காப்பு சீரதங் கோட்டு முனிகேட்ட நூற்படி செங்கநம்பா லேரதங் கோட்டு வயல்சூழ் முதுகுன் றிறையவனைப் பூரதங் கோட்டு மலையானைப் பாடப் புரந்தநளும் பாரதங் கோட்டு நுதியா லெழுதிய பண்ணவனே. - - - - - திருவருந் தங்க வருங்கல்வி மாது சிறப்புவருங் கருவருந் தங்க நிலையாதென் றுள்ளங் கரைந்திறைஞ்சிற் பொருவருந் தங்க மலைபோலுங் குன்றைப் புராதனனை யிருவருந் தங்க டலையா லிறைஞ்சு மிறைவனையே. 1 இறைக்கு வளையு மிளங்கிள் ளையுமழ கென்பவர்சேர் துறைக்கு வளையு மெகினமும் வாவிக்குத் தூயவிதழ் நறைக்கு வளையு மழகா முதுகிரி நாதர்க்கின்றிப் பிறைக்கு வளையு முடல்வந்த வாறென்கொல் பேசுகவே. 2 பேசுக வீர வருநாளென் றொல்லைப் பெருங்கடல்சே ராசுக வீர பழமலை வாணவென் றன்பளைந்து பூசுக வீர மதிவேணி நீற்றைப் புலவிர்பிறர் காசுக வீர வனையுக வீர்மெய்க் கதிதருமே. 3 கதியிலை வேலை மடவார்க் கியற்றக் கருதுளமே பொதியிலை வேலையுண் டுற்றோன் றெழும்பழம் பூதரத்தை நுதியிலை வேலை மகிழ்வீரன் றந்தையை நோக்கிலைநீ யொதியிலை வேலை வளர்ப்பாய் தருவை யொடித்தெறிந்தே. 4 ஒடிய மருங்குலைக் கொங்கைகள் வாட்டுறு மோடரிக்கட் டொடிய மருங்குலைக் காந்தளங் கைம்மள் சோரமதன் கடிய மருங்குலைத் தீப்போன் மதியங் கனன்றெழுத லடிய மருங்குலைச் செய்ம்முது குன்றர்க் கறைகுவமே. 5 மேருக் குவடு நிகர்த்தோட் பழமலை மேவுதிருத் தேருக் குவடு வசமாடு மாடத் தெருவினிற்போய் நீருக் குவடு விழியெழின் மாய்ந்தெதிர் நின்றுநம தூருக் குவடு விளைத்தன னேயின் றொழிவறவே. 6 ஒழியாக் கவலை யொழிவதென் றோசொல் லுழல்புலத்தின் வழியாக் கவலை யிடைப்படு மானின் மயங்கிநின்று பழியாக் கவலை மனமே பணிந்து பரவிலைவேல் விழியாக் கவலை மகளிறை தாழ்பழ வெற்பினையே. 7 வெற்றிக்கு மாரனை யீன்ற பழமலை வேந்தனின்னு முற்றிக்கு மாரனை நோக்குங்கொலோ வென்பர் மூலைவம்புச் சொற்றிக்கு மாரநை வார்மட வாரவன் றோண்முலையோ டொற்றிக்கு மாரனை யோன்முனஞ் சேர வுழலுவரே. 8 உழவரைச் சந்த விளவாளை பாய்வய லோங்குகுன்றைக் கிழவரைச் சந்த தமுநினை வாய்நற் கிளைவளரும் பழவரைச் சந்த நறுந்தழை வாங்கிப் பரவினடூ ளெழவரைச் சந்த மயிலியல் பூசவு மெண்ணினளே. 9 எண்ணிவ ருந்தின நொந்தோம் பழமலை யெய்திலர்கா னண்ணிவ ருந்தின மின்றே யினிக்கதிர் நற்புரவி மண்ணிவ ருந்தின மாவா வெழுந்துகள் வந்துடலின் கண்ணிவ ருந்தின வான்மதி றேயக்குங் கடிநகரே. 10 கடிக்கஞ் சமனை யுவந்துல காக்குறுங் காரணனோர் முடிக்கஞ் சமனை தொறும்பலி யேற்ற முதுகிரியான் மிடிக்கஞ் சமனை வருந்தொழ வாழவம் விரவுறுமெங் குடிக்கஞ் சமனை வெருவுத லேயின்று கொல்வனென்றே. 11 கொல்லைக் குறவரை வாயனை யார்கரிக் கோட்டைவிளை நெல்லைக் குறவரை யாதுகொள் காளத்தி நேயரைவான் றில்லைக் குறவரை நம்முது குன்றரைச் சேர்வலென்று ரெல்லைக் குறவரை மாத்திரைக் கோல மீகுவரே. 