்திருப்புலிவனத்துளானே. 36
ஆமைபோலைந்தொடுக்கியறிவினுளறிவாய்நின்ற
வோமொழிப்பொருளை நாடியொன்றுபட்டிருக்கும்வண்ணங்
காமனைக்காய்ந்தகண்ணாங்கடையரிற்கயைனேற்குச்
சேமநல்லறிவுகாட்டாய் திருப்புலிவனத்துளானே. (37)
சத்தசத்தென்னவேதஞ்சாற்றியவண்ணநின்னைச்
சத்தெனக்கொண்டிவ்வாக்கையசத்தெனத்தள்ளகில்லேன்
சத்தொடுகூடிப்பின்னுமசத்தையுந்தாவித்தாவிச்
சத்தனேசதசத்தானேனென்செய்கேன் சமலனேனே. 38
பற்றறத்துறந்தஞானப்பட்டினத்தடிகள்போலப்
பற்றறத்துறந்தேனில்லை பராபரநிலையைக்கண்டாங்
கற்ற சீவாக்கரல்லேனன்பிற்கண்ணப்பனல்லேன்
குற்றஞ்செய்மூர்க்கனல்லேன்பத்தியிற்கோழையேனே. 39
கல்லெறிசாக்கியர்க்குங்கடைக்கனித்தருளாலாண்டாய்
வில்லடிப்பட்டுமன்றுவிசயனைக்காத்தாட்கொண்டாய்
புல்லியசிறிய வாணன் புறக்கடைகாத்தாயானா
லல்லமர்கண்ட நீமெய்யன்பனுக்கெளியனாமே. 40
அறிவிக்கக்குரவரில்லையன்னையும்பி தாவுமில்லை
யறிவிக்கவயலொன்றில்லையம்பலத்தாடியென்று
மறிவிக்குமம்மானேயென்றயனரிமுனிவரெல்லாஞ்
செறிவுடையடிமைசெய்வார்திரிப்புலிவனத்துளானே. 41
பண்டொருகாலந் தன்னிற்பத்தருக்கருளிச்செய்தா
னண்டர்கோன் வழிபட்டேத்தவநுக்கிரகங்கள்செய்தான்
முண்டகன்றிருமால் போற்றமுத்திமோக்கங்கொடுத்தான்
றிண்டிறற்புலி பூசித்ததிருப்புலிவனத்துளானே. 42
ஆவிற்கும்புலிக்குமுன்னமநுக்கிரகங்கள் செய்தா
னாவிக்கும்வலியனுக்குநாரைக்குமருளிச்செய்தான்
மூவர்க்குமுனிவர்கட்குமுதுக்குறைவறிஞருக்குந்
தேவர்க்குமுத்திதந்தான் திருப்புலிவனத்துளானே. 43
பரைவடிவீசற்கானபடியினாற்பன்றிக்கன்றுக்
கருண்முலைகொடுத்தான் பின்னுமானைக்காயரியைவிட்டான்
குருவடிவாகிக்கல்லால் குறுகினானாதலாலே
தெரியருண் மூர்த்திபோலுந்திருப்புலிவனத்துளானே. (44)
அரக்கனை மிதித்தத்தாலுமரிவெட்கிப்போனத்தாலு
முருக்கனலாகியண்டம்யாவையுமொருக்கலாலுஞ்
சுருக்கமில்புவியைத் தாங்கித் தூலமாயிருத்தலாலுஞ்
செருக்களவாற்றலுள்ளான் திருப்புலிவனத்துளானே. 45
இன்பத்துளின்பமாயநின்னடியெய்தும் வண்ணந்
துன்பத்துட்டுன்பநீங்கித்துறவிகடூங்கிநிற்பார்
பொன்பதுமத்தோன் மாயன் புண்ணியத்தவங்கணோற்பார்
செம்பதுமத்தாள்காட்டாய் திருப்புலிவனத்துளானே. 46
அறிவுருவாயவென்னையாணவமனாதிகூடிப்
பிறிவறியாதநின்னைப் பிறித்துத்தான் முழுதுமாகி
நெறியினை மறைத்துப்பொல்லா நீ சருக்கடிமையாக்கிச்
செறியிருணின்றதென்னே திருப்புலிவனத்துளானே. (47)
உடம்பினைச்சிவமேயென்பருடம்பிற்கு மூலமோரார்
கடம்படுபிராணன்றானேகத்தனென்றுரைப்பரஞ்சு
மடம்பெறுமிந்தியத்தைமதியென்பரிவைக்கு மூலந்
திடம்படுநின்னைக்காணார் திருப்புலிவனத்துளானே. (48)
அனுபவத்தறிதலன்றியளவையாலறியக்கூடாச்
சனகனைச்சாக்கிச்சொன்னாற்சருவருமொப்புக்கொள்வர்
மனமொருபாலேவிட்டுமலரடி நோக்கும் வஞ்சர்
தினமலரிடினும் வேண்டாத்திருப்புலிவனத்துளானே. 49
சிவத்தினுக்கிரண்டு சத்தி திமிரத்துக்கனந்தசத்தி
சிவத்தினுக்குயர்ந்ததென்பர்தெளிவிலாமாந்தரெல்லாஞ்
சிவத்தினை மறையாதென்னை மறைத்தலாற்றிமிரபாசஞ்
சிவத்தினுக்குயர்ந்ததாமோதிருப்புலிவனத்துளானே. 50
