logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சோணசைலமாலை (துறைமங்கலம் சிவப்பிரகாசர்) உரை (க.வ. திருவேங்கடநாயுடு)

சோணசைலமாலை (துறைமங்கலம் சிவப்பிரகாசர்) உரை (க.வ. திருவேங்கடநாயுடு)

 

காப்பு.

நேரிசை வெண்பா.

 

சதுரனெழிற் சோண சயிலற் றுதிப்பன்

மதுரமொழி யன்பர் மனமாங்-குதிரைதிறை 

கொண்டவனென் றேத்துங் குரைகழற்கால் யானைதிறை

கொண்டவனை யென்னுளத்தே கொண்டு.

 

இதன் பொருள்: - மதுரம் மொழி அன்பர் மனம் ஆம் குதிரை திறை கொண்டவன் என்று ஏத்தும் = இனியபாடல்களாற்றுதிக்கும் அடியவர்களின் மனமென்னும் வாசிகளைத் திறையாகக் கொண்டருளுபவரென்று உலகினர் புகழும்குரை கழல் கால் = சத்திக்கும் வீரக்கழலையணிந்த திருத்தாள்களையுடையயானை திறை கொண்டவனை யானைதிறைகொண்டவ ரென்னுந் திருநாமம் வாய்ந்த விநாயகக்கடவுளைஎன் உளத்து கொண்டு எனது மனத்திலே தியானி த்து (அக்கடவுளுடைய அருட்பிரசாதத்தால்)சதுரன் எழில் சோணம் சயிலன் துதிப்பன்மேம்பாட்டினை யுடையவராகிய அழகிய சோணாசலேசுரரைத் துதிப்பேன். என்றவாறு.

 

சதுரப்பாடு = ஆக்கலாதிய கிருத்தியங்களை அம்புயனாதியர் தமது சந்நிதியிலியற்றாநிற்பத் தாம் இறைமைபூண்டு வாளாவிருத்தல். அன்றிஅரிபிரமர் தேடிக்காணுதற்கரிய அனலுருவாய் நின்றமையுமாம். சோணசயிலன் - சிவந்த அக்கினிமலையுருவாயுள்ளவன்சோணம் = சிவப்பு. மொழி கருவியாகு பெயராய்ச் செய்யுளின் மேலது. ஐம்புலவீதிகளிலும் மறிபடாது தாவிப்பாய்தலால் மனத்தைக் குதிரையென்றார். "*மனமெனும் வயமா வென்வயப் படாமன் மயங்குறு மைம்புல வீதிமறிபடா தோடு கின்றது முறையோ" என்பதனானும் அறிக. [*இஷ்டலிங்க நெடுங்கழிநெடில் -3.மனமாங்குதிரை திறைகொண்டவனென்றேத்தும் யானை திறை கொண்டவனென்பது சிஷ்டபரிபாலனமும் - துஷ்டநிக்கிரகமும் உடையரெனப் பொருள்பட்டு முரண்டொடையாய் நின்றது. திறை இறைப்பொருள். விநாயகக் கடவுள் தம்மை வழிபடுவார்க்கும் வழிபடார்க்கும் முறையே விக்கினங்களை நீக்குதற்கும் ஆக்குதற்கும் வல்லராகலின்விக்கின நிவர்த்தியின் பொருட்டு அவரைத் தியானித்துத் துதிப்பேன் என்றபடி.  = அசை. ஒவ்வொருசெய்யுளினும் வருவிப்பனவெல்லாம் இசையெச்சமெனக்கொள்க.

 

வடதேசத்தினின்றும்வந்து திருவண்ணாமலையில் வசித்திருந்த முகிலன் என்னும் அரசன் சிவகணங்களுக்கும் நகரத்தவர்க்கும் இடையூறு விளைத்தலைக் கேள்வியுற்ற குகைநமச்சிவாய தேசிகர் "சூலங் கரத்திருக்கச் சோதிமழு வாளிருக்க - வாலமுண்ட காலத் தருளிருக்க - மேலேயெரித்த விழியிருக்க விந்நாட்சோ ணேசர் - தரித்ததென்ன காரணமோ தாம்.'' என்று துதித்தலும்சிவாஞ்ஞையால் விநாயகக்கடவுள் அன்றிரவிலே பெரும்பயமுறுத்தஅவன் அஞ்சிச் சில யானை களைத் திறையாகக் கொணர்ந்து விடுத்துவழிபட்டமையால் யானைதிறை கொண்ட விநாயகரெனத் திருநாமம் பெற்றனரென்பது குகை நமச்சிவாயதேசிகர் சரித்திரத் துணர்க.

 

எழசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

 

அண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா வன்றி யென் கவியுநின் றனக்காம் 

பண்ணுலா மிருவ ரிசை கொணின் செவியிற் பாணிமா னொலியுமேற்றிலையோ 

விண்ணுலா முடியின் மேருவின் வடபால் வெயிலொரு புடையுற வொருபாற் 

றண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (1)

 

இதன் பொருள்: - விண் உலாம் முடியின் வடபால் மேருவின் வானமளா விய திருமுடியோடு வடக்கின்கணுள்ள மேருவினைப்போலஒரு புடை வெயில் உற ஒருபால் தண் நிலா எறிப்ப = சூரியநேத்திரம் ஒருபால் வெயிலை வீசவும் மற்றொருபால் சந்திரநேத்திரம் தண்ணிய சந்திரிகையை வீசவும்வளர்ந்தெழும் சோணசைலனே கைலைநாயகனே = (அரிபிரமர் பொருட்டுத் தென்பான்மேருவோ என்னும்படி உன்னதமாய்) வளர்ந்தோங்கிய சோணசைலவடிவரே! கைலைமலைக்கு நாயகரே!அண்ணல் மாபுகழ் மூவரும் = பெருமைவாய்ந்த மிக்க புகழினையுடைய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய சமய குரவர்கள் மூவரும்புனை அரும்பா அன்றி என் கவியும் நின்றனக்கு ஆம்= தேவரீருக்கு அணிந்த அரிய திருப்பாடல்களேயன்றி எனது புன்வியும் தேவரீருக்கு அங்கீகாரமாகும் (யாதினாலெனில்)இருவர் பண் உலாம் இசை கொள் நின் செவியில் பாணி மான் ஒலியும் ஏற்றிலையோ= இருவர்களுடைய பண்ணமைந்த இசையையேற்கும் திருச்செவியில் உமது திருக்கரத்தமைத்த மானின் கொடூரமான இசையையும் அங்கீகரித்திலீரோ? (இவ்வேதுவினால்.) என்றவாறு.

      

கந்தருவரிசையினுக்கும் விலங்கினொலியினுக்கும் எத்துணை உயர்வு தாழ்வு உண்டோ அத்துணை உயர்வு தாழ்வு மூவர் மொழிக்கும் தம்மொழிக்கும் உண்டேனும்மானொலியும் ஏற்றமையால் தம்மொழியும் அங்கீகரிப்பர் என்பது கருத்து. பெருமான் மூவ ரரும்பாவில் விருப்புடைய ரென்பதை *மூவர் சொலுந் தமிழ்கேட்கும் திருச்செவி'' என்பதனானும்இருவரென்றது . இருகந்தருவ ரென்பதைக் "கந்தருவரையிருகாதிற்சேர்த்தனை" என்பதனானும் உணர்க. இருவர் தும்புருநாரதரென்னலு மொன்று. ஓகாரம் வினாப்பொருளது. விண் மேகமுமாம். ஒருபுறம் சூரியனணுகுங்கால் மற்றொருபுறம் சந்திரனணுகலின் முறையே பகலிரவு நிகழப்பெறும் மேருப் போலச் சூரியசந்திரநேத்திரங்களால் வெயில் நிலவு விரியப் பெறுதலை யுணர்த்தி நிற்றலால்மேருவின் என்பதில் இன் உவமவுருபு. வடபால் மேரு என்பதால் அண்ணாமலை தென்பால் மேரு எனப்பட்டது. இது முதற் செய்யு ளாதலால் அவையடக்கமும் துதியுமாய் நின்றது.                              (1)

* தாயுமானவர். கல்லாலின் - 14.

† புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - 1.

 

துவக்கற வறிந்து பிறக்குமா ரூருந் துயர்ந்திடா டைந்துகாண் மன்று

முவப்புட னிலைத்து மரிக்குமோர் பதியு மொக்குமோ நினைக்குநின் னகரைப் 

பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற் படர்பவர் திகைப்பற நோக்கித்

தவக்கல நடத்த வுயர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.           (2)

 

இதன் பொருள்: - பவம் கடல் கடந்து முத்தி அம் கரையில் படர்பவர்பிறப்பென்னுங் கடலைத் தாண்டி முத்தியென்னும் அழகிய கரையின்கண் அடைய விரும்புவோர்திகைப்பு அற நோக்கி(அங்னம் கடக்குங்கால் நிகழும்) கலக்கமற நோக்கிக்கொண்டுதவம் கலம் நடத்த உயர்ந்து எழும் சோண சைலனே கைலைநாயகனே = தவமென்னுமரக்கலத்தை நடத்துதற்கே உயர்ந் தோங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!அறிந்து துவக்கு அற பிறக்கும் ஆரூரும் = (பின் சரீரம்வாராத நிலைமையளிக்கும் தகைமை) அறிந்து அச்சரீர மொழிதற்பொருட்டுப் பிறக்க விரும்பும் திருவாரூரும்துயர்ந்திடாது அடைந்து காண் மன்றும் = (பின்னும் பிறவித்) துயரமுறாதபடி (சரீரமொழிதற்பொருட்டு) அடைந்து தரிசித்தற்குரிய திருச்சிற்றம்பலமும், உவப்புடன் நிலைத்து மரிக்கும் ஓர் பதியும் = (சரீரமொழிதற்பொருட்டு) மகிழ்வுடன் வசித்து இறத்தற்குரியதொரு காசிப்பதியும்நினைக்கும் நின் நகரை ஒக்குமோ = (நினைத்தமாத்திரையே முத்திபாலிக்கத்தக்கதென அறிஞரால் சரீரம்மொழிதற்பொருட்டுத்) தியானிக்கத்தக்க நினது நகரை நிகர்க்குமோநிகராகா. என்றவாறு.

 

துவக்கறவென்பது மூவிடத்துங்கூட்டப் பட்டது. துவக்கு தோல்அது ஆகுபெயராய் உடலையுணர்த்திற்று. “*தில்லையைக் காணக் காசியி லிறக்கச் சிறக்குமாரூர் தனிற் பிறக்க = வெல்லையில் பெருமை யருணையை நினைக்க வெய்தலா முத்தி'' என்பது நூல்வழக்கு. உடலொழிவே பந்த நிவர்த்தியாகிய முத்தியாகலின்முத்தி சித்திக்கவென்பார் 'துவக்கறஎன்றும்பிறத்தன் முதலியன இயல்பாகக் கிடைப்பினல்லது முயலினும் கிடைப்பதரிதாகநினைத்தல் யாவர்க்கும் எளிது முடிவதாதல் பற்றி நினைக்கு நின்னகரை அவை ஒக்குமோஎன்றும்காரண காரியத் தொடர்ச்சியாய் அளவில்லாது வருதலின் பிறவியைப் 'பவக்கடல்என்றும் கூறினார். கடலிற் கப்பலோட்டுவோர் திகைப்பற அதனைச்செலுத்தற்குக் கரையில் ஓர் குறிப்பினைக் குறித்துச்செல்லுமாறுஇதனை இலக்காகக்கொண்டு தவக்கலம் நடத்தாநிற்பர் என்பது கருத்து. நோக்கல்ஈண்டுத்தியானித்தல். ஓகாரம் எதிர்மறை.                                                                 (2)

 

அருணாசலபுராணம் திருநகரச்சருக்கம் - 45.

 

 

 

 

 

நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற னிலையுளே னவைதுரந் திடுமுன் 

வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி வந்தன னின்குறிப் பறியே 

னாங்குறை மதியே தாங்கியென் றுலக மறைகுறை யறநிறை மதியுந் 

தாங்கிய முடியோ டோங்கிய சோண சைலனே கைலை நாயகனே.         (3)

 

இதன் பொருள்: - குறை ஆம் மதியே தாங்கி என்று உலகம் அறை குறை அற = குறைந்த பிறைமதியையே சூடினவரென்று உலகத்தோர் கூறும் குறைவு நீங்கநிறை மதியும் தாங்கிய முடியோடு ஓங்கிய சோணசைலனே கைலைநாயகனே = பூரண சந்தினையும் தாங்கிய முடியையுடையராய் ஓங்கி விளங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!நீங்கரும் துயர்செய் வளிமுதன் மூன்றன் நிலை உளேன்= நீங்கற்கரிய துயரினைச்செய்யாநின்ற வாத பித்த சிலேஷ்மங்களின் இடமாகிய சரீரத்திலிருக்கும் யான்அவை துரந்திடுமுன்அம்மூன்றும் என்னைத் துரத்துதற்கு முன்னரேநின் தனி வீடு வாங்கி உறைகுவான் விரும்பி வந்தனன் = (முத்தியெனப்படும்) உம்முடைய தனிவீட்டி னைச் சுதந்திரமாகப்பெற்று அதில் நிலைபேறாக வசிக்கக் காதலித்தடைந்தேன்நின்குறிப்பு அறியேன் = தேவரீர் திருவுள்ளம் எங்ஙனமோஉணரேன். என்றவாறு.

 

வாதபித்த சிலேஷ்மமென்னும் நோய்களுக்குரிய உடலில் ஒதுக்கிருக்கும் தாம் அம்மூன்றும் முரணுதற்கு முன்னரே நிலை பேறுடைய வீட்டைப்பெற அவாவெய்தியடைந்தமை அறிவித்தபடி. உயிர் உடலில் ஒதுக்கிருப்பதென்பதனை "* புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட் - டுச்சி லிருந்த வுயிர்க்கு" என்பத னானுமறிக. நீங்கு முதனிலைத் தொழிற்பெயர். அருமை இன்மைப்பொருளது. தாங்கியென்பது "ஆத்திசூடி" என்பதுபோல வினைக்குறிப்புப்பெயர். உம்மை இறந்தது தழீஇயது. [திருக்குறள் - 340.]                                            (3)

 

கனிமலை துவர்வாய்க் கோதையர்க் குருகுங் கன்மனக் கொடியனுக் கென்னீ

துனிமலை பிறவி தவிர்த்தனை யெனநிற் சுளிபவ ரிலையெனக் கிரங்காய் 

பனிமலை கதிர்வந் துறநிலை யாடி பயின்றபீ டிகையென வுதயத்

தனிமலை யிருப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (4)

 

இதன் பொருள்: - பனி மலை கதிர் உதயம் தனி மலை வந்து உற நிலை ஆடி பயின்ற பீடிகை என இருப்ப = பனியைப் போக்காநின்ற சூரியன் உதயமலையிற்றோன்றுங்கால் (அம்மலை) நிலைக்கண்ணாடி அமைத்துவைத்த பீடம்போலக் குணதிசையில் எதிர்நிற்கவளர்ந்து எழும் சோணசைலனே கைலை நாயகனேஇறைமைபூண்டு ஓங்கி விளங்கும் சோணசைலரே! கைலைநாயகரே!கனி மலை துவர் வாய் கோதையர்க்கு உருகும் கல் மனம் கொடியனுக்கு – கோவைக்கனியையுங் கீழ்ப்படுத்தும் சிவந்த வாயினையுடைய மங்கையர் பொருட்டு வருந்திநிற்கும் கொடியவனுக்குதுனிமலை பிறவி என் நீ தவிர்த்தனை என நின் சுளிபவர் இலை - துன்பத்தைக்கொண்ட பிறப்பினைத் தேவரீர் யாது காரணத்தால் நீக்கியருளினீரென்று உம்மைச் சினப்பவரின்று; (ஆகையால்)எனக்கு இரங்காய் = அடியேனுக்கு அருள்புரிவீராக. என்றவாறு.

 

மங்கையர் மயலின் மயங்குவார்க்கு வீடுபேறு இன்றென்பதும் சிவபெருமானொருவரே ஒப்புயர்வில்லாத முதற்கடவுளாகையால் அவர் திருவுளம் பெறில் அம்மயலைக்கடத்த லெளிதேன்பதும் *வல்லான்வகுத்ததே வாய்க்கால்'' என்பது பெருவழக்காதலால் அவரருளின் அதை மாற்றவல்லுந ரின்றென்பதும் குறிப்பித்தபடி. மலைதல் = ஈண்டுப்பொருதலும் இயைதலும். சூரியன் நிலைக்கண்ணாடிக்கும் உதயகிரி அது நிறுவிய பீடத்திற்கும் ஒப்பு. இறைவராவார் தம்மழகுநோக்கி உவக்கும்படி அவர்க்கெதிரே நிலையாடி நிறுவல் இயல்பாகலால் இங்ஙனம் உருவகித்தார். [தாயுமானவர் சுகவாரி - 3.]                    (4)

 

சுடரிலை நெடுவேற் கருங்கணார்க் குருகித் துயர்ந்து நின் லமரு மனநின்

னடநவில் சரண பங்கய நினைந்து நைந்துநைந் துருகுநா ளுளதோ 

மடலவிழ் மரைமாட் டெகினென வருகு மதியுறக் கார்த்திகை விளக்குத்

தடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.           (5)

 

இதன் பொருள்: - மடல் அவிழ் மரைமாட்டு எகின் என – இதழ் விரிந்த செந்தாமரையினருகே அன்னந்தங்கி நின்றாற்போலகார்த்திகை விளக்கு அருகு மதி உற தடமுடி இலங்க வளர்ந்தெழும் சோணசைலனே கைலைநாயகனே கார்த்திகை தீபமானது தனதருகே சந்திரனிருக்கும்படி விசாலித்த திருமுடியிலே விளங்கும் வண்ணம் வளர்ந்தோங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!சுடர் இலை நெடுவேல் கருங்கணார்க்கு உருகி = காந்திபெற்ற இலைவடிவமைந்த நீண்ட வேல்போலும் கருங்கண் களைவாய்ந்த மகளிர்கள் மயலால் உருகிதுயர்ந்து நின்று அலமரும் மனம் துயரடைந்திருந்து சுழலாநின்ற என்மனமானதுநடம் நவில் நின் பங்கயம் சரணம் நினைந்து நைந்து நைந்து உருகும் நாள் உளதோ = நடனஞ்செய்யாநின்ற தேவரீருடைய செந்தாமரைமலர் போலும் திருவடிகளைப் பலகானினைந்து குழைந்துருகுங்காலமும் உளதோ? (அருளுவீராக.) என்றவாறு.

 

கணார்க்கு வேற்றுமை மயக்கம். அலமரல்= சுழலல். நவிலல் செய்தல். நைந்துகைந்து =  மிகுதிக்கண்ணதாகிய அடுக்கு. ஓகாரம் ஏக்கப் பொருள்பட வினாவின்கணிற்பதோரிடைச்சொல். இங்னம் வருமிடந்தோறுங்கொள்க. கார்த்திகை தீபம் செந்நிறம்வாய்ந்து மேலோங்கியும் பிறை வெண்ணிறம்வாய்ந்து கூனியுமிருத்தலால்தாமரைமலரும் அன்னமும் போல உருவகித்தனர்.           (5)

 

அருங்கவி வாத வூரனே முதலோ ரன்பிலே மென்றது வேண்டி

யிரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா னியம்பலே மெய்யெனக் கருளாய்

கருங்கட முமிழு மீர்ங்கவுட் பனைக்கைக் கரியுரிக் கஞ்சுகங் கடுப்பத்

தரங்கமுண் டெழுகார் முகில்பயில் சோண சைலனே கைலை நாயகனே.   (6)

 

இதன் பொருள்: - கருங்கடம் உமிழும் ஈர்ங்கவுள் பனை கை கரி உரிகஞ்சுகம் கடுப்ப - கரிய மதசலம் பொழியும் குளிர்ந்த கன்னங்களையும் பனை போலுந்துதிக்கையையுமுடைய யானைச்சட்டையை (மலையுருக் கொண்ட இப்பொழுதும் அணிந்திருத்தல்) நிகர்ப்பதரங்கம் உண்டு எழு கார் முகில் பயில் சோண சைலனே கைலை நாயகனே அலைகளையுடைய சமுத்திர நீரைப்பருகி யெழுந்த கரிய மேகங்கள் படிகின்ற சோண சைலரே! கைலைநாயகரே!அருங்கவி வாதவூரன் முதலோர் = (திருவாசகம் திருக்கோவையாரென்னும்) அரிய திருப்பா டல்களை யருளிய திருவாதவூரிலவதரித்த மாணிக்கவாசக சுவாமிகளாதியோர்அன்பு இலேம் என்று அது வேண்டி இரங்குதல் பொய்ம்மை (தேவரீரிடத்தே பத்தியுடையராயிருந்தும்) பத்தியின்மையுடையோமென்று அதுதந்தளிக்கப் பிரார்த்தித்துவருந்தல் யதார்த்தமன்றுஅன்பு இலேன் என யான் இயம்பலே மெய் எனக்கு அருளாய்பத்தியின்மையுடையேனென அடியேன் விண்ணப்பித்தலே சத்தியமாகையால் அடியேனுக்கு அப்பத்தியை அருள்வீராக. என்றவாறு.

 

சிவபெருமானே அந்தணவுருவங்கொண்டு அணுகியெழுதுதற்குரிய பொருள மைதியுடையனவாய் ஓதுவார்க்கும் கேட்பார்க்கும் ஒருங்கு சிவபதமளிக்கும் தகுதியனவாகலின், 'அருங்கவி’ என்றார். பெறாதபேறெல்லாம் பெற்றிருப்பினும் தம்மை இழித்துக்கொள்ளுதல் சன்மார்க்கரியல்புஅவ்வாறு வாதவூரடிகளாதியோர் தம்மை இழித்து மொழிந்ததல்லது உள்ளபடி பத்தியில்லாதவரல்லையான் உள்ளபடி யில்லாதவனே யாகையால்எனக்கருளவேண்டு மென்பது கருத்துஏகாரங்களுள் முந்தியது அசைபிந்தியது பிரிநிலைக்கணின்ற தேற்றம். தரங்கம் இருமடியாகுபெயர்சமுத்திர நீரை யுணர்த்தலின்.                           (6)

 

புரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைகூர்  பூங்கணை மதனுமுன் பெறுநின்

சிரித்த வெண்ணகையு நுதல்விழி நோக்குஞ் சிறியனே னிருண்மலம் பெறுமோ

கருத்தினுங் கருத வரியநுண் ணியனென் கடனற வுலகெலாங் காண்பான்

றரித்ததி தூல வடிவுறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.                   (7)

 

இதன் பொருள்: - கருத்தினும் கருத அரிய நுண்ணியன் என் கடன் அற உலகெலாம் காண்பான் = கருத்தாலும் கருதற்கரிய சிற்றுருவனென்று கூறும் முறைமை நீங்கும்படி உலகமுற்றும் எளிமையிற்கண்டு தரிசிக்கும் வண்ணம்அதிதுலம் வடிவு தரித்து உறும் சோணசைலனே கைலைநாயகனே = மிகப்பருத்த திருவுருவைக் கொண்டு விளங்கும் சோணசைலரே! கைலைநாயகரே! புரத்து உறும் அவுணர் குழாமும் வண்டு இசைகூர் பூ கணை மதனும் முன் பெறும் = முப்புரவாசிகளான அவுணர்கள் கூட்டமும் வண்டுகளிசைபாடும் புட்பபாணங்க ளையேந்திய மன்மதனும் முன்னே தேவரீரிடமாகப்பெற்றசிரித்த வெண் நகையும் நுதல் விழி நோக்கும் சிறியனேன் இருள் மலம் பெறுமோ = விளக்கமமைந்த வெண்முறுவலையும் நெற்றிக்கண்பார்வையையும் சிறியேனது இருள்மயமான ஆணவமலம் பெறுமா? (பெற விரும்புகின்றனன்.) என்றவாறு.

 

சிவபெருமான் சூக்குமத்திலும் அதிசூக்கும சரீரியென்னும் சாஸ்திரமுறை கடந்து பேரருள்வசத்தால் உலகெல்லாங்கண்டு உய்யுமாறு கொண்ட அருள் வடிவமே இம்மலைவடிவமென்பதும்புரங்களையும் அனங்கனையும் போல ஆணவ மலத்தையும் புன்முறுவலாலேனும் நெற்றிக் கண்ணினாலேனும் தகிக்கவேண்டு மென்பதும் கருத்தாகக்கொள். கருத்தினும் என்புழி உம்மை உயர்வு சிறப்புப் பொருட்டு.                                                             (7)

 

ஆர்த்தெழு திரைகள் சுருண்டெறி கடனஞ் சமுது செய் பெரும்புகழ்த் தனிமை

தீர்த்திட வுளங்கொண்டவலனேன் றனைநின் றிருவடிக் கன்பனாக் கிலையே

கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து கண்டவ ரகத்திரு ளனைத்துஞ்

சாய்த்து நின் றெழுந்து விளங்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (8)

 

இதன் பொருள்: - கார்த்திகை விளக்கு மணி முடி சுமந்து கார்த்திகைத்தீபத்தை அழகிய முடியிலே தாங்கிகண்டவர் அகத்து இருள் அனைத்தும் சாய்த்து = (அத்தீபத்தையும் அதனைத் தாங்கிய தேவரீரையும்) சேவித்தோர்களுடைய மனவிருண் முழுமையும் கெடுத்துநின்றெழுந்து விளங்குறும் சோணசைலனே கைலைநாயகனே = உயர்ந்தோங்கியிலகும் சோண சைலரே! கைலைநாயகரே!ஆர்த்து எழு திரைகள் சுருண்டு எறி கடல் நஞ்சு முழங்கியெழுகின்ற அலைகள் மடங்கிவீசும் கடலிற்றோன்றிய ஆலகாலத்தைஅமுது செய் பெரும்புகழ் தனிமை தீர்த்திட உளம் கொண்டு = திருவமுதாகக் கொண்டருளிய பெரும்புகழ்ச்சியின் தனிமையை நீக்கத் திருவுளத்தேசிந்தித்துஅவலனேன் தனை நின் திருவடிக்கு அன்பன் ஆக்கிலையே = பயனற்றவனாகிய என்னை நினது திருவடிக்கு அடிமையாக்கிக் கொண்டீரில்லையே! (என்செய்வேன்.) என்றவாறு.

 

உலகிலுள்ள தீபம் தான்புகுந் தவிடத்துப் புறத்திருளொன்றே ஒழிக்கும்கார்த்திகைத் தீபமும் அதனைத்தாங்கும் இச்சோணசைலமும் அடைந்து சேவித்த வரது அகத்திருண் முழுமையும் நீக்கும் ஆற்றலுடையவென்பதும்தேவரீரருந்திய கடலினஞ்சுபோலுங் கொடியவென்னையும் ஆண்டருளின் அந்நஞ்சருந்து தலினுண்டாகிய புகழ்ச்சியொத்த மற்றொருபுகழ்ச்சி அதற்கினமாக உண்டாமென்ப தும் கருத்தாகக்கொள்க.                                                     (8)

 

தொடையுடைத் திரடோணமன்புறத் துடலங்தொலைக்குமு னகத்துட றொலைத்துத்

தடையறத் திகழ்பேரறிவுரு வாகத் தமியனேற் கருளுநாளுளதோ

புடையினிற் கரிக்கோ டிளம்பிறை புரையப் பொங்குசோ தியங்கொடி விரித்த

சடையெனப் படர்ந்து கிடந்தொளிர் சோண சைலனே கைலை நாயகனே.   (9)

 

இதன் பொருள்: - புடையினில் கரி கோடு இளம் பிறை புரைய = பக்கத்திலிருக்கிற யானைக்கோடு குறைந்த பிறைமதியை ஒத்திருக்கபொங்கு அம் சோதி கொடி விரித்த சடை என படர்ந்து கிடந்து ஒளிர் சோணசைலனே கைலைநா யகனே = பிரகாசிக்கின்ற அழகிய சோதிக்கொடிகள் விரித்துவிட்ட சடையைப் போல நாற்புறமும் கிடந்து திகழப்பெற்ற சோணசைலரே! கைலை நாயகரே!தொடை உடை திரள் தோள் நமன் புறத்து உடலம் தொலைக்குமுன் = வெற்றிமாலைபுனைந்த திரண்ட தோள்களையுடைய இயமன் எழுவகைத்தாதுக்க ளாலாகிய இப்புறவுடலை ஒழிக்குமுன்னரேதமியனேற்கு அகத்து உடல் தொலை த்து = அடியேனுக்குப் புரியட்டகமெனப்படுஞ் சூக்கும சரீரத்தையும் நிவர்த்தித்துதடை அற திகழ் பேர் அறிவு உருவு ஆக அருளும் நாள் உளதோ பந்தமகலவிளங்கும் மெய்ஞ்ஞானமே சொரூபமாகப் பாலித்தருளும் காலமும் உளதோ? (அறியேன்.) என்றவாறு.

மனம் புத்தி அகங்காரங்களும் சத்த பரிச ரூப ரச கந்தங்களாகிய பஞ்ச தன் மாத்திரைகளுங் கூடியது புரியட்டகமெனப்படும். இதனை “*வாய்ந்தமனம் புத்தியாங் காரந்தன் மாத்தினாயு - மாய்ந்துபுரி யட்டகமென் றார்.'' என்பதனானுணர்க. சோண சைலவடிவாகிய இக்கோலத்தும் பிறையுஞ் சடையுநீங்காதிருத்தல்போலயானைக் கோடும் சோதிக்கொடியும் விளங்காநின்றனவென்பது. சோதியங்கொடி - பகன் முற்றும் ஏனைக்கொடிகள் போலிருந்து இரவில் சோதிமயமாய்விளங்கும் ஓர் விதக் கொடி. இத்தகையமரத்தைச் சோதிமரம் என்பர். (9)

 

[* இறைவனூற்பயன் பாசசாதகவியல்]

 

கண்புன றுளிப்ப வழற்படு மிழுதிற் கரைந்துகு நெஞ்சினின் றனையே

பெண்பயி லுருவ மொடுநினைந்தெனது பெண்மய லகற்றுநா ளுளதோ

வண்புனல் வேந்த னார்கலிக் குடத்து மணிமுகிற் கலயத்தின் முகந்து

தண்புன லாட்ட வாடுறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.               (10)

 

இதன் பொருள்: - வண் புனல் வேந்தன் ஆர்கலி குடத்து வளமையுடைய புனலரசனான வருணன் கடலென்னுங்குடத்தினின்றும்முகில் மணி கலயத்தில் முகந்து = மேகமென்னும் இரத்தினகலசத்தினால் மொண்டுதண் புனல் ஆட்ட ஆடுறும் சோண சைலனே கைலைநாயகனே = தண்ணியபுனலை அபிஷேகிக்க ஆடியருளப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!கண் புனல் துளிப்ப அழல் படும் இழுதில் கரைந்து உகும் நெஞ்சில்= கண் நீரைப் பொழிய அழலிற்பட்ட வெண்ணெய்போலக் கரைந்துருகுநெஞ்சத்திலேநின்றனையே பெண் பயில் உருவ

மொடு நினைந்து = தேவரீரையே அம்பிகையார் ஒருபாலமர்ந்த உருவத்தினோடு தியானித்துஎனது பெண்மயல் அகற்றும் நாள் உளதோ = அடியேனது பெண்மயக்கத்தை நிவர்த்திக்குங் காலமும் உண்டோஎன்றவாறு.

 

திருவருட்சத்தியை முன்னிட்டே சிவத்தைத் தியானித்துப் பெண்மயல்கடந்து பேரின்பம் பெறவேண்டுமென்பது தோன்றச் சாதுரியமாய்ப் 'பெண்பயி லுருவ மொடுநினைந் தெனது பெண்மய லகற்றுநா ளுளதோஎன்றும்அதிதூலவடிவ மைந்த இப்பெருமானுக்கு வருணனாட்டினாலன்றி வேறொருவரால் அபிஷேகிக்க முடியாதென்பது தோன்றப் 'புனல்வேந்தனாட்ட ஆடுறும்என்றும் வியந்து கூறினார். ஆர்கலி - சமுத்திரம்மணிமுகில் - நீலமணிபோலுமுகில்அல்லது முத்தங்களை யீனுமுகிலென்னலுமாம். பெண்பயிலுருவம் - அர்த்தநாரீச்சுரவடிவம். நினையே என்பதில் ஏகாரம் தேற்றத்துடன் பிரிநிலையுமாம்.                          (10)

 

வேலையந் துகில்சூழ் மலர்தலை யுலகில் மெய்யினைப் பொய்யெனு மவர்க்கே

யேலவந் தருள்வ தன்றிமெய்யினைமெய் யெனுமெனக் கருள்புரிந் திடாயோ

காலநன் குணர்ந்து சினகரம் புகுந்து காண்பரி தெனாதுலகனைத்துஞ்

சாலநின் றுழியே கண்டிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (11)

 

இதன் பொருள்: - உலகு அனைத்தும் காலம் நன்கு உணர்ந்து சினகரம் புகுந்து காண்பு அரிது எனாது = உலகினரனைவரும் தரிசித்தற்குரிய காலத்தை நன்றாக வுணர்ந்து ஆலயம் புகுந்தும் காணுதலரிய திருவுருவமென்று வருந்தா வண்ணம்நின்றுழியே சால கண்டிடும் சோணசைலனே கைலைநாயகனே நின்றவிடத் திருந்தே (காலமுதலிய நோக்காது கண்களாா) மிகவுஞ் சேவிக்கத்தக்க சோணசைலரே! கைலைநாயகரே!வேலை அம் துகில் சூழ் மலர் தலை உலகில் சமுத்திரமாகிய அழகிய ஆடை சூழ்ந்த பரந்த இடமுடைய உலகின்கண்மெய்யினை பொய் எனுமவர்க்கே வந்து ஏல அருள்வது அன்றி = உடலினைப் பொய்யென்று மதிப்பவர்க்கே எழுந்தருளி மிகவும் அருள் பாலிப்பதல்லதுமெய்யினை மெய் எனும் எனக்கு அருள் புரிந்திடாயோ உடலினை நிலைத்த தென மதிக்கும் எனக்கு நினதருளைப் பாலிக்கமாட்டீரோ? (அறியேன்.) என்றவாறு.

 

தேகம் மெய்யெனப்பெயர் பெறினும் பொய்யேயாயழிதலைச் சோதனையால் பிரத்தியக்ஷத்துணர்ந்து அதில் அபிமானமற்றவர்க்கேயல்லது அதில் உண்மைப் பாவனையால் அபிமானமறாதார்க்கு அருள் பாலியாமைதிண்ணமாகலின் அவ்வாறு புரியாதுதேகாபிமானம் அறும்வகை செய்து அநுக்கிரகிக்க வேண்டுமெனப் பிரார்த் தித்தபடி. சூழ் வினைத்தொகைகாண்பு - தொழிற்பெயர். எனாது இடைக்குறை. உலகு - ஆகு பெயர்.                                                       (11)

 

மயலினாலழுந்தும் பிறவியா மளற்றை வளர் தரு நின் பெருங் கருணை

வெயிலினா லுலர்த்தி யெனதுளக் கமலம் விரிக்குமொண் பரிதிநீ யலையோ

பயிலுமா லயமோர் சைலமோர் சைலம் பகைப்புல முருக்குகார் முகமோர்

சைலமா துலனா மெனக்கொளுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (12)

 

இதன் பொருள்: - பயிலும் ஆலயம் ஓர்சைலம் = தினமும் அமருமாலயம் கைலைமலையாகும்பகை புலம் முருக்கு கார் முகம் ஓர் சைலம் பகைவராகிய திரிபுராதிபர்களுடைய இடத்தையழிக்கும் வில் மேருமலையாகும்மாதுலன் ஓர்சைலம் ஆம் எனகொளும் சோணசைலனே கைலைநாயகனே= மாமனார் இமையமலையாகுமென வியக்கும்படி கொண்டு விளங்கும் சோணசைலரே! கைலைநாயகரோ!மயலினால் அழுந்தும் பிறவி ஆம் அளற்றை - மயக்கங் காரணமாக அழுந்து தற்குரிய பிறப்பென்னும் சேற்றினைவளர் தரும் நின் பெருங்கருணை வெயிலினால் உலர்த்திவளராநின்ற உமது மிக்க திருவருள் வெய்யிலினா லுலரச்செய்துஎனது உளக்கமலம் விரிக்கும் ஒண் பரிதி நீ அலையோ = எனது இருதயகமலத்தை விகசிக்கச் செய்யும் அழகிய சூரியன் தேவரீரன்றோ? (ஆகையால் அருளவேண்டும்.) என்றவாறு.