12 ஈகையி லங்கை தவமுள மெங்ஙன மெய்துவமென் றோகையி லங்கை வடிவே லொடுவருந் தோன்றறந்தை வாகையி லங்கை யரசிற வூன்றிய வள்ளன்மழு மாகையி லங்கைம் முகமுது குன்றன் மலர்ப்பதமே. 13 பதம்பர வைக்கு வருந்துபி ராற்குப் பசுமயின்மேற் கதம்பர வைக்கு வரச்சுற்று கட்செவிக் கங்கணற்குச் சிதம்பர வைக்கு முதுகுன்ற வாணற்குச் செல்வமெல்லா மதம்பர வைக்கு நிகர்கரித் தோறலை மாலைகளே. 14 மாலைக் கலுழனொய் யோனெனத் தாங்க வயங்குமரு ணுலைக் கலுழ வொழியெனு மேற்றிவர் நோன்மையனாழ் பாலைக் கலுழ வொருமகற் கீந்த பழமலையான் மூலைக் கலுழ நடம்புரி வானெம் முதற்றெய்வமே. 15 தெய்வசி காமணி யேமணி கூடலிற் சென்றுவிற்ற மெய்வசி காமணி கண்டா பழமலை வித்தகமீ னெய்வசி காமணி மாவெனுங் கண்ணியை நெஞ்சகத்து வைவசி காமணி னோவா தெனையின்ப வாழவளித்தே. 16 வாழ மரிக்கு மடநெஞ்ச மேமென் மலர்ப்பகழி தாழ மரிக்கு மதற்காய்ந்த தந்தையுந் தாயுமொரு வேழ மரிக்கு மிகவுற வாம்பழ வெற்பினயல் சூழ மரிக்கு மியல்பையெஞ் ஞான்றுந் துணிந்திலையே. 17 துந்துமி யும்ப ரியம்பும் பழமலை சூழ்ந்துரையீர் நுந்துமி யும்பரி யாவியை வேண்டியுண் ணோம்புலவீர் சிந்துமி யும்பரி வாலுத வார்த்துதி செய்விர்மல முந்துமி யும்பரி பாகமுண் டோசொல்லு முங்களுக்கே. 18 கேட்டுப் புவனங் கொளவுமெண் ணோமெய்க் கிராதனின்முன் னாட்டுப் புவனம் பயின்மான் றசையுண்ட நாதனராப் பூட்டுப் புவனங் கொளுமெய்ப் பழமலைப் புண்ணியன்றான் வேட்டுப் புவனம் பதினான்கு நல்கினும் வேண்டிலவே. 19 வேண்ட வடுக்க நினைவதுன் றாண்மலர் வேட்கைமணி பூண்ட வடுக்க ணறுநுத லார்மயல் போக்குவது நீண்ட வடுக்க னயமா திளமுலை நேர்ந்துதவ மாண்ட வடுக்க ணிகர்தோட் பழமலை மன்னவனே. 20 மன்னவ மாதவ னாடும் பழமலை வாணமணி யன்னவ மாதவ னன்மலைக் காற்கசைந் தம்மதிகண் டென்னவ மாதவ னல்லின்வந் தானென் றிரங்கிமதன் றின்னவ மாதவ நோமேயென் செல்வத் திருந்திழையே. 21 திருந்திய வேதம் புகல்பரி சேயறஞ் செய்துடலம் வருந்திய வேதம் பொருளென வாழ்பழ மாமலையான் பொருந்திய வேதந் தருநஞ் சுணானெனிற் பூமலர்கா மருந்திய வேதம் புயமனை யாட்கணி மங்கலமே. 22 மங்கல மாவி மலைசேர் பழமலை வாணமணிச் செங்கல மாவி மலர்க்கைக் குருகொடு செல்கவெமர்க் கிங்கல மாவி வளைநீ யணைந்த தினியுனெதிர் தங்கல மாவி தரிற்கொடு சேறுமெந் தண்மனைக்கே. 23 தண்டங் கமண்டலங் கொண்டு பழமலைச் சங்கரதாட் புண்டங்க மண்டலங் கண்டுசென் றாலுமெய்ப் போதமுறார் பண்டங் கமண்டலங் காரமின் னாக்கினன் பாட்டியலைக் கொண்டங் கமண்டலம் பாழாக் கியவுனைக் கூறலரே. 24 கூற்றைக் கொடியங் கடப்பா னருளெனக் கூய்ப்பரவி யேற்றைக் கொடியங் கரஞ்சேர் பழமலை யீசனணி நீற்றைக் கொடியங் குளமே வெறுத்தி நிறைபெருகு மூற்றைக் கொடியங் கினமோ டருந்து முடம்பினையே. 