திரை நுரைகுமிழியெல்லாந் திரைகடற்றோன்று மாபோ
லுரையுயிர்மாயையாக்கையுன திடையுதிக்கக்கண்டேன்
பரைதிரைவுருவமாகிப்பசுதொறுங்குடியிருந்த
திருமறுமார்பன்போற்றுந்திருப்புலிவனத்துளானே. 51
தேகமாதுமை தன்கூறுசீவனின் கூறதானா
லாகமாய்ப் பிறந்திறப்பதாரெனலறையல்வேண்டும்
வாகனஞ்சத்தியம்புமாயவனாகக்கொண்டென்
றேகவாலயத்தை நீங்காத்திருப்புலிவனத்துளானே. 52
அனாதியின்மலம்வந்தென்னையடுத்ததுமதற்குமுன்னே
மனாதிகளிலாதவாறுமலடிப்பான்மைந்தன்போலத்
தனாதிநின்சத்தியாலே தனுகரணங்கள் வந்து
பினாதிநிற்பெற்றுப்பின்னைப்பிரிந்ததும் பேசல்வேண்டுஞ்
செனாதிபன் வழிபட்டேற்றுந்திருப்புலிவனத்துளானே. 53
கடலிலே கலந்தவாறுகதியிடைப்பின் வந்தாலும்
கடலினுட்டன்மைகுன்றாக்கதையென நினைக்கண்டோரு
முடலிடையிருந்து முண்டு முறங்கியுமுலாவிநின்றுந்
திடனுடைஞானியன்றோ திருப்புலிவனத்துளானே. 54
ஒன்றிரண்டல்லவென்றாங்கொன்றினையொன்றாற்பற்றி
நன்று தீதென்னாநிற்குஞானிகளுள்ளக்கோயி
லென்று நிற்கினியதென்றோ விடைவிடாதிருந்ததெம்மான்
சென்றிடையாத செல்வத்திருப்புலிவனத்துளானே. 55
பாசத்தார்பாசத்தோடும் பதிந்திடப்பசுவார்என்பாற்
காசற்ற விழியார்போலக்கலந்தபின் பிரிவதில்லை
யாசற்ற நீயுநானுமன்னியமின்மையாலே
தேசத்தார்பரவலான திருப்புலிவனத்துளானே. (56)
கீட்பட்டுகீடநல்ல கேழ்கிளர்குளவியாலே
யாட்படவதுதானானவதிசயம்போலுமம்ம
நாட்படப்பிரிந்தநாயேனாதநிற்காட்செய்தத்தாற்
சேட்படச்சிவமதானென்றிருப்புலிவனத்துளானே. 57
வடிவிலாவடிவினின்றுமனமிலாத்தொழில்குயிற்றி
யடிமுடியில்லாஞானவாரமுதுண்டுநிற்போற்
படுகுழியனையபெண்டீர்பாழ் நரியனையமைந்தர்
செடியுடையாக்கைவேண்டார்திருப்புலிவனத்துளானே. (58)
நகாரத்தின்மயலைஞானவாளினான்றுக்கிப்பின்னர்
மகாரத்தின்மறைப்பைநாமேமணியெனுமதியால் வாட்டி
வகாரத்தின்வழியே சென்றுமாலயனறியாதேங்குஞ்
சிகாரத்தைக்கண்டேனின்னாற்றிருப்புலிவனத்துளானே. (59)
நோயிலாவாக்கை பெற்று நுண்ணறிவுடையராகித்
தாயினுமினியநின்னைச்சமாதியிற்காணமாட்டார்
மாயையால் வகுக்கப்பட்டவடிவிடை நின்னைக்காணச்
சேராயரற்றுகின்றார் திருப்புலிவனத்துளானே. (60)
தனுவொடுகல்வாராயின் சார்தராவினையிரண்டுந்
தனுவொடுகலத்தலாலே சார் தரும்வினையிரண்டு
மனமொழிகாயமூன்று மவுனமுத்திரையினிற்பச்
சினமயலகன்றோர்போற்றுந்திருப்புலிவனத்துளானே. (61)
குறியறிவாகுங்கோயில் குறிப்பருமாவியாகு
மறிவுசங்கமமேயெல்லாமறிவெனக் கண்டுகொண்டேன்
ற்றியெனவுடலுங்கண்ணுஞ் சமாதியிலிருக்குங்காலைச்
செறிபவமினியேற்குண்டோதிருப்புலிவனத்துளானே. 62
சைவசித்தாந்தமெல்லாந்தானவனாகிநிற்றல்
மையறுவேதசித்தமற்றதுநானேயென்ன
லுய்வகைக்கிரண்டுமொன்றென்றோ தியென்னுயிர்க்கிலாபஞ்
செய்தசற்குரவனீயே திருப்புலிவனத்துளானே. 63
கண்ணினாற் காணாக்காட்சிகாதினாற்கேளாக்கேள்வி
யெண்ணினாலெண்ணவெண்ணமெழுத்தினாலெழுதாக்கல்வி
மண்ணைபாலகனுன்மத்தன்மதியொத்தஞானமெல்லாந்
திண்ணமாய்க்காட்டுமிந்தச்செவிக்கினியமிர்தமன்றே. 64
கர்நாமிர்தம் - முற்றிற்று.