 

தானல்லாதவற்றைத் தானென்றும்தனதல்லாதவற்றைத் தனதென்றும் அபிமானிக்கும் மயக்கத்தின் காரியமே பிறப்பாதலால், 'மயலினாலழுந்தும்பிறவிஎன்றும்பிறவிவசப்பட்டோர் மேன்மேலும் அதிலழுந்தப் பெறுதலன்றி விலகலரிதாதலால் பிறப்பை 'அளறுஎன்றும்பெருமான் திருவருட்கிரணத்தினா லேயே இருதயதாமரை விரிதற்குரியதாதலால் அப்பெருமானைப் 'பரிதிஎன்றும் கூறினார். ஆலயமும் கார்முகமும் மாதுலனும் மலையெனக்கொண்டு தாமும் மலையுருவாயினாரென அவர் திருவிளையாடலை வியந்தமையுணர்க. மலையரை யனை மலையென்றது இலக்கணை.                                           (12)

புலம்புரி துயரங் கழன்றுநின் கழற்கால் புந்தியஞ் சினகரத் திருத்தி,

நலம்புரி புனிதர் பேரவை தமியேனணுகுவா னருளுநா ளுளதோ,

வலம்புரி மனிதர் கடலென வொலித்து வளைவுற நடுவண்மந் தரம்போற்

றலம்புரி தவத்தி னின்றொளிர் சோண சைலனே கைலை நாயகனே.         (13)

 

இதன் பொருள்: - வலம்புரி மனிதர் கடலென ஒலித்து வளைவுற = பிரதக்ஷிணஞ்செய்யும் அடியவர்கள் கடல்போல (அரகரவென்று) துதித்துக் கொண்டு வளைந்திருக்கநடுவண் மந்தரம் போல் மத்தியில் மந்தர மலையைப்போலதலம் புரி தவத்தின் நின்று ஒளிர் சோண சைலனே கைலைநாயகனே உலகினர் செய்த தவத்தின் பிரயோசனமாக ஓங்கிவிளங்கும் சோணசைலாரே! கைலைநாயகரே!புலம் புரிதயாம் கழன்று விஷயங்களால் விளைக்கப்படும் துயரங்களினீங்கிநின் கழல் கால் = தேவரீரது வீரக்கழலையணிந்த திருவடிகளைபுந்தி அம் சினகரத்து இருத்திமனமாகிய அழகிய ஆலயத்தின்கண் அமர்த்திநலம் புரி புனிதர் பேரவை தமியேன் நணுகுவான் அருளும் நாள் உளதோ = நன்மையைப்பாலியாநின்ற அடியவர்களுடைய பெரிய கூட்டத்தின் கண் தனியனா னயான் அடையும்படி கிருபையருளும் நாளும் உண்டோ? (அறியேன்.) என்றவாறு.

 

அரகரவென்னும் ஓசையும் தொகைப்பெருக்கும்பற்றி மனிதரைக் கடலாகவும்மந்தரம் கடைந்தோர்க்கு அமுது தந்தது போல அமுதென்னும் முத்திவீட்டைத் தருதலால் சோணசைலத்தை அம்மந்தரமாகவுங் கூறினார். புரி நான்கும் வினைத் தொகைப்பொருளன. புலம் இது போலியாய்ப் புலன் எனவரும். துயரம் இதில் அம் சாரியை. தமியேன் இதில் தமி - தனிமை. நணுகுவான் நணுகவான் வினை யெச்சவிகுதி.                                                             (13)

 

நீரினி லெழுமொக் குளினழி யுடம்பு நிலையென நிலைக்குமா னந்த

வாரிதி படிய வறிந்திடா துழலு மடமையே னுய்யுநா ளுளதோ

வேரியல் பதமுன்றேடுமக் கேழ லின்று நா டியகிளைத் திடல் போற்,

சாரலி னேன மருப்புழுஞ் சோண சைலனே கைலை நாயகனே.                   (14)

 

இதன் பொருள்: - ஏர் இயல் பதம் முன் தேடும்அக்கேழல்அழகமைந்த தேவரீர் திருவடியை முன்னர் த்தேடிய அந்தத் திருமாலாகியவராகம்இன்றும் நாடிய கிளைத்திடல்போல் = இப்பொழுதும் அத்திருவடியையே தேடப் பூமியைக் கிண்டுதல்போலசாரலின் ஏனம் மருப்பு உழும் சோண சைலனே கைலை நாயகனே= பக்கங்களில் பன்றி தனது கொம்புகளால் உழுதலைப் பெற்றுள்ள சோணசைலரோ! கைலைநாயகரே!நீரினில் எழும் மொக்குளின் அழி உடம்பு நிலையென = நீரினிடத்தே தோன்றுங் குமிழிபோன்று (காலநியதியற்றதாய்) அழியக்கூடிய உடலினை நிலையுடையதென்று கருதிநிலைக்கும் ஆனந்தம் வாரிதி படிய அறிந்திடாது உழலும் மடமையேன் உய்யும் நாள் உளதோஅழியாத் தன்மையையுடைய பேரின்ப சமுத்திரத்தில் மூழ்கி நிற்க அறியாது விஷயவாசனையிலுழலும் அறியாமையுடைய யான் உய்யுங்காலமும் உளதோ? (அறியேன்.) என்றவாறு.

மொக்குள் இக்காலத்து அழியுமென்னும் நியதியின்றியழிதல் நிச்சயமுடையதாய் நிற்றல் போல நிற்றலால்உடலுக்கு அழியுடம்பென்று விசேடணங் கொடுக்கப்பட்டது. நிலையா ததை நிலையென்று கருதி நிலையுடையதை விரும்பாதுழலுதலால், 'மடமையேன்என்றார். உளதோ உண்டோ என்பவற்றிற்கு அத்தகைய அனுபவங்களை உண்டாக்கவேண்டுமென்பது கருத்தாக வருமிடந்தோறுங் கொள்க. நாடிய என்பது செய்யிய என்னும் வினையெச்சம். அக்கேழல் அகரம் சிறப்புப் பொருளது. இன்றும் என்பதில் உம்மை இறந்தது தழீஇயது.                                                              (14)

 

கருத்திடை நினது கருணைமா மேனி கண்டெழுத் தைந்துநா வியம்பச்

சிரத்தினி லமைத்த கரத்தொடு நினையான் றினம்வலம் புரியுமா றருளாய்

வரத்திரு முடியின் மதிதிரு முடியின் வனைந்துகந் தரத்தினிலிருள் கந்

தரத்தினி லிருத்தி விளங்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (15)

 

இதன் பொருள்: - வரம் திருமுடியின் மதி திருமுடியில் வனைந்து மேன்மை தங்கிய திருமுடியின்கணிருந்த சந்திரனை (இம்மலை வடிவங் கொண்ட இப்போதும்) அழகிய உச்சியின்கண் சூடியும்கந்தரத்தினில் இருள் கந்தரத்தினில் இருத்தி = முன் கண்டத்திலமைத்த விஷக்கருமையாகும் இருளை இப்போது குகைகளிடமாக இருத்தியும்விளங்குறும் சோண சைலனே கைலைநாயகனேபிரகாசிக்கின்ற சோணசைலரே! கைலைநாயகரே!கருத்திடை நினது கருணை மாமேனி கண்டு = மனத்தின்கண் தேவரீருடைய கருணைமயமான சிறந்த திருமேனியைத் தியானித்துக் கொண்டுஐந்து எழுத்தும் நா இயம்ப = பஞ்சாக்கரங்களையும் நா உச்சரிக்கசிரத்தினில் அமைத்த கரத்தொடும் – சிரத்தின் கண் குவித்த கைகளோடும்நினை யான் தினம் வலம் புரியும் ஆறு அருளாய் தேவரீரை அடியேன் நாடோறும் பிரதக்ஷிணஞ்செய்து வாழும்படி அருள் புரிவீராக. என்றவாறு.

 

தேவரீரை மனோவாக்குக் காயங்களால் வழிபடல் அருளல் வேண்டுமென் பார், ‘கருத்திடைக்கண்டு எழுத்து நாவியம்ப சிரத்தமைத்த கரத்தொடு வலம்புரியுமாறு அருளாய்என்றனர். கண்டு புரியுமாறெனக் கூட்டுக, மதி இப்பொழுதும் வனைந்தமை அது தவழப்பெறுதல், கந்தரம் – குண்டம், குகை.       (15)

 

பாரெலா மிகழு மிகழ்ச்சியும் புகழ்ச்சிப் பயனெனவுணர்ந்துநா டொறுமா

ரூரனா ரவையி னிகழ்ந்த சொற் றுதியி னுவக்குநின் பதந்தொழ வருளா

யேருலா மண்டச் சுவர்மதின் மிசைப்பா விலங்குறு மண்டளகையாச்

சாருமா லயத்தி லிலிங்கமாஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (16)

 

இதன் பொருள்: - ஏர் உலாம் அண்டம் சுவர் மதில்= அழகமைந்து விளங்கும் இவ்வண்டச்சுவரே ஆலயத்தின் மதிலாகவும்இலங்குறும் அண்டம் கோளகை மிசை பாவு ஆக = பிரகாசிக்கின்ற அண்டத்தின் மூடியே ஆலயத்தின் மேற்பாவாகிய விமானமாகவும்சாரும் ஆலயத்தில் இலிங்கம் ஆம் சோணசைலனே கைலைநாயகனே= சார்ந்துள்ள இவ்வண்டமென்னும் ஆலயத்தில் இலிங்கவடிவமாக எழுந்தருளிய சோணசைலரே! கைலைநாயகரே!பார் எலாம் இகழும் இகழ்ச்சியும் புகழ்ச்சி பயன் என உணர்ந்து = உலகமெலாம் இகழும் இகழ்ச்சி மொழியையும் புகழ்ச்சிப்பயனுடையனவாக தேவரீர் கொண்டருள் வீரெனத் தெளிந்துஆரூரன் ஆர் அவையில் இகழ்ந்த சொல் = திருநாவலூரர் தக்கவர்கள் நிறைந்த சபையின்கண் இகழ்ந்தசொற்களைநாள் தொறும் துதியின் உவக்கும் நின் பதம் தொழ அருளாய் - தினந்தோறும் துதிபோல விரும்பியருளும் தேவரீருடைய திருவடிகளை அடியேன் தொழத் திருவருள் பாலீய்பீராக. என்ற வாறு

 

ஆரூரர் திருவெண்ணெய்நல்லூரில் மணப்பந்தரிலே பித்தனோ பேயனோ என்றிகழ்ந்தமையே யன்றித் திருவாரூரில் ''வாழ்ந்து போதீரேஎனவும்ஓணகாந்தன்றளியில் "உங்களுக்காட்செய்யமாட்டோம்எனவும்திருவொற்றியூரில் "மகத்திற்புக்கதோர் சனியெனக்கானாய்." எனவும்இவ்வண்ணம் பற்பல தலங்களில் துதித்தமை குறிப்பிப்பார் 'ஆரூரனாரவையினிகழ்ந்தசொல்என்றும்சிவபெருமான் மலைவடிவானமையின் அவ்வடிவுக்கியைந்த ஆலயம் இவ்வண்டமே என்பார் 'அண்டச்சுவர்மதில் மிசைப்பா வண்டகோளகையாச் சாருமாலயம்என்றும்இகழ்ச்சியையும் புகழ்ச்சியாகக் கொள்ளும் தெய்வம் உம்மை யல்லது கண்டிலோமாகையால் உமது திருவடிவழிபாடே வேண்டுமென்பார் 'நின்பதந்தொழஎன்றும் கூறினார். மிசைப்பா - மேற்பரப்பு. மிசைப்டாலென்னும் பாடங்கொள்ளின் மேற்பகுதியெனப் பொருளுரைக்க. கோளகையா ஈறுகெட்ட வினையெச்சம். நாடொறும் நின்பதந்தொழ என முடித்தலுமாம்.                               (16)

 

இந்தியங் கரண முடலம்வே றாக்கி யிருண்மலப் படலமுங் கீறிக் 

கந்தமு மலரு மெனநினை யென்னிற் காண்பறக் காணுநா ளுளதோ

வந்தொரு களிறு முழுவையுங் கொன்ற மலிபகை தவிர்ப்பவெண் ணிகந்த

தந்தியும் புலியும் வளர்த்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (17)

 

இதன் பொருள்: - வந்த ஒரு களிறும் உழுவையும் கொன்ற மலி பகைதவிர்ப்ப தாருகவன முனிவர் பகைகொண்டேவ வந்த களிறொன்றும் புலியொன்றும் கொன்றருளிய மிக்கபகையினை நீக்கிக்கொள்வதற்கேஎண் இந்த தந்தியும் புலியும் வளர்த்திடும் சோணசைலனே கைலைநாயகனே = அளவிறந்த யானைகளையும் புலிகளையும் வளர்த்தருளும் சோண சைலரே! சைலைநாயகரே!இந்தியம் காரணம் உடலம் வேறாக்கி = பஞ்சேந்திரியம் அந்தக்காரணம் தேகம் இவற்றினை (யானல்ல வென்று) வேறுபடுத்திஇருள் மலம் படலமும் கீறி = இருண்ட ஆணவமல மறைப் பினையும் சேதித்துநினை என்னில் கந்தமும் மலரும் என காண்பு அற காணும் நாள் உதோ = தேவரீரை என்னுள்ளே மணமு மலரும்போல ஒற்றுமைப்பட ஊனக்கண்ணாலன்றி ஞானக்கண்ணால் காணுங் காலமும் உண்டோ? (அறியேன்.) என்றவாறு

 

இந்திரியம் - மெய் வாய் கண் மூக்கு செவிகரணம்மனம்புத்தி சித்தம் அகங்காரம். அறியாமயால் ஆன்மாவென அபிமானிக்கப்பட்டிருந்த இந்திரியாதி களை வேறாக்கி  அவ்வபிமானத்திற்குச் சாதனமாயிருந்த இருண்மலப் படலத்தை யுங்கீறிகந்தம் மலரிலபேதமாக ஒற்றித்து நிற்றல்போல் ஆன்மாவில் தேவரீர் அபேதமாக ஒற்றித்துநிற்றலைக்காணுமாறு அருளல் வேண்டுமென்பது கருத்துவேறாக்கிக் கீறிக் காணும் நாள் என இயையும். வந்த ஒரு களிறு என்பதில் பெயரெச்சத்தகரந்தொக்கது. “*புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை'' என்புழிப்போல. (17)

[* திருக்குறள் - 59.]

 

முழங்குவண் டினங்கள் விருந்துணு மலங்கன் மொய்குழன் மகளிர்தம் மயலாற்

புழுங்குமென் றனைநின்றிருவடி நிழலிற் புகவிடுத் தளிக்குநா ளுளதோ

வழங்குவெண் டினாயா றவிர்சடை கரப்ப மணிமுடி நின்றிழிந் திடல்போற்

றழங்குவெள் ளருவி யிழிந்தொளிர் சோண சைலனே கைலை நாயகனே.   (18)

 

இதன் பொருள்: - அவிர்சடைகரப்ப = விளங்கும் சடைமாத்திரம் மறையா நிற்கவெண்திரை வழங்கு ஆறு மணிமுடியின்று இழிந்திடல்போல்வெள்ளிய அலைகளைக் கொழிக்குங் கங்காநதி மறைவின்றி அழகிய முடியிலிருந்து ஒழுகுதல் போலதழங்கு வெள்ளருவி இழிந்து ஒளிர் சோணசைலனே கைலை நாயகனே சத்திக்கின்ற வெள்ளிய அருவிகள் இழிந்துதிகழும் சோணசைலரே! கைலைநாயகரே!முழங்கு வண்டு இனங்கள் விருந்து உணும் அலங்கல் மொய் குழல் மகளிர் தம் மயலால் = இசைபாடும் வண்டினங்கள் புதிதுண்ணும் (தேனிறைந்த) பூமாலை சூடிய கூந்தலினையுடைய மங்கையர் மயக்கத்தால்புழுங்கும் என்றனை நின் திருவடி நிழலில் புக விடுத்து அளிக்கும் நாள் உளதோ = வெதும்பும் என்னைத் தேவரீரது திருவடி நிழலிலடைவித்துக் காக்குங்காலமும் உண்டோ? (அறியேன்.) என்றவாறு

 

சடை காணப்படுதலில்லாது அருவிமாத்திரங் காணப்படுதலால்இங்ஙனங் கூறினார். மணி இரத்தினங்களுமாம்.                                          (18

 

குன்றுதோ றாடுங் குமரனே யெனவுங் கொடுஞ்சிலை மதனவே ளெனவும்

புன்றொழின் மனிதர்ப் புகழ்ந்துபாழ்க் கிறைக்கும் புலமைதீர்த் தெனக்கருள் புரியா

யொன்றொரு தினந்தோட் குட்குழைந் தனமென்றுறாதுநா டொறுமக மேரு

தன்றலை தாழ்ப்ப வளர்க் தெழுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (19)

 

இதன் பொருள்: - ஒன்றொருதினம் தோட்கு உள் குழைந்தனம் என்று உறாது = (திரிபுரசங்காரகாலமான) ஒருதினத்தில் இச்சிவபெருமான் திருக்கரத்துக் குள்ளே (வில்லாகக்) குழையப்பெற்றனம் என்று நினைவுற்று (அவ்வளவில்மகிழ்ச்சி) உற்றிராமல்மகமேருநாள்தொறும் தன் தலை தாழ்ப்ப வளர்ந்து எழும் சோணசைலனே கைலைநாயகனே = மகமேருமலை தினந்தோறும் தனது தலை யைத் தாழ்த்துக்குனியுமாறு வளர்ந்தோங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!புன் தொழில் மனிதர் அற்பச் செய்கையுடைய மனிதர்களைகுன்றுதோறு ஆடும் குமரனே எனவும் மலைகடோறும் திருவிளையாடல் புரியும் குமாரக்கடவுளை ஒப்பானவனே என்றும்கொடும் சிலை மதனவேள் எனவும் = வளைந்த கருப்புவில்லையேந்திய மன்மதனே என்றும்புகழ்ந்து பாழ்க்கு இறைக்கும் புலமை தீர்த்து = வியந்து கூறி வீணேபோக்கும் புலமைத்தன்மையையொழித்துஎனக்கு அருள் புரியாய் அடியேனுக்குத் (தேவரீரையேபாடும் பரிசுதந்து) அருள் புரிய வேண்டும். என்றவாறு

 

முருகக்கடவுளையும் மன்மதனையும் ஒப்புக்கூறுவது இளமையும் அழகும் பற்றியென்க. கற்றதனாலாயபயன் கடவுளைவணங்லே வணங்காக்கால் அக்கல்வியாற் பயனில்லையென்பது தோன்றப்  'பாழ்க்கிறைக்கும் புலமைஎன்றார். இதனை  *நலமிலாதானை நல்ல னேயென்று நரைத்த மாந்தரை யிளையனே - குலமி லாதானைக் குலவ னேயென்று கூறி னுங்கொடுப் பாரிலைப் - புலமெ லாம்வெறி கமழும் பூம்புக லூரைப் பாடுமின் புலவிர்கா - ளம ராதம ருலக மாள்வதற் கியாது மையுற வில்லையே.'' என்னும்தேவாரத்தானுமுணர்க. பாழ் என்பது ஆகு பெயராய்ப் பாழ்ப்பட்ட பயிராதிகளை உணர்த்தியதெனக் கொண்டுஇறைத்தல் நீரிறைத்தலென்னலுமொன்று. ஒன்றொரு தினம் = நாண்மிகுதி யின்மைக் குறிப்பினின்றது. தோள் கை. முன் வலியிலே தோற்றுக் குழைவுற்றோம்இப்பொழுதும் வடிவிலே தோற்றுச் சிறுமையுற்றோமெனத் தினமும் நாணத்தால் மேரு தலைகுனிந்து நிற்கஅதிகவுன்னதமாக வளர்ந் தோங்கியது சோணசைல மென்பது கருத்து.                                (19)

[* சுந்தரமூர்த்தி நாயனார் திருப்புகலூர்த்தேவாரம் - 6.]

 

வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு விருந்துசெய்துறும்பெரு மிடியுங்

கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுமிக் கொடியனேற் கருளுநா ளுளதோ

வண்டுழுங் குவளை மலர்தடஞ் சுனையின் மற்றைவானவர்க்குரித் தன்றிச்

சண்டியுண் மகிழ்ந்து கொளமலர் சோண சைலனே கைலை நாயகனே.         (20)

 

இதன் பொருள்: - வண்டு உழும் குவளைமலர் தடம் சுனையில் வண்டுகள் இண்டியூதுக் குவளைமலர்கள் அகன்ற சுனைகளிலேமற்றை வானவர்க்கு உரித்து அன்றி = பிறதேவர்களுக்கு உரிமையாகாதுசண்டி உள் மகிழ்ந்து கொள மலர் சோணசைலனே கைலைநாயகனே= சண்டேசுரநாயனார் திருவுளங்களித்துப் புனைந்து கொள்ளும்படி மலர்கின்ற சோணசைலரே! கைலை காயகரே!வெண் திருநீறு புனையும் மாதவர்க்கு விருந்து செய்து உறும் பெரு மிடியும் வெண்ணிற விபூதியைப்புனையும் மிக்கதவமுடைய அன்பர்களுக்கு அரிது அமுது செய்வித்துச் (செல்வச்செலவினால்) சேர்ந்த பெரிய தரித்திரமும்கொண்ட நல்விரதத்து இளைக்கும் யாக்கையும் இ கொடியனேற்கு அருளும் நாள் உளதோ = மேற்கொண்ட நல்ல விரதானுஷ்டானத்தாலே மெலியுஞ் சரீரத்தையும் இத்தீமையேனுக்குத் தந்தருளும் நாளும் உளதோ? (அறியேன்.) என்றவாறு

 

திருநீற்றின்வகையுள் செம்மை கருமையன நிஷேதமுடைய வாய்த் தரிப்போர்க்குத் தீங்குவிளைப்பன என்பதுதோன்ற 'வெண்டிருநீறுஎன்றும்தரித்திரமில்லாமையும் சரீரமெலியாமையுமே உலகினர் விரும்பாநிற்க; *"மண்ணி னிற் பிறந்தார் பெறும் பயன்மதி சூடும் - அண்ண லாரடி யார் தமை யமுதுசெய் வித்த" லும் அரிய விரதாதிகளால் உடல்வாட்டலுமே என்பது தோன்றஅவ்வுலகினர் கொள்கைக்கு மாறாக 'மிடியும் இளைக்கும்யாக்கையும் அருளுநாளு ளதோஎன்றும்சிவபெருமானே இம்மலைவடிவாயிருத்தலால்அவர்மேற்றோன்று மலர்களெல்லாம் அருச்சித்தபுட்பங்களைப்போல நிர்மாலியமேயாதலால்அவை ஏனைத்தேவருக்கு உரிமையின்றிச் சண்டிகேசுரருக்கே உரிமையாதல்தோன்றச் 'சண்டியுண் மகிழ்ந்து கொளஎன்றுங் கூறினார். இகரச்சுட்டு இழிவுப்பொருளது. குவளை மலர்சுனையில் மலர் சோணசைல மெனக் கூட்டுக.             (20)

 

[* பெரிய புராணத்தில் ஆளுடைய பிள்ளை யார் புராணம். 1.87.]

 

வந்துமா மறலி யெனதுயி ருண்பான் மயிலையுண் சிரலினிற் கின்றான்

முந்திநீ யெனையா னந்தவா ரிதியின் மூழ்குற விடுத்தருள் புரியாய்

நந்துமா மலையே யென்றுசா திப்ப நனைமலர் வேங்கையு மசோகுஞ்

சந்துமேன் முளைப்பச் செய்துகொள் சோணசைலனே கைலை நாயகனே.   (21)

 

இதன் பொருள்: - நந்தும் மா மலையே என்று சாதிப்ப - (சிவசொரூப மெனக்கொள்ளாது) வளர்ந்த மலையேயென்று (அபக்குவிகள்) உறுதிகூறும்படிநனை மலர் வேங்கையும் அசோகும் சந்தும் மேல் முளைப்ப செய்து கொள் சோணசைலனே கைலைநாயகனே = தேன் செறிந்த மலர்களையுடைய வேங்கையும் அசோகும் சந்தனமுமாகிய விருக்ஷங்களை மேலே உதிப்பச்செய்து கொண் விளங்கும் சோணசைலரே! கைலைநாயகரே!மாமறலி எனது உயிர் உண்பான் வந்து மயிலை உண் சிரலின் நிற்கின்றான் கரிய இயமன் எனது யிரை அபகரிக்கும்படி மீனைக்கவரநிற்கும் மீன்குத்திப் பறவைபோல நிற்கின்றனன்நீ முந்தி எனை ஆனந்தம் வாரிதியில் மூழ்குற விடுத்து அருள் புரியாய் – தேவரீர் (அவ்வியமன் கவரும்) முன்னரே அடியேனை ஆனந்தசமுத்திரத்தின் மூழ்கிடச் செய்து அருள்புரிவீராக. என்றவாறு

 

மாமறலி = சரீரப்பருமையுடைய இயமனென்னலு மொன்று. மயிலை = மீன். சிரல் = மீன்குத்திப்பறவை. நீருண்மூழ்கிய மீனைக்கவரும் ஆற்றலில்லாது மீன் குத்திப்பறவை விலகுதல் போல் ஆனந்த சமுத்திரத்தின் மூழ்கிய என்னைக் கவரும் ஆற்றலில்லாது இயமனகலும்படி அவ்வானந்தசமுத்திரத்தில் மூழ்குவித்தல் வேண் டுமென்பதும்இச்சோணசைலம் சிவசொரூபமேயெனப் பக்குவிகள் கொள்ளுதற்குக் கருவியாகச் சுருதியாதிகளை நாட்டியது போலஅபக்குவிகள் மலையேயென்று சாதித்தற்குக் கருவியாக வேங்கையாதியமரங்களை மேலே முளைப்பச் செய்து கொண்டு விளங்காநின்றன ரென்பதும் கருத்தாகக்கொள்க. நந்தல் = வளர்தல். நந்துளானென்னும் பாடத்திற்குசங்கையுள்ள திருமால் அடிதேடத் தொடங்கிய காலத்துச் செல்லச்செல்ல மலையாகவே காணப்பட்டமையால் மலையென்றே சாதிப்ப எனப் பொருளுரைக்க. சாதிப்பச்செய்துகொள் எனக் கூட்டுக.         (21)

 

பூமழை யமரர் பொழியமா தவர்கட் புனன்மறு கிடைப்பொடியடக்கத்

தூமொழி மனைநீ தூதுபோம் பயனில் சொற்பதர் புடைத்திளைக் கின்றேன்

யாமுனர் மிகுபே ருருவமாய் வரினு மிருவரு முணர்த்திடி னன்றித்

தாமுணர் கிலரென் றெழுந்துயர் சோண சைலனே கைலை நாயகனே.         (22)

 

இதன் பொருள்: - யாம் உணர் மிகு பேர் உருவம் ஆய் வரினும் = நாம் (எல்லாராலும் எளிமையில்) அறியத்தக்க மிக்க பெரிய வடிவமுடையேமாய்த் தோன்றினும்இருவரும் உணர்த்திடின் அன்றி தாம் உணர்கிலர் என்று எழுந்து உயர் சோணசைலனே கைலை காயகனே = (பிரமவிட்டுணுக்க)ளிருவரும் அகத்தே உணர்த்தினாலன்றித் தாமுணரும் ஆற்றலிலரென்று காட்டுவான் ஓங்கி யுயரந்துநிற்கும் சோணசைலரே! கைலைநாயகரே!அமரர் பூ மழை பொழிய மாதவர் கண் புனல் மறுகிடை பொடி அடக்க = தேவர்கள் புஷ்பவருஷம் வருஷிக் கவும் மிக்க தவசிகளுடைய கண்கள் ஆராமையாற்பொழிந்த ஆனந்த அருவி திருவீதியிலுள்ள பொடிகளை அடக்கவும்தூ மொழி மனை நீ தூது போம் பயன் இல் = செவ்விய மொழிகளைக் கூறும் (பரவை நாச்சியாரது) திருமனைக்குத் தேவரீர் தூதுபோகக்கூடிய (அவ்வளவு) பொருட்பிரயோசனமில்லாதசொல் பதர் புடைத்து இளைக்கின்றேன் = சொற்களாகிய பதர்களைத் தூற்றித் தூற்றி மெலிகின் றனன். (என் செய்வேன்!) என்றவாறு

 

நாயன்மார் தமது திருப்பாடல்கள் பெருமானே தூதுஞ்செல்லுதற்கேதுவாகிய பொருட்பயனிரம்பிய சொற்களையுடைமையின் வேண்டிய பெற்றனர்யானேஅப்படிப்பட்ட பொருட் பயன் சிறிதும் பெறாத சொற்களாகிய பதர்களைப் புடைத்துப்

பயன்யாதும் பெறாது மெலியாநின்றேனெனத் தம்மையிழித்துக் கூறியவாறு. தூமொழி பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. போம்பயனெனக் காரியத்தைக் காரணமாக வுபசரித்தார். புடைத்தல் - ஈண்டுச் செய்யுளாகத் தொடுத்தலின் மேலது. பதரென்றதற்கிணங்கப் புடைத்தென்றார். உணர்கிலர் என்பதில் கில் ஆற்றலையுணர்த்துவதோ ரிடைச்சொல்.                        (22)

 

கழைமொழிக் கொடியோர்க் கேவல்செய் துடலங்கமருகு மமிழ்தின்மங் குறாமல் 

விழைவறத் துறங்துன் றிருவடிக் கமலம் விழைகுநர்க் கேவல்செய் திலனே 

மழைமதக் களிநல் யானைமத் தகம்பாய் வள்ளுகிரோடு செல் லரிமாத் 

தழைசிறைச் சிம்புள் கொண்டெழுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (23)

 

இதன் பொருள்: - மழை மதம் களி நல் யானை = மழைபோலும் மதப் பெருக்கும் செருக்குமுடைய (உத்தம) இலக்கண மமைந்த யானையினதுமத்தகம் பாய் வள் உகிரோடு செல் அரிமா = மத்தத்திலே செலுத்திய கூரிய நகங்களோடு செல்லுகின்ற சிங்கத்தைதழை சிறை சிம்புள் கொண்டு எழும் சோண சைலனே கைலைகாயகனே = தழைந்த சிறகுகளையுடைய சரபப்புள் அதிசுலபமாகக் (காலினகங்களால்) தூக்கிக்கொண்டெழும்பும் சோணசைலரே! கைலைநாயகரே!கழை மொழி கொடியோர்க்கு ஏவல் செய்து கரும்பினிரதம் போலு மொழிகளை யுடைய கொடிபோல்வாரான பெண்களுக்கு (அவரேவிய) ஏவற்றொழிலைச் செய்துஉடலம் கமர் உகும் அமிழ்தின் மங்குறாமல் விழைவு அற துறந்து (அரிதிற்பெற்ற) இச்சரீரம் பூமியின் வெடிப்பிலூற்றிய அமிர்தம்போல வீணேயழி யாமல் சகல பற்றுக்களையும் முற்ற வொழித்துஉன் திருவடி கமலம் விழைகுர்க்கு ஏவல் செய்திலனே = தேவரீருடைய திருவடித்தாமரைகளையே விரும்பிகிற்கும் சரணர்கட்குத் தொண்டு செய்யாதவனாயினேன் (என் செய்வேன்!.) என்றவாறு

மிர்தத்தை யொழித்து இன்பமளிக்கும் அமிர்தம் அதைப்பெற்றோர் தவறால் வெடிப்பிற்சிந்திப் பயன்படாதொழிந்தாற்போலஅத்தகைய இம்மானுடசரீரமும் அப்பயன் விளையாது வீண்படாதபடி ஏவல்செய்திலனென்பதும்யானைமத்தகத்தி லே பாய்ந்தகத்தோடு அதனையூர்ந்துசெல்லுஞ் சிங்கத்தை அந்தயானையோடு சரபங்கொண்டுசெல்லும் அப்படிப்பட்ட சாரலையுடையது இச்சோணசைலமென்பதும் கருத்தாகக்கொள்க. 'கொடியோர்என்பதற்கேற்க மங்குறாமல்என்றும்அடியார் பெருமைதோன்ற 'ஏவல்செய்திலனேஎன்றும் வருந்தியும் இரங்கியுங் கூறினார். கழை - ஆகுபெயர். கொடியோர் - கொடுமையருமாம். பாய் வினைத்தொகை. உடலம் அம் சாரியை. வள் - கூர்மை. அரிமா இருபெயரொட்டு. சிம்புள் - எண்காற்புள். (23)

 

கார்தரு சுருண்மென் குழற்சிறு நுதற்பூங் கணைபுரை மதரரிக் கருங்கட் 

டார்தரு குவவுக் கொங்கை நுண் மருங்குற் றையலார் மையலென் றொழிவேன் 

சீர்தரு மணியி னணிந்தன வெனக்கட் செவியுமொண் கேழலின் மருப்புஞ்

சார்தரு முலக விளக்கெனுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (24)

 

இதன் பொருள்: - சீர்தரும் அணியின் அணிந்தன என கட்செவியும் ஒள்கேழ லின் மருப்பும் சார்தரும் முன் சிறப்பமைந்த ஆபரணமாகத் தரிக்கப்பட்டனபோலப் பாம்பும் அழகிய பன்றிக்கொம்பும் (இப்பொழுதும்) நிலை பெற்றஉலகவிளக்கு எனும் சோணசைலனே கைலைநாயகனே = உலகதீபனெக் கொண்டாடப் பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!, கார் தரு சுருள் மெல் குழல் மேகம் போலச் சுருளுற்ற மெல்லிய கூந்தலும்சிறுநுதல் = சிறிய நெற்றியும்பூ கணை புரை மதர் அரி கருங் கண் = கூரிய அம்பையொத்த களிப்புவாய்ந்த அரிபரந்த கண்களும்தார் தரு குவவு கொங்கை = ஆரம்பூண்ட குவிந்த தனங்களும்நுண் மருங்குல் தையலார் = சிறிய இடையுமுடைய மகளிரா லணுகும்மையல் என்று ஒழிவேன் = மயக்கங்களை என்று நீங்கப்பெறுவேன். என்றவாறு.

 

கார்தரு என்பதில் தருவும்அணிந்தனவென என்பதில் எனவும் உவமவுரு பிடைச்சொற்கள். சுருள் வினைத்தொகை. மன்மதபாணங்களுள் தாமரைகுவளை யொத்த கண்ணெனலுமாம். அணிந்தன இதில் படுவிகுதி தொக்கது. கட்செவி - கண்களையே செவியாகவுடையது (பாம்பு.) ஒண்மை தையல் - அழகு. சார்தரும் உலகவிளக்கெனும் என்னும் பெயரெச்சங்கள் சோணசைல னென்னும் ஒருபெயர் கொண்டன. உலகவிளக்கு - உலகனைத்திற்கும் மலவிருளையோட்டி ஞானப் பிரகாசத்தை உண்டாக்கும் தீபம்.                                           (24)

 

நந்துகைத் தலத்து நாரணற் கயற்கு நவமணிக் கரகநீ ரிருந்து

மைந்துறக் குறித்து மாட்டியுங் காண்பான் மதித்திடா துனையெதிர்ந் திலரே

யைந்துகைத்தனிக்கோட் டொருபெருங் களிறு மறுமுகம் படைத்தகே சரியுந்

தந்தெமைப் புரக்குங் கருணை கூர் சோண சைலனே கைலை நாயகனே.   (25)

 

இதன் பொருள்: - ஐந்து கை தனி கோட்டு ஒரு பெரும் களிறும் ஐந்து திருக்கரங்களையும் ஒற்றைக்கொம்பையுமுடைய (விநாயகக்கடவுளென்னும்) ஒரு பெரிய யானையினையும்அறுமுகம் படைத்த கேசரியும் தந்து  ஆறுமுகங்க ளையுடைய (சுப்பிரமணியக்கடவுளென்னும்) சிங்கத்தினையும் தோற்றுவித்தருளிஎமைபுரக்கும் கருணை கூர் சோணசைலனே கைலைநாயகனே அடிமையாகிய எங்களைக் காத்தருளும் கிருபைமிக்க சோணசைலரே! கைலைநாயகரே!நாரணற்கு நந்து அயற்கு நவ மணிகரகம் நீர் கைதலத்து இருந்தும் விஷ்ணுமூர்த்திக்குச் சங்கமும் பிரமதேவருக்கு நவமணிகுயின்ற கமண்டலதீர்த்த மும் திருக்கரங்களில் வாய்த்திருந்தும்மைந்து உற குறித்தும் ஆட்டியும் காண்பான் மதித்திடாது உனை எதிர்ந்திலர் = முறையே உமது சந்நிதியில் வன்மை பொருந்த ஊதியும் திருமுடியில் திருமஞ்சனஞ்செய்தும் (பத்தியால் உம்மைக்) காணமதியாது அகங்கரித்தமையால் உம்மைக் காணாராயினர் (என்னே!) என்றவாறு.

 

மைந்துறக் குறித்தல் - பலங்கொண்டு தொனிப்பித்தல். நாரணற்குக் கைத் தலத்து நந்திருந்தும் குறித்தும் என்றும்அயற்குக் கைத்தலத்து நீரிருந்தும் ஆட்டியும் என்றும் கூட்டிப் பொருள் கொள்க. அன்பர்க் கெளியரும் அல்லார்க் கரியருமாதல் தோன்றக் 'குறித்தும் ஆட்டியும் காண்பான் மதித்திடாது உனை யெதிர்ந்திலர்என்றார்.                                                   (25)

 

வினையரும் புகலிக் கிறைமணப் பந்தர் விருந்தினுக்குத விலேன் முந்திற்

றுனையிரந் திடுவான் வந்தனன் பதநீ யுதவியென் றுயரொழித் தருளா

யினியபைக் தமிழின் பொதியமால் வரைபோ லிசைக்குரு காகாதிமலையின்

றனையையின் றீஞ்சொற் குருகுறுஞ் சோணசைலனே கைலை நாயகனே.   (26)

 

இதன் பொருள்: - இனிய பைந்தமிழின் பொதியம் மால் வரை போல் இசைக்கு உருகாது = இனிய பசிய தமிழினையுடைய பொதிய மலைபோல இராகத்திற்கு உருகாமல்இமம் மலையின் தனையை இன் தீம் சொற்கு உருகுறும் சோண சைலனே கைலைநாயகனே = பனிமலையின் புத்திரியாராகிய அம்பிகையின் இனிய சொற்கு இளகுந் தன்மைவாய்ந்த சோணசைலரே! கைலைநாயகரே!வினை அரும் புகலிக்கு இறை மணம் பந்தர் விருந்தினுக்கு உதவிலேன் = வினையற்ற சீர்காழிக்குத் தலைவராகிய ஞானசம்பந்தப் பிள்ளையார் தமது திருமணப்பந்தரி லளித்த முத்திவிருந்தினுக்கு யான் அடையாமற்போயினேன்முந்திற்று உனை இரந்திடுவான் வந்தனன் = (அது அடியேன் இச்சரீர மெடுத்தற்கு) முற்காலத்த தாயினமையின் தேவரீரைவேண்டி அம்முத்திப்பெற அடைந்தனன்நீ பதம் உதவி என் துயர் ஒழித்து அருளாய் = தேவரீர் உமது பதவியளித்து எனது துயரத்தை ஒழித்தருள வேண்டும். என்றவாறு.