25 உடற்கு வலையந் தகன்கைக் கயிறென் றுணர்ந்துளமே கடற்கு வலையம் புகழ்சீர் முதுகிரிக் கண்ணுதற்கு மடற்கு வலையம் புரைகளத் தாற்குநம் மன்றமர்ந்த நடற்கு வலையம் பணியா மவற்கன்பு நண்ணுகவே. 26 நட்டுவ னாரை யறிகிலன் றண்ணுமை நந்திநின்று கொட்டுவ னாரை யிரைதேர் கயமுது குன்றுடையாய் தட்டுவ னாரை யகலாத நான்முகன் றாளமுயர் குட்டுவ னாரை வனைவான் பரவுநின் கூத்தினுக்கே. 27 கூத்துகந் தம்பல மேவுறு மோர்முது குன்றனைநம் பாத்துகந் தம்பல மாரினு மௌ¢ளினும் பண்பனைத்தாள் சாத்துகந் தம்பல மாமறை யாற்புகழ தாணுவைநா மேத்துகந் தம்பல மார்பொது மாதரை யௌ¢ளினமே. 28 எள்ளா தவனை யெலும்பா பழமலை யென்றிருந்த கள்ளா தவனை மகவரிந் தாக்கெனக் கட்டுரைத்து விள்ளா தவனை மகிழபர மாவழல் வெண்மதியைத் தள்ளா தவனை முடிசூடெம் மாது தருக்குதற்கே. 29 தருவி னிலையினி மன்னவற் கில்லையித் தண்புனத்தின் மருவி னிலையினி மைக்கூற் றெனக்கந்தி வானநிக ருருவி னிலையி னியல்வேற் குகனை யுதவியகோன் கருவி னிலையி னிகந்தோன் பழமலைக் காரிகையே. 30 காரிகை யார்க்கு வரும்பொது வோவல்ல காண்விசும்பிற் பூரிகை யார்க்கு முதுகுன்ற நாயகன் பொங்குமருள் வாரிகை யார்க்கு மருந்தனை யான்மலை மன்னனரு ணாரிகை யார்க்கு மெழுவுறழ் தோட்க ணறுநுதலே. 31 நுதலரிக் கும்பரு வங்குறை யென்றவ னோக்கடையா முதலரிக் கும்பரு மேத்துந் தமிழா முருகுபெரு குதலரிக் கும்பரு கற்கருங் காமுது குன்றரிலார் சிதலரிக் கும்பரு மாமரம் போற்றுயர் தின்பவரே. 32 தின்னக் கனியை விழைகூ னிளமந்தி தீங்கனியீ தென்னக் கனியை யிரவியிற் பாய்பொழி லீண்டுகுன்றை நன்னக் கனியை மதிவே ணியனிந்த நாம்பயந்த சின்னக் கனியை வலத்தில் வைத்தால் தீங்கென்னையே. 33 தீங்கு திரைக்கட னேர்நரர் காடுயர் செய்மலத்திற் காங்கு திரைக்கட நாய்க்கிரை யென்றிந்த வாகமய னீங்கு திரைக்கட நன்முது குன்றர்க்கந் நிம்பனுக்கு வாங்கு திரைக்கட னீயவல் லார்க்கு வணங்குமினே. 34 வணங்கக் கரமு மொழியப் பழமலை மன்னுவா யிணங்கக் கரமு மிருப்பவைத் தேபுண ரேந்திழையார் பிணங்கக் கரமு ஞமலியும் போலவர் பின்றொடர்வீ ரணங்கக் கரமு தலைபோ லுமைப்பற்று மந்தகனே. 35 அந்தரங் கங்கை தவரறி யாம லமுதருள்சம் பந்தரங் கங்கை வலிபோன் மின்னாக்கினர் பாடியுனைச் செந்தரங் கங்கை ரவமொண் கமலந் திரைத்துவருஞ் சுந்தரங் கங்கை விரும்புமுத் தாறுடைத் தொன்மலையே. 36 மலங்கலை யங்கலை கற்றேன் றனக்கருள் வாழ்வளிப்போன் கலங்கலை யங்கலை நல்லோர் பரவுங் கழலடியான் விலங்கலை யங்கலை வேலோன் பிதாமுது வெற்பிட்த்திற் பொலங்கலை யங்கலை யான்மூடு மீனைப் புதைத்தவளே. 37 புதைத்துக் கரக்கும் பொருளாளர்வெஞ்சொற் பொருமறலி கதைத்துக் கரக்குங் குமமுலை பாகன்மெய் கண்டடியார் பதைத்துக் கரக்குஞ் சிறிதா வுருகும் பழமலையான் வதைத்துக் கரக்குஞ் சரமீர்ந் தவன்றரும் வாழ்விலரே. 38 இலங்கு மரியு மருள்கோன் முதுவெற் பிடத்துரற்கால் விலங்கு மரியு முழலலெல் லாமுன்னி வெய்துயிராக் கலங்கு மரியு மிருந்துயர் கூருங் கலுழ்ந்திடுந்தாய்க் குலங்கு மரியு மொருவனும் போகுங் கொடுஞ்சுரத்தே. 39 கொடுவரி யானை யடர்ந்துறு மாறெனக் கொண்டுயர்தூ ணொடுவரி யாநை யுறவடிப் போமென் றொருங்குவந்தே யடுவரி யானை நிகர்நமன் றூத ரடிமுடிமன் னடுவரி யானை முதுகுன்றொ டேசு நரர்தமையே. 40 நரகா வலர்மட வார்க்குள் ளுருகிக்கைந் நாவிருப்ப வரகா வலர்புனைந் துன்றனை யேத்தில ராய்ந்தறிவா லுரகா வலரென வுய்ந்தா ரினமுள முற்றகுன்றைப் புரகா வலரி லருட்கோயி லாகும் புராந்தகனே. 41 புரந்தர னஞ்சு பழமலை வாணன் புலவர்தொழுந் துரந்தர னஞ்சு தலைநாக கங்கணன் றொண்டுறுமா னிரந்தர நஞ்சு தொழுதேத்து தாதர்க்கு நேயமொடு வரந்தர நஞ்சு களத்துவைத் தானென்பர் மாதவரே. 42 மாதரைக் கொன்றுவ ரம்மேனி வைத்தவ மாசுணத்தை யீதரைக் கொன்று சிறுநாணென் றார்க்கு மெழிலுடையாய் நீதரைக் கொன்று நலஞ்செயல் வேண்டு நினையிகழும் வாதரைக் கொன்று முதுகுன்ற மாநகர் மாசொழித்தே. 43 மாசி யதிகந் துறந்தார் மகிழ்குன்றை மாநகரோ காசி யதிகங் கொலோவென்பி ராயினக் காசியெனப் பேசி யதிகந் தகன்றிருந் தான்பரன் பேரடலை பூசி யதிகம் பரனீங்கி லானிப் புரியினையே. 44 புரிசடை யாள பழமலை வாண பொருப்பெடுத்த கரிசடை யாள திகந்தீர்த் தருளக் கடுவயின்ற பரிசடை யாள முடையா யொழித்தனள் பட்டினையத் துரிசடை யாள தழுக்கா மெனாநின் றுகிலினுக்கே. 45 துகிலங் குருகுந் துறந்தா ளுயிருந் துறக்கநின்றா ளகிலங் குருகு மணிமுடி யாயெனு மத்தவளை முகிலங் குருகு மடியாய் பரந்த முதுகிரியாய் சகிலங் குருகுல மேத்திறை வாமைத் தடங்கண்ணியே. 46 தடுக்க மலத்தி னோடுங்குதல் போலநின் றாளிலுறு மொடுக்க மலத்தி னிகழ்வால் வளையின மூர்ந்திடச்சேன் மடுக்க மலத்தி லுகள்வயல் சூழ்குன்றை மாநகரோ யடுக்க மலத்தி புனையலங் கார வருளுகவே. 47 அருவரை வில்லை யுமிழ்மணி நாகமு மத்திகளு முருவரை வில்லை யெனப்பூண் பவரையவ் வும்பர்தொழும் பொருவரை வில்லை யுறுமுது குன்றரைப் போந்துமரு ளொருவரை வில்லை வரிலொற்றி வையென வுற்றனமே. 48 உற்கைக்கு மாறு படுமணி நாக மொழித்துலவி விற்கைக்கு மாறு சுமந்தவ சீர்முது வெற்பினின்பா னிற்கைக்கு மாறு வழுவா நடக்கைக்கு நேரிழையார் சொற்கைக்கு மாறுந் தமியேனுக் கென்று துணைசெய்வையே. 49 செய்க்குத் தனங்க மலமலர் சீர்தருஞ் செய்யதிரு மெய்க்குத் தனங்க டரவடு வாங்கிதொல் வெற்பிடத்திற் கைக்குத் தனங்க வொழியினுந் தாடனைக் காய்வதிலேன் வைக்குத் தனங்க ளழத்திறை யாதிந்த வையகமே. 