 

அருமை - ஈண்டு இன்மை. பந்தர் - போலி. விருந்து – புதுமை அது ஆகுபெயராய்ப் புதிதுண்பிக்கும் முத்தியின்பத்தைச் சுட்டிகின்றது. உதவல் - தருணத்தில் அடையப்பெறுதல். புகலி ஆளுடைய பிள்ளையாரால் சிறப்பெய்திற் றென்பார் 'புகலிக்கிறைஎன்றும்அவர் மணங்காணவந்தவர் பரிசனர் நகரவாசிகளா தியரையேயன்றிப் பூப்படைந்தொதுங்கிநின்ற ஓர் கணிகையையும் சோதியிற்கலப் பித்துத் தாம் கலந்தாராதலின்யானும் அங்கிருப்பின் பிரார்த்தனையின்றியே அச்சிவபதம் பெற்றிருப்பன்அது முந்தினமையின் தேவரீரை யாசிக்கலாயிற் றென்பார், 'முந்திற்று உனையிரந்திடுவான் வந்தனன்என்றுங் கூறினார். இதனை ''பொழில்புடைசூழ்ந் திடுபுகலிக் கவுணியர்தங் குலத்துதித்த புனித ரந்த வெழின் மருவு காரிகைதன் முக நோக்கிப் பெருநெருப்புக் கீர மின்றாஞ் செழுமையுறு மைந்தெழுத்தி னுருவதுவா மினைய நெடுந் தீர்த்த மூழ்கித் - தழல்வடிவாய் விளங்கு பெருஞ் சோதியிடைப் புகுதியெனச் சாற்றி னாரால். இன்னவகை மணங் காண வந்தவருந் தவர்களுட னின்ப வீடு - தன்னையுற நினைந்தனைய மாதலத்தி னிடையினிது சார்ந்து ளோரு - மன்னுறச்சென் றடைந்ததற்பி னெனையாளு மெழிற் காழி வள்ள லார்தா - மின்னிடைப்பூங் கோதையுடன் சென்றனைய சோதியினுண் மேவி னாரால்." என்னும் ஆச்சாபுரப் புராணச் செய்யுள்களானுமுணர்க.

 

இசையிலே தருக்கிய நாரதருக்கு அதனை யொழிக்க நினைத்த திருமால் மேருவில் தவம்புரியும் ஆஞ்சனேயரிடம் வேறுகாரியங் குறித்தனுப்பலும்அவர் மகதியாழினை வாங்கி மேகராகக் குறிஞ்சியைப் பாடி அம்மலையை உருகுவித்து வீணையை வைக்க இறுகிய பின்பு அவ்வாறு உருகப்பாடி அவ்வீணையை யெடுக்க முடியாமல் நாரதர் தோற்றாரென இசை நூலார் கூறுவது போலப் பொதியமுருகிய சரித்திரம் யாண்டுளதோ அறிந்திலம்.                                          (26)

 

பெண்ணருங் கலமே யமுதமே யெனப்பெண் பேதையர்ப் புகழ்ந்தவந்திரிவேன்

பண்ணுறுந் தொடர்பிற் பித்தவென் கினுநீ பயன்ற லறிந்துநிற் புகழேன்

கண்ணுறுங் கவின்கூ ரவயவங் கரந்துங் கதிர்கணூறாயிரங் கோடித்

தண்ணிறங் கரவா துயர்ந்தெழுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (27)

 

இதன் பொருள்: - கண்ணுறும் கவின் கூர் அவயவம் கரந்தும் = காணப்படும் அழகுமிக்க திருவவயவங்களை மறைத்தும்நூறாயிரம் கோடி கதிர்கள் தண் நிறம் கரவாது உயர்ந்து எழும் சோணசைலனே கைலைநாயகனே = இலக்கங்கோடி சூரியர் போலும் குளிர்ந்த ஒளியை மறையாது வளர்ந்தோங்கிய சோணசைலரோ கைலைநாயகரே!பெண் பேதையர் பெண் அரும் கலமே அமுதமே என புகழ்ந்து அவம் திரிவேன் = பெண்களுள்ளே மிக்க பேதைமை யுடையரையும் பெண்களுக்குள் அரிய ஆபரணம் போல்பவரே! அமுதம்போல்பவரே! என்று புகழ்ந்து ஒரு பயனுமெய்தாது திரிகின்றயான்பண் உறும் தொடர்பில் பித்த என்கினும் = இசையமைந்த செய்யுட்களில் பித்தனேயென்று உம்மையழைக்கினும்நீ பயன் தரல் அறிந்தும் நின்புகழேன் விரும்பிய பயனைத் தேவரீரளித்தலை (ஆளுடையநம்பிகள் திவ்வியசரித்திரத்தால்) அறிந்துவைத்தும் உம்மைப் புகழ்ந்தி லேன் (என்னறியாமை இருந்தவாறு என்சொல்கேன்.) என்றவாறு.

 

தொடர்பிற் பித்தவென்பது "பித்தாபிறைசூடீ'' என்னும் திருப்பாடலாதியவற் றைச் சுட்டி நின்றது. கண்ணுதல் = தியானித்தலுமாம். ஒளியால் சூரியனை ஒப்பினும்இதமளித்தலில் சந்திரனை ஒத்தவரென்பது தோன்றக் 'கதிர்கள் நூறாயிரங் கோடி தண்ணிறம்என்றார். இதனை  *தண்ணந் திங்களிற் றண்ணெனத் தன்கதிர் வண்ணங் குன்றுறா ஞாயிறு" என்பதனானும் அறிக.              (27)

 

[* பிரபுலிங்கலீலை ஆரோகணகதி 2.]

 

உயங்குநூ லிடைப்பூங் கோதைய ரல்கு லொளிமணிப் பாம்புதீண் டுதலான்

மயங்குவேன் றனக்குன்பதமருந் துதவி மயக்கமென் றொழித்தருள் புரிவாய்

முயங்குமா புகழ்ப்பூம் புகலியந் தணர்க்கு முத்துவெண் பந்தரீந் தகல்வான்

றயங்குமீன் முத்துப் பந்தர் வாழ் சோண சைலனே கைலை நாயகனே.         (28)

 

இதன் பொருள்: - மா புகழ் முயங்கு பூ புகலி அந்தணர்க்கு = மிக்க சீர்த்தி தங்கிய அழகிய சீர்காழியி லவதரித்த திருஞானசம்பந்த மூர்த்திக்குவெண் முத்து பந்தர் ஈந்து = வெண்முத்தங்களாலாகிய பந்தலைத்தந் தருளிமீன் முத்து தயங்கும் அகல் வான் பந்தர் வாழ் சோண சைலனே கைலைநாயகனே = உடுக்களென்னும் முத்தங்கள் விளங்கும் அகன்ற ஆகாயமாகிய பந்தரின்கீழ் வாழும் சோணசைலரே! கைலைநாயகரே! உயங்கு நூல் இடை பூ கோதையர் அசையாநின்ற நூலொத்த இடையினையும் மலர்சூடிய கூந்தலையுமுடைய மங்கை யதுஅல்குல் ஒளி மணி பாம்பு தீண்டுதலால் = நிதம்பமென்னும் ஒளியமைந்த மணியினையுடைய பாம்பு தீண்டப்பெற்றமையால்மயங்குவேன் தனக்கு உன் பதம் மருந்து உதவி = மயக்கமெய்திக் கிடப்பேனாகிய எனக்குத் தேவரீருடைய திருவடியென்னும் மருந்தினைத் தந்துமயக்கம் என்று ஒழித்து அருள் புரிவாய் = அம்மயக்கத்தினை என்று நீக்கி அருள்புரிவீரோ? (அறியேன்.) என்றவாறு.

 

உயங்கல் = துவளல். அகல் வினைத் தொகை. அதியுன்னத  சொரூபராகிய இப்பெருமானுக்குப் பந்தராதற்குரியது ஆகாயமேயன்றி வேறின்மையின் இங்னம் வியந்தார்.                                                               (28)

 

மெய்த்தவ ரடிக்குற் றேவலின் றிறத்தும் விளங்குமா கமவுணர்ச் சியினும்

புத்தலர் கொடுநிற் பரவுசையினும் பொழுதுபோக் கெனக்கருள் புரிவாய்

முத்தமு மரவ மணிகளு மெறிந்து முதிர்தினைப் புனத்தெயின் மடவார்

தத்தைகள் கடியுஞ் சாரலஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (29)

 

இதன் பொருள்: - முதிர் தினை புனத்து எயின் மடவார் விளைந்ததினைப் புனத்திற் (காவல்பூண்டுள்ள) வேட்டுவப்பெண்கள்முத்தமும் அரவம் மணிகளும் எறிந்து தத்தைகள் கடியும் சாரல்அம் சோணசைலனே கைலைநாயகனே = முத்துக்களையும் நாகமணிகளையுமே (கற்களாக) வீசி (அத்தினைக்கதிர் கவரவரும்) கிளிகளை யோட்டும் சாரலினையுடைய அழகிய சோணசைலரே! கைலைநாயகரே!மெய் தவர் அடி குற்றேவலின் திறத்தும் உண்மைத்தவமுடைய பெரியோர்களின் திருவடிகளுக்குச் சிற்றேவல் செய்யும் வகையினும்விளங்கும் ஆகமம் உணர்ச்சியினும் = (யாவராலும் அங்கீகரிக்கப்பட்டுத்) திகழும் சிவாகமங்களை ஆராய்ந்து தெளிதலினும்புத்து அலர் கொடு நின் பவு பூசையினும் அன்றலர்ந்த மலர்களைக்கொண்டு தேவரீரை வழிபடும் பூசைத்தொண்டினும்பொழுது போக்கு எனக்கு அருள் புரிவாய் = காலங்கழித்துவாழும் பேற்றினை அடியேனுக்கு அளிப்பீராக. என்றவாறு.

 

அன்பர் பணிசெய்தலே எளிதிற் சிவானந்தப்பேற்றிற்கு ஏதுவாதலின் அதனை முன்னும்பூசிக்கும் தனதியல்பையும் பூசிக்கப்படுங் கடவுளியல்பையும் பூசித்தற்குரிய கருவிகளையும் விளக்கலின் சிவாகமவுணர்ச்சியை இடையினும்அவ்வுணர்ச்சிக்குப் பயன் அதிற்கூறியபடி வழிபடுதலேயாகலின் அதனை இறுதியி

னும் வைத்துஇவ்வாறு கழியாநாள் பயனில் நாளாய் முடிதலின் இவற்றிற் பொழுதுபோக் கெனக்கருள் புரிவாய்” என்றார். முத்தமும் மணிகளும் எங்குங்கிடத்தலின் கற்போலெறிந்து, தர முயன்று விளைத்த தினைகவருங்கிளி யைக் கடிவாராயினாரென அம்மலைவளங்கூறியபடி. எயின் – வேட்டுவச்சாதிஇதனை "னஃகான்கிளைப்பெயர் ” என்னும் நன்னூற் சூத்திரத்துணர்க.       (29)

 

பாயும்வெண் டிரைப்பே ராழிசூ ழுலகிற் பழமொழி யொழியமெய் படியா

ராயுமென் மலரோர் மலையௗ வணிய வமர்ந்தநின் கோலம்யான் மறவேன்

றூயவெண் மதியிற் களங்கமென் றுரைப்பச் சூழ்பசுங் கொடிபயிலுருவச்

சாயைசென் றுறநின் றிலங்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (30)

 

இதன் பொருள்: - தூய வெண்மதியில் களங்கம் என்று உரைப்ப = சுத்தமுடைய வெள்ளிய சந்திரனிடத்திற் களங்கமென்று எவருங் கூறும்படிசூழ் பசுங்கொடி உருவம் பயில் சாயை சென்று படர்ந்துள்ள பசிய கொடிவடிவங்களிற் பொருந்தியசாயைகள் படியும்வண்ணம்நின்று இலங்குறும் சோணசைலனே கைலைநாயகனே = ஓங்கி விளங்கும் சோணசைலரே! கைலைநாயகரே!பாயும் வெண்திரை பேர் ஆழி சூழ் உலகில்ரவிய வெள்ளிய திரைகளையுடைய பெரிய கடல் வளைந்த இவ்வுலகின் கண்பழமொழி ஒழிய - (மலையளவு தெய்வத்திற்கு மலையளவு புஷ்பம் சாத்துவதுண்டோஎன்று கூறும்) பழ மொழிமீங்கமெய் அடியார் ஆயும் மெல் மலர் ஓர் மலை அளவு அணிய அமர்ந்த நின் கோலம் யான் மறவேன் = உண்மைத் தொண்டர்கள்  ஆய்ந்தெடுக்கப்பட்ட மெல்லிய மலர்களை ஒரு மலையளவே அருச்சித்து வணங்க எழுந்தருளிய தேவர் திருக் கோலத்தை சிறியேன் மறக்க மாட்டேன்என்றவாறு.

 

பாய்தல் - தாவலுமாம். மலை மலையாகக் குவித்துச் சாத்து கின்றதெனவேஅத்தலத்துள்ள அடியவர் மிகுதியும்சந்திரன்பாற்  களங்கமெனக் கொடிசாயை பதிக்கின்றதெனவே மலையுன்னதமும் குறிப்பித்தவாறாயிற்று. மெய்யடியா ரணிய வென இயையும்.                                                         (30)

 

நடமிடு பசும்பொற் புரவிமேற் கொண்டு நளின மென் மலர்க்கரத் தெறிபூம்

படையொடு துரந்து வந்துமென் விடயப் பகைப்புலி தனையெறிந் திலையே

யடிநடு நிழல்சென் றெழுகட லடைய வகல்பெரும் புறத்துவா ரிதியிற்

றடமுடி நிழல்சென் றுறவளர் சோண சைலனே கைலை நாயகனே.         (31)

 

இதன் பொருள்: - அடி நடு நிழல் எழுகடல் சென்று அடைய = அடி நிழலும் நடுநிழலும் எழுகடலளவு சென்று சேரவும்அகல் பெரும் புறத்து வாரிதியில் தடம் முடி நிழல் சென்று உற வளர் சோணசைலனே கைலை நாயகனே அகன்ற பெரும்புறக் கடலில் விசாலித்த முடிநிழல் சேரவும் ஓங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!நடம் இடு பசும் பொன் புரவி மேற்கொண்டும் = நடனஞ்செய்யும் பசிய பொன்னிறமுள்ள குதிரையிலாரோகணித்தும்நளினம் மலர் மெல் கரத்து எறி பூ படையொடு துரந்து வந்தும் தாமரைமலர் போன்ற மெல்லிய திருக் கரத்தில் வீசத்தக்க ஆயுதங்களைக் கொண்டு துரத்திவந்தும்என் விடயம் பகை புலிதனை எறிந் திலையே – அடியேனது விடயப் பகைகளாகிற புலிகளை வீசினீரில்லையே; (என் செய்வேன்!) என்றவாறு.

 

குதிரைவீரராதல் உமக்கியற்கையே யாகையால்இனியேனும் இங்னம் வந்து எறிதல் வேண்டு மென்பதுபடநின்றது. கொண்டும் என்புழி உம்மைவிரிக்காது வந்து என்புழிமாத்திரம் உம்மைவிரித்துசுயரூபமாகத் தோன்றி அருளாது விடினும் இவ்வாறு வந்தேனும் என்பால் சத்தாதி விடயங்களை யொழித்தீரில்லையே என்செய்வே னென்னலுமாம். விலகவிடாது மனங்கலங்கப் பாய்ந்து வஞ்சித்து வருத்திக்கொல்லுத லுடைமையின் விஷயங்களைப் புலியென்றார்.            (31)

 

யாவுமா முமையுண் ணாமுலை முலைப்பா லீந்துபாடச்செயா யெனினு 

மேவுமா துயர்செய் சூலைநோயெனினும் விடுத்துநிற் பாடுமா றருளா

யோவுமானலது தொல்லுருக் கொளின்வே றொன்றெடுத் திடுமென நினைந்து

தாவுமா னினமெண் ணிகந்தசூழ் சோண சைலனே கைலை நாயகனே.         (32)

 

இதன் பொருள்: - தொல் உரு கொளின்சிவபெருமான் தமது பழைய திருவடிவந்தாங்குவாராகில்ஓவும் மான் அலது = (முற்காலத்திற்றரித்து) இக்காலத்திற்றுறக்கப்பட்டுள்ள அம்மானையன்றிவேறு ஒன்று எடுத்திடும் என நினைந்து = தமக்கிஷ்டமாகியவேறொருமிருகத்தைத் தாங்கியருளுவரெனச் சிந்தித்துதாவும் மான் இனம் எண் இகந்த சூழ் சோணசைலனே கைலைநாயகனே = தாவிச்செல்லும் மான்கூட்டங்கள் அளவிறந்தன சூழ்ந்து வாழும் சோணசைலரே! கைலைநாயகரே!யாவும் ஆம் உண்ணாமுலை உமை முலைப்பால் ஈந்து = எச்சிறப்பும் உண்டாதற்கேதுவாகிய உண்ணாமுலையம்மை யென்னும் உமாதேவியாருடைய திருமுலைப்பாலை (அடியேனுக்குத்) தந்துபாட செயாய் எனினும் - தேவரீரைப் பாடும்படிச் செய்துகொள்ளீரேனும்மேவும் மா துயர் செய் சூலை நோய் எனினும் விடுத்து நின்பாடும் ஆரு அருளாய் = நிலைபெறும் மிக்கதுன்பத்தினைச் செய்யாநின்ற சூலைநோயேனும் என்மேலேவித் தேவரீரைப் பாடும்படி செய்து கொள்வீராக. என்றவாறு.

 

இம்மை மறுமை வீடென்னும் முப்பயன்களையுஞ் சுட்டலின் ‘யாவுமாம்என்புழி உம்மை முற்றும்மையாவுமாதற்கேதுவாகிய முலைப்பாலை யாவுமா முலைப்பாலென்றது காரியத்தைக் காரணமாக உபசரித்தல். ஆளுடைய பிள்ளையா ர்க்குப் பாலையும் ஆளுடைய அரசுக்குச் சூலையுமளித்துப் பாடச்செய்தீராகலின்பிந்திய பேறேனும் இப்பேதையேற்கு அருளல் வேண்டுமென்பதும்காளகண்ட திரிநேத்திரதாரியாய்ச் சகளீகரித் திருந்த காலத்தில் நம்மினமாகிய மானையே தாங்கினாராகலின்மலையுருக் கொண்ட இக்காலத்தும் சூழ்ந்திருப்பின் அகலாது காத்தமை நோக்கி நம்மையே தாங்குவரெனக் கருதியது போல மானினம் சூழ்ந்தன வென்பதும் கருத்தாகக் கொள்க.                                               (32)

விருப்பொடு வெறுப்பு மகன்றுபே ரின்ப வெள்ளத்து எழுந்து நின் னடியார்

திருப்பத மிறைஞ்சியவர்க்குவே ளாண்மை செய்பெருஞ் செல்வமே யருளாய்

பொருப்புக டொறும்வீழ் பொங்குவெள் ளருவி போன்றறி விலர்க்கிடை யறாமற்

றரிப்பருங் கருணை பொழிதருஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (33)

 

இதன் பொருள்: - பொருப்புகள் தொறும் வீழ் பொங்கு வெள்ளருவி போன்று அறிவு இலர்க்கு = ஏனை மலைகடோறும்வீழ்கின்ற அதிகரித்த வெள்ளிய அருவிநீர்போல அறிவீனர் கண்களுக்குத்தோற்றும்படிதரிப்பு அரும் கருணை இடை அறாமல் பொழிதரும் சோணசைலனே கைலைநாயகனே = தாங்குதலரிய கருணை வெள்ளமே இடைவிடாது சொரியும் சோணசைலரே! கைலைநாயகரே!விருப்பொடு வெறுப்பும் அகன்று பேரின்பம் வெள்ளத்துள் அழுந்தும் = விருப்பும் வெறுப்பும் விட்டு மிக்க இன்பப்பெருக்கிலே மூழ்கிச்சுகிக்கும்நின் அடியார் திருப்பதம் இறைஞ்சி = உமது அடியவர்களுடைய திருவடிகளை வணங்கிஅவர்க்கு வேளாண்மை செய் பெரும் செல்வமே அருளாய் = அவ்வடியவர்கட்கு வேண்டியவற்றை ஈயும் உயர்ந்தவாழ்வினையே ததளிப்பீராக. என்றவாறு.

 

வேளாண்மை = உபகரித்தல்செல்வத்தா லெய்தாப்பேறுகளும் சிவனடியா ரைப் பேணுதலாலெய்தலின் அச்சிறப்பு நோக்கிஅவர்க்குபகரித்தலையே பெருஞ்செல்வமென்றார். இது, *"திலமத் தனைபொன் சிவஞானிக் கீந்தால் = பலமுத்தி சித்தி பரபோக முந் தரும்" என்பதனானுணர்க. தொறும் என்பது தன்னையேற்ற பெயர்ப்பொருண் முழுமையும் அப்பெயர்ப்பொருளோடு இயையும் பொருளும் இருப்பதையுணர்த்துவதோர் டைச் சொல். இடைவிடாது சொரியும் கருணைப் பெருக்கம் அறிவிலர்க்கு அருவி போன்று தோற்றா நிற்பதெனவேஅறிவினர்க்குப் பிறரால் தாங்கற்கரிய கருணைப்பெருக்கமாகவே தோற்றாநிற்கு மென்பதாயிற்று.                                                        (33)

 

[* திருமந்திரம் - பாத்திரம் - 1.]

 

பொங்குறு கவினுங் கற்பும்வாய்ந் திலங்கு புண்ணிய மடந்தையும் பொருளு

மிங்குநன் குதவி யங்குவான் கதியி னிருத்துநிற் புலவரென் புகழார்

துங்க வெங் குறவர் புனத்திடு பரண்கா றுணித்து நட் டாரமீ மிசைமா 

தங்கவெண் மருப்புப் பரப்புறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (34)

 

இதன் பொருள்:துங்கம் வெம் குவர் புனத்து இடு பரண் கால் ஆரம் துணித்து நட்டுமிக்கவீரமுடைய வேடர்கள் தினைப்புனத்திலிடும்பரணுக்குக் கால்களாகச் சந்தனமரங்களை வெட்டியூன்றிமீமிசை மாதங்கம் வெண் மருப்பு பரப்புறும் சோணசைலனே கைலைநாயகனே = அப்பணின் மேற்பரப்பாக யானைகளின் வெள்ளிய கோடுகளையேபரப்பும் சோனசைலரே! கைலைநாயகரே!பொங்குறு கவினும் கற்பும் வாய்ந்து புண்ணியம் இலங்கும் மடந்தையும் மிக்கோங்கிய அழகும் கற்புத்தன்மையும் அமைந்து தருமாவொழுக்கமும் திகழப்பெற்ற மனைவியையும்பொருளும் இங்கு நன்கு உதவி செல்வத்தையும் இம்மையிலே செவ்விதிற்றந்துஅங்கு வான் கதியில் இருத்தும் நின் புலவர் என் புகழார் மறுமையிலே உயர்ந்தகதிகளில் நிலைபெறுவிக்கும் தேவரீரைப் புலவர்கள் யாது புகழார்? (மிகப் புகழ்வார்.) என்றவாறு.

 

இம்மையில் உத்தமகுணாதிகளில் மிக்க வனிதையராதியபோமும்அம்மை யில் சிவபோகமும் அருளவல்ல தேவரீரைப் புலவர்கள் புகழாது மனிதரை வாளா புகழ்கின்றார்களே இதென்னே என்று இரங்கியதுமாம். வெம்மை - இங்கு வீரம் மீமிசை - ஒருபொருட்பன்மொழிமேலிடமுமாம். எவனென்னும் வினாப்பெயர் என்னெனத் திரிந்தது.                                                    (34)

 

போழ்ந்திடு வடுக்கண் மகளிரை யணைத்துப் புகழ் நந்தி பிரம்படிக் கொதுங்கிச்

சூழ்ந்திடு மமரர் நெருங்குசந் நிதியிற் றொண்டனேன் வரவருள் புரியாய்

வாழ்ந்திடு மகக்கண் டுருகுதாய் முலைப்பால் வழிந்தொழு குதலென வடியார்

தாழ்ந்தெழ வருவி யொழுகுறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (35)

 

இதன் பொருள்:வாழ்ந்திடும் மக கண்டு உருகு தாய் முலை பால் வழிந்து ஒழுகுதல் என விர்த்திக்குங் குழந்தையைக்கண்டு மனங்குழையும் மாதாவுக்கு முலைக்கண் பால்வழிந்து தானே ஓடுதல் போலஅடியார் தாழ்ந்து எழ அருவி ஒழுகுறும் சோணசைலனே கைலைநாயகனே= அடியவர்கள் வணங்கி யெழுங்கால் தானே அருவியொழுகப்பெற்று விளங்கும் சோணசைலரே! கைலை நாயகரே!போழ்ந்திடும் வடு கண் மகளிரை அணைத்து பிளந்த மாம்பிஞ்சு போலுங் கண்களையுடைய தம்மனைவியரை அணைத்துக் கொண்டுபுகழ் நந்தி பிரம்பு அடிக்கு ஒதுங்கி கீர்த்தி வாய்ந்த நந்திதேவர் (சந்நிதியில் விலகவீசும்) பிரம்படி தம்மேற் படுமென்றொதுங்கிசூழ்ந்திடும் அமரர் நெருங்கு சந்நிதியில் தொண்டனேன் வர அருள் புரியாய் – பின்னுஞ்சூழ்ந்து தேவர்கள் நெருங்கும் தேவரீர் சந்நிதியில் கீழ்மையேனும் வர அருள்புரிவீராக. என்றவாறு.

 

மகளிரையணைத்தல் கூட்டமிகுதியால் தம் மனைவியர்கட்கு ஊறு நேராமை ப்பொருட்டுமக - மக்கள் இது உகரச்சாரியை யேற்று மகவு எனவரும். தொண்டு - ஈண்டுக் கீழ்மைப்பொருளது; ''தொண்டராம் பேய்ச்சமணர்'' என்புழிப்போல. தாய்க்கு மக்களின் மேன்மை நோக்குங்கால் அன்புமிகுதியின் முலைப்பால் ஒழுகுதல் போலத் தம்மை வணங்கலாகிய நல்வாழ்வு பெற்ற அடியார்களை நோக்கு ந்தோறும் பெருமானுக்கு அருண் மிகுதிதோன்றுமென்பார்அதனை அருவிமேல் வைத்து விதந்து கூறினார்.                                              (35)

 

[* சோமேசவெண்பா 98.]

 

நேர்ந்திடு மொருசெங் கோல்கொடு கொடுங்கோனிமிர்ந்திட விலங்கைசென் றடைந் 

தோன்

கூர்ந்தவன் பொடுநின் றிறைஞ்சுபு வழுத்துங் குரைகழ லிரக்கவஞ் சுவல்யான்

சேர்ந்திடு மலைமான் பெருமுலையுவமை சிறுமலை களுக்குத வாமற்

சார்ந்திட விரும்பி வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (36)

 

இதன் பொருள்:சேர்ந்திடும் மலைமான் பெருமுலை உவமை சிறுமலை களுக்கு உதவாமல் = ஒற்றித்து விளங்கும் பார்வதிதேவியாரது பெரிய தனங்களுக்கு உவமையாகுதல் சிறியமலைகளுக்குக் கிட்டாதுசார்ந்திட விரும்பி வளர்ந்து எழும் சோணசைலனே கைலைநாயகனே= தமக்கே கிட்டும்படி விரும்பி உன்னதமாக உயர்ந்தோங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!இலங்கை கொடுங்கோல் நிமிர்ந்திட = இலங்காபுரி கொடுங்கோல் நிமிர்ந்து செங்கோலுடைத்தாகநேர்ந்திடும் ஒரு செங்கோல் கொடு சென்று அடைந்தோன் = நேர்மையடைந்துள்ள ஒப்பற்ற செங்கோலை யேந்தி (இராவணவத முன்னிலை யிற்போய்) அவ்விலங்கையை யடைந்த இராமமூர்த்தியானவர்கூர்ந்த அன்பொடு நின்று இறைஞ்சுபு வழுத்தும் குரை கழல் = மிக்க அன்பொடு நின்று வணங்கி வேண்டித் துதிக்கும் ஓசைமிக்க வீரக்கழலணிந்த திருவடிகளைஇரக்க யான் அஞ்சுவல் யாசித்து வேண்ட அடியேன் அஞ்சாநிற்பன். என்றவாறு.

 

கொடுங்கோனிமிரின் செங்கோலாமாகலின்செங்கோலாக வென்பார் 'கொடுங் கோனிமிர்ந்திடஎன்றும்அன்புமிக்க இராமமூர்த்தி வேண்டத்தக்க அரிய திருவடி யை அன்பற்ற யான் வேண்டுவது தகுதியோஎன்பார், 'இரக்கவஞ்சுவல்என்றுங் கூறினார். இச்சைலத்தையடுத்த தீர்த்தகிரியில் இராமமூர்த்தி வழிபட்டனரென்பது புராண சித்தமாகலின்இத்தலத்தும் வழிபட்டனர் போலும்நேர்மை - தகுதி. செங்கோல் கொடுங்கோலென்றவை - நீதி அநீதிமேலன. நிமிர்தல் - ஓடலுமாம். கொடுங்கோலோடச் செவ்விய பாணங்கொண்டடைந்தவரெனலும்கொடு என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபான கொண்டென்பதின்மரூஉ எனலும் ஒக்கும். இறைஞ்சுபு செய்பு வாய்பாட்டு வினையெச்சம். வழுத்தல் - ஈண்டு வேண்டித் துதித்தலின் மேற்று. கழல் – தானியாகுபெயர்திருவடிகளை யுணர்த்தலின். அஞ்சுவல் - அல் தன்மை யொருமைவிகுதி. மலையிலுதித்தமையின் 'மலைமான்என்றார். சார்தல் – தன்னையே யடைதல்.                                   (36)

 

தெருமரும் பிறவி தமையகன் றிடாத தேவரைத் தேவரென் றெண்ணி

யருமருந் தனைய நினையடையாத வறிவிலார் பவப்பிணி யறுமோ

கரிமருங் கணைந்த தெனமுழை வாயிற் கார்வர விரைந்தெழுந் துகள்கே

சரிமறைந் திருந்து நாணுறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (37)

 

இதன் பொருள்:முழை வாயில் கார் வர = குகைவாசலில் மேகம் தவழ (அதனை நோக்கி)கரி மருங்கு அணைந்தது என மறைந்திருந்து = யானை பக்கலில் அணைந்ததென்று நினைந்து ஒளித்திருந்துவிரைந்து எழுந்து உகள் கேசரி நாணுறும் சோணசைலனே கைலைநாயகனே = (சமீபித்தலும்) விரைந்து கிளம்பிச் (சந்தோஷத்தால்) துள்ளியசிங்கம் (அஃதன்மைகண்டு) வெட்கி நிற்கும் சோணசைலரே! கைலைநாயகரே!தெருமரும் பிறவி தமை அகன்றிடாத தேவரை தேவர் என்று எண்ணி = சுழலுந் தன்மையவாகிய பிறவிகளை நீங்காத தேவர் களைத் தெய்வங்களென்று கருதிஅருமருந்து அனைய நினை அடையாத அறிவிலார் பவம் பிணி அறுமோஅருமருந்தன்ன தேவரீரை எய்தப் பெறாத அஞ்ஞானிகளின் பிறவிநோய் ஒழியுமோ? (ஒரு போதும் ஒழியா) என்றவாறு.

 

பிறவி யகலாத தேவரெனப் பிறரைக் கூறினமையின் தாமும் பிறவியகன்று விளங்கிப் பிறர் பிறவியையும் அகற்றவல்லவர் இக்கடவுளே யென்பதும்இடையே யிறவாதபடி நீண்டவாயுளையுடையராகச்செய்வதாகலின் பவப்பிணியொழிக்கும் இக்கடவுளுக்கு அமிர்தத்தை ஒருபுடையுவமையாக்கியதென்பதும் கருத்தாகக் கொள்க. தெருமால் - (காற்றாடி போல மாறிமாறிச்) சுழலல். அருமருந்து - அமிர்தம். உகள் – வினைத் தொகை.                                                  (37)

 

ஆண்டுகம் பலசென் றிடவிருந் திடினு மன்றியோரிமைப்பினி லுடல 

மாண்டுகு மெனினு நன்றுநின் கமல மலரடிக் கன்பரா யிருப்பிற்

பூண்டயங் கயில்வேற் குதலையந் தீஞ்சொற் புதல்வன்மே லிவர்செய்லெனமார்த்

தாண்டன்வந்திவர விளங்குறுஞ் சோண  சைலனே கைலை நாயகனே.         (38)

 

இதன் பொருள்:பூண் தயங்கு அயில் வேல் குதலை அம் தீம் சொல் புதல்வன் மேல் இவர் செயல் என= அணிகள் விளங்கும் கூரிய வேற்படையும் நிரம்பாமைவாய்ந்த அழகிய இனிய சொற்களுமுடைய குமாரக்கடவுள் மேலேறித் தவழுதல்போலமார்த்தாண்டன் வந்து இவர விளங்குறும் சோணசைலனே கைலைநாயகனே = சூரியனணுகித் தவழவிளங்குஞ் சோணசைலரே! கைலைநாயகரே!நின் கமலம் மலர் அடிக்கு அன்பர் ஆய் இருப்பில் தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகட்கு அன்பராகி இருப்பரேல்உடலம் ஆண்டு பல உகம் சென்றிட இருந்திடினும் = அவர் சரீரம் ஆண்டுகளாலாகிய பலயுகங்கள் செல்லுமளவம் இருக்கினும்அன்றி ஓர் இமைப்பினில் மாண்டு உகும் எனினும் = அல்லது ஓரிமைப்பொழுதில் மாண்டொழியுமாயினும்நன்று = நன்மையுடையதேயாம். என்றவாறு.

 

ஆண்டென்பதற்கு உலகங்களைப்புரந்து என்னலுமாம். திருவடிப்பத்தி யெய்தி யோர் தேகத்தாலடைய வேண்டிய சிவகதியெய்தப்பெற்றவரேயாதலின்தேகம் பன்னாளிருப்பினும் அன்றிச் சின்னாளிலொழியினும் அது பற்றிக் கவலையின்றென் பதாம். இதனை *"கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் - துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார் - வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம் - வருங்காற் பரிவ திலர்." என்பதனானுமறிக. மார்த்தாண்டன் - சூரியன். சூரியனை உவமித்தது ஒளியாலும் இவர் தற் செயலாலுமென்க.                    (38)

 

[* நாலடியார் அறன்வலியுறுத்தல். 5]

 

விரைவிடை யிவரு நினைப்பிற வாமை வேண்டுநர் வேண்டுக மதுரம்

பெருகுறு தமிழ்ச்சொன் மலர் நினக் கணியும் பிறவியே வேண்டுவன் றமியே

னிரு சுடர் களுமேல் கீழ்வரை பொருந்த விடையுறன் மணிக்குடக் காவைத்

தரையிடை யிருத்தி நிற்றனேர் சோண சைலனே கைலை நாயகனே.         (39)

 

இதன் பொருள்:இரு சுடர்களும் மேல் கீழ் வரை பொருந்த = சூரியனும் சந்திரனும் மேற்றிசை கீழ்த்திசைகளிலுள்ள அத்தகிரியினும் உதயகிரியினும் தனித்தனி தங்கஇடை உறல் மணி குடம் காவை தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோணசைலனே கைலைநாயகனே = (தேவரீர்) இடையில் மலைவடிவாக நிற்றல் இருபுறத்தும் மணிக்குடங்களைக் கொண்ட ஒரு காவடியைச் சுமந்து நிற்பவரையொக்கும் சோண சைலரே! கைலைநாயகரே!விரை விடை இவரும் நினை பிறவாமை வேண்டுநர் வேண்டுக விரைந்து தாவுகின்ற இடபத்தில் ஏறியருளுந் தேவரீரைப் பிறவாமையை வேண்டி வேண்டுபவர்கள் வேண்டக்கடவர்தமியேன் நினக்கு மதுரம் பெருகுறு தமிழ் சொல்மலர் அணியும் பிறவியே வேண்டுவன்அடியேன் தேவரீருக்கு இனிமையதிகரி.த்த தமிழ்ச்சொற்களென்னும் மலர்களாற்றொடுத்த மாலையைத் தரிக்கும் பிறவியினையே விரும்புவேன். என்றவாறு.