50 வைத்து மதிக்கு மருங்கிற்கைத் தாயென மந்தரமத் துய்த்து மதிக்கு மனையின்மை யான்மறை யோதிமமுன் னெய்த்து மதிக்கு முடிமிசைக் கங்கையை யேற்றினையோ மெய்த்து மதிக்கு மணுகவொண் ணாமுது வெற்பினனே. 51 வெற்புக் குமைய வடிவே லெறிந்தசெவ் வேண்மதவேள் பொற்புக் குமையவ னோடரன் வாழ்முது பூதரத்தி னிற்புக் குமையவ ளொத்திருந் தாள்குறை வின்றிவளர் கற்புக் குமையவள் போலுநுங் காதற் கருங்கண்ணியே. 52 கருந்தடங் கட்கு முதவாய் மயிலெங்கள் கண்களுக்கு விருந்தடங் கட்கு நலமெனப் போந்தவிண் மீன்பொரியு மருந்தடங் கட்கு வளையோடை யாகுக வலம்புயங்கள் பெருந்தடங் கட்கு முகமாகுங் குன்றைப் பெருந்தகையே. 53 பெருமு தலைவளை யான்போற்றுங் குன்றைப் பெருந்தகையை யிருமு தலைவளை மூப்படைந் தாண்டவற் கின்மகவைக் கருமு தலைவளை வாயிற்றந் தானைமுன் கண்டழுது பொருமு தலைவளை நீத்தனண் மேவினள் பூங்கொடியே. 54 பூங்கு மிழும்படி முள்ளும் பொருந்திப் புளிஞர்பொருள் வாங்கு மிழும்படி மோது மெனல்கொடு மால்விழுங்கி யாங்கு மிழும்படி வந்தவெம் பாலை யடைந்தவள்கால் வேங்கு மிழும்படி னென்னாம் பழமலை வித்தகனே. 55 வித்துரு மத்தை நிகர்வா னுயிர்செய் வினையருத்துங் கத்துரு மத்தை யிடுதயிர் போலக் கலக்குமதன் சத்துரு மத்தை வனைமுது குன்றிறை தாள்கொடுவா னத்துரு மத்தை யிலவாக வெள்ளுவர் நற்றவரே. 56 நற்றவ ராக மறையவ ராகவிந் நானிலத்தி லற்றவ ராக மனமுடை யார்க்கன்றி யச்சமற வுற்றவ ராக மறியா தொளித்தநின் னொண்பதங்கள் பற்றவ ராகம லாலயன் போற்றும் பழமலையே. 57 பழங்க விகட மகமந்திக் கீபொழிற் பண்டைமறை முழங்க விகட வுளர்க்கீயுங் குன்றை முதல்வனைவே ளழங்க விகட விழிதிறந் தானை யடிபரவார் கிழங்க விகட மறவரிற் றோன்றிக் கெடுவர்களே. 58 கெடுத்துப் பணியு முடையும்வெள் காமற் கிழத்திமுலை வடுத்துப் பணியு முரம்வேட்டு நின்றனள் வல்லியத ளுடுத்துப் பணியு மரைக்கசைத் தோய்தொண்டருள்ள மெல்லாங் கொடுத்துப் பணியு மலர்த்தாட் டிருமுது குன்றத்தனே. 59 குன்றுக ளுங்களை யொவ்வா வெனுமுலைக் குன்றதிர்க்குஞ் சென்றுக ளுங்களை யுண்வண்டு மோவில் செழுங்கொன்றைமான் கன்றுக ளுங்களை நன்மதி வேணிக் கடவுடனை யென்றுக ளுங்களை யெம்மானைக் குன்றை யிறைவனையே. 60 இறவாத வாநந்த வெள்ளத் தழுத்தி யெனையருளாற் றுறவாத வாநந்த வாள்வதென் றோமெய்த் துறவர்தொழு மறவாத வாநந்த னஞ்சூழ் முதுகுன் றடைந்தவர்த முறவாத வாநந்த கோபால னென்றற் குடையவனே. 61 உடைய மடங்க லுதைத்தபொற் பாத வொளிசெய்மழுப் படைய மடங்கன் முகற்காய்ந்த வீர பழமலையாய் கடைய மடங்கல் லொடுபக லுந்தொழக் கற்றிலமெம் விடைய மடங்கல் வருவதெஞ் ஞான்று விளம்புகவே. 