 

பிறவாமையா லெய்தப்பெறும் பேரின்பம் கடவுள் வழிபாடுடைய பிறவி யாலும் எய்தலாமென்பது நூலோர் துணிபாகலின் 'துதிக்கும் பிறவியே வேண்டுவன்என்றார். இது  * "பிறவாத விதிலென்ன பயன்வந்து பிறந்தாலு - மிறவாத பேரின்பம் பெறலாமால்" என்பதனானுமறிக. சொல் - கருவியாகுபெயர்பாடலை யுணர்த்தலின். அணிதற்கேதுவாகியபிறவியை அணியும் பிறவியென்றது காரியத்தைக் காரணமாக வுபசரித்தல். பௌர்ணிமையில் சூரியன் அத்தகிரியையடையும் தருணத்துச் சந்திரன் உதயகிரியிலுதித்தமர்வனாகலின் அக்காலஞ்சுட்டி வர்ணித்தபடிகாவென்பது காவப்படு தலிற் போந்தபெயர். காவுதல் - சுமத்தல். சூரியசந்திரர்களை வியக்கி இடைநிற்றலின் காவுவோர்க்கு உவமித்ததென்க.                             (39)

 

[* கோயிற்புராணம் பாயிரம் – 15].

 

ஒண்மணிப் பசும்பொற் பூணிள முலையார்க் குளத்திட மெலாமளித் தடியார்

கண்மணிக் கமையா விருந்துசெய் தருணீ கணமிருப் பதற்கிடம் புரியேன்

வெண்மணிக் கழைமுன் கரியநெற் றிதழி வேங்கை பொன் சொரியமா சுணங்க

டண்மணிப் பைகளவிழ்த்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (40)

 

இதன் பொருள்:வெண் மணி கழை முன் = வெள்ளிய முத்தங்களை யுதிர்க்கும் மூங்கில்களுக்கு முன்புகரிய நெற்று இதழி வேங்கை பொன் சொரிய = கறுத்த முதிர் காய்களையுடைய கொன்றையும் வேங்கையும் பொன் போலு மலர்களைத் தூவமாசுணங்கள் தண் மணி பைகள் அவிழ்த்திடும் சோண சைலனே கைலைநாயகனே = பாம்புகள் தண்ணிய மணிகளைப் பைவிரித்துக் கக்கும் சோணசைலரே! கைலைநாயகரே!ஒள் மணி பசும்  பொன் பூண் இளமுலையார்க்குஅழகிய மணிகளழுத்திய பசிய பொற்பூணணிந்த இளமைத் தனங்களையுடைய மங்கையர்க்குஉளத்து இடம் எலாம் அளித்து = என் உள்ளத்திலுள்ள இடமுற்றும் உரிமையாகத்தந்துஅடியார் கண்மணிக்கு அமையா விருந்து செய்தருள் நீ = அடியவர்களின் கண்மணிகளுக்குத் தெவிட்டுதலில்லாத காக்ஷியென்னும் விருந்தினைப் பாலித்தருளும் தேவரீர்கணம் இருப்பதற்கு இடம் புரியேன் = கணநேரமேனும் இருந்தருளுதற்குச் சற்றிடமும் அமைக்கப்பெற்றிலேன் (இவ்வறியாமையென்னோ!) என்றவாறு.

 

எலாம் என்றமையால் சற்றும் என்பது வருவிக்கப்பட்டது. முற்றும் மங்கையர் சிந்தனையேயல்லது உமது சிந்தனை சற்றும் பெற்றிலேன் எங்ஙனமுய் வேனென்பது கருத்து. கழை வெண் மணி சொரியுமுன்னரே அதற்கெதிராக இதழி யும் வேங்கையும் பொன் சொரிய மாசுணம் மணிப்பையவிழ்த்துச் சொரியுமெனக் கொடைமேல்வைத்து மலைவளங்கூறியபடிவெண்முத்தையுடைய கழையசைவு நடித்தலையொக்க அதற்குப் பரிசில்போல எதிரே பொன்னும் மணியும் சொரியுமென் னலுமாம். பை - படம்.                                                   (40)

 

அருங்கலம் புனையு மகளிரோ ரிருவ ரணிமணம் புணர்த்திவா ரணமுந்

துரங்கமும் புலவர்க் குதவுநின்றனையே துதித்திடா துழன்றனன் வறிதே

மருங்கு நின் றழகா லத்தி தாங் குவபோன் மரைமலர்ப் பெருஞ்சுனை யொடுபூந்

தரங்கநின் றிலங்க விளங்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (41)

 

இதன் பொருள்:மருங்கு நின்று அழகு ஆலத்தி தாங்குவபோல்பக்கங்களினின்று அலங்கார தீபங்களைத் தாங்குவனபோலமரை மலர் பெருஞ்சுனை யொடு பூதரங்கம் நின்று இலங்க விளங்குறும் சோணசைலனே கைலைநாயகனே - செந்தாமரைமலர்களைத் தாங்கிய பெரிய சுனைகளோடு பொலிவமைந்த அலைகள் நிலை பெற்று விளங்கத் திகழும் சோணசைலரே! கைலைநாயகரே!புலவர்க்கு = சுந்தரமூர்த்திநாயனாருக்குஅரும் கலம் புனையும் மகளிர் ஓர் இருவர் அணி மணம் புணர்த்தி - அரிய பூண்களைப் புனைந்துள்ள ஒப்பற்ற மகளிர்களிருவரை மணமுடிப்பித்துவாரணமும் துரங்கமும் உதவும் நின்றனை யே துதித்திடாது வறிதே உழன்றனன் யானையையும் குதிரையை யும் தந்தருளும் தேவரீரையே துதிக்கப்பெறாது வீணே வாணாள் போக்கி யலைந்த னன். (என்னே!) என்றவாறு.

 

இருவர் - பரவைநாச்சியார் சங்கிலிநாச்சியார். இவ்வுலகிற் சஞ்சரிக்கத் திருநாகைக்காரோணத்தில் குதிரையும்கைலைக் கெழுந்தருளுதற்கு அங்குநின்றும் திருவஞ்சைக்களத்தில் யானையும் அளித்தனரென்க. இதனை *ஒருமாப் பெற்று மண் சரித் தொருவெள் ளானை வானகம் புகும்போ துற்ற வள்ளல்" என்றார் பின்னோரும். உபசாரக்கருவிகளுள் ஒன்றாகிய அலங்கார தீபம் பல அடுக்கமைந்து விளங்குதல் போலச் செந்தாமரை மலர்களும் விளங்கலின் அவற்றைத் தீபத்திற்கும்அலைகளைக் கைக்கும்சுனையைத் தாங்குவோர்க்கும் உவமித்தது. அழகாலத்தி அழகிய நீராஞ்சனமெனக் கொண்டுசுனைதட்டும்செந்தாமரை மலர்ப்பரப்பு செந்நீரும்அப்பரப்பு தரங்கத்தாலசைதல் அந்நீரசைவுமாக்கலும் ஒன்று.   (41)

 

[* திருவாளொளிபுற்றூர்ப்புராணம் பாயிரம். இதனை கழறிற்றறிவார் நாயனார் புராணம். 63-வது பாடலினு முணர்க.]

 

ஏணுறு மமரர் கடைகட லளித்த விருளொடு மணிமிடற் றடியே

னாணவ விருளுங் கலந்திடிற் கருமையழகுமிக் கிலங்குறுங் கண்டாய்

மாணெழில் வராக முழும்புழை யனந்தன் மணியொளிப் பிழம்பெழல் சிறுதீத்

தாணுவின் முருக னெழுதனேர் சோண சைலனே கைலை நாயகனே.         (42)

இதன் பொருள்:மாண் எழில் வராகம் உழும் புழை = பெருமை பெற்ற அழகிய பன்றிகள் கிண்டுந்துவாரத்தில்ந்தன் மணி ஒளி பிழம்பு எழல் = ஆதிசேடனது உச்சிமணிகளின் ஒளித்திரட்சி மேலோங்குதல்சிறு தீ தாணுவின் முருகன் எழுதல் நேர் சோணசைலனே கைலைநாயகனே = சிறிய தீத்திரட்சிவடிவாக முருகக்கடவுள் தோன்றும் தோற்றத்தை யொத்திருக்கும் சோண சைலரே! கைலைநாயகரே!ஏண் உறும் அமரர் சடை கடல் அளித்த இருளொடு வலிமைமிக்க தேவர்கள் கடைந்த கடல் தோற்றுவித்த (விஷமென்னும்) இருட்டினோடுஅடியேன் ஆணவம் இருளும் கலந்திடில் = அடியேனது ஆணவமென்னும் நீங்கா மலவிருளையும் சேர்ப்பீராயின்மணி மிடற்று கருமை அழகு மிக்கு இலங்குறும் = நீலமணிபோலும் கண்டத்தில் கருமையொளி அதிகரி த்து விளங்காநிற்கும். என்றவாறு.

 

அடியேனது ஆணவமலம் தேவரீருண்டவிடத்தினும் வருத்தும் இருண்மயத் ததாகலின் இதனையும் கண்டத்திலிருத்தியருளவேண்டுமென்பதும்வராகம் கிண்டிய துவாரவழியில் ஆதிசேடன்மணி ஒளிவீசல்பெரிய தீத்தம்பமாயமருஞ் சிவபெருமானருகே சிறிய தீத்தம்பமாக முருகக் கடவுளெழுதலொக்கு மென்பதும் கருத்தாகக்கொள்க.                                                             (42)

 

மின்னவிர் சடிலக் கற்றையு மருள்கூர் விழிகளுந் திருமுகத் தழகுங்

கன்னவி றிரடோ ணான்குமீ ரடியுங் கண்டுகண் களிக்குநா ளுளதோ

வின்னிசை யொலிகேட் டுருகுதல் கடுப்ப விழிதர வருவிகிம் புருடர்

தன்னிக ரிசைகூர் சாரலஞ் சோண சைலனே கைலைநா யகனே.                 (43)

 

இதன் பொருள்:இன் இசை ஒலி கேட்டு உருகுதல் கடுப்ப அருவி இழிதர = இனிய கீதமுழக்கங்கேட்டு மலையே உருகிக்கசிதல் போல அருவிகள் நாற்புற மும் ஒழுகாநிற்ககிம்புருடர் தன்னிகர் இசை கூர் சாரல் அம் சோணசைலனே கைலைநாயகனே கிம்புருடர்களாற் பாடப்படுவதாய்த் தனக்குத்தானே ஒத்ததா கிய இனிய கீதங்கள் மிகும் சாரலினையுடைய சோணசைலரே! கைலைநாயகரே!மின் அவிர் சடிலம் கற்றையும் = மின்போல ஒளிரும் சடிலத் திரட்சியும்அருள் கூர் விழிகளும் அருள்மிக்குத்தி கழுந்திருக்கண்களும்திருமுகத்து அழகும் = திருமுக மண்டலவழகும்கல் நவில் திரள் தோள் நான்கும் = மேருவோ என்று சொல்லத்தக்க திரண்ட சதுர்ப்புயங்களும்ஈர் அடியும்உபய திருவடிகளும்கண் கண்டு களிக்கும் நாள் உளதோ = எனது கண்கள் தரிசித்து மகிழுங்காலமும் உளதோஎன்றவாறு.

 

கல் ஆகுபெயராய் மலையையுணர்த்திற்று. கடுத்தல் – ஒத்தல்            (43)

 

அள்ளிவெண் டிருநீறுடன் முழு தணியு மடியவர்ப் பெறினெழுந் திளங்கன்

றுள்ளிநின் றுருகு மன்னையின் மனநெக் குருகுபு சென்றிறைஞ் சிலனே

யெள்ளிவெம் புலியெண் கரிதிரு மேனி யேறுத றகாதென வெகுண்டு  

தள்ளிவந் தருவி யிழிதனேர் சோண சைலனே கைலை நாயகனே.         (44)

 

இதன் பொருள்:வெம் புலி எண்கு அரி எள்ளி திருமேனி ஏறுதல் தகாது என வெகுண்டு வெவ்விய புலி கரடி சிங்கம் இவைகள் அவமதித்துச் சுவாமியின் திருமேனியில் ஏறியுலாவல் தகாதென்று கோபித்துஅருவி தள்ளி வந்து இழிதல் நேர் சோணசைலனே கைலைநாயகனே= அருவிகள் அவற்றைக் கீழ்வீழ்த்தி வந்து இறங்குதலை ஒத்திருக்கும் சோணசைலரே! கைலைநாயகரே!வெண் திருநீறு அள்ளி உடல் முழுதும் அணியும் அடியவர் பெறின் = வெள்ளிய திருநீற்றைக் கொண்டு சரீரமுற்றுந் தரிக்கும் அடியவர்களை எதிர்நேரப்பெறின்எழுந்து இளம் கன்று உள்ளி இன்று உருகும் அன்னையின் = இளங்கன்றினை நினைத்து நின்று உருகுகின்ற தாய்ப்பசுவைப் போலமனம் நெக்கு உருகுபு சென்று இறைஞ்சிலனே = நெஞ்சம் இளகிக்கசிந்து சென்று வணங்கினேனில்லையே: (என்செய்வேன்!) என்றவாறு.

 

கன்றையுள்ளியணையும் அன்னைபோல் அடியவர் இரங்கி எதிரப்பெறின் கண்டமாத்திரத்தேதும்பறுத்துக்கொண்டோடும் கன்றுபோல விரைந்து மனமுருகிச் சென்று இறைஞ்சிலேனெனினும் பொருந்தும். இப்பொருட்கண் உருகென்பதற்கு உருகியணையுமென்க. அருவி புலியாதிகளைக் கீழ்வீழ்த்துவது திருமேனிமேலிவர் தல்கூடாதென்று தள்ளுதலை ஒத்ததென்பது.                                (44)

 

இழையெனத் தளர்சிற் றிடையுணா முலையா ளெனக்குவண் புகலிவேந் தயின்ற

கழுமணிப் பசும்பொற்குலவுபாற் கிண்ணங் கழுவுநீர் வார்ப்பதற் குரையாய்

முழையிடைக் கதிர்மா மணிவிளக் கேற்றி முசுக்கலை பிணாவொடு மசோகத் 

தழையிடைத் தழுவி யுறங்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (45)

 

இதன் பொருள்:முசுக்கலை முழையிடை கதிர் மா மணி விளக்கு ஏற்றி = ஆண் முசுக்குரங்கு குகையின்கண் காந்தியுடைய பெரிய மணியினை விளக்கென வைத்துஅசோகம் தழையிடை பிணாவொடு தழுவி உறங்குறும் சோண சைலனே கைலைநாயகனே = அசோகந்தழையைப்பரப்பி அதனிடையில் பெண் குரங்கினோடும் அணைந்து உறங்கப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே! இழை என தளர் சிறு இடை உண்ணாமுலையாள் = நூலிழைபோலத்துவளும் சிறிய இடையினையுடைய உண்ணாமுலையம்மையார்வண் புகலி வேந்து அயின்ற வளவிய சீர்காழிக்கிறைவரா யவதரித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முன்னுண்டருளியகழும் மணி குலவு பசும் பொன் பால்கிண்ணம் கழுவும் நீர் சாணையில் தீற்றிய மணிகள் பதிக்கப் பெற்ற பசும் பொன்னாலாகிய பாற்கிண்ணத்தைக் கழுவிய நீரையேனும்எனக்கு வார்ப்பதற்கு உரையாய் அடியேனுக்கு வார்க்கும்படி கட்டளையிடுவீராக. என்றவாறு.

 

அம்பிகையாரூட்ட ஞானப்பாலருந்தும்பேற்றைப் பெறும் பக்குவமில்லேனா கையால்அப்பாற்கிண்ணம் கழுவுநீரேனும் வார்க்கப் பணித்தருள்வீரன்பது கருத்து. கழுவும் என்பதில் இடையிலுள்ள உயிர்மெய்கெட்டுக் கழுமெனநின்றது. கழுவுதல் - ஈண்டுச் சாணையில் தீற்றல். உணாமுலையாள் வார்ப்பதற்கெனவும் அயின்ற பாற்கிண்ணமெனவும் பிணாவொடு முறங்குறு மெனவும் கூட்டிமுடிக்க. முசு - ஒருவிதகுரங்கு. கலை - ஆண். பிணா - பெண்.                              (45)

வினைவழி யுடலிற் கமைந்துறு முணவே வேண்டினர் வினைகொடு புணரா

நனைமலர் புனைநின் றிருவடியடைவா னாடொறும் வேண்டில ருலகர்

கனையிருள் கரந்த விடமறிந் துணப்போங் காட்சியிற் புனக்கிளித் தொகுதி

தனையெறி மணிகண் முழைபுகுஞ் சோணசைலனே கைலை நாயகனே.   (46)

 

இதன் பொருள்:புனம் கிளி தொகுதிதனை எறி மணிகள் = புனத்தில் (தினைக் கதிர்களில் வீழும்) கிளிக்கூட்டத்தினை (ஒட்டுதற்குக் குறச்சிறுமிகளால்) எறியப்படும் மாணிக்கக்கற்கள், கனை இருள் கந்த இடம் அறிந்து உண போம் காட்சியில் = நெருங்கிய இருள் ஒளித்துள்ள இடத்தையுணர்ந்து அதனையழிக்கச் செலும் தோற்றம்போலமுழை புகும் சோண சைலனே கைலைநாயகனே குகையினுட் செல்லும் சோணசைலரே! கைலைநாயகரே! உலகர் வினை வழி உடலிற்கு அமைந்துறும் உணவே வேண்டினர் உலகிலுள்ளவர் தாம் ஈட்டிய இருவினைக்கீடாக எடுத்த வுடலுக்கு முன்னரே அமைந்து கிடக்கும் அநுபவமான உணவையே வேண்டுகின்றனர்வினை கொடுபுணரா 'நனை மலர் புனை நின் றிருவடிஅடைவான் நாடொறும் வேண்டிலர் இருவினை களைக் கொண்டு அடையப்படாதனவாய்த் தேன்சொரியும் மலர்புனையப்பட்டுள்ள தேவரீரது திருவடி களையடையத் தினமும் வேண்டினார்களிலர்; (அந்தோபாவம்!.). என்றவாறு.

 

செல்வம் வறுமை இன்பம் பிணி மூப்பு சாக்காடு இவ்வாறும் கருவிலேயே அமைந்து கிடத்தலின்இவை முயல்வில்லாவழியும் எய்துமென்பது தோன்ற 'வினைவழியுடலிற் கமைந்துறுமுணவுஎன்றும்திருவடிப்பேறு சிவபுண்ணிய முதிர்வால் இரு வினையொப்பெய்தின் அடையலாமல்லது சுகதுக்கங்கட்கேது வாகிய நல்வினை தீவினைகளால் அடைய முடியாதென்பதுதோன்ற 'வினை கொடுபுணராஎன்றும்அத்தகைய பேற்றை அத்திருவடி யர்ச்சனைவழிபாட்டானே அறிஞர் எளிதெய்துவரென்பது தோன்ற 'நனை மலர் புனை நின் றிருவடிஎன்றுங் கூறினார். கூறவேமுயலவேண்டாததில் முயற்சிக்கும் முயல வேண்டியதில் முயற்சியில்லாமைக்கும் பாவங்கா ரணமல்லது வேறென்னை யென்றவாறு. கனை - நெருக்கம். உண்ணுதல் - ஈண்டு அழித்தல். நனை - தேன். வினை கொடு புண ராத்திருவடி எனக்கூட்டுக. கொண்டு மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபுஇது இடைக்குறைந்தது.                                                             (46)

 

மாங்குயின் மிழற்று நாவலூர்ப் புலவன் மறுப்பவு முடிமிசை யிருத்தும்

பூங்கழ லடியேன் றலைமிசையிருத்தப் புகலினு மென்கொனீ யிரங்கா

யோங்குறு மண்ட கோளகை யளவு முயர்ந்துமோர் மழவிடை முதுகிற்,

றாங்குபு நடக்க விருந்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (47)

 

இதன் பொருள்:ஒங்குறும் அண்டம் கோளகை அளவும் உயர்ந்தும்உன்னதமான அண்டப் பரப்பளவும் ஓங்கிய திருமேனி வாய்க்கப்பெற்றும்ஓர் மழ விடை முதுகில் தாங்குபு நடக்க இருந்திடும் சோணசஒலனே கைலைநாயகனே = ஒரு இளமைதங்கிய இடபம் தனது முதுகில் ஏந்திச்செல்லக் கனமின்றி அதிலமரும் சோணசைலரே! கைலைநாயகரே!மா குயில் மிழற்றும் நாவலூர் புலவன் = மாஞ்சோலையிற் குயில்கள் இசைக்கும் வளமிக்க திருநாவலூர்ப் புலவரான சுந்தரமூர்த்திநாயனார்மறுப்பவும் முடிமிசை இருத்தும் பூ கழல் = பலமுறை தடுக்கவும் அவர் சிரசிலே சூட்டும் தாமரை மலர் போலும் திருவடிகளைஅடியேன் தலைமிசை இருத்த புகலினும் நீ இரங்காய் என்கொல்= தொண்டனானயான் என் சிரசிலே சூட்டப் பலமுறை துதித்து வேண்டினும் தேவரீர் இரங்குகிலீர் என்னோஎன்றவாறு.

 

நாவலூர்ப்புலவன்மறுத்தது திருவதிசையில் சித்தவடமடத்தில் சிவபெருமான் அந்தணராய்வந்து திருமுடியிற்சூட்டிய பொழுது. கொல் இரக்கம்பற்றிவந்த ஐயம். அண்டசோளகையளவு முயர்ந்தும் மழவிடைமுதுகிற்றாங்க இருத்தலாவது – மலைவடி வாயிருத்தலோடு சோமாஸ்கந்தராதிய வடிவமாகியும் அமர்தல். ஒருவென்பது ஈண்டுச் சிறுமைப்பொருளது. தாங்குபு செய்பு என்னும் வாய் பாட்டு வினையெச்சம்.                                                          (47)

 

ஈரமு மருளு மொழுக்கமுஞ் சால்பு மின்சொலு மிந்தியப் பகைவெல்

வீரமு மருளி யெனதுவெம்பிறவி விலக்கியாட் கொள்ளுநா ளுளதோ 

வாரமுமகிலுந் தடிந்து செம் மணிக வரித்தெறிந் தெறுழ்வலிக் குறவர்

சாரலி னிறுங்கு விதைக் குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (48)

 

இதன் பொருள்:எறுழ் வலி குறவர் = மிக்க வன்மையுடைய வேடர்கள்சாரலில் ஆரமும் அகிலும் தடிந்து செம்மணிகள் அரித்து எறிந்து மலைச்சாரலி லுள்ள சந்தன மரங்களையும் அகில்மரங்களையும் வெட்டி (அங்குள்ள) செவ்விய நாகமணிகளை ஆராய்க்தெடுத்தகற்றிஇறுங்கு விதைக்குறும் சோணசைலனே சைலைநாயகனே = சோளங்களை விதைத்து விளைவிக்கப்படும் சோணசைலரே! கைலைநாயகரே!ஈரமும் அருளும் ஒழுக்கமும் சால்பும் இன்சொலும் இந்தியம் பகை வெல் வீரமும் அருளி = அன்பும் கருணையும் ஆசாரமும் குணவமைதியும் இனிய சொற்களும் பஞ்சேந்திரியங்களாகிற பகைகளை வெல்லும் திடமும் அடியே னுக்குத் தந்தருளிஎனது வெம் பிறவி விலக்கி ஆள் கொள்ளும் நாள் உளதோஎன்னுடைய வெவ்விய பிறவிப்பிணியையகற்றி அடிமை கொண்டருளும் காலமும் உளதோ? (அறியேன்.) என்றவாறு.

 

அன்பு - உரியவரிடத்து நிகழும் மனநெகிழ்ச்சி. அருள் - எல்லார்மாட்டும் நிகழுந்தயை. ஈரம் முதலியவை ஒன்றுக்கொன்று காரணகாரியமாய்ப் பிறவி நீக்கத்திற்கு ஏதுவாதல் பற்றி முறைப்படுத்து வேண்டியபடி. ஆரமாதிகளைத் தடிந்தெறிதற்குக்காரணம் அவற்றினைப் பொருட்படுத்தாமை. அகில் – சந்தனமரம் போல வாசனையுடையதொருமரம்இது முதிர்ந்துவைரம்பற்றிய கள்ளிச் செடியிடையினும் பிறக்கும். * "கள்ளிவயிற்றினகில் பிறக்கும்'' என்பதனானு முணர்க. எறுழ்வலி ஒருபொருட் பன்மொழி.                                   (48)

 

[* நான்மணிக்கடிகை - 4.]

 

 

 

தொகைமிகு மமரர் முனிவரர் பரவித் தொழுதகை யொடுவிரை கமழ்பூம்

புகைமிகு மணிமண் டபத்திடை நெருங்கப் புழுகு நீ யணிதல்கண்டு வந்தேன் 

குகைமிகு வாயிற் சோதிமா மஞ்சேர் குளிர்மதி விழுங்கவாய் வைத்த

தகைமிகு மூரற் றிரளைநேர் சோண சைலனே கைலை நாயகனே.         (49)

 

இதன் பொருள்:குகை மிகு வாயில் = மலைக்குகையினது பெருத்த வாயின்கண்ணிற்கும்சோதி மா மரம் சேர் குளிர் மதி = சோதிமயமான பெரிய மரத்தினுனியிற் சேர்ந்த குளிர்ந்த சந்திரன்விழுங்க வாய் வைத்த தகை மிகும் மூரல் திரளை நேர் சோண சைலனே கைலைநாயகனேவிழுங்குதற்கு வாயின்கண் வைத்த வெண்ணிற மிக்க அன்னத்திரட்சியை ஒத்து விளங்குகின்ற சோணசைலரே! கைலைநாயகரே!பூ விரை சமழ் புகைமிகும் மணி மண்டபத்திடை = பொலிவுபெற்ற வாசனை வீசும் புகைமிகுந்த மணிமயமான மண்டபத்தினிடத்தில்தொகைமிகும் அமரர் முனிவரர் பரவி தொழுத கையொடு நெருங்க கூட்டமான முப்பத்து முக்கோடி தேவராதியர்களும் முனிவர்களும் துதித்து அஞ்சலிக்குங் கரங்களோடு நெருங்கிநின்று தரிசிக்கநீ புழுகு அணிதல் கண்டு உவந்தேன் - தேவரீர் புழுகணிந்துகொள்ளும் விழாவினைத் தரிசித்து உவப்படைந்தனன். (இதற்கு எப்புண்ணிய மியற்றினேனோ அறிந்திலேன்.) என்றவாறு.

 

பூர்வத்திலே ஒரு புழுகுப்பூனைஇச்சோணசைலப் பெருமானுக்குச் சாந்தெ னப் புழுகையப்பி அகலாது வசித்த புண்ணியப் பேற்றால் அயோத்தியிலே மனுகுலத்தில் ஏமாங்கத னென்னும் அரசனாயுதித்துப்பூர்வசன்மவாசனையால் ஈங்கடைந்துபுழுகாதிய கலவையணிந்து வழிபட்டுச் சிவபதமெய்திய ஐதீகம்பற்றி நடக்கும் மகோற்சவதரிசனம் கிடைக்கப்பெற்ற ஆர்வமேலீட்டால் துதித்தவாறு. இச்சரித்திர விரிவை அருணகிரிபுராணம் தராபதிபுழுகுசாத்தியசருக்கத்திலுணர்க.

 

சோணசைலநாதருக்கு மலைக்குகையே திருவாயாகவும்அங்குகிற்குஞ்சோதி மரமே அன்னமமைக்கும்பாத்திரமாகவும்சந்திரனே பாற்றிரளன்னமாகவும் உருவகி த்தவாறு. விரைகமழ்புகையாவது - குந்துருக்கம் பச்சைக்கற்பூரம் அகில் சந்தனம் கருஞ்சீதாரி என்பவற்றின் பொடியோடு சிறிது கபிலைப் பசுநெய்கலந்து இடுந்தூபம். இது பஞ்சதூபமாம். இன்னும் தசாங்கமுதலாகப் பலதிறப்படும்.                (49)

 

சினம்படு முளங்கொன் றவரவை யெனையுஞ் சேர்ப்பது தகுமுனக் கிசைவண்

டினம்படு மலரி னகவிதழொடுபுல் லிதழுமொன் றுதலுல குடைத்தே

மனம்படு மடிமை யுளன்சிலை யெறிக்கு மனங்குழைந் துமையவள் களபத்

தனம்பட வடிவங் குழைந்திடுஞ்சோண சைலனே கைலை நாயகனே.         (50)

 

இதன் பொருள்:மனம் படும் அடிமை உளன் சிலை எறிக்கு மனம் குழைந்து = அகத்தொண்டுடையராகிய சாக்கிய நாயனார் விட்டெறிந்த கல்லுக்குத் திருவுளம் உருகப்பெற்றுஉமையவள் களபம் தனம் பட வடிவம் குழைந்திடும் சோணசைலனே கைலைநாயகனே= உமாதேவியாரின் கலவையணிந்த கனதன முறுத்துதலால் திருமேனிகுழைந்து மகிழப்பெறும் சோணசைலரே! கைலைநாயக ரே!இசை வண்டு இனம் படும் மலரின் அகவிதழொடு புல் இதழும் ஒன்றுதல் உலகு உடைத்து = இசைபாடும் வண்டினங்கள் பொருந்திய மலர்களில் அகவிதழ்களோடு புறவிதழ்களும் பொருந்திநிற்றல் உலகினியற்கையாகும் (ஆதலால்)சினம் படும் உளம் கொன்றவர் அவை எனையும் சேர்ப்பது உனக்கு தகும் = சினக்கும் உளத்தின் சேட்டையையொழித்த அடியவர் கூட்டத்தில் அடியே னையும் தேவரீர் சேர்ப்பது பொருந்தும். என்றவாறு.

 

சினம் - கோபமிகுந் தடங்கியபின் நிற்கும் ஒரு குணம். இதனைத் திருமுரு காற்றுப்படையில் "கடுஞ்சினங்கடிந்த காட்சியர்" என்பதற்கு நச்சினார்க்கினியரருளிய உரையானுமுணர்க. எனையும் என்பதில் உம்மை இழிவுசிறப்பு. அர்ச்சனை வழிபாட்டிற்குரியதாகும் அகவிதழொடு உரித்தாகாப்புறவிதழும் பூவிதழென்னு மொற்றுமையால் ஒன்றிநிற்றல் உலகியற்கையாகலின்உரிய உமது தொண்டரோடு உரிமையற்றயானும் உமது தொண்டனெனப் பெயர் பூண்டிருத்தலின்ஒன்றிநிற்றற் பாலனேயென்பார் 'சேர்ப்பது தகும்என்றும்புறத்தே தொண்டுடையாராகாது அகத்தே தொண்டுடையராகலின், 'மனம்படுமடிமைஎன்றுங் கூறினார். *"அல்லி அகவிதழ்'' "புல்லி புறவிதழ்'' என்பன சூத்திரம்.                                        (50)

 

[* திவாகரம்.]

 

வாம்பரி கரிதேர் சிவிகைபொற் குவியன் மணிப்பணி பெரும்புவி யாட்சி

யாம்பரி சலவென் றுன்பத மருவி னன்றியென் கவிகளென் கவிகள்

காம்பரி முரண்மும் மதகரி வளைத்த கைவிட மோதலாற் கதிர்த்தேர்த்

தாம்பரி துணுக்கென் றீர்த்திடுஞ் சோணசைலனே கைலை நாயகனே.         (51)

 

இதன் பொருள்:முரண் மும்மதம் கரி கை வளைத்த காம்பு அரி விட மோதலால்வலிமையும் மும்மதமுமுடைய யானையானது துதிக்கையால் வளைத்த மூங்கில்களைவிட அவை தாக்குதலால்கதிர் தேர் தாம் பரி துணுக்கென்று ஈர்த்திடும் சோண சைலனே கைலைநாயகனே = சூரியனுடைய தேரிற்பூட்டப்பட்டுத் தாவிச்செல்லும் சப்தமாவென்னுங் குதிரை (அதனைச்) சம்மட்டியின் அடியென மதித்து விரைவாகத் தேரை இழுத்துச்செல்லும் சோணசைலரே! கைலைநாயகரே!வாம் பரி கரி தேர் சிவிகை பொன் குவியல் மணி பணி பெரும்புவி ஆட்சி = தாவிச்செல்லுங்குதிரை யானை இரதம் பல்லக்கு பொற்றிரட்சி அரதனம்பதித்த அணிகள் பெரிய உலகாளுதல் (ஆகிய இவைகள்)ஆம் பரிசு அல என்று உன் பதம் மருவின் அன்றி என் கவிகள் என் கவிகள் = விர்த்திக்கும் தகுதியுடையன அல்லவென்று வெறுத்துத் தேவரீரது திருவடிப் புகழ்ச்சியைப் பெற்றாலல்லது எனது பாடல்கள் என்ன பயனைத்தரும் பாடல்களாகும் (ஒரு பயனையும் தராதனவே.) என்றவாறு.

 

ஆதல் - விர்த்தித்தல். விர்த்திப்பனவல்லவெனவே அழிவனவென்பது தாமேபோதரும். பரிசு - பரிசுடைட்பொருளை யுணர்த்தலின் ஆகுபெயர். கவிகள் உலகவின்பத்தை விழைந்து புகழாது திருவடிகளைப் புகழ்ந்தாலல்லது பயனுடைய னவாகா என்பது கருத்து. காம்பு அரி - மூங்கில்ஒருபொருட்பன்மொழி. மூங்கிலின் செறிவுமாம். வாவும் ஆகும் தாவும் என்பன இடைக் குறைந்தன.             (51)

 

துன்னுறு துயரப் பிறவிவெங் கொடுநோய் தொலைப்பினுந் தொலைத்திடா துறினு

நின்னடி மலரை யன்றியான் மறந்து நினைப்பனோ விறக்கும்வா னவரை

மன்னளி பருக வுடையிறான் மதுவும் வாரண மதமும்வெள் ளருவி

தன்னொடு மிகலி யொழுகுறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (52)

 

இதன் பொருள்:மன் அளி பருக உடை இறால் மதுவும் = நிலைபெற்ற வண்டுகள் மொய்த்துண்ணுதலால் உடைந்த தேன்கூட்டினின்றும் ஒழுகும் தேனும்வாரணம் மதமும் = யானையின்மதநீரும்வெள்ளருவி தன்னொடும் இகலி ஒழுகுறும் சோண சைலனே கைலைநாயகனே = வெள்ளிய அருவி நீரோடு மாறுபட்டு இழியப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!துன் உறு துயரம் பிறவி வெம் கொடுநோய் தொலைப்பினும் = மேன்மேலுறும் துன்பமயமாகிய பிறவியென்னும் வெவ்விய கொடியபிணியை (அடியேனுக்கு) ஒழிப்பினும்தொலை த்திடாது உறினும் = ஒழிக்காது மேன்மேல் உறச்செய்யினும்நின் அடி மலரை அன்றி - தேவரீரது திருவடித்தாமரைமலரையல்லதுஇறக்கும் வான வரை மறந்தும் யான் நினைப்பனோ - மரிக்கும் தேவகூட்டங்களை மறந்தேனும் அடியேன் தியானிப்பனோ? (தியானியேன்.) என்றவாறு.

 

அநாதியாய் விடாது தொடர்ந்துவருதலால் 'துன்னுறுபிறவிஎன்றும்அது அணுத்துணையும் இன்பம்பயத்தலின்றித் துன்பமேபயத்தலால் 'வெங்கொடுநோய்என்றும், *உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தா லொன்றும் போதுமே'' என்றபடி ஆண்டானாற்பெறும் தண்டனையும் ஆக்கவிளைவிற்கு ஏது வாமாகை யால் 'தொலைப்பினுந் தொலைத்திடாதுறினும்என்றும்தேன் செந்நிறமும் மதம் கருநிறமுமாய் நிறம் வேறுபடுதலால் 'வெள்ளருவிதன்னொடு மிகலிஎன்றுங் கூறினார். உறுவிப்பினுமென்னும் பிறவினை உறினுமெனத் தன்வினையாய் நின்றது. இறால் - தேனடை.                                            (52)

 

[*  திருவாசகம் குழைத்தபத்து - 2.]

 

நீரினா லழலால் வருங்கொடும் பிணியா னிருதராலலகையால் விலங்காற்

சோரரால் வருந்து மவரலர் நினது தூயநா மம்புகன் றிடுவார்

சீருலா மணியா லரிபா வுதலாற் றிசையுற நீள்கையா லெழின்மை

சார்தலா லுமையாள் விழிநிகர் சோண சைலனே கைலை நாயகனே.         (53)

 

இதன் பொருள்:சீர் உலாம் மணியால் - கனம்வாய்ந்த அரதனமணிக ளாலும் (பொலிவமைந்த கண் மணியுடைமையாலும்)அரி பரவுதலால் = சிங்கங்கள் சூழ்தலாலும் (செவ்வரிபரவப்பெறுதலாலும்)திசை உற நீள்கையால் = திக்குகளிற் பொருந்த நீண்டிருத்தலாலும் (நோக்கமமைய நீளச்செல்லுதலாலும்)எழில் மைசார் தலால் = எழுச்சியுடைய மேகங்கள் தவழ்தலாலும் (அழகிய மை தோய்தலாலும்)உமையாள் விழி நிகர் சோணசைலனே கைலைநாயகனே = உமையம்மையின் திருக்கண்களுக்கு நிகராய்த்திகழுஞ் சோணசைலரே! கைலைநாயகரே!நினது தூய நாமம் புகன்றிடுவார் = தேவரீருடைய சுத்தமாகிய திருநாமத்தைத் துதிக்கப் பெறுமவர்கள்நீரினால் அழலால் வரும் கொடும் பிணியால் நிருதரால் அலகையால் விலங்கால் சோரரால் வருந்துமவர் அலர் நீராலும் நெருப்பாலும் (வாத பித்த சிலேஷ்மங்களால்) உண்டாகும் கொடிய நோய்களாலும் அரக்கராலும் பசாசங்களாலும் மிருகங்களாலும் கள்வர்களாலும் துயருழப்பவராகார்கள். என்றவாறு.

 

மூன்றனுருபுகள் கருவிப்பொருளன. * "ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது" ஆகலின் சிவநாமத்தினைத் தூயநாமம்என்றும், கொல்வா ரேனுங் குணம்பல நன்மைக - ளில்லா ரேனுமியம்புவ ராயிடி - னெல்லாத் தீங்கையு நீங்குவர்'' என்பது திண்ணமாகலின் 'வருந்துமவரலர்என்றும் கூறினார். பின்னிரண்டடியும் சிலிஷ்ட மாய்ப் பொருள் பயத்தலுணர்க. சிலிஷ்டம் - சிலேடை. சீருலாம் அணியெனவும் பிரித்தலும்சோணசைலத்தில் அரிபரவல் திருமால் துதித்தலென்னலும் ஒன்று. திசை - திக்குநோக்கம். எழில் - எழுச்சிஅழகு. எழுச்சியெனக்கொள்ளுங்கால்   "நுண்மாணுழைபுல மில்லா னெழினல - மணமாண் புனைபாவை யற்று” என்பதிற் போல எழில் என்பதில் இல் தொழிற் பெயர் விகுதி என்க.                    (53)

 

[* ஆளுடையபிள்ளையார் தேவாரம் நமச்சிவாயப்பதிகம் - 1.

† 5

‡ திருக்குறள் - 407.]

 

முகவிளக் கென்ன மணிக்குழை மிளிர முலைமுகட்டணிபெற மலராள் 

பகல்விளக் கென்ன வொளிகெட வரும்பொற் பாவையர்க் கிரங்கிடா தருளா

யக விளக்கென்ன வகறிரி நெய்தீ யாக்குவோ ரின்றியே யெழுந்த

சகவிளக் கென்ன விளங்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (54)

 

இதன் பொருள்:அகம் விளக்கு என்ன = ஒவ்வொருவீட்டினும் ஏற்றப்பட்ட விளக்கினைப்போலஅகல் திரி நெய் தீ ஆக்குவோர் இன்றியே = தகழியும் திரியும் நெய்யும் நெருப்பும் (இக்கருவிகளைக்கொண்டு) ஏற்றுவோரும் இல்லாமலேஎழுந்த சகம் விளக்கு என்ன விளங்குறும் சோணசைலனே கைலைநாயகனேஒளியுடன் தோன்றிய உலகதீபமென்று அன்பர்கடுதிக்குமாறு பிரகாசிக்கும் சோண சைலரே! கைலைநாயகரே!முகம் விளக்கு என்ன மணி குழை மிளிர = முகத்துக்கு (ஈதோர்) விளக்கமெனும்படி அரதனத்தோடு விளங்கமுலை முகடு அணி பெறமுலைகள் தம்மேலே ஆபரணவகைகளினா லழகுபெறமலராள் பகல் விளக்கு என்ன ஒளி கெட வரும் = தாமரை மலரில்வசிக்கும் இலக்குமியும் பகலொளிமுன் தீபவொளிபோலத் (தம்முன்) ஒளி கெடும்படி வராநின்றபொன் பாவையர்க்கு இரங்கிடாது அருளாய் = பொற்பதுமை போல்வார்க்குக் காதல் பூண்டு வருந்தாதபடி கிருபை செய்வீராக. என்றவாறு.

 

விளக்கு என்பதில் வினை முதற்பொருள் விகுதிபுணர்ந்து கெட்டது. விளக்கு - விளக்கத்தைச் செய்வது. பகல்விளக்காதல் தன்னொளிமழுங்கல். மிளிர பெற வரும் பாவையர் என இயையும். அகவிளக்குக்கு மாறுபட்டுக் கருவியாதிகளின்றி உலகைவிளக்கும் விளக்கென்றது முடிவிலாற்றலுடைமையை விளக்கி நின்றது. (54)

 

நீலியோ டுனைநா டொறுமருச் சித்து நின்றொழில் புரிந்திட வுடற்குக்

கூலியோ தனமென் றளிப்பவர்க்கன்றிக் கூற்றினைக் கடக்குமா றெளிதோ

மாலியோ சனையின் வணங்குறுங் கைலை மலை நிவே தித்திடக் குவித்த

சாலியோ தனமென் றிடத்திகழ் சோண சைலனே கைலை நாயகனே.         (55)

 

இதன் பொருள்:மால் யோசனையின் வணங்குறும் கயிலை மலை திருமாலும் நெடுந்தூரத்தினின்று வணங்கும் திருக்கைலைமலையானதுநிவேதித் திட குவித்த சாலி ஓதனம் என்றிட திகழ் சோணசைலனே கைலைநாயகனே = நிவேதனஞ்செய்தற் பொருட்டுக் குவித்த செந்நெலாற்சமைத்த அன்னக்குவியலென எதிர்விளங்கப் பிரகாசிக்கும் சோணசைலரே! கைலைநா யகரே!நீலியோடு உனை நாடொறும் அருச்சித்து நின் தொழில் புரிந்திட = அம்பிகையாருடன் தேவரீரையும் தினமும் பூசித்து உமது தொண்டினையே செய்துவருதற்குஉடற்கு கூலி ஓதனம் என்று அளிப்பவர்க்கு அன்றி= உடலுக்குக் கூலியாகக்கொடுக்கற்பாலது அன்னமெனத் தேர்ந்து கொடுக்குந் துறவிகட்கேயல்லது (உடற்பற்றுடைய ஏனை யோர்க்கு)கூற்றினை கடக்கும் ஆறு எளிதோஇயமனைக் கடந்துகொள்ளும் விதம் எளிமையதாமோ? (அரிதாம்.) என்றவாறு.

 

நீலி - நீலநிறப்படிவத்தள்ஒடு ஒற்றுமைப்பொருளது. *  "பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை" யேனும் முத்திசித்திக்கும்வரையும் கடவுள் வழிபாட்டிற்கு வேண்டியிருத்தலின்அதன்பொருட்டு உடலோம்புவார்க்கல்லது போகாதிநுகர்ச்சியின் பொருட்டு ஓம்பும் தேகாபிமானிகளுக்குக் கூற்றைக்கடத்தலரி

தென்பதாம். யோசனை ஈண்டு நெடுந்தூரத்தின் மேற்று. மாலுமென்னும் உயர்வு சிறப்பும்மை தொக்கது. மாலுமெனவே ஏனையோ ரணுகற்கு எளிதுகொல்லோஎன்பது கருத்து. அத்தகையகைலையும் தமக்கெதிர் குவித்த திருப்பாவாடைபோன்று விளங்கத் திகழும் சோணசைலரென்க.                                           (55)

 

[*திருக்குறள் - 345.]

 

தோற்றிடும் பிறவி யெனுங்கடல் வீழ்ந்து துயர்ப்பிணி யெனுமலை யலைப்பக் 

கூற்றெனு முதலை விழுங்குமுன் னினது குரைகழற் கரைபுக விடுப்பா

யேற்றிடும் விளக்கின் வேறுபட் டகத்தி னிருளெலாந்தன் பெய ரொருகாற்

சாற்றினு மொழிக்கும் விளக்கெனுஞ் சோண சைலனே கைலை நாயகனே.       (56)

 

இதன் பொருள்:ஏற்றிடும் விளக்கின் வேறுபட்டு = உலகின்கண் ஏற்றி வைக்கும் விளக்கிற்கு மாறுபாடுடையதாய்தன் பெயர் ஒருகால் சாற்றினும் = தனது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பினும்அகத்தின் இருள் எலாம் ஒழிக்கும் விளக்கு எனும் சோணசைலனே கைலைநாயகனே = உள்ளத்தினை மறைத் தலைச் செய்துறையும் ஆணவாதி மலவிருட்கூட்டமுற்றும் கெடுத்தருளும் விளக்கீ தென்று அன்பர்களாற் றுதிக்கப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!தோற்றி டும் பிறவி எனும் கடல் வீழ்ந்துஉதிக்கும் பிறப்பென்னும் கடலில் விழுந்துதுயர் பிணி எனும் அலை அலைப்ப = துன்பினை விளைக்கும் பிணிகளாகிற அலைகள் (இடையே) அலைத்தலைச் செய்யகூற்று எனும் முதலை விழுங்கு முன் = இயமெனென்னும் முதலையணுகி உட்கொள்ளும் முன்னரேகுரை கழல் கரை புக விடுப்பாய்தேவரீரது ஒலிக்கும் வீரக்கழலணிந்த திருவடியென்னுங் கரையிலடையுமாறு (அடியேனைச்) சேர்த்தருளவேண்டும். என்றவாறு.

 

கழல்தானியாகுபெயராய்த் திருவடியை உணர்த்திற்று. குரைகழல் – வினைத்தொகையின் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையுமாம். விளக்கின் இன் ஐந்தனுருபு நீக்கப்பொருளது. அளவுபடாமையின் பிறவியைக் கடலென்றும்மேன் மேலும் மூண்டெழுதலின் பிணியை அலையென்றும், "மூர்க்கனுமுதலையுங் கொண்டது விடா'' என்றபடி தான் பற்றியவுயிரை மீளவிடாமையின் இயமனை முதலை யென்றும்உருவகித்தார். வேறுபடுதலாவது - ஏற்றிடும் விளக்கு தன்னை யெதிர்ப்படும் புறவிருளொன்றே ஒழிப்பதாகத் தான் அதற்குமாறாய் எதிர்ப்படாது கரந்துறையும் மலமென்னும் அகவிருளையும் தன்பெயருரைத்த மாத்திரத்தானே ஒழித்தல். இது *இல்லகவிளக்கது இருள் கெடுப்பது – நல்லகவிளக்கது நமச்சிவா யவே'' என்பதனானுமுணர்க.                                                 (56)

 

[* ஆளுடையவடிகள் தேவாரம் நமச்சிவாயப்பதிகம். 8.]

 

கந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங் கரநிலத் தமைத்திரு பதமு

மந்தர நிமிர்த்து நின்னிலை யறியா ரரும் பவ மொழியுமோ வுரையா 

யிந்திரன் வனத்து மல்லிகை மலரி னிண்டைசாத் தியதென நிறைந்த

சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (57)

 

இதன் பொருள்:இந்திரன் வனத்து மல்லிகை மலரின் இண்டை சாத்தியது என= இந்திரன் தனது நந்தனவனத்துமலர்ந்த மல்லிகை மலரினாற் றொடுத்த கொண்டைமாலையைச் சாத்தியது போலநிறைந்த சந்திரன் முடிமேல் வந்துறும் சோணசைலனே கைலைநாயகனே= பூரணசந்திரன் திருமுடியின்கண் வந்து நிலவப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!நின் நிலை அறியார்தேவரீரது உண்மைநிலையினை உணரப்பெறாதவர்கள்கந்தரம் இருந்தும் மலைக்குகைகளில் வசித்தும்அடகு நீர் அயின்றும் = இலைகளையும் சலத்தையும் புசித்தும்கரம் நிலத்து அமைத்து இருபதமும் அந்தரம் நிமிர்த்தும் = கரங்களைப் பூமியிலூன்றி இருகால்களையும் உயரத்துக்கியும் (கடுந்தவங்களைக் காலவரையின் றிச் செய்யினும்)அரும்பவம் ஒழியுமோ உரையாய் = அவர்களுடைய அரிய பிறவிகள் அகலுமோ தேவரீரே திருவாய்மலர்ந்தருள்வீராக. என்றவாறு.

 

நிலையாவது - தன்வயத்தனாதன் முதலிய எண்குணமுடையராய் ஆன்மாக்க ளுக்கு வீடுபேறளித்தற் பொருட்டு நிக்கிரகானுக்கிரகம்பூண்டு அமருமியல்பு. கடவு ணிலையறியாதா ரியற்றும் கர்மயோகங்கள் பயன்படாவென்பது கருத்து. அரும்பவம் என்புழி அருமை கடுமைமேற்றுஅருந்துயரென்புழிப்போல.           (57)

 

கூம்புறு கரமு மலர்ந்திடு முகமுங் கொண்டுநின்றனைவலம் புரிவோர்

மேம்படு சரண மலர்ப்பொடி மேனி மேற்படிற் பவம்பொடி படுமே

பூம்பொழிற் புகலிக் கிறைவனா னிலஞ்சேர் புண்ணியத் தலங்களினடைந்து

தாம்புனை பதிகங் தொறும்புகழ் சோண சைலனே கைலை நாயகனே.         (58)

 

இதன் பொருள்:பூ பொழில் புகலிக்கு இறைவன் = மலர்ச்சோலைகள் புடை சூழும் சீர்காழிக்குத் தலைவராகிய திருஞானசம்பந்த மூர்த்திநாயனார்நால் நிலம் சேர் புண்ணியம் தலங்களின் அடைந்து = நால்வகைநிலத்தைச் சார்ந்தனவாய் புண்ணிய விருத்திக்குக் காரணமாகிய தலங்களிலெழுந்தருளிதாம் புனை பதிகம் தொறும் புகழ் சோணசைலனே கைலைநாயகனே = தாம் துதிக்கும் பதிகங்கடொறும் புகழ்ந்து பாடப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!கூம்புறு கரமும் மலர்ந்திடு முகமும் கொண்டு = குவித்த கைகளும் மலர்ந்த முகமுமுடை யராய்நின்றனை வலம் புரிவோர் மேம்படு சரணம் மலர் பொடிதேவரீரைப் பிரதக்ஷிணஞ்செய்பவருடைய மேன்மைவாய்ந்த திருவடிமலரின்கணெழும் துளிமேனிமேல் படில் பவம் பொடிபடுமே - (அடியேனது) சரீரத்திற்படப் பெறுவேனேல் எனது பிறப்பும் அழிவடைந்திடுமே! (அங்ஙனம் பெற்றேனில்லையே!). என்றவாறு.

 

"ஒடுவிழுந்து சீப்பாயு மொன்பதுவாய்ப் புண்ணுக் - கிடுமருந்தை யானறிந்து கொண்டேன் - கடுவருந்துதேவாதி தேவன் றிருவொற்றி யூர்த்தெருவிற்போவா ரடியிற் பொடி." என்றார் பட்டினத்தடிகளுமாகலின் உடலையொழிக்கு மருந்து அடியார்களின் பாததூளியேயாதலால், 'பொடிமேனிமேற்படிற்பவம் பொடிபடுமேஎன்றும்சம்பந்தமூர்த்திகளருளிய ஒவ்வொரு திருப்பதிகங்களிலும் ஒன்பதாவது பாடலில் இத்தலவிபவத்தையே கூறுதலால் 'பதிகந்தொறும்புகழ் சோணசைலம்என்றும் கூறினார். கூம்புறுகாம் என்றதற்கு முரண்பட மலர்ந்திடுமுகம் என்றலின் முரண்டொடை. ஏகாரம் தேற்றம்அசையுமாம். நால்வகைகிலம் - குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்.                                                           (58)

 

[* பட்டினத்தடிகள்.]

 

கானமே மருவும் விலங்கினுங் கடையேன் கற்பவை கற்றிலேன் விடய

ஞானமே யுடையே னறிஞரைக் காணி னாணிலே னுய்யுநா ளுளதோ

வானமே யளவு நெடுங்கிரி மலய வாதமோ துறுபவர் கட்குத்

தான புதவ வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.                   (59)

 

இதன் பொருள்:வானம் அளவும் நெடும் மலயகிரி வாதம் மோதுறுபவர்கட்கு= ஆகாயமளாவிய நீண்ட மலயமலையிற் றோன்றும் தென்றலால் தாக்கப்பெற்றவர்கட்குதானம் உதவவே வளர்ந்திடும் சோணசைலனே கைலைநாயகனே வசிக்குமிடம் தந்தருளுதற்கே ஓங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!கற்பவை கற்றிலேன் ஓதியுணர வேண்டிய வற்றை ஓதியுணர்ந்திலேன்விடயம் ஞானமே உடையேன் = (கண்டு கேட்டு உண்டு உற்று உயிர்த்து அறிதலாகிய) விஷய வுணர்ச்சியையே உடையேன்அறிஞரை காணின் நாணிலேன் - நினதடியாரான அறிஞரைக் காணப்பெறில் நாணிநில்லேன் (ஆகையால்)கானமே மருவும் விலங்கினும் கடையேன் உய்யும் நாள் உளதோ = காட்டிலேயே தங்கும் மிருகக்கூட்டத்தினுங் கடைப்பட்டவனாகிய (நாயேன்) உய்தலடையுந் தினமும் உண்டோ? (அறியேன்) என்றவாறு.

 

கற்பவை - ஈண்டு ஞான நூல்கள். * "கற்க கசடறக் கற்பவை" என்பதும் இக்கரு த்ததே. கற்பவைகளைக் கற்றலாதியவின்மையின் 'விலங்கினுங்கடையேன்என்றும்தென்றலால் மொத்துண்டு திகைத்து வாடிவருந்தினார்க்கு அவ்வாதனை நிவிர்த்திப்பான் தானமளித்துத் தவம்பெருக்குவித்தலின் தானமே யுதவ’  என்றுங் கூறினார். எதுகையேகாரம் நான்கனுள் மூன்றாவது அசைஏனையவைபிரிநிலைதேற்றமுமாம். தானமுதவவே என ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.             (59)

 

[* திருக்குறள் - 361.]

 

விழைவொடு மறஞ்செய் துய்கவென் றுரைக்கும் விதியினைக்கவளமுண் கெனவுங்

கழைசுளி நெடுநல் யானையின் முனிந்து கடக்குமென் பவமொழிந் திடுமோ

மழைமுகில் வந்து தவழ்ந்து விண் படரு மலிதரு புகையென வெழுந்து

தழலுரு வுண்மை விளக்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (60)

 

இதன் பொருள்:மழை முகில் வந்து தவழ்ந்து = நீர் முகந்த கருமுகிலணு கிப்படிந்துவிண் படரும் மலிதரு புகை என எழுந்து ஆகாயத்திற் செல்லும் மிக்க புகைபோல மேற்கிளம்பிதழல் உரு உண்மை விளக்குறும் சோணசைலனே கைலைநாயகனே = தேவரீர்கொண்ட இம்மலையுருவம் அக்கினிசொரூப மென்பதை உண்மைப்படப் புலப்படுத்தப் பெறும் சோணசைலரே! கைலைநாயகாரே!விழைவொடும் அறம் செய்து உய்க என்று உரைக்கும் விதியினை - அன்பினோடும் சிவபுண்ணியஞ்செய்து உய்தலடைவாயென்று கூறும் விதியைகவளம் உண்க எனவும் கழை சுளி நெடு நல் யானையின் = கவளத்தை உண்ணு வாயென்று (பாகன்) உரைக்கவும் (அது செய்யாது மிகவருந்தி) மூங்கிலை முறிக்கச்செல்லும் நீண்ட நல்லிலக்கணமமைந்த யானையினைப்போலமுனிந்து கடக்கும் என் பவம் ஒழிந்திடுமோ - வெறுத்து (விடயங்களில்) செல்லும் எனது பாவமும் நீங்குமோ? (அறியேன்.) என்றவாறு.

 

விதியாவன - இவை செயற்பாலவென வேதசிவாகமங்களில் விதிக்கப்பட்ட வை. விதியினை முனிந்து கடக்குமென இயையும். முனிதல் - வெறுத்தல்அது அருளும் சினமுமன்றி இடைநிகர்த்தாதல்உண்க வென்பதன் ஈறு தொக்கது. கழை

கரும்புமாம். நெடுமை - ஒன்பான் முழ நீட்சியுடைமைஇரு கொம்மை இருகொம்பு நெற்றி தலை முதுகு என்னும் ஏழிடவுயர்ச்சியெனினும் பொருந்தும். நன்மை - இலக்கணநிறைவு. தரு இடவழுவமைதி.                                    (60)

 

வாத்திய முழங்கச் சிவிகையுங் கரியு மாறியூர்ந் துலவிவாழ்ந் தவரு

மேத்திய மொழியோ டிரக்கையா னின்குற் றேவலே வாழ்வென வறிந்தேன்

பாத்திய மணிகள் கொண்டிழைத் திலங்கும் பாரவா சிகைமணி மேகஞ்

சாத்திய தெனவில் வளைந்துறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (61)

இதன் பொருள்:பாத்திய மணிகள் கொண்டு இழைத்து இலங்கும் பாரம் வாசிகை = ஆராய்ந்தெடுத்த மணிகளால் பதிக்கப்பட்டுப் பிரகாசிக்கும் பரிய திருவாசிகையொன்றினைமணி மேகம் சாத்தியது என வில் வளைந்து உறும் சோணசைலனே கைலைநாயகனே= மணிகளைப் பொழியும் மேகங்கொணர்ந்து சாத்தியது போலுமென்று நினைக்குமாறு (இந்திர தனுசெனப்படும்) வில்வளையப் பெற்ற சோணசைலரே! கைலைநாயகரே!வாத்தியம் முழங்க சிவிகையும் கரியும் மாறி ஊர்ந்து = பஞ்சகருவிகளும் ஒலிக்கப் பல்லக்கிலும் யானையிலும் (வேண்டியவாறு) மாறிமாறி யேறிச்சென்றுஉலவி வாழ்ந்தவரும் = எங்குஞ் சஞ்சரித்து வாழ்தலையடைந்த செல்வப் பெருக்குடையவரும்ஏத்திய மொழியோடு இரக்கையால் நின் குற்றேவலே வாழ்வு என அறிந்தேன் = (தேவரீரது சிற்றேவலுடையவர்பால்) துதிமொழிகளோடு நின்று யாசிக்கக் காணுத லின் உமது சிற்றேவலே பெருவாழ்வெனத் துணிந்தேன். என்றவாறு.

 

பெருஞ்செல்வரும் தமக்குநேர்ந்த குறைவறுக்கும்படி முனிவராதியர்பால் யாசித்துழலுதலை நூலாலும் அனுபவத்தாலும் அறிதலின் 'நின்குற்றேவலே வாழ்வென வறிந்தேன்என்றார். வாழ்ந்தவரும் ஊழால் வறியராகித் தம்பாலேற்றவரிடத்தும் தாம் சென்றிரத்தலும் குற்றேவலுடையவர் தேவரும் வணங்க வாழ்தலும் காண்டலின், 'குற்றேவலேவாழ்வெனவறிந்தேன்என்னலுமாம். வாத்தியம் - தோற்கருவி தொளைக்கருவி நம்புக்கருவி கஞ்சக்கருவி மிடற்றுக்கருவி என்பன. பாத்தல் - ஈண்டுத் தேர்ந்தெடுத்தல். கொண்டு மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. வாசிகை - மூர்த்தங்களுக்குமேல் பிரணவாகாரமாக விளங்க அணிவதொரு அலங்காரக்கருவி. இந்திரதனுசு பலவர்ணத்ததாதலால் பலமணிகள் கொண்டிழைத்த திருவாசிகையாகக் கூறினார். மணி நீர் பொன் பூ மண் கல் தீ இவற்றை முறையே பொழியும் சம்வர்த்தம் ஆவர்த்தம் புட்கலாவர்த்தம் சங்காரித்தம் துரோணம் காளமுகி நீலவர்ணம் என்னும் மேகமேழனுள் ஈண்டு மணிமேகமென்றது சம்வர்த்தத்தை. இதனை, *"சம்வர்த்த மாவர்த்தம் புட்கலா வர்த்தஞ் - சங்காரித்தந் துரோணங் காளமுகி - நீல வருணமேழ் மேகப் பெயரே. மணிநீர் பொன்பூ மண்கற் றீயென் - றெழுவகை மேகம்பொழிமாரி யேழே.'' என்பவற்றானு முணர்க.                                                  (61)

 

[* பிங்கலந்தை வான்வகை. 7172.]

 

குலத்தினிற் பிறந்து மலகினூல் கற்றுங் குணத்தினிற் சிறந்துநல் விரத

பலத்தினிற் கவர்ந்து நின்னடியவர்க்குப் பரிவிலார் கதியிலா தவரோ 

கலத்தினிற் பொலிந்த விமையமீன் றெடுத்த கன்னிநுண்ணிடை மிசைக் களபா

சலத்தினிற் குறுதி கொடுத்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (62)

 

இதன் பொருள்:கலத்தினில் பொலிந்த இமையம் ஈன்றெடுத்த கன்னி = ஆபரணங்களால் விளங்கிய இமையமலைபெற்ற கன்னிகையாகிய உமையம்மை யின்நுண் இடைமிசை களப அசலத்தினிற்கு = நுண்ணிய இடைய நுண்ணிய இடையின் மேலனவாகிய களபம் பூசிய மலைபோலுந் தனங்களுக்குஉறுதி கொடுத்திடும் சோணசைலனே கைலைநாயகனே = உறுதியைத் தந்தருளும் சோணசைலரே! கைலைநாயகரே!குலத்தினில் பிறந்தும் = நற்குலத்தில் உதித்தும்அலகு இல் நூல் கற்றும் = அளவிறந்த நன்னூல்களை ஆராய்ந்தும்குணத்தினில் சிறந்தும் = நற்குணங்களில் மேம்பட்டும்நல் விரதம் பலத்தினில் கவர்ந்தும் = உயர்ந்த விரதபலங்களில் வேட்கைப் பெருக்கமடைந்தும்நின் அடியவர்க்கு பரிவு இலார் கதி இலாதவரே உமது தொண்டர் கட்கு அன்பில்லா தவர்கள் கதியடையப் பெறாதவர்களே யாவர்கள். என்றவாறு.

 

கவர்தல் – வேட்கைப் பெருக்கம். உம்மைகள் என்னொடு உயர்வு சிறப்புமாம். கதியிலா தவபோ இதில் ஏகாரம் தேற்றம். பரிவிலார் கதியிலாரென்பதனை *"ஈசனுக் கன்பில்லா ரடியவர்க்கன் பில்லா ரெவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்குமன் பில்லார் - பேசுவதென் னறி வில்லாப் பிணங்களைநா மிணங்கிற்பிறப்பினிலு மிறப்பினிலும் பிணங்கிடுவர் விடுநீ' என்பதனானுமறிக. கதி - முத்திஆதாரமெனினும் ஒன்றும். கலத்தினிற் பொலிந்தகன்னி எனமுடிக்க. களப அசலம் - களபாசலம்தீர்க்கசந்தி. உறுதிபயத்தல் - தாம் உருகுதலடைந்து அவைக்குத் திண்மையுடைமையைத் தருதல்.                                                                 (62)

 

[* சிவஞானசித்தியார் சுபக்கம் பன்னிரண்டாஞ்சூத்திரம்.]

 

மூடக விருளோ டுன்னையின் றுண்ணா முலையா சாலகற் றுவலென் 

சூடரு மொழியா லடைந்தனன் றமியேன் சூள்வழு வாதுநீ யருளாய்

வீடுறுங் கவரிகீழ்விழ வுறல்கார் மிசையனம் பன்றிதா மாறித் 

தாடலை துருவ வடைதனேர் சோண சைலனே கைலை நாயகனே.         (63)

 

இதன் பொருள்:வீடுறும் கவரி கீழ் விழ கார் மிசை உறல் உச்சியிலிருந்து நழுவிய கவரிமான் கீழேவிழ மேகம் (கீழிருந்து) உச்சியிலேறுதல்அன்னம் பன்றி தாம் மாறி = (முன்னர் முடியையும் அடியையுந்தேடிய) அன்னமும் பன்றியும் தங்களுக்குள் அம்முறைமாறிதாள் தலை துருவ அடைதல் நேர் சோணசைலனே கைலைநாயகனே = திருவடியையும் திருமுடியையும் தேடிக்காணச் செல்லுதலை ஒத்திருக்கப்பெறுஞ் சோண சைலரோ! கைலை நாயகரோ!அகம் மூடு இருளோடு உன்னை இன்று உண்ணாமுலை அரசால் அகற்றுவல் என் சூள் தரும் மொழியால் = (அடியேனது) மனத்தை மூடியுள்ள ஆணவவிருளோடு நின்னை இத்தினம் அபீதகுசாம்பாளுடைய தலைவராகிய அருணாசலேசரால் நீக்குவேன்என்னுஞ் சபதமொழி கூறிவிட்டேனாதலால்தமியேன் அடைந்தனன் = துணையற்றவனான யான் தேவரீரை அடைக்கலமாக அடைந்தனன்நீ சூள் வழுவாது அருளாய் = தேவரீர் அச்சபதம் தவறுதலடையா வண்ணம் (அடியேற்கு) அருளவேண்டுகின்றனன். என்றவாறு.

 

உன்னை இன்று உண்ணாமுலை அரசால் அகற்றுவலென்னும் சூள்மொழி இருளோடு பகர்ந்து தமியேன் அடைந்தனன், (ஆகையால்) நீ அருளாய் எனக் கூட்டிக்கொள்க. என் வினைத்தொகை. தரு - இடவழுவமைதி. வீடுறல் - ஈண்டு வீழ்தல். துருவல் - தேடல்.                                                (63)

 

ஐயநுண் மருங்குன் மாதர்மேல் வைத்த வாதர வுன்பதாம் புயத்து

மெய்யுறு நறுமென் கலவையின் விருப்பு வெண்டிரு நீற்றிலும் வருமோ

கொய்யுறு தினைவீழ்ந் திடுபசுங் கிள்ளைக் குழுக்கடோ ரணமென வெழுந்து

தையலர் கடியப் பறந்துறுஞ் சோணசைலனே கைலை நாயகனே.               (64)

 

இதன் பொருள்:கொய்யுறு தினை வீழ்ந்திடு பசும் கிள்ளை குழுக்கள்= அறுக்கத்தக்க தினைக்கதிர்களில் மொய்க்கும் கிளிக்கூட்டங்கள்தையலர் கடிய தோரணம் என எழுந்து பறந்துறும் சோணசைலனே கைலைநாயகனே = குறப்பெண்கள் (கவண்கற்களாதியவற்றால்) ஒட்டலும் பசிய தோரணங் கட்டினாம் போல ஒழுங்காகப் பறந்து செல்லும் சோணசைலாரே! கைலைநாயகரோ!ஐயம் நுண் மருங்குல் மாதர்மேல் வைத்த ஆதரவு உன் பத அம்புயத்தும்= (உண்டோ இன்றோவெனச்) சந்தேகம் விளைக்கும் நுண்ணிய இடையினையுடைய மாதர்பால் வைத்துள்ள விருப்பம் தேவரீர் திருவடித்தாமாரைகளிடத்தும்மெய் உறும் நறும் மெல் கலவையின் விருப்பு = சரீரத்தில் மிகவும் பூசும் நறிய மெல்லிய கலவைச்சாந்தில் வைத்துள்ள விருப்பம்வெண் திருநீற்றிலும் வருமோ வெள்ளியவிபூதியின்கண்ணும் அடியேனுக்கு உண்டாகுமோ? (அறியேன்.) என்றவாறு.

 

* "தத்தையங் கனையார் தங்கண்மேல் வைத்த தயாவை நூறாயிரங் கூறிட்  - டத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக் கமருல களிக்குமின் பெருமை'' என்றார் ஆன்றோரும். பத அம்புயம் - பதாம்புய மென்றாதல் தீர்க்கசந்தி.             (65)

 

[* கருவூர்த்தேவர் திருவிசைப்பா கங்கைகொண்ட சோளேச்சரப் பதிகம் – 8.]

 

கனலினூ டமைத்த விழுதென வுருகக் கற்றதின்றுள்ளமென் கரங்கள்

புனலுமாய் மலருங் கொடுநினை பூசை புரிந்தில வென்செய்கோ வுரையாய்

சினவு நோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ் சிலம்புக ணாணவுட் கொள்வோர்

சனனநோய் மருந்தா யெழுந்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (66)

 

இதன் பொருள்:சினவும் நோய் மருந்து வேறு கொண்டு இருக்கும் சிலம்புகள் நாண = வருத்தும் நோய்களுக்கேற்ற மருந்துகளைத் தமக்கு வேறாகக்கொண்டுள்ள மலைகளெல்லாம் நாணமுற்றொழியஉள் கொள்வோர் சனனம் நோய் மருந்து ஆய்எழுந்திடும் சோணசைலனே கைலைநாயகனே = உள்ளத்திற்றியானிப்பவருடைய பிறவி நோயைப் போக்கும் மருந்தாகி யோங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!என் உள்ளம் கனலின் ஊடு அமைத்த இழுது என உருக கற்றது இன்று = என்மனம் அழலினிடையே இருத்திய வெண்ணெய் போலத் (தேவரீர் விஷயமாக) உருகக்கற்றதில்லைஎன் கரங்கள் புனலும் ஆய் மலரும் கொடு நினை பூசை புரிந்தில= என் கைகள் தீர்த்தமும் ஆய்ந்த மலருங்கொண்டு தேவரீரைப் பூசை செய்தில்என்செய்கோ உரையாய் = யான் என் செய்யக் கடவேனோ தேவரீரே கட்டளையிடுவீராக. என்றவாறு.

 

செய்கு தன்மையொருமை வினைமுற்று. கு விகுதி. ஓ வினாவொடு இரக்கம். சினவல் அதனது காரியமாகிய வருத்தலையுணர்த்தி நின்றது. உட்கொள்ளல் - சிந்தித்தல். எளிதிலே நீக்கத்தகும் சாமானிய நோய்களையும் தாமே நீக்குந்தெய்வீகம் தமக்கின்மையால் அந்நோய்களை நீக்கும் சஞ்சீவியாதிமருந்துகளைத் தாம் வேறே கொண்டிருக்கநீங்காத பிறவி நோயையும் இச்சோணசைலம் சிந்தனை மாத்திரத் தானே நீக்குதல்பற்றி மற்றைய மலைகள் நாணுவவாயின என்பது கருத்து.       (66)

 

ஊழுறு மணிப்பொற் கோயில்போய் வாவ லுறக்கொடுத் தாங்குகிற் புணர்த்தாப்

பாழுறு மனம்பேரவாக்குடி யிருப்பப் பண்ணுமென் கண்ணுநண் வையோ

வீழுறு மெயினர் கிழங்ககழ் குழியும் வேழம்வீழ் குழிகளு நிரம்பத்

தாழுறு மருவி பொன் சொரி சோண சைலனே கைலை நாயகனே.         (67)

 

இதன் பொருள்:எயினர் வீழுறும் கிழங்கு அகழ் குழியும் - குறவர்கள் விரும்புங் கிழங்குகளைக் களைந்தெடுத்தகுழிகளும்வேழம் வீழ் குழிகளும் நிரம்ப = யானைகள் வீழும்படி வேடர்களால் அகழ்ந்து வைத்த குழிகளும் நிரம்புதலடை யும்படிதாழுறும் அருவி பொன் சொரி சோணசைலனே கைலை நாயகனே ஒழுகாநின்ற அருவிகள் பொன்னைச்சிந்துகின்ற சோணசைலரே! கைலைநாயகரே!ஊழ் மணி உறும் பொன் கோயில் வாவல் போய் உற கொடுத்து ஆங்கு = வரிசையாக அரதனங்கள் பதிக்கப்பெற்ற பொற்கோயிலை வவால்கள் சென்று வாசஞ்செய்யுமாறு (அவற்றிற்கு) வீடாகக் கொடுத்தாற்போலநின் புணர்த்தா பாழ் உறும் மனம் பேர் அவா குடி இருக்க பண்ணும் என் கண்ணும் கண்ணுவையோ = தேவரீரையிருத்தி வழிபடாது பாழ்பட்டொழியு மனத்தின்கண் பேராசையைக் குடியிருக்கச் செய்யும் கீழ்மையுடைய அடியேனிடத்தும் எழுந்தருளியிருப்பீரோ? (அறியேன்.) என்றவாறு.