62 விளங்க வலம்புரி மால்போற்று நன்முது வெற்பகஞ்சேர்ந் துளங்க வலம்புரி யாய்மாய் பிறிதொ ருடம்படையாய் துளங்க வலம்புரி மென்குழன் மாதர்க்குச் சூழ்ந்துநின்று களங்க வலம்புரி யிவ்வெற்பை யேநிலை கைவருமே. 63 வருந்தா தவரை வளைத்திட் டவபவ வன்பிணிக்கு மருந்தா தவரை மருவும் பழமலை வாணவுனைப் பொருந்தா தவரை யுயிர்செகுத் துண்ணம் புலிமழுங்கத் திருந்தா தவரை வரக்கூ வுறாததென் சேவல்களே. 64 சேவாலங் காட்டு பொழுதகஞ் சாயச் செலுத்திவரி மாவாலங் காட்டு முதுகிரி வாணவவ் வானமுய்ய வேவாலங் காட்டு மிடற்றாய்நின் சீர்த்தி விரித்துரையா நாவாலங் காட்டு விலங்காயி னேனிந்த நானிலத்தே. 65 நிலங்கடந் தானை மகிழ்வானைத் தன்னடி நின்றொடுங்கும் புலங்கடந் தானை முதுகுன்ற வாணனைப் போற்றிலர்தந் நலங்கடந் தானை முழுது மிழந்தந் நகரினிற்போ யிலங்கடந் தானை துணிசீரை யாக்கொண் டிரப்பர்களே. 66 இரப்பாரி லாரை யிலரெனின் வைவ ரிரந்திடிற்றாங் கரப்பா ரிலாரை முகநோக்கு றார்மழுக் கைக்குன்றையா யுரப்பாரி லாரை யுறவாகக் கொள்வர்தம் முள்ளனபோய் நிரப்பாரி லாரை யவிப்பார்தம் மக்களை நீத்திருந்தே. 67 இருப்பு வலியை யகன்று பொன்வல்லியை யெண்ணுதலாம் விருப்பு வலியை முலையா ரணங்கினர் விண்ணுறுதல் பொருப்பு வலியை யிடத்தில் வைத்தாய்மலர்ப் பூங்கணைசேர் கருப்பு வலியை யொழித்தாய் பழமலைக் கண்ணுதலே. 68 கண்டந் தரிக்கும் விடத்தார் பழமலைக் கண்ணுதலார் பண்டந் தரிக்கு மருங்களித் தார்தம் பழவடியா ரெண்டந் தரிக்கு மரிதாகும் பாத ரிருங்கருமா வெண்டந் தரிக்கு மதற்காய்ந் தவரெனு மெல்லியலே. 69 மெல்ல வணங்கு நினைவா லெதிர்ந்திட வேனெடுங்க ணல்ல வணங்கு வளையுடை யோடு நடந்திலைநீ கொல்ல வணங்கு மதிசுமந் தேநின்ற கொள்கையென்னோ வெல்ல வணங்கு மலையாய் முதுகிரி வேதியனே. 70 வேதிய வாவி தனக்காவி யாகிய வித்தகபெண் பாதிய வாவி மலர்த்தேன் பெருகும் பழமலைவாழ் சோதிய வாவி வருவிடைப் பாகநின் றொண்டருறு நீதிய வாவி யவரையென் றோசென்று நேர்குவனே. 71 நேரு மடியர் தமக்குற வாயவர் நேசமறச் சோரு மடியர் தமையணு காதவர் தும்பியினாற் சாரு மடியர் மணிநிற வண்ணன் றரையிடந்து தேரு மடியர் முதுகுன்ற வாணுதற் றீக்கண்ணரே. 72 கண்டீர வந்தனை நேர்ந்தாங் கருகக் களிற்றினைமுன் கொண்டீர வந்தனை வானோர் செயுமுது குன்றனொடு வண்டீர வந்தனை நேர்வாளைக் கோலம் மதனனெய்யும் புண்டீர வந்தனை சேர்தியென் றோதுமின் போமின்களே. 73 போதுமின் மாலை வகைவகை யாகவம் பொற்றொடியீ ரோதுமின் மாலை தரின்வம்மி னில்லையென் றோட்டினரேன் மாதுமின் மாலை வருமுனஞ் சாமென்று வண்கைமலர் மோதுமின் மாலை மகிழ்குன்றை வாணர்தம் முன்னடைந்தே. 74 முன்னஞ் சிலம்பு சிலையாக் கியநன் முதுகிரியாய் பொன்னஞ் சிலம்பு சிலம்புத லோடையிற் பூஞ்சிறக ரன்னஞ் சிலம்பு நடையிள மானை யனங்கனெய்து தன்னஞ் சிலம்பு குவளையல் லாத தணந்தனனே. 