 

உம்மை இருத்தவேண்டியமனதில் பேராசைகளைக் குடியேற்றியது தேவரீரை இருத்தவேண்டிய மணிமயமான மந்திரத்தில் வவாலைக் குடியேற்றினது போலும் என்பது திரண்ட பொருள். ஊழ் - வரிசை. சிவிறி விசிறியென எழுத்துமாறுதல் போன்று வாவல் வாலென மாறிவழங்கும். வீழுறும் தாழுறு மென்பன ஒருசொல் நீர்மையன. வீழ்குழியெனக் காரியத் தைக் காரணமாக வுபசரித்தார்.          (67)

 

பைம்மறிப் படுப்பினுள்ளறி யாமற் பணிநறுந் துகில்புனை மடவார்

மெய்ம்மிசைக் கருந்தோல் கண்டுவந் துழலும் வினையினே னுய்யுநா ளுளதோ

செம்மலர்ப் பதம்பா தலங்கடந் திடவான் றிருமுடி கடப்பினு மூவர்தம்மியற் செப்பி னடங்குறுஞ் சோணசைலனே கைலை நாயகனே.                           (68)

 

இதன் பொருள்:செம் மலர் பதம் பாதலம் கடந்திட = செந்தாமரை மலர் போலும் திருவடிகள் பாதலத்தைக் கடந்து செல்லதிருமுடி வான் கடப்பினும் = திருமுடி தேவலோகத்தைக் கடந்து செல்லினும்மூவர் தம் இயல் செப்பின் அடங்குறும் சோணசைலனே கைலைநாயகனே = ஆளுடைய பிள்ளையாராதிய மூவர்களுடைய இலக்கண மமைந்த தேவாரத் திருமுறைகளுக்குள் அடங்கி விளங்கும் அடங்கி விளங்கும் சோணசைலரே! கைலைநாயகரே!பை மறிப்படுப்பின் = பையினை மேனோக்கி மகிழாது திருப்பி அதன் உள்ளமைதியை நோக்குதல் போலபணி நறும் துகில் புனை மடவார் உள் அறியாமல் = ஆபரணங்களும் நல்ல வஸ்திரங்களும் அணிந்த மங்கைய ரகத்தமைந்த இழிவுகளை நோக்குறாமல்மெய் மிசை கரும் தோல் கண்டு உவந்து உழலும் வினையினேன் = (அவ்விழிவு தோற்றாதபடி அழகுதோன்ற) உடலில் மேற்செறிந்த பெரிய தோலினை நோக்கி மகிழ்ந்தலையும் தீவினையேன்உய்யும் நாள் உளதோ = பிழைப்புறுங் காலமும் உண்டாங்கொலோ? (அறியேன்.) என்றவாறு.

 

மறிப்படுப்பு - திருப்பல். *"தோற்போர்வை மேலுந் துளைபலவாய்ப் பொய்ம் மறைக்கு - மீப்போர்வை மாட்சித் துடம்பானான் - மீப்போர்வைபொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப் - பைம்மறியாப் பார்க்கப் படும்'' என்றார் பிறரும். இன் - உவம உருபு. நறுமை - நன்மை. கருமை - பெருமை. † 'பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் - போதார் புனை முடியுமெல்லாப் பொருண்முடிவே" என வியக்கப்பெற்ற திருமேனியேனும்அது மூவர் தேவாரங்களால் இத்தன்மைத்தென மதிக்கப்படுதலின், 'மூவர் செப்பி னடங்குறும்என்றார். அறிவான் மதித்தல் பற்றியே தெய்வப்புலவரும் ("சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் – வகை தெரிவான் கட்டே யுலகு" என்ப துணர்க. செப்பு - சொல். (திசைச்சொல்) இது கருவியாகுபெயர்செய்யுளுக்காகலின். இரட்டுற மொழிதலாய்ச் சிமிழையுணர்த்த லுமறிக. பைம்மறிப்படுத்தியென்னும் பாடத்திற்குபைம்மறி போலாக்கியெனப் பொருள் கொள்க.                                                          (67)

 

*நாலடியார் - தூய்தன்மை - 2

† திருவாசகம் திருவெம்பாவை - 10 

 திருக்குறள் - 27.

 

செக்குறு திலத்தின் வருந்துபு பிறக்குஞ் செல்லலு நாடியின் பிணிப்பு

நெக்குற வறிவு கலங்குசாக் காடு நினைதொறு முளம்பதைக் கின்றேன்

மொய்க்குறு முகில்கண் டரிகரி யென்னு முழக்கமு மரகர வென்னும்

தக்கவர் முழக்கு மெதிரெழுஞ் சோண சைலனே கைலை நாயகனே.

 

இதன் பொருள்:அரி மொய்க்குறும் முகில் கண்டு கரி என்னும் முழக்கமும் -= சிங்கமானது தவழும் மேகத்தினைக்கண்டு இது யானை யென்று கருதி ஒலிக்கும் ஒலியும்தக்கவர் அரகர என்னும் முழக்கும் எதிரெழும் சோணசைலனே கைலைநாயகனே = நற்ற குதியினையுடைய மேலோர் ஹரஹர வென்று துதிக்கு மொலியும் ஒன்றற்கொன்று எதிராக எழப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!செக்கு உறு திலத்தின் வருந்துபு பிறக்கும் செல்லலும் = செக்கிலுற்ற எள்ளினைப்போல (யோனிவாயினெருக்குண்டு) நைந்து உதிக்கும் துன்பமும்நாடியின் பிணிப்பு நெக்குற அறிவு கலங்கு சாக்காடும் - நரம்புகளின் கட்டுக்கள்குலையச் சிந்தனைமயங்குதற்கேதுவாகிய மரணத்துன்பமும்நினை தொறும் உளம் பதைக்கின்றேன் = சிந்திக்குந்தோறும் மனம் துடிப்புறுகின்றனன். (என்செய்வேன்!)  என்றவாறு.

 

கருவினி லுறையுங்கால் எய்தும் கருப்பாசயப்பையுறுத்தல்அதிற்சலம் பூரித்தல்உதராக்கினியால்வேவுதல்பிரசூதவாயு முறித்துத் தள்ளுதல் என்னும் நால்வகைத் துன்பத்தினும் யோனித் துவாரத்தினெருக்குண்டு உதித்தற்றுன்பம் மிகக்கொடிய தென்பார் 'செக்குறுதிலத்தின் வருந்துபு பிறக்குஞ் செல்லல்என்றும்மரணத்துன்பம் அதனினும் கொடியதென்பார் 'அறிவுகலங்கு சாக்காடும்என்றும்இவற்றைச் சுருதியாலும் பிரத்தியக்ஷத்தாலும் அறிந்திருத்தலின் இவ்வேதனையை எவ்வாறு கடப்போமென்னும் ஏக்கம் இடையிடையே நிகழாநிற்பதென்பார் 'நினைதொறு முளம்பதைக்கின்றேன்என்றுங் கூறினார். ஒருபால் அரிகரி என்னுமுழக்கமும் ஒருபால் அரகரவென்னு முழக்கமும் இகலி எழுமெனவும் பொருள்பட்டு முரண்டொடையாய் நிற்பதுணர்க. நெக்குற மொய்க்குறு என்பவை ஒருசொல் நீர்மையன. கு சாரியை. ஹ என்னுமெழுத்து முதலில் அகரமும் இடையில் ககரமும் ஆகுமா தலால் அரகர என வந்தது.                      (68)

 

மரணமும் பிறவித் துயருநீங் குறநூல் வாய்ச்சிலம்பிக்கருள் புரிந்த

கருணியென் றுனைவந் தடைந்தனனினிநின் கருத்தினை யின்னதென் றறியேன்

முரணிபம் பரூஉக்கை தலைமிசை யெடுப்ப முழைக்கரும் பாம்பென மணித்தேர்த்

தரணியுள் வெருவி யகன்றிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (69)

 

இதன் பொருள்:முரண் இபம் பரூஉ கை தலைமிசை யெடுப்பவலிமையுடைய யானைகள் தமது பருத்த துதிக்கைகளைத் தலையின்மீது தூக்கமுழை கரும்பாம்பு என = அளையினின்றெழும் கரும்பாம்பென அச்சுற்றுமணி தேர் தரணி உள் வெருவி அகன்றிடும் சோணசைலனே கைலைநாயகனே= மணிகசிதமான தேரினையுடைய சூரியன் மனமருண்டு நீங்கப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!வாய் நூல் சிலம்பிக்கு மரணமும் பிறவி துயரும் நீங்குற = வாயினால் நுண்ணூலிழைக்கும் சிலக்திப்பூச்சிக்கு இறப்புத் துன்பமும் பிறப்புத் துன்பமும் ஒழியஅருள் புரிந்த கருணி என்று வந்து உனை அடைந்தனன் = கிருபை பாலித்த காருணிய சொரூபியென்று கருதிவந்து தேவரீரை அணுகினேன்இனி நின் கருத்தினை இன்னது என்று அறியேன் இனி உமது திருவுளக்குறிப்பை இத்தன்மையதென உணரேன். என்றவாறு.

 

சிலம்பிக்கருளியது சீகாளத்தியிலும் திருவானைக்காவிலும்சிலம்பிக் கென்புழி கருணையைவிசேடிக்கும் உயர் ஏசிறப்பும்மை தொக்கது. கருணி - கருணை யுடையவன்இது வட நூன்முடிபு. கருத்தாவது – பிறப்பிறப்பைக் கடப்பித்தல் வேண்டுமென்பதும் அல்லது அவற்றில் உழல்வித்தல் வேண்டு மென்ப துமாகிய திருவுள்ளக்கிடை. பரு பரூஉ வென இன்னிசையளபெடையாய் நின்றது. இராகுவென்னுங் கரும்பாம்பு திங்களையும் கேதுவென்னுஞ் செம்பாம்பு ஞாயிற்றினையும் பற்றுவதாகவும் இனம்பற்றி இதுவும் வருத்த வந்ததோ வென்னும் அச்சத்தால் வெருவினானென்க. தரணி - சூரியன்.              (69)

 

 

 

 

அங்கையின் வைத்த கூர்ங்கனன் மழுவா லருவினைக் காடற வெறிந்து

மங்கலில் பத்தி வித்திட வடியேன் மனத்தினைத் திருத்துநா ளுளதோ

பொங்குறு செக்கர் கருவிசும் புறவேள் புரத்தெரி கதுவிட நோக்கித்

தங்குத லொப்ப நின்றிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.               (70)

 

இதன் பொருள்:வேள் புரத்து எரி கதுவிட நோக்கி தங்குதல் ஒப்பமன்மதனது சரீரத்தில் அக்கினி பற்றும்படி நோக்கி யமர்தல் போலபொங்குறு செக்கர் கரு விசும்பு உற = அதிகரித்த செவ்வானம் கரிய ஆகாயத்திற்பொருந்த (அதற்கெதிரில்)நின்றிடும் சோண சைலனே கைலைநாயகனே = அமர்ந்தருளும் சோணசைலாரே! கைலைநாயகரே!மங்கலில் பத்தி வித்திட = குன்றுதலில்லாத அன்பென்னும் வித்தினை விதைத்தற்பொருட்டுஅங்கையின் வைத்த கூர் கனல் மழுவால் அரு வினை காடு அற எறிந்து = தேவரீர் அகங்கையிற்கொண்ட கூரிய அனல்வடிவான பரசாயுதத்தால் கொடிய வினைக்காடுகளைப் பற்றறவெட்டி யெறிந்துஅடியேன் மனத்தினை திருத்தும் நாள் உளதோ = அடிமைப்பட்ட எனது மனப்புலத்தினைத் திருத்தமாக்கும் நாளும் உண்டோ? (அறியேன்.) என்றவாறு.

 

பத்தியை வித்தென்றதற் கிணங்க மனத்தைப் புலமென்னாமையின் ஏகதேச வுருவகம். நல்வினை சுவர்க்காதி யின்பங்களையும்தீவினை நரகாதி துன்பங்களையும் பயப்பனவாய் ஞானத்தைத் தடுத்துப் பந்தமுறுத்தலில் பொன்விலங்கும் இருப்புவிலபது அடக்கும் ஐம்புலனும்விரிக்கும் மூது அறிவும் - நற்றுனும் நல் இனமும் - வாழ்தற்குரிய அன்பர் கூட்டமும்நீத்து அகன்று இருக்கும் வெம் கயவர் இனமும் - அகன்று நீக்கத்தக்க செய்து அருள்வாய் - எக்காலத்திலெனக்கருளித் தமிக்கும் போல்வனவாகலின் இருவினையும் பிறப்பிற்கு ஏதுவாதல் பற்றிப் பொதுப்பட அருவினை என்றார். அருமை – ஈண்டுக் கொடுமை. கரியவாகாயம் கருநிறம்பெற்ற மன்மதனுக்கும் செக்கர் அவனுடலிற் பற்றிய அக்கினிக்கும் சோணசைலம் அவனெதிரினின்றருளிய சிவபெருமானுக்கும் ஒப்பாக்கியவாறு. விசும்பு - மேகமண்டலமுமாம்.                          (70)

 

சுருக்குமைம் புலனும் விரிக்குமூ தறிவுந் துன்னுநல் லினமுநீத் தகன்றே

யிருக்கும்வெங் கயவ ரினமுமென் றருளி யென்னைநின் னடிமைசெய் தருள்வாய்

முருக்குமங் கதமா மணியுமிழ்ந் தகன்ற முழைத மற் றெனவுளம் வெருவித்

தருக்குமொண் புலிசென் அறமருள் சோண சைலனே கைலை நாயகனே.   (71)

 

இதன் பொருள்:அங்கதம் முருக்கும் மா மணி உமிழ்ந்து அகன்ற முழை = பாம்புகள் (இருளைக்) கெடுக்கும் ஒளிவாய்ந்த பெரிய மணிகளைக் கக்கிச்சென்ற குகைகளைதழற்று என உளம் வெருவி = அம்மணியி னொளிகண்டு இது தழலுடையதென மனம் பயந்துதருக்கும் ஒண் புலி சென்று உற மருள் சோணசைலனே கைலைநாயகனே= செருக்கிய அழகிய புலிகள் (அம்மலை முழையிற்) சென்றிருத்தற்கு மருண்டு ஓடும் சோண சைலரே! கைலைநாயகரோ!சுருக்கும் ஐம்புலனும் = (விடயங்களிற் செல்றைகளில் விரித்துச் செலுத்தக்கூடிய உயரிய உணர்வும், துன்னும் நல் இனமும் = வாழ்தற்குரிய அன்பர் கூட்டமும், நீத்து அகன்று இருக்கும் வெம் கயவர் இனமும் = அகன்று நீக்கத்தக்க வெவ்விய கீழ்மக்கட் கூட்டமும்என்று அருளி என்னை நின் அடிமை செய்து அருள்வாய் = எக்காலத்திலெனக்கருளித் தமியேனை உமது திருவடிகளுக்கு அடிமையாக்கிக் கொண்டருள்வீர்? (கட்டளையிடவேண்டும்.) என்றவாறு.

 

ஐம்புலச்சுருக்கமும் மூதறிவுவிரிவும் நல்லினந்துன்னலும் கயவரினம் நீத்தகன்றிருத்தலும் வேண்டுமென்பார்ஒவ்வொன்றையும் முன்பின்னாக்கிச் சாதுரிய நயந்தோன்ற முரண்டொடையி னுரைத்தனர். ‘நீக்குறுமயல்' ‘நீங்கியநேயத்தவர்என இந்நூலினும், *"இலாதவெண்கோவணத்தான்'' என இங்னமே பிறாண்டும் இவ்வாசிரியர் உரைத்தருள்வதுணர்க. முருக்கும் அங்கதம் - கொல்லும் பாம்பு எனலுமாம். தழற்று – ஒன்றன் படர்க்கைக் குறிப்புவினை முற்று. து - விகுதி.                                                                 (71)

 

[* பிக்ஷாடன நவமணிமாலை – 2.]

 

அந்தரி குமரி யஞ்சலி கௌரி யம்பிகை மனோன்மனி மதங்கி

சுந்தரி யுமையுண் ணாமுலை யெனநின் றுணைவியை வாழ்த்துமா றருளாய்

வந்தரி சுருதி மருங்கினிற் பாட வயங்குதும் புருவுநா ரதனும்

தந்திரி யிசையாழ் பாடுறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (72)

 

இதன் பொருள்:அரி மருங்கினில் வந்து சுருதி பாட = வண்டுகள் அருகணைந்து சுதிபாட (அச்சுதியைத் தழுவிக்கொண்டு)வயங்கு தும்புருவும் நாரதனும் தந்திரி யாழ் இசை பாடுறும் சோணசைலனே கைலைநாயகனே = கீர்த்திவாய்ந்த தும்புருவும் நாரதரும் நரம்புகளோடு கூடிய யாழினைக்கொண்டு இசைபாடிப்பரவும் சோணசைலரே! கைலைநாயகரே!அந்தரி = மேலான முத்தி நாட்டினையுடையவளே!குமரி = யௌவனமுடையவளே!அஞ்சலி = (சரணம்புக்க அடியவர்கட்கு) அபயந்தருபவளே!கௌரி = சொர்ணமேனியளே!அம்பிகை உலகுக்குத்தாயே!மனோன்மனி = மனாதீதமானவளே!மதங்கி = இசைபாடியமரும் திருக்கோலத்தவளே!சுந்தரி = நல்லழகினை யுடையவளே!உமை = காப்பவளே!உண்ணாமுலை = அபீதகுசத்தவளே!என நின் துணைவியை வாழ்த்தும் ஆறு அருளாய் – என்று தேவரீருடைய துணைவியாராகிய அம்பிகையை வாழ்த்தும்படி அருள்வீராக.  என்றவாறு.

 

கௌரி - வெண்ணிறத்தளுமாம். கௌரம் - பொன்மைவெண்மை. திருவருட் சொரூபியாகிய தேவியைவழிபடாது தேவரீரையேவழிபட்டுப் பேரின்பமெய்திய பிருங்கி முனிவரைப்போலும் ஆற்றலெய்தப்பெறாதார் அத்திருவருட்சத்தியானே தேவரீரை அடையப்பெறுத லியல்பாகலின் ஏனைப்பேறுகளோடு அச்சத்திவழிபாடும் எளியேற்குவேண்டுமென்பார், 'துணைவியை வாழ்த்துமா றருளாய்என்றார். அரி - வண்டுசுருதி - சுதி. நாரதர் முனிசிரேஷ்டரோனும் மிகமுயன்று நெடுநாட்பயின்று தும்புருவோடு இசையிலொத்தா ராகலின்அச்சிறப்புத்தோன்நத் தும்புருவை முற்கூறுவர்.                                                       (72)

 

 

நீக்குறு மயலு நிலைத்தபே ரறிவு நின்றிரு வடிமலரக் கன்பு

காக்குறு மனமு முடையமெய்த் தொண்டர் கணத்தினு ளெனை விடுத் தருளாய்

தேக்குறு மிறாலிற் கன்னல்காட் டுவபோற் றென்றல்வந் தசைதொறு மெல்லத்

தாக்குறு காந்த டுடுப்பலர் சோண சைலனே கைலை நாயகனே.                   (73)

 

இதன் பொருள்:தேக்கு உறும் இறாலில் கன்னல் காட்டுவபோல் = (தேன்) நிரம்புதலுள்ள கூடாகியவட்டத்தில் நாழிகையைக் காட்டுக் குறிப்பினைப்போலதென்றல் வந்து அசைதொறும் மெல்ல தாக்குறு காந்தள் = தென்றற்காற்று வந்து வீசுந்தோனும் மெல்ல மோதும் காந்தள் மொட்டானதுதுடுப்பு அலர் சோண சைலனே கைலைநாயகனே = துடுப்பென இதழ்கள் விரியப்பெறும் சோண சைலரே! கைலைநாயகரே!நீக்குறும் மயலும் = நீக்கும் மயலினையும்நிலைத்த பேர் அறிவும் = திடம் பெற்ற மிக்கவுணர்வினையும்நின் திருவடி மலர்க்கு அன்பு காக்குறும் மனமும்தேவரீருடைய திருவடித் தாமரைகளில் அன்பு அமையச் செய்யும் சித்தத்தையும்உடைய மெய் தொண்டர் கணத்தினுள் எனை விடுத்து அருளாய் = உடையவராகிய உண்மையடியவர் கூட்டத்திலே தாழ்ந்த அடியேனை யும் சேர்த்தருள்வீராக.  என்றவாறு.

 

சிவபெருமானை வழிபட்டு அடையும் பேற்றினை அவரடியவரை வழிபட்டும் அடையலாமென்பது திருநீலகண்டயாழ்ப் பாணநாயனார் அப்பூதியடிகணாயனார் பெருமிழலைக்குறும்ப நாயனாராதியோரால் வெளிப்படுதலின், 'தொண்டர்கணத்தினு

ளெனை விடுத்தருளாய்என்றார். தொண்டர் தந்தொண்டாய்தும் பேற்றினை *"வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனனம்புக் - கிளையார் தனங்கண் டிரங்கியில் லாரிப் பிறப்பினில் வந் - தளையார் நாகினுக் கென்கட வார்பொன் னலர்ந்தகொன்றைத் - தளையா னிடைமரு தன்னடி யாரம் சார்ந்தவரே." என்பதனா னுமுணர்க. நீக்குறுமயல் - மயலினீக்கம். மலர்க்கு வேற்றுமை மயக்கம். தேக்கு - நிறைவு. தேக்கமாத்துற்ற இறால்அல்லது தேன்செறிந்த குறிய இறால் எனப் பிரித்தலும் உண்டு. நாழிகையை அறிந்து கோடற்கு அக்காலத்தில் அமைத்து வழங்

கப்பட்டதொரு இயந்திரத்தைச் சுட்டி வர்ணித்தபடி. உவமை காந்தளரும்பு தாக்குதலளவிற்கேமலர்தற்கின்று. அன்றிஇப்பொழுது வழங்கும் கடிகாரம் இந்நூலாசிரியர் காலத்தே புதிதாகப்போந்து இந்நாட்டிலே உலவத் தொடங் கிற்றாகலின்இதுநோக்கியுரைத்ததொரு கற்பனையெனக்கொண்டுவெள்ளிய தேன் கூடு கடிகாரக்கருவிக்கும்அதில் மெல்லத்தாக்கும் காந்தள் மொட்டு மெல்லப் புடைபெயரும் நிலைமுள்ளுக்கும்அதில் முறுக்குடைந்து துடுப்பெனவிரியுந் தனியிதழ் விரைந்துலவு முள்ளுக்கும்தாக்குதலோசை அதெனாலிக்கும் ஒருபுடை உவமித்ததென்னலுமொன்று.                                             (73)

 

[*திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 21.]

 

பவமிலே மினியா மென்றிறு மாந்து பயமற விருங்திடப் பத்தி

நவமிலே மடியே மென்செய்வா னிருந்து நாளினை வறிதொழிக் கின்றே

மவமிலே மிமையா விழியினாற் காண்கை யால்வலங் கொளவடி நிலந்தோய்

தவமிலே மெனவான் சுரர்தொழுஞ் சோணசைலனே கைலை நாயகனே.         (74)

இதன் பொருள்:இமையா விழியினால் காண்கையால் அவமிலேம் இமையா நாட்டத்தாற் றரிசிக்கப்பெறுதலின் வீண்செய்கையில்லேம்வலம் கொள அடி நிலம் தோய் தவமிலேம் என = (ஆனால்,) பிரதக்ஷிணஞ் செய்யமாத்திரம் பாதங்கள் பூமியிற்றோயப் பெறும் தவமொன்றுஞ் செய்திலேமென்றுவான் சுரர் தொழும் சோணசைலனே கைலைநாயகனே = சுவர்க்கத்துறையும் தேவர்கள் (வருந்தித்) தொழப்பெறுஞ் சோண சைலரே! கைலைநாயகரே!யாம் இனி பவம் இலேம் என்று இறுமாந்து பயம் அற இருந்திட = யாம் இனிப்பிறத்தல் இன்மையுடையோமென்று இறுமாப்படைந்து அச்சமற்றிருத்தற்குபத்தி தவம் இலேம் அன்பாகிய புதுமை இல்லாதவராயினேம்என் செய்வான் இருந்து நாளினை வறிது ஒழிக்கின்றேம் = யாதுபலன் ஈட்டுதற்கோ இந்நிலவுலகினிருந்து நாட்களை வாளா போக்குகின்றனம் (அந்தோ!) என்றவாறு.

 

முளைத்தற்கரிய எனது பாறைமனத்தே பத்திமுளைக்கப்பெறுவது புதுமைஅப்புதுமைபெறின் பிறப்பைக்கடக்கலாமென்பார், ‘பவமிலேமென்றிருந்திடப் பத்திநவமிலேம், என்றும், அதுபெறாக்கால் காலக்கழிவேயன்றி ஈட்டும்பலன் சிறிதுமின்றென்பார், ‘என்செய்வானிருந்து நாளினைவறிதொழிக்கின்றேம்’ என்றும்கண்களாற்கதுவப்பெறாத கடவுளைக் கண்களார இமையாவிழியாற் காணப் பெறுதலும் கால் நிலந்தோய வலம் வருதலுமே தவமும்அங்ஙனம்பெறாமையே அவமுமாகலின்காணப்பெறுதலிற்றவமும் வலம்வருதலில் அவமுமுடையமென் பார், 'அவமிலேம் தவமிலேம்என்றாரென்றுங் கூறினார்.                         (74)

 

கண்கணிற் பரிந்து கண்டுவப் பனவே கைகணிற் றொழுபவே செவிகள்

பண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே பதநினை வலம்புரி வனவே

யெண்குபுற் றிடப்ப வெழுமணி கரவா விருந்து சென் றிருள்கவர் வனபோற்

றண்கதிர்க் கற்றை கான்றிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (75)

 

இதன் பொருள்:எண்கு புற்று இடப்ப எழும் மணி =டிகள் புற்றினைத் தோண்டு தலால் அப்புற்றிலிருந்து வெளிப்படும் அரவின் மணிகள்கரவா இருந்து சென்று இருள் கவர்வன போல் ஒளித்திருந்து வெளிவந்து இருளைக் கவர்கின்றனபோல்தண் கதிர் கற்றை கான்றிடும் சோணசைலனே கைலை நாயகனே குளிர்ந்த கிரணக் கூட்டங்களை வீசப்பெறும் சோணசைலரே! கைலைநாயகரே!கண்கள் பரிந்து நின் கண்டு உவப்பனவே எனது நேத்திரங்கள் தேவரீரை விரும்பித் தரிசித்து மகிழத்தக்கவைகளேகைகள் நின் தொழுபவே = கரங்கள் உம்மை வணங்கத்தக்கவைகளேசெவிகள் பண்களில் புகழும் புகழ்ச்சி கேட்பனவே = காதுகள் (அடியவர்களால்) பண்களோடு புகழ்ந்து துதிக்கப்படும் கீர்த்திகளைக் கேட்கத்தக்கவைகளேபதம் நினைவலம் புரிவனவே = கால்கள் உம்மை வலம்புரியத் தக்கவைகளே (ஆகையால் ஆண்டருள்வீராக.)  என்றவாறு.

 

ஏகாரம்நான்கும் பிரிநிலைவேறொன்றும் செய்யத்தக்கன வல்லவெனப் பொருள் படுதலின். இருள் கவர்வனபோற் கதிர்க் கற்றை காலுதலாவது - இருட்செறிவுபோலும் கரடியினிறம் தோன்றாதபடி கதிர்பரப்பல்.                   (75)

 

நிணந்திகழ் வடிவேற் காளையே யென்று நேரிழையவர் விழைந் திடுவோர்

குணந்திரி தளிரின் மடியவே கண்டுங் கொடியனேன் வாழ்வுவந் திருந்தேன்

மணந்திமிர் மகளிர் சிலம்பொடு மைந்தர் வார்கழ றுவக்கிட வலம்போய்த்

தணந்திடு மமையத் தறிந்து நாண் சோண சைலனே கைலை நாயகனே.   (76)

 

இதன் பொருள்:மணம் திமிர் மகளிர் சிலம்பொடு = களபமணிந்த மங்கையர்களின் காற்சிலம்பினோடுமைந்தர் வார் கழல் துவக் இட = ஆடவர்கள் (காலிற்கட்டிய) பெரிய வீரக்கழல் மாட்டிக் கொள்ள (அதனை அறியா தாராகி)வலம் போய் தணந்திடும் அமையத்து அறிந்து நாண் சோணசைலனே கைலைநாயகனேபிரதக்ஷிணமாகச் சென்று தமதிடஞ்செல்லப் பிரியுஞ்சமயத் துணர்ந்து நாணிநிற்கப் பெறுஞ் சோணசைலரே! கைலைநாயகரே!நிணம் திகழ் வடி வேல் காளையே என்று = ஊன் செறிந்த கூரிய வேலேந்திய இளம்பருவ முடைய முருகக்கடவுளே இவரென்றுநேர் இழையவர் விழைந்திடுவோர் = தக்க பூண்களையணிந்த மங்கையர்களால் விரும்பப்படுவோராகிய ஆடவர்கள்குணம் திரி தளிரின் மடிய கண்டும் = தன்மைமாறிய தளிர் போல (யௌவனாதிகள்மாற முதிர்ந்தவராய்) இறந்தொழிவதைப் பிரத்தியக்ஷமாகநோக்கியும்கொடியனேன் வாழ்வு உவந்து இருந்தேன் = கொடியேனாகியயான் இத்தகைய வாழ்வை நல்வாழ்வெனக் களித்திருந்தனன் (இஃதென்ன அறியாமை.) என்றவாறு.

 

தளிரெனப்பெயர் பெற்ற வொன்றே இலை பழுப்பு சருகெனப் பெயர்மாறி மடிதல்போலமுன்னர்ப் பாலரெனப் பெயர் பெற்ற அழகினரும் குமாரர் தருணர் விருத்தரெனப் பெயர் பெற்று மடிவரென்று இளமையாதிகளின் நிலையாமையை யும்தணந்திடுமமையத் தறிந்து என்றமையின், சிலம்புங்கழலும் துவக்குண்டது முன்னரறியாமை சனநெருக்கத்தாலென்று வழிபடுவோர் மிகுதியையும் விதந்தபடி. ஏகாரமிரண்டும் முறையே தேற்றமும் அசையுமாம். விழைந்திடுவோர் என்பது *"செயப்படு பொருளைச் செய்தது போலத்தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே” என்ற சூத்திரவிதியால் படு விகுதியும் வாழ் வென்புழி இழித்தற்பொருள் பயக்கும் இகரச்சுட்டும் தொக்கன. உம்மை இழிவுசிறப்பு. கழல் அரவின்படம்போல மைந்து கொக்கிபோன்றிருத்தலின் துவக்குங்கருவியாயிற்று. வார்கழல் – கச்சா லிறுக்கப்படுங் கழலுமாம்.                                               (76)

 

[* தொல்காப்பியம் சொல் - 246.]

 

மாந்தளிர் கவற்று மணிச்சிலம் படிகள் வடுவகிர் பொருவும்வா ணெடுங்கண்

காந்தளி னிமைக்கு மங்கையென் றவலக் கன்னியர்ப் புகழ்வினை யறுமோ

பூந்திரை சுருட்டுங் கடல்கடை குரொண் பொறியர வின்றிமா தவர்க்குச்

சாந்துய ரகற்று மருந்தருள் சோண சைலனே கைலை நாயகனே.         (77)

 

இதன் பொருள்:பூ திரை சுருட்டும் கடல் = பொலிவுபெற்ற அலைகளை மடக்கிவீசுஞ் சமுத்திரமும்கடைகுநர் = அதனில் மத்திட்டுக் கடைகுகரும்ஒள் பொறி அரவு இன்றி அழகமைந்த துத்திகளையுடைய பாம்பும் (ஆகிய இவைகள்) இல்லாமலேமாதவர்க்கு சாம் துயர் அகற்றும் மருந்து அருள் சோண சைலனே கைலைநாயகனே = தம்மையடைந்த தவத்தினருக்கு மரணத்துன்பத்தை யொழிக்கும் மருந்தினைத் தந்தருளுகின்ற சோணசைலரே! கைலைநாயகரே!மணி சிலம்பு அடிகள் மாந்தளிர் சுவற்றும் என்று= மணிகசிதமான சிலம்பணிந்த கால்கள் தேமாந்தளிரினையுங் கவலச்செய்யுமெனவும்வாள் நெடும் கண் வடு வகிர் பொருவும் என்று = ஒளிபெற்ற நீண்டகண்கள் மாம்பிஞ்சின் பிளப்பினை நிகர்க்குமெனவும்அங்கை காந்தளின் இமைக்கும் என்று அங்கை காந்தள் மலர்களைப் போலப் பிரகாசிக்குமெனவும்அவலம் கன்னியர் புகழ் வினை அறுமோ = வீணே மங்கையரை வியந்துதிரியும் தீவினை தமியேனை விட்டொ ழியுமோ? (அறியேன்.) என்றவாறு.

 

மேற்கூறியது போலக் குணந்திரிந்து வேறுபடும் அங்கங்களைப் பற்றிக் கன்னியர்களைப் புகழ்வினையறுமோ எனவேஎன்றும் ஓரியல்பினதாகிய நித்தியாநந்தசுகத்தைப் பாலிக்கும் தேவரீரைப்புகழும் நல்வினையுறுமோ என வேண்டினமைதானே போதரும். உபகரணங்களால் தேவர்க்கு அமுதீந்த மந்தரம் போலாது மாதவர்க்குத் தானே தனித்து அதனைத்தரும் இச்சோணசைலம் அதனின் மேம்பாடுடையதெனக் கூறியவாறு. மிர்தத்தையொழிப்பது யாதேனும் அது அமிர் தமாமென்பார் 'சாந்துயரகற்று மருந்துஎன்றார். என்று என்பது மேலிடம்களினுங் கூட்டப்பட்டது.                                                        (77)

 

சிந்தனை கலங்கி யிணைவிழி யிருண்டு செவிகளுஞ் செவிடுபட் டைம்மே

லுந்திட வுயிர்போம் பொழுதுநின் வடிவ முளங்கொளும் பரிசெனக் கருளாய்

மந்தர சைலந் தருவிடங் களத்து வைத்திடத் தினிலிம சைலந்

தந்திடு மமுதை வைத்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (78)

 

இதன் பொருள்:மந்தரம் சைலம் தரு விடம் களத்து வைத்து = மந்தரமலை தந்த காளகூடத்தைக் கண்டத்திலமைத்துஇமம் சைலம் தந்திடும் அமுதை இடத்தினில் வைத்திடும் சோணசைலனே கைலைநாயகனேஇமாசலவரசன் பெற்றருளிய அம்பிகை யாரென்னும் அமுதை வாமபாகத்தி லமைத்தருளுஞ் சோணசைலரே! கைலைநாயகரே!சிந்தனை கலங்கி = சித்தம் பேதித்துஇணை விழி இருண்டு = இரண்டுவிழிகளும் பஞ்சடைந்துசெவிகளும் செவிடுபட்டு = காதுகளிரண்டும் செவிடாகிஐ மேல் உந்திட = கோழை மேலேறி வாயாற்பாயஉயிர் போம் பொழுது = உயிர் இவ்வுடலினின்றும் நீங்குங்காலத்தில், நின்வடிவம் உளம் கொளும் பரிசு எனக்கு அருளாய் = தேவரீருடைய திருவுருவத்தை மனத்திற்றியானிக்குந் தன்மையை என்றனக்கருள்வீராக.  என்றவாறு.

 

உடலினை உயிர் துறக்குங்காலத்து இந்திரியாதிகளின் தொழில்களெல்லாம் மங்குமென்பதை *''புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட்டைமே லுந்தி - யலமந்த போதாக ஞ்சேலென் றருள்செய்வான்எனவும், "ஒண்ணுளே யொன்பது வாசல் வைத்தா யொக்க வடைக்கும்போ துணர மாட்டேன்" எனவும் வருவனவற்றானும்சிவகிருபையால் இக்காலத்திற் பயின்றுவந்த பழச்கத்தால ல்லது இறுதிக்காலத்திலே சிவத்தியான வுணர்ச்சி நிகழாதாகலின் அப்பயிற்சி நிலைபெறுமாறு ஆன்றோ ரெல்லாம் பலகாலும் பெருமானைப் பிரார்த்தித்து வேண்டிக்சோட லியல்பென்பதனை, "அங்கத்தை மண்ணுக்காக்கி யார்வத்தை யுனக்கே தந்து - பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச் - சங்கொத்த மேனிச் செல்வாசாதனா ணாயே னுன்னை - யெங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே” என்பதனானும் அறிக. இருமலைகள் தந்த விடத்தையும் அமுதத்தையும் தம்பாற்கொண்டுள்ள ஒரு மலையுருவரெனச் சாதுரி யநயந்தோன்ற நிக்கிரகா நுக்கிரகமுடைமை குறிப்பித்தபடி.                    (78)

 

[*ஆளுடைய பிள்ளை யார் தேவாரம் திருவையாறு - 1.

† ஆளுடையவரசுதேவாரம்திருப்புகலூர் - 1.

‡ ஆளுடையவரசுதேவாரம் பொது - 8.]

 

நயங்கொளு மலரா னின்றிரு வடியை நாடொறு முயிருணுங் கூற்றம் 

பயங்கொள வகலா தருச்சனை புரிந்து பரகதி யடையுநா ளுளதோ 

வயங்கொளும் விடயப் பெரும்பகை கடந்து வானநா டாண்டிட மதிப்போர் 

சயங்கொள வடைதற் கரணமாஞ் சோணசைலனே கைலை நாயகனே.         (79)

 

இதன் பொருள்:வயம் கொளும் விடயம் பெரும் பகை கடந்து = (இதுகாறும் தம்மை) வெற்றிகொண்ட விடயங்களாகிய பெரும் பகைகளை வென்றுவானம் நாடு ஆண்டிட மதிப்டோர் முத்தி நாட்டினை ஆள விரும்பும் ஞானிகள்சயம் சொள அடைதற்கு அரணம் ஆம் சோண சைலனே கைலைநாயகனே அப்பகையினை வெல்வான் அடைதற்குரிய காவலிடமாகிய சோணசைலரே! கைலைநாயகரே!உயிர் உணும் கூற்றம் பயம் கொள் = (காலவரையறை நோக்கி) உயிர் கவரும் இயமன் (என்னைக் கவர்தற்கு) அஞ்சும்படிநாடொறும் அகலாது நின் திருவடியை நயம்கொளும் மலரால் அருச்சனை புரிந்து = தினமும் விட்டு நீங்காமல் தேவரீர் திருவடிகளை நல்ல புஷ்பங்களால் அருச்சித்துபரகதி அடையும் நாள் உளதோ = திருவடிப்பேறாகிய மேம்பட்ட முத்தியைப் பெறுங்கால மும் உண்டோ? (அறியேன்.) என்றவாறு.

 

நயமாவது புழுக்கடி மயிர்சிக்கல் முடங்கல் பழமையாதல் வாடல் முதலிய குற்றங்கலவாது மணமுடைத்தாய் அப்பொழுது அலர்தலுடைமை. பரகதி திருவடிக் கீழ்ப் புக்கிருத்தலென்பதை *"உன்னடிக்கே போதுகின்றேன்'' என்ற அருட்பாவாலறிக. பகைகடிந்து நாடாளவெஃகினார்க்கு மலையாணும் வேண்டுமாகலின் விடயப்பகை கடப்பார்க்கு அரணாக்கினார்.                                              (79)

 

[*ஆளுடையவரசுதேவாரம் திருப்புகலூர்.]

 

பிரம்பொரு கரங்கொண் டடிப்பநந் தீசர் பெருங்கல்வீழ் பாசியி னிமையோர்

சிரம்பொர வொதுங்கி நெருங்குநின் னவையிற் றீயனே னணையுநா ளுளதோ

வரம்பொர வகன்ற விலங்கிலை நெடுவே லமர்த்தகட் கிரிமகளிணைக்குஞ்

சரம்பொர விருந்து விளங்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (80)

 

இதன் பொருள்:அரம் பொர அகன்ற இலங்கு இலை நெடு வேல் அரத்தாற்றேய்த்தலால் விசாலித்ததாய் விளங்கும் இலைவடிவு வாய்ந்த நீண்ட வேலினையும்அமர்த்த கண் கிரிமகள் போரிட்டு வென்ற திருக்கண்களை யுடைய பர்வதவர்த்தனியம்மையின்இணை குஞ்சரம் பொர இருந்து விளங்குறும் சோணசைலனே கைலைநாயகனே = இரண்டு தனங்களாகிய யானைகள் தாக்கப் பெற்று விளங்குஞ் சோணசைலரே கைலைநாயகரே!நந்தீசர் பிரம்பு ஒரு கரம் கொண்டு = நந்திசேசர் பொற்பிரம்பினை ஒரு கரத்திற்றாங்கிஇமையோர் சிரம் பொர அடிப்ப = தேவர்களின் மணிமுடியிற் றாக்குமாறு மோதபெரும் கல் வீழ் பாசியின் ஒதுங்கி நெருங்கும் = பெரியகல் தன்னிடையில் வீழப்பெற்ற பாசியினைப் போல இடைந்து உடனே கூடிக் கொள்ளத் தக்கநின் அவையில் தீயனேன் அணையும் நாள் உளதோ = தேவரீரது அத்தாணிமண்ட்பச் சபையிலே தீவினையேனும் வரப்பெறும் நாளும் உண்டோ? (அறியேன்.) என்றவாறு.

 

சிரம் பொர வொதுங்கல் முடியொடு முடிதாக்க விலகல் என்னலுமொன்று. அமர்த்தல் அதன் காரியமாகிய வெற்றியையுமுணர்த்தி நின்றது. குஞ்சரக்கோட்டினைக் குஞ்சரமென்றார்.                                                         (80)

 

காமரை முனிந்த முனிவரர் புகுமெய்க் கதியிடைப் புகவிடுத் திடினும்

பாமர னிவனென் றிருளினுய்ப்பினுநின் பதமல ரன்றிவே றுளதோ

வாமரை பொருந்து முலகுள குவட்டு மலைகள் போ லாதுணா முலை யாங்

தாமரை பொருந்து மானுள் வாழ் சோண சைலனே கைலை நாயகனே.         (81)

 

இதன் பொருள்:வாம் மரை பொருந்தும் உலகு உள குவட்டு மலைகள் போலாது = தாவிச்செல்லும் மானினங்கள் தம்பாலுறையப்பெற்ற உலகின்கணுள்ள மற்றைச் சிகரமலைகளை நிகராதுஉண்ணாமுலை ஆம் தாமரை பொருந்தும் மானுள் வாழ் சோணசைலனே கைலை நாயகனே உண்ணாமுலையென்னும் தாமரையரும்புகளையுடைய (உமாதேவியாரென்கின்ற) மானுள்ளே வாழா நின்ற சோணசைலரே! கைலைநாயகரே!காமரை முனிந்த முனிவரர் புகும் மெய் கதியிடை புக விடுத்திடினும் = மன்மதரை வெற்றிகொண்ட முனிவர்களடையும் உண்மையாகிய முத்தியிற்சேர்ப்பினும் (அன்றி)இவன் பாமரன் என்று இருளின் உய்ப்பினும் = இவன் அஞ்ஞானியென்று நரகத்திற்செலுத்தினும்நின் பதம் மலர் அன்றி வேறு உளதோ = உமது திருவடித் தாமரைகளையே யல்லாது வேறு கதியுண்டோ? (இல்லை.) என்றவாறு.

 

*"நரகம்புகினு மெள்ளேன் றிருவருளாலே யிருக்கப் பெறின்'' என்றருளினர் மணிவாசகப்பெருமானும் ஆகலின்உடையானையல்லது அடிமைக்கு உறுதுணை யின்மையால் தேவரீர் திருவுளமுவந்து நிறுவிய கதியே சிறியேற்கு உயர்கதியாவ தென்பார், 'கதியிடைப்புகவிடுத்திடினும் இருளினுய்ப்பினும் பதமலரன்றி வேறுள தோஎன்றும்மான்களைப் புறத்தே கொண்டுள்ள ஏனைமலைக்கு மாறுபட நிற்ப தொன்றென்பார் மானுள்வாழ்என்றும் கூறினார். எவராலும் வெலற்கரியனென்னும் பெருமைதோன்றக் காமனென்னாது காமரென்றார். எனவேஅவனையும் வென்ற முனிவர்பெருமை கூறவேண்டாதாயிற்று. துறக்க முதலிய பொய்க்கதிகளை விலக்குதற்கு 'மெய்க்கதி'யென விசேடிக்கப்பட்டது. "ஒருமுலை சுரந்த தீம்பா லுண் புழி மழலைத் தீஞ்சொன் - முருகனுக் கென்றே யீன்ற முதல்விவைத் திருந்த மற்றைத் - திருமுலை வருடு வான்போற் றிரள் புழைக் கரத்தா லுண்ணும் - வரிநுதற் களிற்றின் செந்தா மரை யடி வணங்கு வாமே.” எனவும், 'பன்னிரு கமலக் கையும் பற்பல தொழில் விளைப்பத் - தன்னமர் தாய்மு லைப்பா றான்கள்வா னிருந்துண் ணுங்கால்'' எனவும் கவிகள்வர்ணிக்கினும்வள்ளத்திற் கறந்தளித்தன ரென்பதே புராணசித்தமாகலின் உண்ணாமுலை யெனப்பட்டன என்க. மரை – ஒரு வகைமான். தனங்களென்னும் தாமரையரும்புகளைக்கொண்ட மானென்றது விளங்க வைத்தல். தாமரைபொருந்துமானென்பது தாவும் மரைகள் பொருந்திய தொரு மானெனப் பிறிதொருநயந் தோன்ற நின்றது. தேவியாரை மானெனல் மலையில் வளர்ந்தமையினென்க.

 

§"திருமுகங் கமல மிணைவிழி கமலஞ் செய்யவாய் கமலநித்திலந்தாழ் - வருமுலை கமலந் துணைக்கரங் கமலம் வலம்புரியுந்திபொற் கமலம் - பெருகிய வல்குன் மணித்தடங் கமலம் பிடிநடைத் தாள்களுங் கமல - முருவவட் கவ்வா றாதலி னன்றே யுயர்ந்தது பூவினுட் கமலம்" என்பவாகலின் உறுப்புக்களாகப் பன்னிருதாமரைகளையுடைய உண்ணாமுலையென்னும் மானெனினும் பொருந்தும். 

(81)

திருவாசகம் திருச்சதகம்-

† சங்கர நாராயணர் கோயிற் புராணம் 

‡ சீகாளத்திபுராணம் பாயிரம்.

§ திருத்தணிகைப்புராணம் களவுப்படலம்-43.

 

தொடுக்குமா கமங்க ளெலாஞ்சொலைந் தெழுத்துந் துணிந்தநெஞ் சிருக்கையாற் 

பகையைப்

படைக்கைதா னிருந்து மஞ்சுறு மவர்போற் பகட்டுமா மறலியை வெருவேன்

மடக்குவார் கலாப மயிறுயி லெழுந்து மருவலர் வேங்கைமீ தகவத்

தடக்கைவா ரணங்கள் பிளிறிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (82)

 

இதன் பொருள்:மடக்கு வார் கலாபம் மயில் = வளைக்கத்தக்க நீண்டதோகையினையுடைய மயில்கள்துயில் எழுந்து மரு அலர் வேங்கை மீது அகவ = நித்திரைதெளிந்து மணமலர்களையுடைய வேங்கைமரங்களின் மீதிவர்ந்து அஞ்சிக்கூவும்படிதட கை வாரணங்கள் பிளிறிடும் சோண சைலனே கைலைநாயகனே = பெருமை வாய்ந்த துதிக்கையையுடைய யானைகள் பெருமுழக்கஞ் செய்யுஞ் சோணசைலரே! கைலைநாயகரே!தொடுக்கும் ஆகமங்கள் எலாம் சொல் ஐந்து எழுத்தும்= தேவரீராலருளிச் செய்யப்பட்டுள்ள வேதாகமாதி கலைகளனைத்தும் புகழ்ந்து கூறும் ஸ்ரீ பஞ்சாக்கரங்களையும்துணிந்த நெஞ்சு இருக்கையால் தெளிந்துள்ள மனமென்னுங்கருவி அடியேனிடத் திருத்தலால்படை கை இருந்தும் பகையை அஞ்சுறும் அவர்போல் = தக்க ஆயுதங்கள் கரத்திலிருந்தும் சத்துருக்களை அஞ்சுவார் போலபகடு மா மறலியை வெருவேன் மகிடவாகனனாகிய கரிய இயமனை அஞ்சேன். என்றவாறு.

 

*"அஞ்செழுத்தே யாகமமு மண்ண லருமறையு - மஞ்செழுத்தே யாதிபுரா ணம்மனைத்து - மஞ்செழுத்தேயானந்த தாண்டவமு மாறாறுக்கப்பாலா - மோனந் தவாமுத்தியும்" என்பது நூற்றுணிபாகலின்பஞ்சாக்ஷரம் சிவம் சத்தி ஆன்மா திரோதம் மலம் என்னும் ஐம்பொருளியல்பை விளக்குவனவாய் எவற்றிற்கும் மூலமெனப்படுமென்பார் 'ஆகமங்களெலாஞ் சொலைந் தெழுத்துஎன்றும்"அண்ணன் முதலா மழகாரெழுத்தஞ்சு - மெண்ணி லிராப்பகலற் றின்பத்தே - நண்ணவருளான துசிவத்தை யாக்கு மணுவை - யிருளா னவை தீர வின்று." எனத் துணிந்து முறைப்படி இனிதோதுவாரை அணுகுதற்கும் இயமனும் அவன்றூதரும் அஞ்சுவராக அத்தகைய இயமனையான் அஞ்சுவன் கொலோவென்பார் 'மறலியை யஞ்சேன்என்றும் கூறினார். வேதம் ஆகமம் புராண முதலிய கலைகளனைத்தை யுமே ஆகமப்பிரமாணமென வழங்கலானும், "வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது- நாதனாம நமச்சி வாயவே” என்றற்றொடக்கத்துச் சுருதியுடைமையானும்ஆகமமென்பது வேதாகமாதி கலைகளனைத்தையுஞ் சுட்டிநின்றது. தொடுத்தல் -சொல்லும் பொருளுமமையச் செறித்தல்தொடையென்னும் பெயருடைமையானு முணர்க. ஐந்தெழுத்துமென்பதில் உம்மை இனைத்தென்றறி பொருளில் வந்த முற்றும்மை. §"அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு - மெச்ச மிலவே பொருள்வயி னான" என்பது ஒத்தாகலின் உருபுவிரித்துழியும் பகையை மறலியை என இரண்டனுருபே விரித்தார். படை - படுத்தற்கருவிஅது  கையினின்றும் ஏவப்படு தலின் அஸ்திரமென்றும்கையிலேயே நிலைபெறுதலின் சஸ்திரமென்றும் இருதிற ப்படும். (படுத்தல்-கொல்லுதல்.) பகட்டல் - வெருட்டல்மா - தேகப்பருமை எனலு மாம். தான் - அசை. மின்னற்கோடுடைமை மழைமதமுடைமை கருநிறமுடைமை யாதியவற்றால் யானை மேகம் போலுதலின்அதெனாலியை மேகமுழக்கெனக் கருதி மயில்கள் ஒலித்து ஆடும்படி அது பிளிறுமெனினும் ஒன்றும். தடவென்பது பெருமையுணர்த்தும் உரிச்சொலாதலை ||"தடவுங் கயவு நளியும் பெருமை” என்பதனானும்இயமனும் தூதருமஞ்சுதலை $"இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலா – னயம்வந் தோதவல்லார் தமை நண்ணினால்" என்பதனானும் அறிக.         (82)

 

உண்மை விளக்கம் - 44

† உண்மை விளக்கம் - 42

‡ ஆளுடைய பிள்ளையார் தேவாரம் நமச்சிவாயத் திருப்பதிகம் - 1.

§ தொல்காப்பியம் சொல் - 100. 

||தொல்காப்பியம் சொல் - 320.

நமச்சிவாயத்திருப்பதிகம் - 4.

 

நிந்தியா துடல முழுதுநீ றணிய நேசியா தமலவைந் தெழுத்துஞ்

சிந்தியா துழலு மெனைக்கொடுங் கூற்றென் செய்யுமோ வறிந்திலேன் றமியேன்

வந்தியா வரவ மன்றிடைக் கண்ட மலர்சிலம் படியை மண் ணுணிபோய்ச்

சந்தியா தயர வொளித்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (83)

 

இதன் பொருள்:அரவம் வந்தியா மன்றிடை கண்ட மலர் சிலம்பு அடியை = பதஞ்சலி முனிவர் வழிபட்டுச் சிற்றம்பலத்திலே தரிசிக்கப் பெற்ற வியாபகமான சிலம்பணியணிந்த திருவடிகளைமண் உணிபோய் சந்தியாது அயர ஒளித்திடும் சோண சைலனே கைலைநாயகனே உலகையுண்ட திருமால் வராகவடிவாய்த் தேடிச்சென்று காணப்பெறாது சோர்வடையும்படி மறைத்தருளிய சோணசைலரே! கைலைநாயகரே!உடலம் நிந்தியாது சரீரத்தை இகழ்ந்து விடாமலும், (உடலம்) முழுதும் நீறு அணிய நேசியாது = அச்சரீரமுற்றும் திருநீற்றினைப்பூச அன்புறாமலும்அமலம் ஐந்து எழுத்தும் சிந்தியாது = மலநீக்கம் பெறுதற்கு ஏதுவாகிய பஞ்சாக்கரங்களையும் தியானியாமலும்உழலும் எனை = வாளா அலையுந் தீயேனைகொடும் கூற்று என் செய்யுமோ தமியேன் அறிந்திலேன் = கொடிய இயமன் என் செய்வனோயான் அறிந்திலேன்என்றவாறு.

 

உடலம் மலபாண்டமாய் நிலைபேறின்றி அழிதல்கண்டும் அதனைப் பேணுத லில் அவாவற்றிலேனென்பார் உடலநிந்தியாது’ என்றும்அவ்வியல்புடைய அவ்வுடலம் நீங்கு முன்னரே முத்திக்கு முதற்சாதனமாகிய திருநீற்றை அன்புற்ற ணியப் பெற்றிலேனென்பார் 'உடலமுழுது நீறணியகேசியாதுஎன்றும்*"நல்லவர் தீய ரெனாது நச்சினர் - செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ" என்பதறிந்தும் உச்சரித்திலேனென்பார் 'அமலவைந்தெழுத்துஞ் சிந்தியாதுஎன்றும்இவ்வியல் புடையாரை இயமன் தனது தூதரையேவித் தண்டித்தல் ஒருதலையென்பார் 'கூற்றென் செய்யுமோஎன்றும்திருமால் கற்பாந்தத்திலே எவ்வுலகங்களையும் உயிரையும் தமதுதரத்துட்பொதிந்துபாலகன் போல் அறிதுயிலமர்வரென்பது புராண சித்தமென்பார் 'மண்ணுணிஎன்றும்இத்தகைப் பெருந்தகைமை வாய்ந்தும்இவர் சயனமாகிய ஆதிசேஷாவதாரமெனப்படும் பதஞ்சலி முனிவரது வழிபாடு நோக்கித் தந்திருவடிகளைத் தரிசிப்பித்தருளிச்  செருக்குற்றமையால் இவர்க்கு மறைத்தருளி னரென்பார், 'சந்தியாதயரவொளித்திடும்என்றுங் கூறினார். உடலம் தாப்பிசையாய் நின்றதுதாப்பு இசை - ஊசல் (போல இருமருங்குஞ் செல்வதொரு) சொல். அவமதி யாது திருநீற்றை உடலமுழுது மணியவென ஒருமுடிபாக்கலுமாம். அமலம்பெறுதற் கேதுவாகிய ஐந்தெழுத்தை அமலவைந்தெழுத்தென்றது காரியத்தைக் காரணமாக வுபசரித்தல்வந்தியா வினையெச்சம். மலர் வினைத்தொகை. மண்ணுணி வினைப் பெயர். அரவங்கண்டவடியை மண்ணுணியென்னுமொருசெந்து காணாதயரவெனப் பிறிதொருநயந்தோன்றற்கு மண்ணுணியென்றார். மண் - ஈண்டு உலகின்மேற்று. (83)

 

[*ஆளுடைய பிள்ளையார் தேவாரம் நமச்சிவாயபதிகம் - 4.]

 

மங்கையர் பாரக் கொங்கையங் குவட்டு மதர் விழிக் கடலினு மளகக்

கங்குலி னூடுஞ் சென்றவென் மனத்தைக் கதியிடை நடத்துமா றெளிதோ

செங்கதிர் காலை மாலையுந் தங்கச் சிலம்புள வெனக்கடும் பகலிற்

மங்குற நீடி நின்றிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.                   (84)

 

இதன் பொருள்:காலையும் மாலையும் செங்கதிர் தங்க சிலம்பு உள என = காலையும் மாலையும் சூரியனமர்வதற்கு உதயகிரி அத்தகிரியென்னும் மலைகளிருக்கின்றன எனத்திருவுளங்கொண்டுகடும் பகலில் தங்குற நீடி நின்றிடும் சோணசைலனே கைலைநாயகனே= உச்சிப்போதில் உறைவதற்கே உயர்ந்துநின்ற சோணசைலரே! கைலைநாயகரே!மங்கையர் பாரம் கொங்கை அம்குவட்டும் - பெண்களுடைய கனத்ததனங்களாகிய அழகிய மலைகளிடத்தும்மதர் விழி கடலினும் = களிப்புவாய்ந்த விழிகளாகிய கடல்களின்மாட்டும்அளகம் கங்குலின் ஊடும் = கூந்தலாகிய இருளின கத்தும்சென்ற என் மனத்தை கதியிடை நடத்தும் ஆறு எளிதோ = ஓடியுழலப்பெற்ற எனது மனத்தினை முத்தி நெறியிற் செலுத்துவது எளிதாமோ? (எளிதன்று.) என்றவாறு.

 

சாயாத்தகைமையினாலும் பருமையினாலும் மலை முலைக்கும்குளிர்மை யினாலும் பரப்பினாலும் கடல் கண்களுக்கும்கருமையினாலும் பரவியிருத்தலி னாலும் இருள் கூந்தலுக்கும் உவமையாதலால்அங்னமே உருவகித்தனர். கவளமிருக்கவும் கழைசுளிக்கும் யானைபோலக் கதியிருக்கவும் மலையிலும் கடலிலும் இருளிலும் கண் மூடி ஓடியுழலும் என்மனத்தை நன்னெறிப்படர்வித்தல் அருமையே என்பார் எளிதோஎன்றார். ஊடுஏழனுருபு. சூரியமண்டலம்வரை ஓங்கியுயர்ந்திருத்தலின் உச்சிப் போதிற்றங்குற நீடிகின்றதாகக் கூறியபடி.    (84)

 

கண்டிகைக் கலனே கலனென விழைந்து காயமேலணிந்து வெண் ணீற்றுப்

புண்டரக் குறிசேர் நுதலொடு நினையான் பூசனை புரியுமா றருளாய்

முண்டகச் செழும்பூ வெனவிளக் கெரியு முடிமிசை முத்துமேற் கட்டித்

தண்டிரைக் கங்கை யாறுசேர் சோண சைலனே கைலை நாயகனே.         (85)

 

இதன் பொருள்:செழும் முண்டகம் பூ என விளக்கு எரியும் முடிமிசை= செழுவிய செந்தாமரைமலர் போலக் (கார்த்திகைத்) தீபம்பிரகாசிக்கும் திருமுடிமேல்தண் திரை கங்கை யாறு முத்து மேற்கட்டி சேர் சோண சைலனே கைலைநாயகனே = தண்ணிய அலைகளையுடைய ஆகாயகங்கா நதியானது முத்தாலலங்கரித்த விதானம் போலச் சேர்ந்து விளங்குஞ் சோணசைலரே! கைலை நாபகரே!கண்டிகை கலனே கலன் என விழைந்து காயமேல் அணிந்து = உருத்திராக்க வடத்தையே உயர்ந்த ஆபரணமென விரும்பி உடலிலணிந்துவெண் திரு நீறு புண்டரம் குறி சேர்நுதலொடு = வெள்ளிய விபூதியா லணியப்பெற்ற திரிபுண்டரக் குறியையுடைய நெற்றியினோடு, நினை யான் பூசனை புரியும் ஆறு அருளாய் = தேவரீரை அடியேன் பூசனை செய்யும்படி திருவருள் பாலிப்பீராக. என்றவாறு.

 

சிவவழிபாடுடையார்க்கு இன்றியமையாச் சாதனமாயுள்ளது விபூதியென்பார் ஔவையாரும் *"நீறில்லா நெற்றிபாழ்'' என்றாராகலின்நீறணியப்பட்டே நெற்றி திகழவேண்டுமென்பது தோன்ற, 'நீற்றுக்குறிசேர் நுதலொடுஎன்றும்உடற் பொறை யாய் முடியும் மற்றை ஆபரணங்கள் போலாது உருத்திராக்கவடம் தன்னைப் புனைந்தோரது வினையகற்றுவதாயும்சிவாராதனஞ் செய்வோர்க்குச் சிவபதமளிப் பதாயும்வெயர் வையாதியவற்றால் விபூதி அகலுங்காலத்தும் தானிலவிப் புனைந்தோரது சிவபத்தி மிகுதியை விளக்குவதாயும்இருப்பதென்பது தோன்ற, 'கண்டிகைக்கலனே கலனெனவணிந்துஎன்றுங் கூறினார். ஏகாரம் பிரிநிலைதேற்றமுமாம். புண்டரமாவது பிறைபோல மூன்று இரேகைப்பட அணிவது. மேற்கட்டி - முத்து முதலியவற்றாலமைத்து நீழல் செய்யுமாறு மேலே கட்டப் படுவது. இதில் உவமவுருபு தொக்குகின்றது. வினையகற்றுவதாய்ச் சிவபதமளித்தலை "ஆயிரங் கலனுடம் பனைத்தும் தாங்கினு - மாயிரும் பொறை யலால் வருவ துண்டு கொ - னாயகன் விழிமணி யொன்றோர் நாளுடன் - மீயணிந் திடில்வினை யாவும் வீயுமே." எனவும், பூணாமற் கண்டியினைப் பூசைபுரி வார் பலத்தைக் - காணா ரெனவே கழறுமறை நாணாதே – பூண்டு சிவ பூசைபுரி வார் புகுந்து மேற்புரத்துக் - காண்டிருப்ப ரீசன் கழல்.'' எனவும் வருவனவற்றானுணர்க. 

(85)

*நல்வழி - 24

† சீகாளத்திபுராணம் கன்னியர் சருக்கம் - 57

‡ உருத்திராக்கவிசிட்டம் - 84.

 

நாவினைந் தெழுத்து மந்திர மலாத நவிற்றுவோர் தமையுநீ யிருப்பப்

பாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும் பாமரர் தமையுமென் றொழிவேன்

கோவினம் புரப்பக் குன்றமன் றெடுத்த குன்றமம் பாடகக்குன்றம்

தாவினஞ் சிலையென் றெடுத்திடுஞ் சோணசைலனே கைலை நாயகனே.   (86)

 

இதன் பொருள்:அன்று கோ இனம் புரப்ப குன்றம் எடுத்த குன்றம் அம்பு (என்று) = (இந்திரன் கன்மழை பெய்வித்த) அன்று பசுநிரைகளைக் காக்குமாறு கோவர்த்தனமலையைக் குடையாக எடுத்தருளிய நீலமலை போன்ற கண்ண னையே நமது கணையென்றும்ஆடகம் குன்றம் தாவில் நம் சிலை என்று எடுத்திடும் சோண சைலனே கைலைநாயகனே = சொர்ணமயமாகிய மேருவே கெடுதலற்ற நமதுவில்லென்றும் தாங்கியருளிய சோணசைலரே! கைலைநாயகாரே!ஐந்து எழுத்து மந்திரம் (இருப்ப) அலாத நாவின் நவிற்றுவோர் தமையும் = (சிறந்த) ஸ்ரீபஞ்சாக்கரமந்திரம் இருக்கவும் அதனையுச்சரியாது அஃதல்லா தபிற மந்திரங்களை உச்சரிக்கும் வீணரையும்நீ இருப்ப பா இனம்கொடு புன் மனிதரை புகழும் பாமரர் தரை புகழும் பாமரர் தமையும் (பாடலையேற்றுப் பலனைத்தரத்) தேவரீர் இருக்கவும் பாக்களும் பாவினங்களும் ஆகிய இவற்றால் புல்லிய மனிதரை வாளாபுகழும் அறிவிலிகளையும்என்று ஒழிவேன் = என்று நீங்கி (உமது அடியவர் கூட்டத்துட் புக்கிருப்பேனோ) அறியேன்என்றவாறு.

 

சிவபத்தி விசிட்டமில்லார் தம்மையேயன்றித் தம்மையடைந்தாரையும் கெடு க்கவல்லராகலின்அத்தகையாரை அஞ்சாநிற்பது ஆன்றோரியல்பு;  *"கோணிலா வாளி யஞ்சேன் கூற்றுவன் சீற்ற மஞ்சே - னீணிலா வணியி னானை நினைந்துரைந் துருகி நெக்கு - வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா - வாணலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே" என்றருளினர் திருவாதவூரடிகளும்இருப்பவென்பது முன்னும் கூட்டப்பட்டது. பா - வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பாவென நால்வகைப்படும். இனம் இந்நான்கன் விகற்பமாய்க் குறள் வெண்பா முதற் பலதிறப்படும் என்க. ஒழிதல் - ஈண்டு அதனோடு அதன் காரியமாகிய அடியவர் கூட்டஞ்சேர்தலையும் உணர்த்திநின்றது. திரிபுர தகனகாலத்தில் அம்பு திருமாலும் அதனது ஈர்க்கு வாயுவும் அதனுனி அக்கினியுமாயமையினும் சொரூபம் திருமாலேயாதல்பற்றி அவரையே அம்பென்றார்.                               (86)

[* திருவாசகம் அச்சப்பத்து - 10.]

 

திங்களுங் கதிரு மிலங்கிய மானுந் திகழ்பெரும் பூதமோ ரைந்துங்

கங்குலும் பகலுங் கடந்தநின் வடிவங் கண்டுகண் களிக்குநா ளுளதோ

பொங்குகுங்குலியக் கலயவா ரழலிற் புகையெனச் சரோருகவல்லி

தங்குவண் டெழுபூம் பொய்கைசூழ் சோண சைலனே கைலை நாயகனே.   (87)

 

இதன் பொருள்:பொங்கு குங்குலியம் கலயம் ஆர் அழலில் புகை என = பொலிவுற்ற குங்குலியக்கலயத்தில் அமைந்த அக்கினியிலெழும் புகையினைப் போலசரோருகம் அல்லி தங்கு வண்டு எழு பூ பொய்கை சூழ் சோனை சைலனே கைலைநாயகனே செந்தாமரைமலரின் அகவிதழில் வதியும் கருவண்டுகள் கிளம்பி மேற்செல்லும்படியான மலர்க்குளங்கள் நெருங்கப்பெற்ற சோணசைலாரே! கைலைநாயகாரே!திங்களும் கதிரும் இலங்கு இயமானும் = சோமனும் சூரியனும் துலங்கும் ஆன்மாவும்திகழ் பெரும் பூதம் ஓர் ஐந்தும் = யாவும் தோற்றுதற்குக் காரணமாகிய பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயமென்னும் மாபூதங்களைந்தும்கங்குலும் பகலும் கடந்த = இரவும்பகலும் ஆகிய இப்பகுப்பினைக்கடந்து விளங்கியநின் வடிவம் கண்டு = தேவரீருடைய நிஷ்கள அகண்டாகாரவடிவத்தினைச்சேவித்துகண்களிக்கும் நாள் உளதோ எனது நேத்தி ரங்கள் மகிழ்வுறுங்காலமும் உளதாங்கொலோ? (அறியேன்) என்றவாறு.

 

பிரபஞ்சப் பொருளனைத்தையும் ஈண்டுக் கூறிய திங்களாதிய எண் வகைப் பொருள்களுளடக்கி அவ்வெண்வகையையும் அங்கமாகக் கொண்டது பெருமானு டைய சகளரூபமெனவும்அவ்வெண்வகையையும்அவற்றால் இரவுபகலாய்க் கூறுபடும் காலதத்துவமாதிய வற்றையுங் கடந்து நிற்பது நிஷ்களரூபமெனவும் கூறுவது நூற்றுணிபாகலின்அந்த நிஷ்களரூப தரிசனையை வேண்டிப் பிரார்த்தித்தபடி. திங்களாதிய அங்கமாதலை *"நில நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் - புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்'' என்பதனானுமறிக. இயமானனுமென்புழி னகரம் தொக்குகின்றது. யாவும் திகழ்த ற்குக் காரணமாகிய மாபூதங்களைத் திகழ்பெரும் பூதமென்றது காரியத்தைக் காரணமாக உபசரித்தலாம். திகழ்தல் - (ஈண்டுத்) தோற்றுதல். யாவுமென்பது அவாய் நிலையால்வக்தது. (அவாய்நிலை - ஒருசொல் மற்றொரு சொல்லை அவாவி நிற் ல்.) குங்குலியக்கலயம் தாமரைமலர்களுக்கும் ஆரழல் அகவிதழ்களுக்கும் புகை வண்டுகளுக்கும் உவமித்தபடி.                                              (87)

 

[*திருவாசகம் திருத்தோணோக்கம் - 5.]

 

பொறியெனப் புலன்க ளெனக்கர ணங்கள் பூதங்களெனவிலா தடங்க

வறிவெனத் தமியேற் கொருமொழி யுதவி யருவினைக் குறும்பற வெறியாய்

செறிமுலைக் கரியுஞ் சிற்றிடை யரியுஞ் சேரமா துமைதினங் கட்டுந்

தறியெனக் கவின்பெற் றிலங்குறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (88)

 

இதன் பொருள்:செறிமுலை கரியும் சிறு இடை அரியும் = நெருங்கிய தனங்களாகிய யானைகளையும் சிறிய இடையாகிய சிங்கத்தைபயும்சேர உமை மாது தினம் கட்டும் தறி என சேரும்படி உமாதேவியார் நாடோறும் பிணிக்கப் பெறும் தாணுவென்னும்படிகவின் பெற்று இலங்குறும் சோணசைலனே கைலை நாயகனே = அழகமைந்து திகழும் சோணசைலாரே! கைலைநாயகரே!பொறி என புலன்கள் என கரணங்கள் (என) பூதங்கள் என இலாது = பொறிகளைந்தும் தன்மாத்திரைகளைந்தும் அந்தக்கரணங்கள் நான்கும் பூதங்களைந்துமாகிய இவற்றின் றோற்றமில்லாதுஅடங்க அறிவு என ஒருமொழி தமியேற்கு உதவி = முற்றும் ஞானசொரூபமாகவே (தோற்றும்படி) ஒரு உண்மை வாக்கியத்தைத் துணையற்றவெளியேனுக்கு உபதேசித்துஅருவினை குறும்பு அற எறியாய் = கொடியவினைகளால் விளையுந்தீமைகளை முற்றும் சேதித்தருள்வீராக. என்றவாறு.                                                                   

 

அடங்க அற என்பன முழுதுமென்னும் பொருளன. என மூன்றும் எண்ணி டைச் சொற்கள். இது கரணமென்புழியும் கூட்டப்பட்டது. இனிஇந்திரியாதிகளே ஆன்மாவென மயங்குதலில்லாது அச்சிந்தனை கெட்டொழியஆன்மா அறிவு சொரூபமெனத்துணியுமாறு ஒருமொழியுதவியெனினும் ஒன்றும். யானையாதிய விலங்குக ளணையப் பெறும் மற்றைமலைகள் போலாது அம்பிகையி னவயவங்கள் அனுதினமும் அணையப் பெறுவதென்பார் 'முலைக்கரியும் இடையரியுங் கட்டுந்தறிஎன உருவகித்துக் கூறினார். யானைக் கோட்டினையும் சிங்க விடையினையும் இணையாக வுவமிக்கப்படும் முலையையும் இடையையும் யானைசிங்கங்களென் றது இலக்கணை.                                                            (88)

 

பொன்னிடத் தடைந்த மணியென வடைந்து புண்ணியர்க் கருளுநின் பதங்க

ளென்னிடத் திரும்பினடைந்தசெம் மணிபோ லெய்திய தம்மவோ வியப்பே

மன்னிடக் கடலு ளடங்கும் வெற் பன்றி மலைதரு மருட்பெருங் கடலைத்

தன்னிடத் தடக்கு மலையெனுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (89)

 

இதன் பொருள்:மன்னிட கடலுள் அடங்கும் வெற்பு அன்றி = நிலை பெறச் சமுத்திரத்தினுள்ளே ஒடுங்கிய பிறமலைகளை நிகர்க்காதுமலை தரும் அருள் பெரும் கடலை தன் இடத்து அடக்கும் மலை எனும் சோணசைலனே கைலைநாயகனே = இமையமலை தந்த கிருபைக்கடலாகிய உமாதேவியாரைத் தன்னிடப்பாகத்தி லொடுக்கிக் கொள்ளும் மலையெனவியக்கப்படுஞ் சோணசைலரே! கைலைநாயகரே!பொன் இடத்து அடைந்த செம்மணி என சொர்ணத்தின்பாற்சேர்ந்த செவ்விய அரதனம் ஒப்பபுண்ணியர்க்கு அடைந்து அருளும் நின் பதங்கள் = தரும விருத்தியுடையவர்பாற் சார்ந்து அவர்க்குக் கிருபைபாலிக்கும் தேவரீருடைய திருவடிகள்இரும்பின் அடைந்த செம்மணி போல் = இரும்பின்பாற்சேர்ந்த செவ்விய அரதனம் ஒப்பஎன் இடத்து எய்தியது அம்ம ஓ வியப்பே =- அடியேன்பா லணுகியது வியப்பினும் வியப்பே.  என்றவாறு.             

பொன்னிடத்தடைதற்குரிய செம்மணி இரும்பிலடையாவாறு போலப் புண்ணி யர்பாலடைதற்குரிய திருவடிகள் என்னிடத்தடைவன அல்லவாகவும்அருட்பெருக் காலடைந்தமை வியப்பினும் வியப்பென்பதாம். அம்ம ஓ என அடுக்கிய இடைச் சொற்கள் வியப்பின் மிகுதிப்பொருள்பட நின்றன. எம்மலையும் கடலின் உள்ளிடத் தடங்குவனவாகஇம்மலை கடலைத் தன்னிடத்தடக்குவதென்றமை முரணணி. இவ்வணி இந்நூலில் மிக்கிருத்தலின் இவ்வாறு முன்னும் பின்னும் முரணத்தொடு த்தன வெல்லாங் கொள்க. எல்லையிறந்த கருணைப்பெருக்கினரென்பார் தேவி யாரை அருட்பெருங்கடலென்றார்.                                          (89)

 

நீங்கிய நேயத் தவர்க்கறி வரிய நெடியவ னெஞ்சகன் றிடாத

தேங்கிய சோதி மன்றுளா டுவவென் சிந்தையு ணடப்பரின் பதங்க

ளோங்கிய மூங்கிற்றலைமிசை மலர்வீழ்ந் துழுமளி புரியிறான் மருவித்

தாங்கிய வால வட்டநேர் சோண சைலனே கைலைநா யகனே.                   (90)

 

இதன் பொருள்:மலர் வீழ்ந்து உழும் அளி புரி இறால் (தேனைக்கவ) மலரின்கட்படிந்து கிண்டும் வண்டினங்களமைத்த தேனடைஓங்கிய மூங்கில் தலைமிசை மருவி = உயர்ந்து வளர்ந்த மூங்கிலின் உச்சியிலே பொருந்திதாங்கிய ஆலவட்டம் நேர் சோணசைலனே கைலைநாயகனே (அடியவர்கள்) ஏந்திய ஆலவட்டத்தை ஒத்திருக்கப்பெறுஞ் சோணசைலரே! கைலைநாயகாரே!நேயத்து நீங்கிய அவர்க்கு அறிவு அரிய = அன்பினிலகிய அறிவிலிகட்கு அறிதற்கருமையுடையனவும்நெடியவன் நெஞ்சு அகன்றிடாத விஷ்ணுமூர்த்தி யின் உள்ளக் கமலத்தில் விலகாதனவும்சோதி தேங்கிய மன்றுள் ஆடுவ ஒளிய திகரித்த திருச்சிற்றம்பலத்தில் நிருத்தம் புரிவனவுமாகிநின்பதங்கள் என் சிந்தையுள் நடப்ப தேவரீருடைய திருவடிகள் அடியேனது மனத்திலே சஞ்சரிப் பன (ஆதல்வேண்டும்.) என்றவாறு.