75 தணந்தவ ளக்கரி மேனிய ளாங்கொல்வெண் சங்கினங்கண் மணந்தவ ளக்கரி னின்றழு மோவல வாவுயிர்க ளுணந்தவ ளக்கரி தாமுது குன்றர னோங்கமர கணந்தவ ளக்கரி யானேத் திறையன்றிக் காப்பிலையே. 76 காப்புக் கரியுந் திருமக ணாயகன் காப்பவற்றின் பூப்புக் கரியுந் தலையுடை யானும் பொருந்தவைத்தான் மாப்புக் கரியுங் குயிலும் பயில்பொழில் வண்டில்லையான் மூப்புக் கரியும் புலியுங்கொன் றீர்ந்த முதுகுன்றனே. 77 முதுமறை யந்த முறுபொரு ளேநன் முழுப்பணிக்கு விதுமறை யந்த முடியாய் புராணம் விளங்கிரண்டொன் பதுமறை யந்த முதுகுன்ற வாணநின் பாதம்வணங் குதுமறை யந்த களைமார்பி லெம்மைக் குறுகிடினே. 78 குறுகு முனிவனை யன்றாண்ட விம்முது குன்றனுக்கு மறுகு முனிவனை செய்தாலுய் வாரெவர் வந்தருளென் றறுகு முனிவனை போதுமி டார்நம னார்முனிவு முறுகு முனிவனை யெய்தா ரறிவறு மூடரினே. 79 மூடா நமாதி மிடையடைந் தாயலென் முன்னணுகன் மீடா நமாதி பெருமா னுதைக்கினு மெய்ப்புகழைப் பாடா நமாதி யெழுத்தைந்து மோதிப் பழமலைவாழ் வீடா நமாதி யடியா ரடியருண் மேவினமே. 80 மேவத் தகரை யிவர்மக வீன்றதொல் வெற்பரச சேவத் தகரை வொடுபூசித் துன்னைவிண் செல்வமுறும் பூவத் தகரை நகுவே மெமக்குநின் பொங்கருளா லோவத் தகரை வகைப்பாச முந்தம் முரங்குலைந்தே. 81 குலையா நிலமும் விசும்புந் தொழுமுது குன்றமதிக் கலையா நிலமும் மடியழல் காயவக் காய்கனலின் மலையா நிலமு முடன்கூட வேமெனை வாங்குகழைச் சிலையா னிலமு மெமதில்ல மாய்நின்று சீறுவனே. 82 சீறிரை யாக மதியுணும் பாம்பணி செல்வமறை மாறிரை யாக மலிமுது குன்ற மருவுதற்குச் சேறிரை யாகயி லாசவி லாசசு தேவவென்மின் றோறிரை யாக நிலையென்று வாழன்மின் றொண்டர்களே. 83 தொண்டரைக் கூடல் விழையார் பொழின்மலர்த் தூளுதிர்தல் விண்டரைக் கூட லறவுறல் போலுந்தொல் வெற்புறுமைக் கண்டரைக் கூட லுடையாரைப் போற்றிலர் கற்றறியா மிண்டரைக் கூடல் வழியே நடத்துபு வீழ்த்துவரே. 84 வீழி வலஞ்சுழி தில்லை சிராப்பள்ளி வேதவனங் காழி வலஞ்சுழி யன்மேவு குன்றைக் கடவுள்விடி னாழி வலஞ்சுழி வெள்வளை யானணை யன்னகல்விப் பாழி வலஞ்சுழி யுந்தியுள் வாங்குவர் பாவையரே. 85 பாவல ருக்கு மலிபொரு ளீந்துகொள் பாட்டினர்க்கு மேவல ருக்கு மழுவார்க்கு நன்முது வெற்பினுக்குக் காவல ருக்கு மயலாகி நின்று கலங்குநின்றா யாவல ருக்கு விளைநில மாயினை யாயிழையே. 86 ஆயக் கலையக லுஞ்சீர் முதுகுன் றரசமுனஞ் சாயக் கலைய னிமிர்த்தசெம் மேனிய தப்பலில்லா னேயக் கலைய புழுக்கூ டெனுமுட னேயமெல்லா மாயக் கலைய மலமாயை கன்மங்கள் வந்தருளே. 87 வந்திக்க நாவி னினையே வழுத்த மலர்விழியான் முந்திக்க னாவி தொலைத்தோய் நினது முதுவெற்பையே சிந்திக்க நாவி மதநாறு மாதரைச் சேருமின்ப நந்திக்க னாவி னொழிவாமென் றுன்னுற நல்குதியே. 