 

ஆதல்வேண்டுமென்பது சொல்லெச்சம். திருவடிகள் அறிவரியனவும் அகன்றிடாதனவும் ஆடுவனவும் நடப்பனவுமாகியிருக்கின்றனவெனலும் ஒன்று. இறால் ஆலவட்டத்திற்கும் மூங்கில் காம்புக்கும் உவமை. ஆலவட்டம் – ஆலிலை வடிவாயமைத்ததொரு உபசாரக்கருவி. ஆல இதில் அகரம் சாரியை.         (90)

 

எழுபசும் புல்லும் புனலுமெவ் விடத்து மிருந்திட நினைத்தவவ் விடத்தே

விழைவொடு வந்து தோன்றுநீ யிருப்ப வீணின்மா னுடர்பிறந் துழல்வார்

மொழிதரு கருணை மலையெனும் பெயன் மொழியொரீஇ வேற்றுமைத் தொகை 

யைத்

தழுவுற நின்று வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (91)

 

இதன் பொருள்:மொழிதரு கருணைமலை எனும் பெயர் = (அன்பர்களால்) விதந்துகூறும் கருணைமலையெனப்படும் (தேவரீர்க்குரிய) திருப்பெயரானதுஅன்மொழி ஒரீஇ வேற்றுமைத் தொகையை தழுவுற அன்மொழித்தொகை யென்னும் இலக்கணத்தை விட்டு வேற்றுமைத்தொகையென்னும் இலக்கணத்தைத் தழுவும்படிநின்று வளர்ந்திடும் சோண சைலனே கைலைநாயகனே நிலைபெற்று வளர்ந்தோங்கிய சோணசைலரே! கைலைநாயகரே!புனலும் எழு பசும் புல்லும் எவ்விடத்தும் இருந்திட தீர்த்தமும் அதிற்றோன்றிவளரும் பசிய அறுகும் எவ்வெவ்விடங்களினும் (எளிதிற்கிடைக்க) இருக்கவும்நினைத்த அவ்விடத்தே விழைவொடு வந்து தோன்றும் நீ இருப்ப= தியானித்த அவ்வவ் விடங்கடோறும் காதலோ டெழுந்தருளிவந்து காட்சிதரும் தேவரீர் இருக்கவும்மானுடர் வீணில் பிறந்து உழல்வார் - மனிதர்கள் (அவற்றைக் கொண்டு அபிடேகித்தும் அருச்சித்தும் தேவரீரையடையாமல்) வாளா (இறந்தும்) பிறந்தும் உழல்கின்றனர்! (இஃதென்ன அறியாமையோஅறியேன்.) என்றவாறு.

 

எவ்விடத்துமிருந்திட தோன்று நீ இருப்ப என்பன விரும்பில் பெறற் கெளிமை தோன்ற நின்றன. பிறந்துழல்வரென்றமையின் அதன்றொடர்ச்சியாகிய இறத்தலும் உபலக்ஷணத்தாற் கொள்ளப்படும். கொள்ளவேவழிபாடுடையார் இயமவா தனைக்குரிய ராகி இறந்து பிறந்துழலாரென்பது தானே போதரும். இக்கருத்துப் பற்றியே வாகீசமூர்த்திகளும் *"கற்றுக் கொள்வன வாயுள நாவுள - விட்டுக் கொள்வன பூவுள நீருள - கற்றைச் செஞ்சடை யானுள னாமுளோ - மெற்றுக் கோநம னான்முனிவுண்பதே'' என்றருளினரென்க. உழல்வாரென்பது காலமயக்கம். சிவபெருமானைச் சுட்டி வழங்குங் கருணைமலை என்னும் பெயர் இம்மலைவடிவம் ஆவதன் முன்னர்க் கருணையாகியமலையையுடையவரென்றும்மொழிமாறி மலை போலுங் கருணையையுடையவரென்றும்முறையே பண்புத் தொகைப்புறத்தும் உவமைத்தொகைப்புறத்தும் பிறந்த அன்மொழித்தொகையதாய் நின்றுமலைவடிவ மைந்தபின்னர்க் கருணையையுடையமலையென இரண்டனுருபும் பயனுந்தொக்க தாய் வேற்றுமைத் தொகையைத் தழுவிற்றென்றபடி. தரு - இடவழுவமைதி. ஒருவி என்பது ஈறுகெட்டு இடையுகரமிகரமாய் அளபெடுத்ததுவெருவி என்பது வெரீஇ என்றாயவாறு போல.                                                      (91)

 

[*ஆளுடையவரசு தேவாரம் பொது திருக்குறுந்தொகை – 6]

 

வேணவா வகன்று நின்றிரு வடியின் மெய்ம்மையன் படைந்துபொய்ப் பிறவி

நாணுவா ரினங்கண் டுறும்படி தூய ஞானநாட் டம்பெற வருளாய்

சேணுலா மதியந் தவழ்பெருங் குடுமிச் சிலம்புகள் சிறுதுரும் பாகத்

தாணுவா யெழுந்து வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.           (92)

 

இதன் பொருள்:சேண் உலாம் மதியம் தவழ் பெரும் குடுமி ஆகாயத்திலுலாவும் சந்திரன் ஊர்ந்து செல்லப் பெற்ற பெரிய சிகரங்களையுடையசிலம்புகள் சிறு துரும்பு ஆக = மலைகளெல்லாம் சிறிய திரணமென்று மதிப்பனவாகும்படிதாணுவாய் எழுந்து வளர்ந்திடும் சோணசைலனே கைலைநாயகனே = அக்கினி ஸ்தம்பாகாரமாக ஓங்கியுயர்ந்த சோணசைலரே! கைலைநாயகரே!வேணவா அகன்று = (பிரபஞ்சத்தைப் பற்றியெழும்) வேட்கைப் பெருக்கத்தினீங்கிநின் திருவடியில் மெய்ம்மை அன்பு அடைந்து = தேவரீர் திருவடிகளில் உண்மைநேயம் பொருந்திபொய் பிறவி நாணுவார் இனம் கண்டு உறும்படி = நிலை பேறில்லாத செனனத்தை யடைதலில் நாணி வருந்தும் அன்பர் கூட்டத்தை யறிந்து அவருடன் மருவி வாழும்படிஞானம் நாட்டம் பெற அருளாய் பரிசுத்தமான ஞானக்கண்களை அடியேன் பெறுமாறு தந்தளிப்பீராகஎன்றவாறு.

 

*செய்யுண் மருங்கின் வேட்கை யென்னும் - ஐயெனிறுதியவாமுன் வரினே - மெய்யொடுங் கெடுத லென்மனார் புலவர் - டகார ணகார மாதல் வேண்டும்'' என்பது சூத்திரமாதலால்வேட்கை அவா என்பன வேணவாவென்றாகி வேட்கைப் பெருக்கத்தை யுணர்த்துவதோர் மொழியாய் நின்றன. வேட்கை - பொருண்மேற் றோன்றும் பற்றுள்ளம்அவாஅப்பொருளைப் பெறவேண்டுமென்று மேன்மேனி கழும் ஆசை. வேட்கையும் அவாவும் என உம்மைத் தொகையாகவும்வேட்கையா லுண்டாகிய அவாவென மூன்றனுருபும் பயனுந் தொக்க தொகையாகவும் கொள்வர். காணுதல் ஈண்டு அறிதலின் மேற்று. ஞானநாட்டம் பெற்றாலல்லது உலகிற்கஞ்சி இலைமறைகாய் போல் மறைந்துள்ள சிவஞானியரைக் காண்டலும் அவர் குறிப்பறிந் தொழுகலும் முடியாவாகலின் ஞானநாட்டம் விரும்பினா ரென்க.  (92)

[* தொல்காப்பியம் எழுத்து உயிர்மயங்கியல் - 86.]

 

நின்னையே நோக்கி விடாதகட் புலனு நின்னையே நினைக்குநெஞ் சகமு

நின்னையே துதிக்கு நாவுமென்றருளி நின்றிருவடியின்வைத் தருள்வாய்

தன்னையே றினர்க்குச் சகமெலாங் காட்டுந் தரணியோ டிகலிமே வினர்க்குத்

தன்னையே காட்டு மலையெனுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (93)

 

இதன் பொருள்:தன்னை ஏறினர்க்கு சகம் எலாம் காட்டும் தரணியோடு இகலி = தன்மேல் இவர்ந்தார்க்கு உலகையும் அதன்கட்டோன்றும் பொருள்களையுமேகாட்டும் மலைகளோடு மாறுபட்டு, மேவினர்க்கு தன்னையே காட்டும் மலை எனும் சோணசைலனே கைலைநாயகனே தன்கண்ணடைந் தார்க்குப் (புறப்பொருளொன்றனையுங் காட்டாது) தன்னிலையொன்றுமே காட்டிய ருளும் மலை ஈதென்று அடியவர்கள் துதிக்குஞ் சோணசைலரே! கைலைநாயகரே!நின்னையே நோக்கி விடாத கண் புலனும் தேவரீரையே தரிசித்துக்கொண்டு அதில் விலகாதுள்ள கண்ணிந்திரியமும்நின்னையே நினைக்கும் நெஞ்சகமும் தேவரீரையே தியானிக்கு மனமும்நின்னையே துதிக்கும் நாவும் தேவரீரையே வாழ்த்தும் வாக்கும்என்று அருளிநின் திருவடியின் வைத்து அருள்வாய் = எக்காலம் அளித்தருளி உமது திருவடியின்கண் சேர்த்தருள்வீரோ? (அறியேன்.) என்றவாறு.

 

ஏகாரம் நான்கும் பிரிநிலையோடு தேற்றம். கட்புலனென்பது கண்ணிற்குரிய விஷயத்தை யுணர்த்தாது ஈண்டுக் கண்ணிந் திரியத்தையே உணர்த்திற்று. இம்மையில் திரிகரணங்களையும் உம்முடைய வாக்கிமறுமையில் திருவடிப்பேறு பாலித்தல் வேண்டுமென்பது கருத்து. திருவடிப்பேறே பரமுத்தியாதல் பற்றி வாகீசமூர்த்திகளும் *"சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் - கிறுமாந் திருப்பன் கொலோ" என்றருளினர். தரணி - மலை. தன்னையே காட்டலாவது – பசுநிலை யுணர்வை உண்டாக்கிப் பதிநிலையை அறிவித்தல்.                               (93)

[* தேவாரம் திருவங்கமாலை - 11.]

 

 

 

 

மின்வணங் கவருஞ் செஞ்சடா டவியும் விளங்கொளி மார்பும்வா னுலக

மன்வணங் குறுநின் பதாம்புய மலரு மனங்குடி யிருக்குநா ளுளதோ

பொன்வணம் புரியுங் காகமொன் றினைப்பொற் பொருப்பென வடைபொருளனைத்

துந்

தன்வணம் புரியும் பொருப்பெனுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (94)

 

இதன் பொருள்:பொன் பொருப்பு காகம் ஒன்றினை பொன் வண்ணம் புரியும் எனமேருமலையானது (தன்னையடைந்த) காக்கைப் புள்ளொன்றினையே பொன்னிறமாகச் செய்யும் (இஃதொருவியப்போவியப்பன்று:) என்றுஅடை பொருள் அனைத்தும் தன் வண்ணம் புரியும் பொருப்பு எனும் சோண சைலனே கையை நாயகனே = (தன்னை) அடைந்த பொருளனைத்தினையும் தன் மயமாக்கும் மலையீதென்று அன்பர்கள் கொண்டாடப்பெறுஞ் சோணசைலரே! கைலைநாயகரே!மின் வண்ணம் செம் சடாடவியும் = மின்னலினிறமும் மிகவிரும்பும் செவ்விய சடைக்காடும்விளங்கு ஒளி மார்பும் பிரகாசிக்கின்ற காந்தி பெற்ற திருமார்பும்வான் உலகம் மன் வணங்குறும் நின் பதாம்புயம் மலரும்விண்ணுலகத் தவராலும் மிகவும் வழிபடப் பெறும் தேவரீருடைய திருவடித் தாமரைமலர்களும்மனம் குடி இருக்கும் நாள் உளதோ = அடியேனது உளத்தில் அமர்ந்துறையுங் காலமும் உண்டோ? (அறியேன்.) என்றவாறு.

 

கவர்தல் – வேட்கைப் பெருக்கம். மின்னொளியையும் தன்வயமாக்கும் எனலுமாம். மின்வணம் வானுலகமென்புழி உயர்வு சிறப்பும்மைகள் தொக்கன. உலகம் - இடவாகுபெயர். மன்மிகுதிப் பொருள் தருவதோ ரிடைச்சொல். உம்மைகள் எண்ணின்கணின்ற உயர்வுசிறப்பின. எதிரவைதழீஇயவென ஏனைத் திருவுறுப்புக் களையும் கோடலும் ஒன்றும். வண்ணம் மூன்றும் இடைக்குறைந்தன. சடாடவி பதாம்புயம் வடமொழிச் சந்தி. பொன்னிறத்தவும் கருநிறத்தவுமாகிய பறவைகள் தன் பாலெய்தின் மேருவானது தன்னிறப் பறவைகளை வேற்றுமைப்படுத்தும் ஆற்றலி ன்றிக் கருநிறக்காக்கையொன்றையே தன்னிறத்ததாக்கும்சிவசொரூபமாகிய இச்சோணசைலமோ தன்மயத்தபொருள் ஒன்று மின்மையின்அடைந்த உயிர்ப் பொருளனைத்தையும் தன்மயம் ஆக்காநிற்குமென்பார், 'அடைபொருளனைத்துந் தன் வணம் புரியும்என்றார். இங்ஙனமே பிறரும் *''பொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையு - மன்னுமா லிமைய வரைப்புறஞ் சேர்ந்துழி - யிருதிறப் பறவைக்கு மொருகிற னல்லதை - நிறம்வேறு தெரிப்ப துண்டோ'' என விதந்திருப்பதுணர்க. காகமொன்றினை யென்பது காகமுதலிய வற்றையேயல்லது எவற்றையும் வேற்றுமை செய்யுமாற்றல் உளதன்றென இழித்தற்பொருள்பட நின்றது. அனைத்து மென்பதில் உம்மை முற்றும்மை. தன்வணம்புரிதல் - தற்சொரூபமாக்கல்.       (94)

 

[* சிதம்பர மும்மணிக்கோவை - 4.]

 

குருமணி மகுடம் புனைந்துல காளுங் கொற்றவராதலி னென்கட்

கருமணி யெனுநின் றொண்டர்குற்றேவல் கருதியாட் பட்டிட லினிதே

பெருமணி விசும்பி னுச்சியி னெழுந்த பிள்ளையங் கதிரென வரவந்

தருமணி யொளிவெண் மதியுறுஞ் சோண சைலனே கைலை நாயகனே.   (95)

இதன் பொருள்:பெரு மணி விசும்பின் உச்சியின் எழுந்த = பெரிய கருமையுடைய ஆகாயத்தின் உச்சியிற்றோன்றியஅம் பிள்ளை கதிர் என = அழகிய இளஞ்சூரியனென்று உலகினர் கூறும்படிஅரவம் தரும் மணி ஒளி வெண் மதி உறும் சோணசைலனே கைலைநாயகனே = பாம்புகளுமிழ்ந்த செம்மணிக ளின் காந்திகள் வெள்ளிய சந்திரனிற் படியப்பெறுஞ் சோணசைலரே! கைலை நாயகரே!குரு மணி மகுடம் புனைந்து உலகு ஆளும் கொற்றவர் ஆதலின்நிறமமைந்த அரதனங்கள் பதித்த கிரீடத்தையணிந்து உலகினை ஆட்சிபுரியும் அரசராயிருத்தலினும்என் கண் கரு மணி எனும் நின் தொண்டர் குற்றேவல் எனது கண்களின் கருமணிபோலும் (அருமைவாய்ந்த) தேவரீருடைய அடியவர்க ளின் சிற்றேவலையேகருதி ஆள் பட்டிடல் இனிதே = (பொருளெனக்) கருதி (அவ்வடியவர்கட்கு) அடிமைப்பட்டு வாழுதல் இன்பம் பயத்தலுடையதே. என்றவாறு.

 

கண்ணிற்கருமணி இது நல்லது இது தீயதெனப் பொருள்களை விளக்குமாறு போலஇதுபொய்ப்பொருள் இது மெய்ப்பொருளெனத் தெளிவித்தலின் தொண்டரைக் கண்ணின் மணியென்றார். பெருந்துன்பிற் கேதுவான உலகாட்சியினும் பெருமின்பிற் கேதுமான அடியவர் ஏவலையே பொருளெனக் கொள்ளுதல் இனிமையுடைத் தென்பதனை *"குடைகொண்டிவ்வைய மெலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப் - படைகொண்டிகறெறும் பார்த்திவ ராவதிற் பைம்பொற் கொன்றைத் தொடை கொண்ட வார்சடை யம்பலத் தான்றொண்டர்க் கேவல்செய்துகடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே” என்பதனானுமறிக. அரவச் செம்மணியொளி பாய்தலின் சந்திரன் சிவந்து இளஞ்சூரியனெனவிளங்காநிற்ப னென்பது. மணிவிசும்பு - மணிசொரியும் மேகமுமாம். கொற்றவர் கொற்றமென்னும் பண்படியாகப் பிறந்த பெயர்.                                               (95)

[* கோயினான்மணிமாலை - 2.]

 

சிம்புளாய் மடங்க லெறுழ்வலி கவர்ந்த திறலுமுப்புரஞ்சுடு விறலு

மம்புயா தனத்தன் முடிகளைத் திட்டவடலுமேத் தினர்க்கிட ருளதோ

வும்பர்மா மதியிலங்கையி லிருந்த வுழைகுதித் திருப்பவா ரழல்வான்

றம்பமா யெழுந்து நின்றிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (96)

 

இதன் பொருள்:அம் கையில் இருந்த உழை தேவரீர் திருக்கரத்திலிருந்த மான்கன்றானதுஉம்பர் மா மதியில் குதித்து இருப்ப = ஆகாயத்திலமர்ந்த பூரண சந்திரனிடத்துத் தாவித் தக்கும்படிவான் ஆர் அழல் தம்பம் ஆய் எழுந்து நின்றிடும் சோணசைலனே கைலைநாயகனே = வானளவும் நிரம்பிய அக்கினித் தம்பாகாரமாய் ஓங்கி நிலைபெறுஞ் சோணசைலரே! கைலைநாயகரே!சிம்புளாய் மடங்கல் எறுழ் வலி கவர்ந்த திறலும் - சாபப்புள்வடிவமாய் நாரசிங்கத்தின் மிக்கவன்மையைப் போக்கிய வெற்றியையும்முப்புரம் சுடு விறலும் திரிபுரத் தைத் தகித்த வெற்றியையும்அம்புய ஆதனத்தன் முடி களைந்திட்ட அடலும்தாமரை ஆசனத்தராகிய பிரமதேவரது நடுமுடியைக் கிள்ளிய வெற்றியையும்ஏத்தினர்க்கு இடர் உளதோ = (அன்போடு) துதித்த தொண்டர்கட்குத் துன்பம் உளதாம் கொலோ? (முக்காலத்தும் உளதாகாது.) என்றவாறு.

சிவபெருமான் கொண்ட இருபத்தைந்து மூர்த்தங்களுள் கோரமூர்த்தங்களை இடரொழிவிற்கும்மிசிரமூர்த்தங்களைச் சித்தியெய்தற்கும்சாந்தமூர்த்தங்களைச் சாந்தியெய்தற்கும்வழிபடவேண்டுமென்பது நூற்றுணிபாகலின்ஈண்டுக் கூறிய உக்கிரமூர்த்தங்களின் வெற்றிகளைத் துதிக்கில் இடரெய்தா வென்பார் 'இடருளதோ?' என்றார். இதனை, *"கோரமுடன் மிச்சிரநற்சாந்தமென மூவகையாக் குலவு மண்ண – லேர்பெறு மூர்த் தங்களிவற் றெய்தியவெம் பாவநோ யிரிக்க வேண்டிற் - சீர்மருவுங் கோரத்தைச் சித்தியெய்த வேண்டிடின்மிச் சிரத்தைச் செவ்வே - யார் தருசாந் தியைவேண்டிற் சாந்தத்தைப் பூசனை நன் காற்ற வேண்டும்.'' என்பதனா னுமறிக. மிசிரம் - கோரமும் சாந்தமுங் கலந்தன. சந்திரனிடத்துள்ள களங்கத் தைமுயலென்றும் மானென்றுங்கூறுவது கவிமரபா தலால் சிவபெருமான் தமது கரத்துள்ள மான் தாம்கொள்ளும் அழல்வடி விற்கஞ்சிச் சந்திரனிடத்தமர அவ்வுருக் கொண்டதாக வர்ணித்தனரென்க, "எறுழ் வலியாகும்" என்பது சூத்திரமாகலின்எறுழ் வலி என அடுக்கிய இரண்டும் ஒருபொருட்பன் மொழியாம். சில முடிபில் தொழிற்பெயரே பகுதியாதலு முண்டாகலின் இருப்பவென்பதில் இருப்பு பகுதி யென்க.                                                                 (96)

 

[*வாயுசங்கிதை ஞானயோக முதலியவுரைத்த அத்தியாயம் 53.

† தொல்காப்பியம்சொல், 388.]

 

அஞ்சலென் றவலக் கொடியனேன் றனைநின் யரிற் கூட்டுக வுலகி

னஞ்சமுண் டிருண்ட கண்ட மென் றுனது நற்கள மிகழ்பவ ருளரோ

வஞ்சமைங் கரன் கொண் டிளவலோ டிகலிவலங் கொள்வா தின்னும்வந் துறினும்

தஞ்சமென் றிடாது நின்றிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.         (97)

 

இதன் பொருள்:ஐங்கரன் இளவலோடு இகலி விநாயகக்கடவுள் இளைய பிள்ளையாருடன் மாறுபட்டுவஞ்சம் கொண்டு வலம் கொள் வாது இன்னும் வந்து உறினும் உள்ளே கபடத்தைக் கொண்டு பிரதக்ஷிணஞ் செய்யத் துணியும் வாதம் இன்னமும் ஒருமுறை நேரினும்தஞ்சம் என்றிடாது நின்றிடும் சோணசைலனே கைலைநாயகனே = (வலம் வருதல் முன்போல) எளியதாகு மென்னாதபடி அகன்று பருத்துள்ள சோணசைலரே! கைலைநாயகரே! உனது நல் களம் தேவரீருடைய செவ்விய திருக்கழுத்தைநஞ்சம் உண்டு இருண்ட கண்டம் என்று = விஷத்தையருந்திக் கறுத்த கழுத்து (ஈதென்று)உலகில் இகழ்பவர் உளரோ உலகத்திலே இகழ்ச்சிகூறுவாரும் உண்டோஇல்லை: (அது போலவே அடியேனது சேர்க்கையுடைமை பற்றி அடியவரை இகழ்தல் செய்யா ராகலின்)அவலம் கொடியனேன்றனை நின் அடியரில் கூட்டுக பயனற்றவனா கிய தீயேனையும் உமது திருத் தொண்டர் குழாத்துள்ளே சேர்த்தருள்வீராக. என்றவாறு.

 

கொடிய விடமுடைமைநோக்கி உமது செவ்விய களத்தை இகழாதுஉலகிற்கு அவ்விடத்தினாலெய்தும் இடுக்கணசல அதனை அடக்கி ஆண்டமை பற்றிப் புகழுமாறு போலகொடியேனை யுடைமை நோக்கி உமது செவ்விய அடியவரை இகழாதுஇக்கொடியேனால் உலகிற்கு விளையும் இடுக்கணகல அடக்கி ஆண்டமைபற்றிப் புகழ்வாராகலின்அடியவரிற் கூட்டுகவென்றாரா ரென்பது திரண்டபொருள். உலகைவலம்வந்து முன்னரெய்தினார்க்கே கத்திற்கொண்ட இக் கனியளிப்பமெனப் பெருமானுரைத்தருளலும்அங்ஙனமே முருகக்கடவுள் செல்லுந் தருணத்தில் பெருமானை வலம்வரின் உலகை வலம் வந்ததாமென விநாயகக் கடவுள் மதித்து வலம் வந்து கனிபெற முன்னர்த் துணிந்தாராகலின் 'வஞ்சங் கொண்டுஎன்றும்மலையுருவாகிய இப்பெருமானை வலம்வருதற்குள் அவர் மயிலிலிவர்ந்து உலகையே வலமாய் வந்து விடுவாராதலால்அவ்வஞ்சம் இனிப்பலியாதாகலின் 'தஞ்சமென்றிடாது நின்றிடும்என்றுங் கூறினார். வஞ்சம்- கபடம். தஞ்சம் - எளிமை.                                                 (97)

 

அணிந்திடு கலனுஞ் சாந்துமொண் டுகிலு மரிவையர் போகமும் பெறுவான்

றுணிந்திடு மனமென்றுனைப்பொரு ளாகத் துணியுமோ வறிந்திலேன் றமியேன்

பணிந்திடு மயன்மால் பெருமைக ளனைத்தும் பறவைகொண் டெழுதலாய் முடிந்து

தணிந்திட நிமிர்ந்து நின்றிடுஞ் சோண சைலனே கைலை நாயகனே.        (98)

 

இதன் பொருள்:பணிந்திடும் அயன் மால் பெருமைகள் அனைத்தும் = (பரத்துவமுடையரெனப் பலரால்) வணங்கப்பெறும் பிரமவிட்டுணு மூர்த்திகளுடைய பெருமைகளெல்லாம்பறவை கொண்டு எழுதல் ஆய் முடிந்து தணிந்திட = அன்னமும் கலுழனும் ஏந்திச் செல்ல அமர்பவராகி அவரமைதலால் குறைவெய்தநிமிர்ந்து நின்றிடும் சோணசைலனே கைலைநாயகனே = (அங்ஙனம் ஏந்திச் செல்ல நொய்தாகாமல்) ஓங்கிநிலைபெற்ற சோணசைலரே! கைலைநாயகரே!அணிந்திடு கலனும் சாந்தும் ஒள் துதிலும் அரிவையர் போகமும் பெறுவான் = புனைதற்குரிய ஆபணமும் கலவையும் அழகிய ஆடையும் மங்கையர் போகமும் பெற விரும்பிதுணிந்திடும் மனம் உனை பொருளாக என்று துணியுமோ தமியேன் அறிந்திலேன் = (அவற்றையே பொருளாக) நிச்சயித்துள்ள என் மனமா னது தேவரீரையே பொருளாக எக்காலத்திற் றெளியுமோ! யான் உணர்ந்திலேன்.  என்றவாறு.

 

பொய்ப் பொருள்களை மெய்ப் பொருள்களாகத்துணிந்த என்மனம் அத்துணி வகன்று மெய்ப்பொருளாகிய உம்மையே மெய்ப்பொருளாகத் துணியும் நாளும் உளதோஎன்பார், 'என்று துணியுமோஎன்றும்பிரமவிட்டுணு மூர்த்திகள் எளிய பறவைகளால் ஏந்தப்பெறுதலின் அவர் பெருமை குறைவெய்தினவாக அங்னம் தம்பெருமை குறைவெய்தாதபடி எத்தகைய பொருள்களாலும் ஏந்துதற்கரியதாய் அண்டமுற்றும் ஊடுருவிநின்ற மலையுருவாயினரென்பார், 'நிமிர்ந்துநின்றிடும் சோணசைலன்என்றுங் கூறினார். அன்றியும்சிவபெருமான் திருவுருக் கொண்ட காலத்தும் வாகனமாக ஏனையவற்றைக் கொள்ளாது தருமதேவதையையே கொண்டு விளங்கும் சிறப்புடைமைதோன்ற, *"மாலைக் கலுழனொய் யோனெனத் தாங்க ஏற்றிவர் நோன்மையன்'” எனப் பிறாண்டும் இவ்வாசிரியர் விதந்திருப்பதும் உணர்க. முடிந்து - முடிதலால்வினையெச்சத்திரிபு.                        (98)

 

 

 

பூவுறு தடமு மதியுறு விசும்பும் பூணுறு முறுப்பு நின் றுலகாள் 

கோவுறு நகரு மென்னவென் மனநின் குரைகழன் மருவுநா ளுளதோ 

வோவுறு மனைசெய்பவர்கொள மரந்தாங் கோங்கல்க ணாணவுன் னினர் க்குத் 

தாவுறு முயர்வீ டளித்தருள் சோண சைலனே கைலை நாயகனே.         (99)

 

இதன் பொருள்:ஓவுறும் மனை செய்பவர் கொள = (பந்தத்திற்கு ஏதுவா தல்பற்றி அறிஞரால் வெறுத்து) அகற்றப்படும் வீட்டினைக்கட்டுவோர் கொள்ளுமாறுமரம் தாங்கு ஓங்கல்கள் நாண பலமரங்களைத் தம்மிடங்கொண்டமலைகள் வெட்க முறும்படிஉன்னினர்க்கு தாவுறும் உயர் வீடு அளித்தருள் சோண சைலனே கைலை நாயகனே தன்னைத் தியானித்தவர்க்கு (எல்லாராலும்) விரும்பப்படும் உயர்ந்த முத்திவீட்டினைப் பாலித்தருளுஞ் சோணசைலரே! கைலைநாயகரே!பூ உறு தடமும் = மலர்களையுடைய நிறைகுளமும்மதி உறு விசும்பும் = சந்திரனையுடைய ஆகாயமும்பூண் உறும் உறுப்பும் = அணிகளணிந்துள்ள அவயவங்களும்நின்று உலகு ஆள் கோ உறு நகரும் என்ன = (நீதி நிலை) நின்று உலகினை ஆட்சி செய்யும் அரசனையுடைய நகரமும் போலப் (பொலிவுறுமாறு)என் மனம் நின் குரை கழல் மரு வும் நாள் உளதோ அடியேனது மனம் தேவரீருடைய ஒலி பெற்ற கழலணிந்த திருவடியைப் பெற்று வாழும் காலமும் உண்டாங்கொலோ? (அறியேன்.) என்றவாறு.

[*பழமலையந்தாதி - 15.]

 

தடமும் விசும்பும் உறுப்பும் நகரும் முறையேபூவும் மதியும் அணியும் கோவும் பெற்றாலன்றிப் பயன்பெறாவாறுபோலஎன்மனம் தேவரீர் திருவடிகளைப் பெற்றாலன்றிப் பயனுறாதென்பதூஉம்மற்றையோங்கல்கள் இழிந்தமனையை யளிக்கும் ஆற்றலும் தமக்கின்மையால்அதற்குரிய கருவிகள் பலவற்றுள் மரமொ ன்றையும் வேண்டியோர்கொள்ளத் தாங்கா நிற்பஇச்சோணசைலம் தன்னைச் சிந்தித்த துணையானே உயர்ந்த வீட்டையேயளித்தல் காண்டலின்தாம் நாணுவ ஆயின வென்பதூஉம் கருத்தாகக்கொள்க. கழல் - தானியாகுபெயர். ஓவுறும் தாவுறும் என்பன – செயப்பாட்டு வினைப்பொருளுணர்த்தும் படுவிகுதிகள் தொக்கு நின்றன. பற்றுக்கோடாகாது சின்னாளி லழிந்தொழியும் மனையெனவும்பற்றுக் கோடாய் எந்நாளும் நிலை பெறும் வீடெனவும்இவற்றிற்குப் பொருள் கோடலும் ஒன்று. இங்ஙனங்கொள்ளுங்கால் தாவு - பற்றுக்கோடென்க.

 

சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப்

பேரணி கலமென் புதல்வருங்கதியும் பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ

நேரணி கதியை மறந்தவர் கண்டு நினைந்துற மிக்கபே ரருளாற்

றாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.          (100)

 

இதன் பொருள்:அணி கதியை மறந்தவர் = சிறப்பமைந்த முத்தியென்பது (ஒன்றுண்டென்னும் சிந்தனை யுமில்லாது) அதனை மறந்தவரும்நேர் கண்டு நினைந்து உற = எதிர் கண்டவுடனே அச்சிந்தனையுடையராய்த் தியானித்து அம்முத்தியையடையும்படிமிக்க பெரு அருளால் தாரணி முழுதும் தோன்றிடும் சோணசைலனே கைலைநாயகனே = மிகவோங்கிய திருவருள் விசேடத்தால் உலகமுற்றுங்காண விளங்காநிற்குஞ் சோணசைலரே! கைலைநாயகரே!சீர் அணி புகழும் கல்வியும் சிறந்த செல்வமும் = மேன்மையமைந்த கீர்த்தியும் வித்தையும் (அரசுரிமை முதலிய) மிக்க ஐசுவரியமும்இல்லில் வாழ்பவர்க்கு பெரு அணிகலம் என் புதல்வரும் கதியும் பெற = இல்லறவாழ்க்கையுடையார்க்குப் பெரியதொரு ஆபரணமாகுமென அறிஞரால் விதந்து கூறப்படும் புத்திரப்பேறும் முத்தியும் எய்தும்படிதுதிப்பவர்க்கு அருள்பவன் நீ - உம்மைத் தோத்திரஞ் செய்ப வர்களுக்குத் தந்தளிப்பவர் தேவரீர். என்றவாறு.

 

ஆகவே, *"வேண்டுவார் வேண்டுவதே ஈவான்" என்றபடி வேண்டியவற்றை அளிக்கத் தேவரீர் சித்தமாகவிருந்தும் உம்மைத் துதித்து இத்தகைய பேறுகளை எய்தாமை எம்போலியர் குற்றமன்றி உமது குற்றமாங்கொலோ என்பது இசை யெச்சம் "மங்கல மென்ப மனைமாட்சி மற்றத - னன்கல நன்மக்கட்பேறு '' என்றார் தெய்வப்புலவருமாகலின்புத்திரப் பேறின்றி யக்கால் இல்லறம் பயன்படாதென்பது தோன்ற, 'அணிகல மென்புதல்வர்எனக்கூறினரெனவும், "இகபரந்தந்துலவா வீடுதருவான்" எனப் பேறுகளை இம்மை மறுமை வீடென மூவகைப்படுத்தலுண்டே னும்மறுமை எனப்படும் சுவர்க்காதியின்பங்களும் இம்மையின்பம் போலவே நிலையற்றதாகலின் அதனையொழித்து முத்தியின்பத்தையே மறுமையெனக் கொண்டு இரண்டென்னலும் நூற்றுணிபென்பது தோன்றசுவர்க்காதியின்பத்தை வேறு விதவாராயின ரெனவும்முத்திவேட்கையில்லாரும் காட்சிமாத்திரத்தானே அவ்வேட்கையுடையராய்த் தியானித்து அதனைப்பெறுமாறு நினைக்க முத்தி தருவ தாய் நெடுந்தூரத்தர் கண்களுக்கும் தோற்றக்கொண்ட அருளுருவம் இச்சோணசைல மெனவும் கொள்க. இகபரங்களே கொண்டமையை §”எங்கு மீசனைப் பூசைசெய் திகப மடைவார் '' என்பதனானும்பேறெய்தாமை ஆன்மாக்கள் குறையென்பதனை $"நின்னது குற்ற முளதோ நின்னினை - தெண்ணருங் கோடி யிடர்ப்பகை களைந்து - கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா - விறப்பையும் பிறப்பையு மிகந்து சிறப்பொடு - தேவ ராவின் கன்றெனத் திரியாப் பாவிகடமதே பாவம்" என்பதனா னுமறிக. முத்தியையும் சுவர்க்காதிகளையுஞ்சுட்டப் பொதுப்படக் கதியென்றாரென் னலும் ஒன்று. மறந்தவருமென்னும் உயர்வுசிறப்பும்மை தொக்கது. கதிமறக்தவர் நினைந்து கதியுறவெனமுடிக்க. கதியுமென்பதில் உம்மை உயர்வு சிறப்பு. ஏனை யவை எண்ணுப்பொருளன.                                              (100)

 

[* ஆளுடையவரசுதேவாரம் – திருமறைக்காடு திருத்தாண்டகம் - 1

† திருக்குறள் - 60.

‡ திருவிளை யாடற்புராணம் தலவிசேடப்படலம் - 2.

§ ௸ திருநகரப்படலம் - 89.

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 16.]

 

முற்றிற்று.

Related Content

பிரபுலிங்க லீலை - பகுதி-1 - Prabhulinga leelai - Part-I

பிரபு லிங்கலீலை - பகுதி-2 - Prabulingaleelai - Part-II

பிரபுலிங்கலீலை - மூன்றாம் பகுதி - Third part of Prabhulingal

சித்தாந்த சிகாமணி 2 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம் றிய சித்தாந

கூவப் புராணம் (திருவிற்கோலம்) - ஆசிரியர்: துறைமங்கலம் சிவபிர