88 நல்குர வேநல் லுரைதான் முதுகுன்றர் நாட்டுனக்குச் சொல்குர வேநல் குரவுறு வேல தொடைகள்பல மல்குர வேன லிதண்விட் டகம்புக்க மானையிந்த வொல்குர வேனல் லிடைக்கொடு போகலென் றோதிலையே. 89 ஓதித் திருக்கு மொழவதல் லாமலுன் னுண்மைநிலை சாதித் திருக்கு மியல்புதந் தாயிலை தன்மையெல்லாம் போதித் திருக்கு மொழிகுன்றை வாண பொருப்புதவுஞ் சோதித் திருக்கு மரிபாக சுந்தரன் றூதுவனே. 90 தூதுகண் டாலு மதியணி வேணியர் துன்னிவந்தென் காதுகண் டாலு முடன்மூக்கின் பெய்தநல் காரெனவெம் மாதுகண் டாலு முவக்கப் படுமொழி வந்தனள்கார்ப் போதுகண் டாலு மயில்வாழ் பொழிற்பழம் பூதரனே. 91 பூதர நன்று சிலைக்கென்று கொள்ளும் புராந்தகனார் சீதர னன்று பொழலெனுங் குன்றைத் திருநகரார் காதர னன்றும் விழிபெறு மாறுடைக் கண்ணுதலார் மாதர னன்று வருமதிக் கோய்தலை மாற்றிலரே. 92 மாற்குச் சிவந்த மலர்த்தான் முதுகிரி வாணன்மறை நூற்குச் சிவந்த விராப்பொரு ளென்பவர் நோக்குளன்வேள் கோற்குச் சிவந்த விறலாள னின்னுங் குறுகிலனிம் மேற்குச் சிவந்த தறியே னிவட்கு விளைவதுவே. 93 விளைய வளையு மணிநெல் வயன்முது வெற்பிறைவ னளைய வளையு முறவுடை யானவ் வனங்கசிலை வளைய வளையு முடையுந் துறந்து வருந்துறுமிவ் விளைய வளையு மொருபுடை சார விருத்திலனே. 94 இருத்த விருப்ப திடத்திலல் லாம லிருப்பலென நிருத்த விருப்ப முதுகுன்ற வாணனை நீவலியுஞ் செருத்த விருப்ப வுததியை யாருணச் சிந்தைசெய்வர் திருத்த விருப்ப வலையாவர் மெல்லுவர் தேமொழியே. 95 தேவியு மானும் விளையா டிடமுடைச் செங்கணுத லாவியு மானும் வருஞ்சீர் முதுகுன் றணிவிழவைக் காவியு மானும் விழியாய்கண் டெய்தெனக் கண்மறுகி னேவியு மானும் மகட்கிடர் நீர்செய்தி ரேழையரே. 96 ஏடலை யாறு கிழித்தெகி ரேறவிண் ணேறுபுகழ்க் கூடலை யாறு புலியூர் மகிழ்முது குன்றர்பெற்ற வேடலை யாறு முயிர்த்தெடுத் தேந்துபு மென்கைகொடுத் தூடலை யாறு வருகவென் பார்நல் லுமைதனையே. 97 உமையிடப் பாக னலங்கூர் முதுகுன் றுடையனராச் சுமையிடப் பாக வரிதே டடியுறத் தூமலர்க டமையிடப் பாக மருவுவ ரேலவர் தங்களைப்பா ரமையிடப் பாக னணுகா னுதைநினைந் தஞ்சுவனே. 98 அஞ்சு வணத்தை வரன்முறை யோத வரக்கெறிந்த பஞ்சு வணத்தை மருவுமென் றாளுமை பாகமொடு செஞ்சு வணத்தை யனையநின் கோலமென் சிந்தையுற விஞ்சு வணத்தை மகிழ்குன்றை வாண விரும்புவனே. 99 விருத்தா சலசங் கராமலை மாது விழிகளிக்கு நிருத்தா சலசந் திரன்போ லுடம்பிடை நின்றவர்தங் கருத்தா சலசம் பவமிலர்க் காண்டறங் காட்டியசொற் றிருத்தா சலசந் தமியேன் றலைக்குன் றிருவடியே. 100 - திருச்சிற்றம்பலம் -
- பழமலையந்தாதி முற்றிற்று -